Saturday, January 31, 2009

ஏமாந்தது யாரிடம்.?



சாதகப் பொறுத்தம் பார்த்து
சாதகம் பாதகம் பேசி
நல்ல நேரம் பார்த்து
நாலு முறை கூடிப் பேசி
நல்லபடியாய் முடிவு செய்தனர்
நண்பன் அவன் திருமணத்தை

அங்கே.....

அவளை பற்றி அறிய
அவளைப் பின் தொடர்ந்தார்
அலுவலகத்திலிருந்து அவனின் மாமா

அலுவலக வாசல் தாண்டிய
அடுத்த நிமிடம் குனிந்த தலை
ஆறாவது தெருவில் இருக்கும்
அவள் வீடு வரும் வரை
அங்கே இங்கே திரும்பவில்லை
அரை அங்குலம் கூட நிமிரவில்லை

குடும்பத்தில் விளக்கேற்ற
குலமகளைத் தேடிய இடத்தில்
குத்து விளக்கே கிடைத்த மகிழ்ச்சி
குதூகலமாய் கிளம்பிப்போனார் மாமா

இங்கே......

அவன் நிலைமை விசாரிக்க
அவனிருக்கும் இடம் சென்றார்
ஆர்வத்தோடு அவளின் தாத்தா

இடையிலேயே பார்த்துவிட்டார் அவனை
இடைஞ்சலான போக்குவரத்திலும்
இருசக்கர வாகனத்தில் போகும் அவன்

கரம் கூப்ப வழி இல்லாததால்
சிரம் தாழ்த்தி வணங்கிச் செல்லும்
அவனின் சிறந்த பண்பால்
அங்கமெல்லாம் சிலிர்த்து
ஆரவாரமாய் கிளம்பிப் போனார்

எந்தவிதக் கேள்வியும் இல்லாமல்
அந்தத் திருமணம் இனிதே முடிந்தது

நன்று:ஆனாலும்

ஒரு உண்மை எல்லோருக்கும்
தெரிந்தே தான் ஆக வேண்டும்

அன்று அவள்.......

அலுவலக வாசலில் குனிந்து
அனுப்ப ஆரம்பித்தாள் குறுந்தகவல்(SMS)
அவள் வீடு போய்சேரும் வரை
அதுவும் போய் சேரவே இல்லை
அவளின் குனிந்த தலையும்
அதுவரை நிமிரவே இல்லை

அன்று அவன்.......

கழுத்துக்கும் காதுக்கும்
தோளுக்கும் இடையில் அந்த
அழுத்திப் பிடித்து இருந்த
அலைபேசியில் பேச
தலையை சாய்த்த அவன்
தாறுமாரான போக்குவரத்திலும்
தலையை தூக்கவே இல்லை
தாத்தாவையும் பார்க்கவே இல்லை

இரு வீட்டாரும் சேர்ந்து
இணைந்தே ஏமாந்து போனார்கள்
அவர்கள் எதிபார்க்காத ஒன்றிடம்!
அந்த அலை பேசியிடம்!!

இன்று முதல் இரவு...!


சம்பிரதாயங்கள் முடிந்துவிட்டது
சமயமும் இதோ வந்துவிட்டது
தொடங்கிவிட்டது புதிய வாழ்க்கை
தொடங்கப்போகிறது முதல் இரவு

எனக்கான துணை அவனை
எதிரே முதன்முதலாய்ப் பார்க்கிறேன்
எதற்காக என்றே தெரியவில்லை
எனக்கு அவனைப் பிடிக்கவே இல்லை

என் தகுதிக்கு இது சரியான இடமில்லை
எனக்கு இதில் உடன்பாடு இல்லை
என்றாலும் வேறு வழி இல்லை
எனது குடும்பச் சூழல் சரியில்லை

முகம் முழுவதும் பதட்டம்
முதல் அனுபவமும் இதுதான்
முழு இரவும் தூங்காமல்
விழித்திருக்க வேண்டுமோ?

இதுவரை ஒருநாளும் இருந்ததில்லை
இனியும் முடியுமா தெரியவில்லை
துடிக்கும் நெஞ்சோடு காத்திருக்கிறேன்
அனைவரும் தூங்கும்வரைப் பார்த்திருக்கிறேன்

அத்தனை பேரும் தூங்கிய பின்
ஆள் அரவம் ஓய்ந்த பின்
மெல்ல சன்னலைப் பூட்டி
மெதுவாக கதவை சாத்தி
படுக்கையை உதறி விரித்து
படுத்து உறங்கப் போகி....

இருங்கள்,இருங்கள் உங்களிடம்
இதுவரை நான் சொல்லவே இல்லையே!
இரவுக் காவலாளி வேலை!!
இன்றுதான் சேர்ந்து இருக்கிறேன்!!!

Wednesday, January 28, 2009

ஹவ் ஈஸ் தாட்...!!!!!


ஆங்கிலம் பேசும் அந்நியர்கள்
இங்கிலாந்து நாட்டவர்கள்
இந்தியாவை சுற்றிப் பார்க்க
வந்திருக்கிறார்கள் இன்பச்சுற்றுலா

சுற்றிப் பார்க்க வந்த இடத்தில்
சும்மா இருக்கவில்லை அவர்கள்
சுற்றிக் காட்டும் என்னிடம்
சுரண்டியபடியே இருக்கிறார்கள்

"உங்கள் தாய்த் திரு நாட்டை
நாங்கள் அடிமை படுத்தியிருந்தோம்
எங்கள் காலடியில் மிதித்திருந்தோம்
இருநூறு ஆண்டுகளாய் எங்கள்
இரும்புப் பிடிக்குள் வைத்திருந்தோம்
போராடித்தானே உங்களால்
பெறமுடிந்தது விடுதலையை"

திறந்த வாயை அவர்கள்
திரும்பவும் மூடவே இல்லை

விருந்தோம்பல் போற்றும் நம்மிடம்
வீணாய் வீராப்பு பேசி அவர்கள்
உராய்ந்து கொண்டே இருக்கிறார்கள்
பொறுமை இழக்கவில்லை நான்
பொறுப்பை உணர்ந்தும் இருக்கிறேன்

