ஒர் ஊர்சுத்தியின் பிதற்றல்கள் : 1
+2 ரிசல்ட்
கோவையில் நான் ..செல்போன் அடிக்க எடுத்தேன்
”அப்பா .. நான் 1132 மார்க்”
”ஆகா ..கலக்கீட்டியேடா ... இதோ வாரேன் ..”
எல்லாத்தையும் பாதியில நிறுத்திவிட்டு கெளம்பியாச்சு ..4மணி நேரம்
தூத்துக்குடி..கேக்கும் சாக்லேட்டுமாக துள்ளிக்குதித்து வீட்டுக்குள் நுழைய ..
அட என்ன் இது ..அங்கே (ஒரு அமானுஷ்ய) அமைதி .... ஏன் ..என்னாச்சு ..
”ஏன் எல்லாரும் இப்பிடி இருக்கீங்க ?”
”அவளையேக் கேளுங்க”
”என்னடே ..”
”அப்பா.. காலேஜுக்கு நான் வெளியூரெல்லாம் போக மாட்டேன் .. வீட்ல இருந்துதான் போய்ட்டு வருவேன் ... இப்டீன்னு தெரிஞ்சிருந்தா நான் மார்க் குறைச்சலாவே எடுத்திருப்பேன்”
”அட..இதுக்குத்தானா .. கோவைல நம்ம காலேஜ்லயே ( நான் கட்டிய கல்லூரி அது..தற்புழுதும் வேலை நடக்கிறது அங்கே ) சேர்துக்கலாம் .. அங்கே வீட்ல இருந்து போய்க்கலாம் ..அடுத்த வருசம் தம்பியும் காலேஜ்தானே..அவனும் வந்திருவான் ,.. அப்புரமா எல்லாரும் அங்கேதானே”
இருண்டுகிடந்த முகத்தில் லேசாக வெளிச்சம் ...
”அங்கே என்கூட யார் இருப்பா”
”இப்போ ஆச்சி இருக்கட்டும் .. நான் வாரம் 2 நாள் வந்திருவேன்..சனி ஞாயிறு அம்மா வந்திருவா ..பிறகென்ன”
”ஐஈஈஈஈ..ஜாலி..ஜாலி...” அவள் மகிழ்ச்சியில் குதிக்க நண்டு சுண்டுகள் எல்லாம் சேர்ந்து கொள்ள வீடும் சேர்ந்து குதிக்க ஆரம்பித்த்து ..
நான் நழுவி என் அறைக்குள் நுழைந்தேன் ..பின்னாலேயே வீட்டம்மா .சாந்தி..
அவள்முகம் அப்படியே முன்பார்த்த மகள்முகம்போல் இருண்டு கிடந்த்து ..
கூடுதலாக கண்ணும் கலங்கி இருந்த்து
”இப்போ உனக்கென்ன?”
”ஏங்க ,, நீங்க சொன்னதெல்லாம் உண்மையா”
”பாப்போம்”
”என்ன பாப்போம் ..அப்போ பொய்யா சொன்னீங்க”
”பாதி”
அவள் கண்ணைத் துடைக்க .. நான் கோபமானேன்
”என்ன இது சின்ன பப்பா மாதிரி அழுதுகிட்டு ... அவ என்ன சின்னப்புள்ளயா .
நல்லாப் படிக்கணுமுன்னா வெளியே போய்த்தானே ஆகணும் .. குழந்தை மாதிரி அழுது மத்தவங்களையும் குழப்பி விட்ட்டு விடாதே”
வெடுக்கென்று திரும்பினாள் ”உங்களுக்கென்ன நீங்க ஆண்புள்ள”
’என்ன இப்படி சொல்லீட்டாளே’
பிறந்ததிலிருந்து ஒருநாள்கூட அவளில்லாமல் தூங்கியதில்லை..இருக்கட்டும்
தும்மினால் கூட மகள் அம்மாவிடம் சொல்லிவிடுவாள் – இருக்கட்டும்
இப்போ உனக்குத் தும்மல் வரும் பாருன்னு அம்மா மகளிடம் சொல்வாள் – இருக்கட்டும் .. ஆனாலும் நடைமுறை வாழ்க்கை என்று ஒன்று இருக்கிறதே .. அதை ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும் .. இதுகூடப் புரியாமல் வயசாகி என்ன ப்ரயோசனம் ?
