Tuesday, October 27, 2009

முடிவில் ஆரம்பமாகும் பயணங்கள் ........


ஒட்டு மொத்த குடும்பமும்
ஒரு தோளின் மேல்.
தாங்கிப் பிடிக்கும் நடுகல்லாய்த்
தலைமகன் நான்.

சன்னல் கதவுக்கு ஒன்று
வாசல் காலுக்கு இரண்டென
வீட்டுக்கே மூச்சுத் திணறும்
கூட்டமாய்க் கூட்டுக் குடும்பம்

மணம் முடித்த அவளுடன்
மனம் விடுத்துப் பேசவே...
வந்தவளுடன் தனிமையில்
தொந்தரவின்றிப் பேசவே...
வாரம் ஒன்று முழுதாய் ஆனது

மண வாழ்வைத் தெடங்கவே
மாதம் மூன்றுக்கும் மேலானது

இயந்திர உலகில் கரையேற
இயந்திரம் போல் இயக்கம்..........

தங்கைகளின் சடங்கு , சீர் செனத்தி ,
திருமணம் , புகுந்தவீடு பயணம்........

தம்பிகளின் படிப்பு , வேலைவாய்ப்பு ,
தனி வீடு , வெளிஊர்ப் பயணம்.........

பெற்றோரின் நலம் , மருத்துவம் ,
பராமரிப்பு , கடைசிப் பயணம்...........

குழந்தைகளின் பள்ளி ,கல்லூரிப்படிப்பு
திருமணம் ,வெளிநாடுப் பயணம்.......


பயணம்,பயணம்,பயணம்............
பயணத்தைத் தொடர்ந்து
பயணிக்க வைக்க எனக்கும்
சயனம் இல்லாத பயணம்.........


எல்லாம் ஓயும்போது - இலவசமாய்
வந்துசேர்ந்தது பணி ஓய்வும்

இதோ.....

சுற்றியிருந்த உறவெல்லாம்
விட்டுச் சென்ற பிறகு நான்...
தலையணை தேடும் மனதுடன் !
தனிமையில் தொடரும் அவளுடன் !!

கடந்ததை அசை போட்டுக்கொண்டு ..
நடப்பதை எடை போட்டுக்கொண்டு..
அலையும் மனதை அழுத்திக்கொண்டு..
அசையும் காலியில் சயனித்துக்கொண்டு..

அடடா,,,, !!!!!!!!!!

உண்மையது எனக்கு அப்போதுதான்
உறைக்கத் தொடங்கியது .....!

உதறிச் சென்றொருக்கெல்லாம்
விரட்டித் தேடி செய்தேனே !
எனை நம்பி வந்தவளை
நினைக்க மறந்தே போனேனே !!

என்னவளின் எண்ணங்களை
எள்ளளவும் எனக்குள் வாங்கவில்லையே
கடமையின் நெரிசலில் அவளின்
ஆசைகள் எதையும் அறியவியில்லையே

குற்றஉணர்வில் உள்ளம் குறுகுறுக்க
குனிந்த படியே இருக்கிறேன்....
நேருக்கு நேராக அவளை
நிமிர்ந்து பார்க்க முடியாமல் .....

என்முகத்தை தனக்குள் அணைத்து
தன்மூச்சை எனக்குள் அழுத்தி

இச்சென முத்தம் ஒன்றை
உச்சந்தலையில் வைத்துவிட்டு ,
மெதுவாய் கையிலிருந்த உணவை
ஒருவாய் எனக்கு ஊட்டிவிட்டு ,

மெல்லத் திரும்பி நடக்கிறாள்
மெளனமாய் சிரித்து விட்டு !
’ நானிருக்கிறேன் ‘ என்ற சேதியை
நெஞ்சுக்குள் இறக்கிவிட்டு !!

ஐந்தில் அன்னையோடு மங்கிமறைந்தது
அறுபதில் அருவியாய் பொங்கிவருகிறது !

என்றோ தொடங்கிய மணவாழ்க்கை
எங்கோ முடியப் போகும் தருணத்தில்
இங்கே இதோ ஆரம்பமாகிறது இனிதாய் !
எங்களின் மன வாழ்க்கை புதிதாய் !!

2 comments:

நிலாமதி said...

வாழ்க்கையை அலசி ஆராய்ந்து இருக்கிறீர்கள். "தனக்கு கண்டு தான் தானம் ..".....ஏன் உங்களுகென்று ஒரு இதயத்தை மறந்து போனீர்கள். போனது திரும்ப வராது ........காலம் கடந்த ஞானம்........சிந்திக்க வைக்கிறது . .

தமிழ்குறிஞ்சி said...

தங்களது கவிதையை எமது தமிழ் குறிஞ்சி இணைய இதழில்கவிதைகள் பகுதியில் வெளியிட்டுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.