ஆனாலும் பேசியாக வேண்டும் நான்
அவர்கள் வாயை அடைக்க வேண்டும்
பாரம்பரியம் தெரியாத விருந்தினரை
பழிவாங்கலாம் தப்பே இல்லை

"அன்பர்களே! உங்களுக்குத் தெரியுமா?
அறிந்து கொள்ளுங்கள்உண்மை நிலையை!
கனவானகளே! ஒன்றல்ல இரண்டல்ல
கடந்த எழுபதாண்டுகளாய் நாங்கள்

நித்தம் நித்தம் உங்கள் தாய்மொழியை
கொஞ்சம் கொஞ்சமாய் கொன்று கொண்டிருக்கிறோம்
கடித்து கடித்துத் துப்பிக் கொண்டிருக்கிறோம்
கழுவேற்றிக் சிதைத்துக் கொண்டிருக்கிறோம்

இருநூறு ஆண்டுகள் அல்ல!
ஈராயிரம் ஆண்டுகளானாலும் சரி !!
இதிலிருந்து விடுதலை பெற
இயலுமா அய்யா உங்களால்?
முடிந்த வரையில் நீங்களும்
முயற்சி செய்துதான் பாருங்களேன் !!!"


இப்போதும்

திறந்த வாயை அவர்கள்
திரும்பவும் மூடவே இல்லை

ஹவ் ஈஸ் தாட்...!!!!!

Tuesday, January 27, 2009

என்ன நினைத்திருப்பான்..?


விபத்து !
அப்போதுதான் நடந்திருக்கிறது!!
சிதறியப் பொருட்களால் அந்த இடமே
பதறிப் போய் இருக்கிறது!!!

இரண்டு வாலிபர்கள்
இருசக்கர வாகனத்தில்
நேருக்கு நேர் மோதி
இறந்து போய் கிடக்கிறார்கள்

அரசு மருத்துவமனையில்
அவசரச் சிகிச்சைப் பிரிவில்
முதலுதவிப் பகுதியில்
முதன்மை மருத்துவன் நான்

ஆயிரம் பிணங்களை நான்
அறுத்ததுத் தைத்திருக்கிறேன்
மரத்துப் போயிருக்கிறேன்ஆனாலும்

கண்முன்னே நேரடியாய்க் களத்தில்
காண்பது இதுவே முதல் முறை
என்றாலும் எனக்கு கலவரமாய்
எதுவும் தோன்றவும் இல்லை

தலைக் கவசமும் இடாமல்
தடம் மாறி வந்திருக்கிறான் இவன்
அலைபேசியில் பேசியபடி
அதி வேகமாகவும் வந்திருக்கிறான் அவன்

சாலை விதிகள் மயிராய் மதிக்கப்படதனால்
விலை மதிப்பற்ற உயிர்கள் பறிக்கப்பட்டிருக்கிறது

நின்று நிதானமாய் நான்
நிலமையை கணிக்கிறேன்
இறப்பதற்கு முன்னால் இருவருமே
எதற்காகவோ முயன்றிருக்கிறார்கள்

முதலாமவனைச் சுற்றிலும்
சிதறிய பணத்தைச் சேகரிக்க
முயற்சி செய்து பார்த்திருக்கிறான்
முடியாமல் இறந்து போயிருக்கிறான்

"என்னமாதிரியான உலகம்!
என்றுதான் ஒழியும் பணமோகம்?!"

எனக்குள்ளேயே யோசித்த நான்
எதிர் திசையில் கவனிக்கிறேன்

மற்றவனின் உறைந்த பார்வை
சேர்ந்த இடம் பார்த்த நான்
வாழ்க்கையில்யே முதன்முறையாக
வாய் பேச முடியாமல்
செயல் இழந்து போகிறேன்
கல்லாய் இறுகி இருந்த நான்
மெல்லக் கரைந்து போகிறேன்

"என்ன நினைத்திருப்பான் இவன்?
எங்கே போய்க்கொண்டிருந்தான் இவன்?"

கேள்விகளை கேலி செய்துகொண்டு
கண்முன்னால் சிதறிக் கிடக்கிறது

விரிந்து கிடக்கும் விபூதிப் பொட்டலமும்
திறந்து கிடக்கும் பால் புட்டியும்

Sunday, January 18, 2009

நான்., மன்னார் குடா...!!!



நான் மன்னார் வளைகுடா
இரு நாடுகளின் கரையாய் இருக்கிறேன்
ஒரே இன மக்களின் தரையாய் இருக்கிறேன்

ஒரு மணிநேரம் பயணதூர இடைவெளியில்
அறுபதுவருட ஏற்றத்தாழ்வுகள் வாழும் நிலையில்

ஒரு கரையில் எப்போதும் கடல் காற்று வீசும்
மறு கரையில் இப்போதும் கண்ணீரின் வாசம்

கடல் நோக்கிக் காத்திருக்கிறார்கள் மக்கள்
கடல் காற்று வருமா என இங்கே
காக்க படகு வருமா என அங்கே
காதல் வளர்க்க அமர்ந்து இருக்கிறார்கள் இங்கே
காலன் வருவான் சேர்ந்து இருந்தால் அங்கே

மணல்வெளியில் தட்டுப்படுகிறார்கள் மழலைகள்
மணலில் வீடுகட்டி விளையாடுகிறார்கள் இங்கே
மணலே வீடாய் வீழ்ந்துகிடக்கிறார்கள் அங்கே

வான் நோக்கி எதிர்பார்த்திருக்கிறார்கள் சிறுவர்கள்
வானூர்தி பார்த்தவுடன் கையசைத்து
வழியனுப்பி வைக்கிறார்கள் இங்கே
விமான சத்தம் கேட்டவுடன் குழிக்குள்
வாய்பொத்திக் குதிக்கிறார்கள் அங்கே

நடந்து கொண்டிருக்கிறார்கள் பெரியவர்கள்
நல்ல தூக்கம் வரவழைக்க
நடைப் பயிற்சி செய்கிறார்கள் இங்கே
தூக்கத்தையும் சேர்த்து தூக்கி
துக்கத்தோடு நடக்கிறார்கள் அங்கே

வயிறு பிழைக்க படகேறுகிறார்கள் இங்கே
வாழ்க்கையே பிழைக்க கடலேறுகிறார்கள் அங்கே

வீதியில் அலையும் அவர்களின்
விதியின் உள்நோக்கம் புரியவில்லை
உறவை பிரிந்து தவிக்க அவர்கள்
குற்றமென்ன செய்தார்கள் தெரியவில்லை
பகுத்தறிந்து பார்த்தவரையில்
பகுதிக்குகூட விடை இதுவரை கிடைக்கவில்லை

உண்மையை யார் உணர்வார்?
நிலமையை எவர் உணர்த்துவார்?
அவலம் எப்போது தான் தீரும் !
நிலவரமும் எப்படித் தான் மாறும்!!