”இனிமே என்முன்னால கண்ணுல தண்ணிவுட்டேன்னா பாத்துக்கோ .. என்னக் கோவப்படுத்தாம நிலைமையப் புரிஞ்சுக்கப் பாருங்க”
மகளைவிட அம்மாவுக்குத்தான் சொல்லிப் புரிய வைக்க நாளாகுமோ .. பார்ப்போம் ..
அவளுக்கு படம் வரைவதிலும் , புதியனவற்றை உருவாக்குவதிலும் ஆர்வம் அதிகம் என்பதால் ‘ஆர்க்கிடெக்ட்’ ஆகணும்/ ஆக்கணும் என்றே முடிவாகிவிட்ட்தால் .. NATA விலும் நல்ல தேர்ச்சி ( ஒரு மாதக் கோச்சிங் க்ளாஸ் இதற்கு உண்டாம் ..ஆனால் இவள் வீட்டிலிருந்தே 150 ரூ புத்தகம் மட்டும் தான் வாங்கிப் பார்த்திருந்தாள் )... மாநிலக் கோட்டாவில் 7வது இடம் வாங்கிவிட்டாள் .
வீட்டில் எனக்கு சிக்கல்கள் ஆரம்பம்
”இந்தாங்க .. நல்லா சப்பிட்டுக்கோங்க இன்னிக்க்கு ..இந்தமாதிரி இனிமே வைக்க மாட்டேன் ..இது அவளுக்கு ரொம்ப்ப் பிடிக்கும் ..லீவுல அவ வ்வார அன்னிக்குத்தான் இதெல்லம் கெடைக்கும்”
”இந்தாங்க ..செர்ரி பழம் .. நல்லா சாப்பிட்டுக்கோங்க இன்னிக்கு....”
”இந்தாங்க எலுமிச்சை சர்ப்பத் நல்லா....”
”இந்தாங்க பாயாசம் .....”
”இந்தா...”
”இ..”
ஆகா .. நம்மள கொல்றாய்ங்களே
கோவைக் கல்லூரியின் சேர்மன், முதல்வர் எல்லாரிடமும் பேசி எல்லா ஏற்பாடுகளும் முடித்து வைத்தாகிவிட்ட்து ..
சென்னையில் கவுன்சிலிங்கிற்கு 3 நாட்களுக்கு முன்பு
”அப்பா நான் மதுரைல படிக்கிறேனே ... ஒரு மணி நேரத்துல வீட்டுக்கு வந்துடலாம்பா ... ப்ளீஸ்ப்பா”
”என்ன இப்போப்போயி இப்படிச் சொல்ற ,, மதுரைன்னா ஹாஸ்ட்டல்லதான் தங்கணும்..பரவாயில்லையா ?”
”பரவாயில்லப்பா .. நெனச்சா நீ வந்து கூட்டிப்போயிருவேல்ல”
”பார்ப்போம்டே”
பாவமாக இருந்தது ..
என்ன செய்ய .. கோவையில் என்ன பதில் சொல்ல ..குழப்பத்திலேயே இரவு கழிந்த்து
மறுநாள் காலை.. சென்னைக்குக் கிளம்பியாகி விட்ட்து.. வழியில் மதுரைக் கல்லூரிக்குச் சென்று பார்த்துவிட்டு ( எல்லாருக்கும் பிடித்துப்போய் விட்ட்து.. அதுதானே அவுங்க திட்டமும் கூட : நன்றி மதுரை நட்புகள் பாலாஜி பாஸ்கரன், சுப்புரமணி, உதயன் ) சென்னை அண்ணா பல்கலைக் கழகத்துக்குச் சென்று மறுநாள் நிகழ்வுக்காக ஒரு ஒத்திகைப் பார்த்துவிட்டு
சென்னை நண்பர்களைப் பார்த்துவிட்டு (’அவளை சென்னைலயே சேருங்க .. நாங்க எங்க குழந்தைப் போலப் பாத்துக் கொள்கிறோம்’ / நன்றி – ஆசாத் ஜீ , விழியன், உதயன், மோர்சுப்ரா) இரவு சிறிது குழப்பத்துடனேயே உறங்கச் சென்றோம்
அண்ணா பல்கலைக் கழகம் :
சில பல குழப்பங்களுக்கிடையே ... ஆரம்பக் கட்டங்களை எல்லாம் தாண்டி இடம் தேர்வு செய்யும் பகுதி ... கால் லெட்டரைக் கொடுத்துவிட்டு
கம்ப்யூட்டர் முன் நான் , அவள் ...
”எந்த காலேஜ் வேணும் உங்களுக்கு?”
”கோவை அல்லது மதுரைல கிடைக்குமா பாருங்களேன்”
கொஞ்சம் அமைதி
திடீரென்று பக்கத்து மேசையில் ஒரு பெண் ‘ய்ய்ய்ய்ய்ய்யெஸ்ஸ்ஸ்’ என்று வேகமாக அலற, அவளது அம்மா அவளைக் கட்டிப் பிடித்துக் குதிக்க ..
(அவங்க கேட்ட காலேஜ் கிடைத்து விட்டதாம் )
”அமைதி அமைதி” எனக் கூறிக்கொண்டே வந்தார் ஒரு அம்மையார் ..
”என்ன இது ..சுற்றிலும் எத்தனை பேர் பதட்டமா உக்கார்ந்திருக்காங்க பாருங்க .. இப்படி சத்தப் போட்டால் ஏதாவது தப்பா எண்ட்ரி போட்டுட்டா என்னாவது ..”
”உக்காருங்க மொதல்ல” என்று கொஞ்சம் மிரட்டலாகச் சொல்லிவிட்டு .. எங்கள் பக்கம் திரும்பினார் .. ”இவங்களுக்கு என்னவாம்” .. எனக் கேட்டுக் கொண்டே உமாவின் பேப்பர்களை கையிலெடுத்த்தார் ... திரையைப் பார்த்தார் .. என்னைப் பார்த்தார் ...
”அப்பாவா”
”ஆமாம் அம்மா”
”என்னா வேலை செஞ்சுக்கிட்டு இருக்கீங்க”
”எஞ்சினியர்”
”இப்போ இங்கே என்னா வேலை செஞ்சுக்கிட்டு இருக்கீங்கன்னு கேட்டேன்”
நான் திரு திருவென்று முழிக்க
”அவள் ரேங்க் 7 .. தமிழ் நாட்டின் டாப் 40 ஸ்ட்டூடண்ட்ஸ் படிக்கப்போற SAP லயே அவளுக்கு இடம் கிடைக்கும் .. இந்த வாய்ப்பை விட்டுவிட்டு வேற எங்கேயோ தேடிக்கிட்டு இருக்கீங்க”
”அது வந்து ..பக்கத்துல இருந்து ..
”சார் உங்க வசதிக்காக பசங்க வாய்ப்பைக் கெடுத்திடாதீங்க ,, அவ்ளொதான்”
போய்விட்டார் .. ( அவர்தான் SAPன் டீன் SAP = ஸ்ஹூல் ஆஃப் ஆர்க்கிடெக்ச்சர் / அண்ணா யுனிவெர்சிட்டி ) ...