ரெய்ன்,ரெய்ன் கோ அவே...!!


மாரி மழை பொய்த்து விட்டது
மானாவாரியும் ஏய்த்து விட்டது
வயல் வரப்புக்குள் எங்கும் நிறைந்து
வெறுமையே வியாபித்திருக்கிறது

ஏழை எங்கள் பிழைப்பு எல்லாமே
மழையை நம்பித்தானே இருக்கிறது
வானம் பார்த்த பூமியெல்லாம்
தினம் ஏங்கும் எங்க மனம்போல
வரண்டுபோய்த் தான் கிடக்கிறது
இருண்டுபோய்த் தான் இருக்கிறது

வீட்டிற்குள் இன்றும் இடி மின்னல்
வீதியில் நின்று சத்தமிடுகிறாள்
விதியை நொந்து சமாளிக்கிறேன்

"ஒரு மழை வந்தாலே போதுமே
இரு போகம் நல்லாவே வெளஞ்சிருமே
கொஞ்சம் பொறுமை காத்தா
மிஞ்சும் காசு பாத்திரலாம்
கொஞ்சம் பொறு ஆத்தா"

கெஞ்சி அவள் முன் நிற்கிறேன்

ஆசைமகனை அடுத்த ஊர்
ஆங்கிலப் பள்ளீயில் சேர்க்க
அவதாரமெடுத்து ஆடுகிறாள்

"போதுமே ஒங்க ஒழப்பு
இதுவுமா ஒரு பொளப்பு
என்னன்னுதான் படிச்சீங்க
என்னத்தப் பண்ணி கிழிச்சீங்க"


விசத்தை வார்த்தையாக்கி
வாய்வழியே கொட்டுகிறாள்

"வெசயம் தெரியாம பேசாதீங்க
வெவசாயமே வேணாமுங்கிறேன்
உழவு மாடு மட்டுமெதுக்கு
உடனே வித்திட்டு வந்து சேருங்க"


எளியவன் சொல் எதுவும்
ஏறவில்லை அம்பலத்தில்
எல்லாம் முடிந்துவிட்டது
மாடு விற்ற பணப்பையோடும்
மறு கையில் பையனோடும்
பள்ளி நோக்கி செல்கிறேன்

உச்சிவேளைப் பொழுதில்
உச்சந்தலையின் நடுவில்
நச்சென விழுகிறது ஒரு துளி
உள்ளே சோர்ந்து போயிருந்த
உயிர் உறக்க விழிக்கிறது
மழையோ என எதிர்பார்த்து
மேலே நிமிர்ந்து பார்க்கிறேன்
கறைபடுத்தி விட்டு காகம் ஒன்று
கடந்து போய்க் கொண்டிருக்கிறது
சொர்ப்ப நேரமானாலும்
சொர்க்கத்தைக் காட்டிய
காக்கையிடம் நான்
கடவுளையே உணர்கிறேன்

பள்ளியினுள் நுழைகிறேன்
பாடம் நடந்து கொண்டிருக்கிறது
மொத்தமாய் சேர்ந்து குழந்தைகள்
சத்தமாய் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்

"ரெய்ன் ரெய்ன் கோ அவே..
ரெய்ன் ரெய்ன் கோ அவே ..."


என்ன நிகழ்ந்தாலும் சரி
எந்த விளைவுக்கும் தயாராகிறேன்
வந்த வழியே திரும்புகிறேன்
இந்தப் படிப்புமட்டும் என் குழந்தைக்கு
வேண்டவே வேண்டாம்

Saturday, January 17, 2009

அகதி அகற்ற....!


"அங்கு விரைந்துசென்று போரிடலாம் வா" என்று
இங்கு வீரவசனம் பேசி வாதிடலாம்
இளையோர் கூட்டம் சேர்த்திடலாம்-முதலில்
இங்குள்ள நடைமுறையைப் புரிந்து கொள்
இந்த நாட்டுநடப்பை தெரிந்து கொள்

அபயம் தேடி ஆதரவு நாடி
அண்டி வாழ வந்தவர்களை
அகதி என ஒதுக்கி வைத்து
அவமானப்படுத்திக் கொண்டிருக்கிறோம்

"அகதிகள் இல்லாத
அகன்ற உலகம் படைக்க
அலைகடலென படை திரண்டு.....
................................."

அர்த்தமற்ற மேடைப் பேச்சுகளை
அவர்கள் பாடை ஏறும் முன்பாவது நிறுத்துவோம்
அகதி என்ற சொல்லையாவது முதலில்
அகராதியிலிருந்து எடுக்க வலியுருத்துவோம்

'வந்தாரை வாழவைக்கும் தமிழகம்' என்று
நம்பி வெம்பி வந்தவர்களில்
இங்கு வந்து படித்தவர்களுக்கும்
அங்கேயே பட்டம் வாங்கியவர்களுக்கும்
கொஞ்சமும் இடமில்லை வேலை வாய்ப்புகளில்

பொறியாளர் பொதி சுமக்கிறார்...
ஆசிரியர் ஆடு மேய்க்கிறார்......
மேளாலர் மண் வெட்டுகிறார்.....
இயக்குனர் கல் உடைக்கிறார்......
.......
.......

வயிற்றுப் பிழைப்புக்காக
வந்த வேலையை தட்டாமல்
விதியை நொந்து செய்து கொண்டிருக்கிறார்கள்

வந்தவர்களை போட்டியாக நினையாமல்
வேலை வாய்ப்பில் தடம் பதிக்க
இட ஒதுக்கீட்டில் இடம் கிடைக்க
இயன்றதைச் செய்ய முயலுவோம்

மாற்று மொழி,இனத்தாரை
மண் ஆளும்வரை உயர்த்தியிருக்கிறோம்
தன் இனம் தேடிவந்த
தொப்புள்கொடி உறவுகளையும்
தூக்கிப் பிடிக்க தன்னாலானதைச் செய்வோம்

Thursday, January 15, 2009

மனம் ஒரு...!!!