நான் பாப்பாவைப் பார்க்க , அவள் என்னைப்பார்க்க , ஆபரேட்டர் கணினியை பார்த்து ஓகே சொல்லி ஆர்டரை எடுத்துக் கையில் கொடுத்து ”””கண்கிராட்ஸ்” என்றார் .
எல்லாரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் இடம் , எத்ர்ர்பார்ப்புகளே இல்லாமல் வந்த எங்களுக்கு எதிர்பாராமல் கிடைத்துவிட்ட்து ..
”வெளியே காத்திருங்க சார் .. அவங்க மட்டும் இருக்கட்டும் .. ஆர்டரோடு வருவாங்க”
நான் வெளியே போய் நிற்க ..வீட்டம்மா ஆவலாய் ஓடிவந்தார்
”எங்கே?”
”சென்னை!”
”சென்னையா!!!!”
ஒவ்வொரு குழந்தையாய் கையில் ஆணையுடன் துள்ளிக் குதித்துவர ..இவள் மெதுவாக நடந்து வந்தாள் ..முகம் கவலையால் சுருங்கிப்போய் இருந்த்து
”அடுத்தவாரமே ஜூலை 19ல் காலேஜ் தொடங்குதாம்”
ஒருவாரம்..
மிக்க் கடினமான காலமாகிப் போனது எனக்கு
வீட்டில் ஒவ்வோருவரையும் சமாளித்து சமாதானப் படுத்தி , அழுதவர்களை மிரட்டி ஒருவழியாக ஒரு நிலைக்குக் கொண்டுவந்து ... ஒரு லாரி சாமான்களோடு 18ல் சென்னை வந்து சேர்ந்தோம்
சில நிர்வாக்க் குறைபாடுகள் ... அங்கே இங்கே என்று அலைச்சல்கள் ..மனதில் சஞ்சலம் உருவாக்க .. ஒருவழியாய் விடுதி அறைஎண்
4 மணிக்குத்தான் கொடுத்தார்கள் .. அங்கும் சில குறைகள் ..எல்லாவற்றையும் சரிசெய்து கிளம்ப இரவு மணி 9 ஆகி இருந்த்து
”பாப்பா ..கெளம்பட்டுமா ...”
காலைல பெற்றோர்கள் சந்திப்பு 9 மணிக்கு .. அதுக்கு வந்திட்டு ..சாயங்காலம் வரைக்கும் இங்கே இருந்திட்டுத்தான் கிளம்ப்புவோம் ..
அவள் அமைதியாய் குனிந்து நின்றாள்
”நானும் உங்ககூட இன்னிக்கு வாரேனே”
”ஏண்டா”
’எனக்கு இங்கப் பிடிக்கல அப்பா”
எனக்குப் பகீரென்றது .. முதன்முதலாய் எனக்குத் தொண்டை அடைத்தது
”புரிஞ்சுக்கோடா ... காலைல நீ 8.30க்கு வகுப்புல இருக்கணும் .. நைட்டு புது ரூம் ப்ரண்ட்ஸ் கூட அறிமுகமாகி சந்தோசமா இருக்கணும் ..என்ன..சரியா”
”நான் வாரேன்பா ..ப்ளீஸ் ...”
அவள் இதுவரைக்கும் என்னிடம் வேண்டுகோளாய் எதுவும் கேட்டதில்லை ..
என்கண்கள் கலங்கியது போலத் தெரிந்த்து
’அழுதிருவேனோ’
சாந்திக்கு ஏதோ புரிந்திருக்கும் போல ( இப்போது சாந்தி மிகத் தெளிவாய் இருந்தாள் ) ..அவளை மெல்ல அழைத்துக்கொண்டு தூரம் சென்று ஏதோ சொல்லியபடி இருந்தாள் ... பாப்பா திடீரென ஓடிவந்து எனக்கு ஒரு முத்தம் கொடுத்துவிட்டு ( இது இரவு படுக்கப் போகும் முன்னால் தினமும் கிடைக்கும் ) திரும்பிப் பார்க்காமல் உள்ளே ஓடி மறைந்துவிட்டாள் .. மழை தொடங்கி இருந்தது
மெல்ல வண்டியை எடுத்து எங்கோ சாப்பிட்டு, எங்கோ அறை எடுத்து படுக்கப் போகும்போது மணி 11 .. அலைச்சல் காரணமாக சாந்தி உடன் தூங்கிப்போக .... எனக்குள் மட்டும் ஏதோ இனம் புரியாத குடைச்சல் ..
இரவு மணி 2 .. ஒரு எஸ் எம் எஸ் ...
பதட்டத்தோடு எடுக்க ..அவள் தான்
‘ஐ மிஸ் யூ டாட் ‘
அதுவரையில் இத்தனை ஆண்டுகளாய் எனக்குள் ஒளிந்து கிடந்த எனக்கேத் தெரியாத அவன் ‘ஓ’ வென்று வாய் விட்டுக் கதற ஆரம்பித்தான் ..
எப்பொழுது தூங்கினேனோ தெரியவில்லை ..சாந்தி 6 மணிக்கு எழுப்பினாள்
“கிளம்புங்க .. 8க்கு முன்னால்யே அங்கே போனாத்தானே நல்லா இருக்கும்
அட..என்ன கண்ணெல்லாம் வீங்குனாப்ல இருக்கு”
”சரியா தூக்கமில்ல”
அவள் நம்பினதுபோல் தெரியவில்லை
பல்கலைக் கழகம் ..காலை 8 மணி ..விடுதியில் இருந்து அவள் வரக் காத்திருந்தோம் ... ஒரு கூட்டமாய் வந்தார்கள் .. பின்னால் கடைசியாக அவள் .. பகிரென்றது ..LKGல் இருந்து +2 வரையில் ஒருநாள் கூட விடுப்பு எடுத்ததில்லை ( 14 ஆண்டுகளில் 2 நாட்கள் மட்டுமே 2 மணி நேரம் முன்னதாக உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அழைத்து வந்திருக்கிறோம்) தாமதமாகப் போனதில்லை .. எதிலும் முதலாய் இருக்க வேண்டுமென்று நினைப்பவள் ..
எங்களைப் பார்த்த்தும் கூட்ட்த்தை பிளந்து ஓடி வந்தாள் ..அவளுக்கும் கண்கள் வீங்கி இருந்தது .. சாந்தி அர்த்தத்தோடு என்னைப் பார்க்க ,என்னிடம் ஏதோ எதிர்பாத்து என்கண்ணுக்குள் பாப்பாவும் பார்க்க , நேருக்கு நேராக பார்ப்பதை தவிர்க்க எங்கோ பார்க்க ஆரம்பித்தேன் ..
சந்திப்பு முடிந்து எல்லாரும் கிளம்ப எத்தனிக்க ., ஆங்காங்கே குடும்பம் குடும்பமாய் கூடி நின்று பேசி சிரித்து விடைபெற்றுக் கலையத் தொடங்க ,
”இப்போ போயிருவீங்களாப்பா” என்றாள் மெதுவாய்...
எனக்கு கால்கள் நடுங்க ஆரம்பித்த்து .. கண்ணீர் பெருக்கெடுக்க .. வண்டியை பார்த்து வேகமாக நடக்க ஆரம்பித்தேன்
”என்னாங்க எங்கே போறீங்க ?”
திரும்பாமலேயே சொன்னேன்
”அங்கேயே இருங்க ..இதோ முகம் கழுவீட்டு வாரேன்”
அந்த அரைமணிக்குள் 6 முறை முகம் கழுவிய என்னைபார்த்து முதலில் பயந்த குழந்தைகள் எல்லாம் இப்போது சிரிக்கதொடங்கி இருந்தன ..
’’