இரக்கம் கொஞ்சம் கூட இல்லாத
இறைச்சிக் கடையின் முன்னால் நான்

ஒன்பதுக்கு மட்டுமேயான கோழிக்கூண்டில்
எண்பதை கூட்டி அடைத்திருக்கிறார்கள்
பட்டினியாகத்தான் இருக்கவேண்டும்
பரிதாபமாய் அத்தனை உயிர்களும்

"உணவேதும் போட்டீர்களா?"

உண்மை அறிய கேட்ட கேள்விக்கு
உதாசீனமாகவே வந்தது பதிலும் கேள்வியாகவே

"விரைவில் சாகப்போகும் அதற்கு
வீணாய் உணவெல்லாம் எதற்கு?"


கூண்டிற்குள் இருந்து
ஒன்றைத் தேர்ந்தெடுத்து
மற்றவையின் கண்முன்னாலேயே
கொடூரமாய்க் கொலைசெய்து
உயிர் போகும் முன்னரே
மயிர் பறித்து தோலுறித்து
........................
........................
தராசிலிருந்து இறக்கி
துண்டுகளாக்கி முடிக்கும் வரை
துடித்துக்கொண்டே இருக்கிறது
தரையில் விழுந்த
இரண்டு இதயங்கள்

"ஒரு உயிரின் கண் முன்னே
மற்றதை கொல்லக்கூடாது
சட்டப்படி குற்றச் செயல் அது
கூடியவரை தவிர்க்கவேண்டும் அதை"


ஓங்கி ஒலித்தது எனது குரல்
ஓரவிழியால் பார்க்கிறான் கடைக்காரன்
என் முகத்திலிருந்து அவன்
எதையோ வித்தியாசமாய் உணர்கிறான்
அவசரமாய் பொட்டலம் கட்டி
அடுத்த நொடி கையில் திணிக்கிறான்

'ஆகா! எடை குறைவாகத் தெரிகிறதே?
அளவில் ஏதும் ஏமாற்றியிருப்பானோ!
ஏதேதோ நினைப்பில் நானும்
எடைகல்லை பார்க்க மறந்து போணேனே!!'

Tuesday, January 13, 2009

ஊரான் பிள்ளையை...!!!


மகப்பேறு மருத்துவமனையின் உள்ளே
அவசரச் சிகிச்சைப் பிரிவில்
அறுவை மருத்துவப் பகுதியின் வெளியே

உடல் சோர்ந்துபோய் ஓய்ந்திருக்க
உள்ளம் ஏங்கிப்போய் வாசலில் தவமிருக்கிறது

பதட்டத்தோடு வருகிறார் மருத்துவர்
அவசரமாய் ஏதோ பெயர் எழுதி
அவன் கையில் திணிக்கிறார்
"காலம் கடந்து விட்டது ஆனாலும்
கடைசியாய் ஒரு முயற்சி
கடவுளிடம் வேண்டிக்கொள்ளுங்கள்
கருணை அவன் வைத்துவிட்டால்
இரண்டில் ஒன்றாவது பிழைக்கும்"


மருத்துவமனையில் இல்லாத
மிக முக்கியமான மருந்தாம்
தொலைவில் தான் கிடைக்குமாம்
தலை தெறிக்க ஓடுகிறான்

இருசக்கர வாகனம் எடுத்து
நூறுமைல் வேகம் கொடுத்துப் விரைகிறான்
நினைவுகள் அவனைப் புறம் தள்ளி
நிலைகொள்ளாமல் பின்னோக்கிப் பறக்கிறது

பத்து வருடக் கனவு
பாதியிலேயே கலைந்து விடுமா?
கூடும் இடத்தில் ஏளனம்
குடும்பத்திற்குள்ளும் அவமானம்
மலடி என்ற மறைமுகப் பேச்சையும்
முடியாதவன் என்ற மனம் வேகும் ஏச்சையும்
மாற்றி அமைக்க வந்த மாமருந்து
முகம் பார்க்காமலேயே மறைந்துவிடுமா?

திடீர் குறுக்கீட்டால்
தொடர்பு தடைபட்டு
தடாலென நிறுத்துகிறான்
நடுசாலையில் உள்ளங்கை வியர்க்க
நடுங்கிப்போய் நிற்கிறான்

மிரண்ட பார்வையோடு
மேலும் தொடர வழி தெரியாமல்
குட்டி பூனை ஒன்று
குறுக்கே நின்றுகொண்டிருக்கிறது

ஒரு நொடியில் போக்குவரத்து நெரிசல்
இரண்டு பக்கமும் நீண்டுவிடுகிறது

"வீட்ல சொல்லிட்டு வந்துட்டியா?!"
"சாவுறதுக்கு என் வண்டியா கெடச்சது!"
"உன் அப்பன் ஊட்டு ரோடா இது !"
"பெரிய கடவுள்னுதான் நெனப்பு!"


ஏச்சுகளும் பேச்சுகளும் தொடர்ந்தாலும்
எதுவும் அவன் காதில் விழவில்லை
'அங்கீகரிக்க அவசியமில்லை
ஆதரவுதர தேவையும் இல்லை-ஆனாலும்
அவமானப்படுத்தாமல் இருக்கலாமே'


வேதனையைத் தாங்கிக்கொண்டு
பூனையையும் தூக்கிக்கொண்டு
மன வருத்தத்தோடு அங்கிருந்து
மருந்து வாங்கக் கிளம்புகிறான்

அதே நேரம் அங்கீகாரம்
அவனுக்கு அங்கே கிடைத்துவிட்டது
தலை தப்பிய சுகப்பிரசவம்
தாயும் சேயும் நலம்

Saturday, January 10, 2009

வானம் ஏறி...!!!


அமெரிக்காவில் பொருளாதாரம்
அடியோடு ஒடுங்கிப் போய்விட்டது
இங்கிலாந்தில் இன்றும் அது
இறங்கிக்கொண்டே இருக்கிறது
சப்பானில் தலைவர்கள்
சதிராடும் நிலவரம் புரியாமல்
தலைமையே வேண்டாம் என்று
தலை தெரிக்க ஓடிக்கொண்டிருக்கிறார்கள்

கார்டுகளையே கடவுளாகக் கொண்டு
கணக்கில் மட்டுமே பணத்தைக் கண்டு
கணினியில் ஏறி கனவுலகம் போக
நிகழ்காலம் கடந்தவர்களின் வாழ்க்கை
நிமிட நேரத்தில் சூன்யமாகிப்போனது

அதிகமான எழுச்சியும்
அபரிதமான வளர்ச்சியும்
ஆபத்தில் தான் முடிந்துபோனது
தெருவில் ஒதுங்க இடம் கிடைப்பதே
தேவலாகம் அடைந்தது போலானது

"இருங்க..
இருங்க...
எப்படி இருக்கிறது
எங்க ஊரில் நிலமை?
எங்கோ எழவு விழுந்ததுக்கு
இங்கே அழ வேண்டி வந்துருமோ??"


இல்லை!
இந்தியாவிலும் அது
இறங்கு முகமாகத் இருந்தாலும்
சாமானியனுக்கு அந்தச்செய்தி போய்
சேர்ந்த மாதிரித் தெரியவில்லை!!

வறுமையில் விவசாயிகள்
வசதியில் வியாபாரிகள்

வாடிப்போன தொழிலாளிகள்
வளமையான முதலாளிகள்

வேடிக்கை பார்க்கும் பொதுசனம்
வாழ்ந்துகொண்டிருக்கும் சனநாயகம்


மாற்றம் இதுவரை தெரியவில்லை
ஏமாற்றமும் பெரிதாய் ஏதுமில்லை

இன்றைய இக்கட்டான நிலமையில்
இடிந்துபோன உலகைப் பார்க்கையில்
இப்படியே இருப்பதும் கூட
இனிமையாகத்தான் தெரிகிறது

Friday, January 9, 2009

உன் தோலுரிக்கும் விளம்பரப் பலகை..!!


- இருதய மருத்துவமனை ஒலி எழுப்பாதீர்-
- சந்தைப் பகுதி மெதுவாகச் செல்லவும் -
- கோவிலுக்குள் செல்பேசி தவிர்க்கவும் -
- குப்பைகளை கூடையில் போடவம் -
- பள்ளி சுவர் விளம்பரம் செய்யாதிர் -
- அனுமதி பெற்று உள்ளே வா -
- வரிசையில் வரவும் -
- எச்சில் துப்பாதீர்கள் -

........................
.......................
இது கொஞ்சம் போலத்தான்
இருக்கிறது இதுபோலவே
இன்னும் பல பல

வேண்டிக் கேட்டுக்கொள்ளும்
விளம்பரப் பலகைகள் எல்லாமே
உனக்கே தெரியாமல்
உனது தோலை உறிக்கின்றன
உனது முகத்திரையைக் கிழிக்கின்றன
உலகுக்கு உணர்த்துகின்றன
உனது தரத்தையும் தகுதியையும்

உண்மையை உணர்ந்து
உன்னை நீ திருத்து!
அத்தியாவசிய அறிவுறுத்தல் தவிர
மற்றது அனைத்தையும் அகற்ற
மனது வைக்கவேண்டும்!!

மானுடம் செயிக்க வேண்டும்!
முதலடி நாமே வைக்க வேண்டும்!!
அதற்கு நீயும் நானுமே சேர்ந்து
ஆவன செய்ய வேண்டும்!!!

Thursday, January 8, 2009

மண் வாசம்..!!


அவசர சிகிச்சைப் பிரிவுக்குள்
அனுமதி இல்லை பிறருக்கு

இயற்கை விவசாயம் செய்துகொண்டு
இல்லாதோர்க்கு உதவிக் கொண்டு
இயங்கிக்கொண்டிருந்தார் முடிந்த மட்டும்

இன்று இயந்திரங்களின் உதவி கொண்டு
இறுதி மூச்சைப் பிடித்துக் கொண்டு
இயங்கிக் கொண்டிருக்கிறது உடல் மட்டும்

உள்ளே செயல் இழந்த நிலையில் பெரியவர்
வெளியே செய்திக்காக காத்திருக்கும் உரியவர்

அங்கும் இங்குமாய் பதட்டத்தோடு
அலைந்து கொண்டிருக்கிறார்கள் மருத்துவர்கள்
அங்கொன்றும் இங்கொன்றுமாய் பல திட்டத்தோடு
அமர்ந்து கொண்டிருக்கிறார்கள் உறவினர்கள்

அவசரமான நகர வாழ்க்கை
அவரவர் கவலை அவரவருக்கு

"சொத்து பிரிச்சு கொடுக்காம பெரிசு
செத்துப் போயிசேந்திருமோ?"

"மருந்துக்கு செலவு செஞ்சே கை
இருப்பு கரஞ்சுக்கிட்டே வருதே?"

"இன்னும் எத்தன நாளு தான்
இங்கே காத்துக் கெடக்க வேணுமோ?"

"விடுமுறை முடியப்போகிறதே
விடுதலை எப்பத்தான் கிடைக்கும்?"

"புள்ள குட்டிய விட்டுட்டு வந்திருக்கோமே
மெல்ல ஒரு எட்டு பாத்திட்டு வந்திருவோமா?"


பலதரப்பட்ட மனிதர்கள்
பலவகையான கவலைகள்

மெல்ல வெளியேவந்த மருத்துவர்
மொத்தமாய் கையை விரிக்கிறார்
"ஒருமுறை பார்த்துக்கொள்ளுங்கள்
ஒருமணிக்குள் முடிந்துவிடும்"


அனைவரும் மொத்தமாய்
அவர்முன் கூடி நிற்கிறார்கள்
கசிந்த செய்தி கேள்விப்பட்டு
கதறலோடு வந்து சேருகிறான்
கடைக்குட்டி அவன் கிராமத்திலிருந்து

அவன் உள்ளே நுழைந்ததும்
அங்கே சூழலே மாறிப்போய் விடுகிறது
அனைவரும் முகம் சுழிக்கிறார்கள்
அவனைப் பார்த்து முறைக்கிறார்கள்

சுற்றிலும் சூழ்ந்து நிற்கிறது
சுத்தமான மண் வாசம்
களத்திலிருந்து நேராய்
கிளம்பி வந்திருக்கிறான்

அப்போதுதான் அது நிகழ்ந்தது!
அய்யாவின் கைவிரல் அசைந்தது!!

Wednesday, January 7, 2009

மொட்டையாய் யானை...!


நாட்டிலுள்ள யானைகள் எல்லாம்
மொட்டையான வால்களோடு
முடி இல்லாமல் மூழியாய்
வேதனையோடு அலைகின்றன
வெட்க்கப்பட்டுத் திரிகின்றன

இது எப்படி நடந்தது?
இயற்கையின் குறைபாடா?
இல்லை படைப்பின் கோளாறா?

விடை தெரியவில்லை என
விதியை நொந்து கொள்ளாதே
பாவி மனிதா! நிகழ்த்தியதே நீ தானே!
பதிலும் நீ தான் சொல்லியாக வேண்டும்!!

ஆறறிவு மனிதனின் உயிரை காக்க
ஐந்தறிவு யானை வாலின் மயிரா ?

உண்மை உணர்ந்து கொள்
உன்னைத் திருத்திக்கொள்

இந்த அவல நிலை
இனியும் நீடித்தால்
நாளைய உலகில்
நம் குழந்தைகள் பார்க்கலாம்
பல் இல்லாத பசு !
வால் இல்லாத வாத்து !
காது இல்லாத முயல் !
நகம் இல்.......!
நாக்..............!
...................!

அறுபதாண்டுக் கனவு..!


கார் வாங்கி இருக்கிறேன்..
கார் வாங்கி இருக்கிறேன்...
கார் வாங்கி இருக்கிறேன்....
குளிர் சாதன வசதியுடனான
குளுகுளு குட்டிக் கார் அது

அறுபதாண்டுக் கனவு
ஆறு வயதில் எதிர்வீட்டு மிதிவண்டி மீது
அன்று ஆரம்பமான ஏக்கம் அது
இருபது வயதில் கார் மீது வந்து நின்றது

கோழி பக்கத்தில் வந்தாலும்
கோழியின் இறகு பட்டு
கோடு ஏதும் விழுந்திருக்குமோ என்று
குனிந்து தடவிப் பார்க்கிறேன்
காகம் தாண்டிப் போனலும்
கறை ஏதும் பட்டிருக்குமோ என்று
கவலையோடு கவனித்துப் பார்க்கிறேன்

பேரக் குழந்தைகள் ஆசையோடு
பாய்ந்து வந்து ஏறும்போது
"பாத்து,பாத்து" எனக் கத்தியே
பதறி தவித்துப் போகிறேன்

பழைய நண்பன் ஒருவன்
பக்கத்து தெரு போய்வரக் கேட்டதற்கு
"பையனுக்கே இன்னும் கொடுக்கவில்லை
பரதேசி உனக்கு இப்போது எதற்கு"
என
பதில் கூறிவிட்டு விரைகிறேன்

போக்குவரத்து நெரிசல் இருந்தாலும்
பத்தடி இடைவெளி சுற்றிலும்
சுத்தமாய் இருக்க பார்த்துக் கொள்கிறேன்
பாதுகாப்பாய் ஓட்டிச் செல்கிறேன்

கிண்டலும் கேலியும் என்னைச் சுற்றி
கண்டுகொள்ளவே இல்லை நான் அதனைப் பற்றி
கோழிதானே அறியும் முட்டையிடும் எரிச்சல் பற்றி

இன்று வெளியூர் பயணம்
இரவே வண்டியை எடுத்து
அங்குலம் அங்குலமாய் அலசி
அத்தனையும் துடைத்து
பள பளவென இழைத்து
பளிங்கு போலாக்கி நிறுத்தியிருக்கிறேன்

ஒருவரையும் தொடவிடாமல்
ஒவ்வொரு கதவாய் நானே திறந்து
ஒழுங்காய் அமரவைத்து
ஒருவழியாய்க் கிளம்புகிறோம்

சாலை சந்திப்பு. உச்சி வெயில்.
சன்னலைச் சுற்றி மொய்க்கும்
பிச்சை எடுக்கும் குழந்தைகள்
பார்த்தவுடன் மனது பதறிப் போகிறது
தொட்டு கோடிட்டு விடுவார்களோ?
முட்டிக்கொண்டு வந்த கோபம்
மூக்கின் மேல் நிற்கிறது

அப்போது தான் கவனிக்கிறேன்
அந்தக் குட்டிக் குழந்தை
எனது பக்க சன்னல் கண்ணாடியில்
தனது கன்னம் ஆழப் பதித்து
சில்லிடும் குளிர்சாதனத்தின்
சிலிர்ப்பூட்டும் குளிர்ச்சியை
உள் வாங்கிக் கொண்டு
உலகையே மறந்து நின்றுகொண்டிருக்கிறது


மயான அமைதி வண்டிக்குள்
மறு நிமிடம் நிகழப்போவதை
எதிர்கொள்ளும் தைரியம் இல்லாமல்
என்ன நடக்கும் என்றும் தெரியாமல்
உள்ளம் உறைந்துபோய் என்னையே
உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்

இதுவரை உறைந்துபோயிருந்த நான்
இப்போதுதான் உருகத்தொடங்கி இருக்கிறேன்
அன்று குழந்தையாய் நான் கொண்ட ஏக்கம்
இந்தக் குழந்தையின் முகத்தில் பார்க்கிறேன்
அறுபது வயது உடல் உள்ளே இருந்தாலும்
ஆறு வயது மனதுடன் வெளியே உணர்கிறேன்

பச்சை விளக்கு ஒளிர்கிறது
பின்னாலுள்ள வாகனங்களின்
ஒலிப்பானின் ஓசை
ஒன்றாய் சேர்ந்து ஓங்கி
ஒலித்துகொண்டே இருக்கிறது............
......................................
......................................

Tuesday, January 6, 2009

சொர்க்கத்தின் மறுபெயர்...!



"கால் கடுக்க நின்னு
கையெடுத்துக் கும்பிட்டாலும்
கண்டுக்காம போயிருவானுக,
கடவுளே! இப்ப வந்து எங்
காலுல இல்ல உழுறானுங்க!"

"நாதியத்துப்போன என்ன
நாய்கூட மோந்து பாக்கலியே,
நாலு நாளா கார்ல வந்து
நல்லா இருக்கியான்னு நாலுவார்த்த
எந்த ஊரு மவராசங்களோ
எங்கிட்ட வந்து கேட்டுப் போறாங்களே!"

"கட்ட எப்ப சாயும் திண்ண எப்ப காலியாவுமுன்னு
பாட கட்டிக் காத்திருந்தாங்க பெத்த மகனுங்க,
படுபாவி மகளே போய்சேந்திராதேன்னு
பொத்திப் பொத்திப் பாத்துக்கிறாங்க வந்த புள்ளைங்க!"

"நாலணாகாசு கேட்டாக்கூட
நாக்கத் துறுத்திட்டு தொரத்துவானுவோ
நான் கைய நீட்டுறதுக்கு முன்னாடியே
நூறு நூறா வெட்டுறானுவளே"


இல்லாத சாலைகள் கிடைக்கும்
இலவசமாய் சேலைகள் கிடைக்கும்
வேட்டி சட்டையும் சேர்ந்து கிடைக்கும்
வட்டி கட்டவும் பணம் கிடைக்கும்
திருவிழாபோல கறிசோறு
திகட்டும் மட்டும் கிடைக்கும்
வேலை வேண்டுமே என்ற
கவலை இனிமேல் வேண்டாம்
தினம் தோறும் ஐந்நூறு
தவறாமல் கிடைத்து விடும்
இந்தியாவே இப்ப இருட்டுக்குள இருந்தாலும்
எங்க ஊரு எப்பவும் வெளிச்சத்திலேயே மிதக்கும்

இருங்க!...இருங்க!!....இருங்க!!!.....

ஊர்மக்களின் பேச்சைக் கேட்க கேட்க
உள்ளபடியே சந்தேகம் பூதாகரமாய் எழுகிறது!
சொர்க்கத்திலா இருக்கிறார்கள் அவர்கள்?
சந்தேகமாய் இருக்கிறது எங்களுக்கு!

அட!இடைத் தேர்தல் அறிவித்திருக்கிறார்கள் அங்கே
ஆமாம்!!இலவச சந்தையை திறந்திருக்கிறார்கள் அங்கே

சந்தடிச் சாக்கில் எங்களுக்குள்ளும்
அந்த சாத்தான் எட்டிப் பார்க்கிறது

இனிமேல் எல்லா தொகுதியிலும்
இடைத்தேர்தலாகவே இருந்தால் என்ன?
ஒருமாத இடைவெளி விட்டு
ஒவ்வொன்றாய் நடத்தினால் என்ன??

நடத்தி முடிக்க கொஞ்சம் பேசிப் பார்க்கலாம்!
நடந்தால் நாமும் நாலு காசு பார்க்கலாம்!!

சட்டத் திருத்தம் கொண்டுவந்தால்
நாட்டு மக்கள் அனைவருமே
நலம் பலப் பெறுவார்களே!
நல்வாழ்க்கை அடைவார்களே!!

Monday, January 5, 2009

மாற்றி யோசி...!


சந்திரயான்-1 மூலம்
சந்திரனில் கால் பதித்து
வானியல் வல்லரசுகளின்
வரிசையில் நிலைத்துவிட்டோம் !

முன்னூற்று எண்பது கோடி செலவில்
மூவர்ணக் கொடியின் தடத்தை
முழு நிலவில் விதைத்துவிட்டோம் !
அறிஞர்களின் அறுபதாண்டு கால
அர்ப்பணிப்பில் சாதித்துவிட்டோம் !!

அந்த நிலவு போலவே
இது இந்தியாவின் வெளிச்சப் பக்கம்.
இனி அறிந்துகொள்வோமா
இருண்ட அதன் வேறு பக்கம்


காலையில் கழிப்பறை தொடங்கி
கடைசியில் மயானம் போகும்வரை
அலைபேசியில் மாதத்துக்கு
ஆயிரம் கோடிக்கு பேசி முடிக்கிறோம்

ஐநூறுகோடி செலவில் ஆண்டுக்கு
ஐம்பதுக்குமேல் அரைவேக்காடு
அதிரடித் திரைப்படங்கள் வெளியிட்டு
அரங்கில் தலை நிமிர்ந்து நிற்கிறோம்

இருநூறுகோடி விலையில் ஆண்டுக்கு
இருபதுக்கும் மேல் ஆடம்பரவாகனங்கள்
இந்த ஏழை விவசாய நாட்டுக்குள்
இறக்குமதி செய்து கொண்டிருக்கிறோம்

ஆயிரம் கோடி வருமானம் என
ஆட்சியில் இல்லாத கட்சி கூட
ஆணித்தரமாய் கணக்கு காட்டும்
அதிசயமும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது

இந்த அரசியல்வாதிகளின்
இல்லாத பெயர்களில்
வெளிநாட்டு வங்கிகளில்
வெளியே தெரியாமல் முடங்கும் பணம்
இந்திய வரவு செலவைவிட
இருமடங்குக்கும் மேல்
அதிகம் இருக்கும்
அற்புதமும் நடந்து கொண்டிருக்கிறது

இலவசம் எனற பெயரில்
செலவு செய்யும் பணம்
பல்லாயிரம் கோடியைத் தாண்டி
பாய்ந்து சென்று கொண்டிருக்கிறது

இன்னும்......
இன்னும்........
இன்னும்..........

முன்னூறு கோடி செலவிலேயே
முன்னணிக்கு வந்துவிட்டோமே!
முடிந்தவர்கள் மனது வைத்தால்
முதல் இடம் அடைந்துவிட மாட்டோமா ???

Sunday, January 4, 2009

பெண் கல்வி...?????


இந்திய சனத்தொகையில்
இன்றைய கணக்கு வகையில்
சரிபாதிக்கும் மேலேயே
சதம் ஒன்று கூடுதலாகவே பெண்கள்

பள்ளிப் படிப்பில் சரிக்கு சரியாய்
போட்டியிட்டு செயிக்கிறார்கள் சாரிசாரியாய்
பத்தாம் வகுப்புத் தேர்வில் முதல்
பத்து இடமும் பறிபோகிறது அவர்களிடம்
பன்னிரண்டாம் வகுப்புத் தேர்ச்சியில்
முன்னிரண்டு வரிசையில்
பையன்கள் யாரும்
பக்கத்தில் கூட வரவில்லை

" அதுக்கப்புறமா ஆத்தா நீங்க
அத்தன பேரும் எங்கதான் போனீங்க?
இங்கொன்னும் அங்கொன்னுமா
அத்தி பூத்தாப்போல தெரியரீங்க!
மத்தவங்கல்லாம் என்னதான் ஆனிங்க?

பள்ளிக் கல்வி தாண்டி
துள்ளி மேலே எழுந்துவர
யாரும் வழி தரலியா? - இல்ல
யாருக்கும் வழி தெரியலியா?

பாத்திரம் கழுவினாலே போதுமுன்னும்
பாதுகாப்பா வைக்க வேணுமுன்னும்
பெத்துப் போடதுக்கு ஆகுமுன்னும்
பொத்தி உள்ளே வச்சுட்டாங்களா? "


பொறுத்தது போதுமே இதுகாறும் !
பொங்கி எழுவோமா இனிமேலும் ?

சோதனைகளை கொன்று தின்று
சாதனைகளாக்கும் சாத்தியக்கூறுகள்
சாத்தியமாக்கிக் கொடுப்போம்!

இந்திய சாவ்லாக்கள்
இங்கேயே உருவாக
இயன்றதைச் செய்வோம்!

பெண்கள் பயில களம் அமைப்போம் !
பெண் உயர்கல்வி கொடுப்போம் !

Friday, January 2, 2009

நான் கடவுள்....!?!?!?


நான் கடவுள்

நீண்ட இடைவெளிக்குப் பின்
மண்ணுலகம் வந்து கொண்டிருக்கிறேன்
மக்கள் நலம் நேரில் அறிய

நிலவும் தாண்டி வந்து விட்டேன்
மிகவும் உயரத்தில் இருக்கிறேன்

கூட்டம் கூட்டமாய் மக்கள்
கண்ணுக்குத் தெரிகிறார்கள்
கூடி வாழ்கிறார்கள் போலும்
குதூகலமாகிறது மனது

அருகில் வந்துவிட்டேன்
அப்போதுதான் வித்தியாசமாய் உணர்கிறேன்

அனைவரும் அமைதியாய்
அவரவர் பாதையில்
ஒருவருக்கொருவர் பேசாமல்
ஒருவரை ஒருவர் பாராமல்
ஒரே திசையில் சென்று கொண்டிருக்கிறார்கள்

தனித் தனிப் புள்ளியாய் மக்கள்
தள்ளித் தள்ளி நின்று கொண்டிருக்கிறார்கள்

எங்கோ தவறு நடந்திருக்கிறது!
என்னவென்று அறிய வேண்டும்!!
எதுவானாலும் சரி செய்ய வேண்டும்!!!
எதிர்ப் பட்டவனின் மனதுக்குள்
ஏறி போய்ப் பார்க்கிறேன்

"என் துணைக்கு யாருமில்லையே?
என்ன செய்யப் போகிறேன்?
என்னை யாருக்கும் புரியவில்லையே?
எப்படி வாழப் போகிறேன்?
??????????????????????????"


அங்கு அனைத்தும் கேள்விகளாகவே!
அதிர்ச்சியாய் இருக்கிறது எனக்கு!!
அருகிலேயே அனைவரையும் வைத்துக்கொண்டு
அநாதைப் போலத் திரிகிறான் இவன்
தன்னைச் சுற்றிப் பார்க்காமல்
தனக்குள்ளேயே மூழ்கி
தன்னம்பிக்கை இன்றி இருக்கிறான் இவன்

சரியாகப் படவில்லை இவன்
சரேலென்று அடுத்தவனுக்குள் நுழைகிறேன்
அட! அங்கேயும்அதே கதை தான்!!
அடுத்தவன்....!!!
அடுத்தவன்......!!!!!

அவர்களிடம் இருந்து விட்டு விலகி
அவசர அவசரமாய் மேலே போகிறேன்
அங்கே இருந்து திரும்பிப் பார்க்கிறேன்
கூட்டம் கூட்டமாய் மக்கள்!
கூட்டு வாழ்க்கை மறந்த
கூட்டுக் குடும்பம் தொலைத்த மக்கள்!!
............................

பார்க்கப் பார்க்க
படபடப்பாய் வருகிறது எனக்கு
பதட்டமாய் இருக்கிறது எனக்குள்
என்னவோ ஆகிவிட்டது எனக்கு
என்னவானதென்று அறிய
என் மனதுக்குள் இறங்கிப் பார்க்கிறேன்

"என்ன செய்யப் போகிறேன் நான்?
எத்தனை பேரை சரிசெய்ய முடியும்?
என் துணைக்கு யாருமில்லையே?
????????????????????????????"

Thursday, January 1, 2009

விலைவாசியும்,பணமும்...


விலைவாசி சத்தமில்லாமல்
வின்னைத் தொட்டும் தொடர்கிறது

வசதியாய் இருப்போரும்
வீதியில் வசிப்போரும்
வாங்கித்தான் ஆகவேண்டும்
வேறு வழியே இல்லை-எனில்

"வாழ்வு செழித்திருக்கும் உழைப்பவருக்கு
வளமை கூடியிருக்கும் விற்பவருக்கு"
விசாரிக்கத் தொடங்கினேன்
வீதியிலிருந்து சந்தை வரை

வியாபாரியின்
விரித்த வெறும் கையில்
வழக்கம் போல் ஏதுமில்லை

விநியோகிப்பவனின் லாப
விகிதாச்சாரத்திலும்
வித்தியாசம் கூடவேயில்லை

விவசாயியோ பசிக்கும்
விதைக்கும் வழியில்லாமல்
விதியை நொந்து எழமுடியாமல்
விழுந்து கொண்டே இருக்கிறான்

வகை தெரியாமல் நானும்
விழித்துக்கொண்டே நிற்கிறேன்!-நம்மக்கெல்லாம்
வழிதெரியாத எங்கோபோய்ச் சேர்ந்து கொண்டிருக்கிறது
விதியை மாற்றும் அந்தப் பணமெல்லாம் !!