Monday, September 28, 2009

வாழ்க்கைப் பாடம் வீட்டிலிருந்து.....


மூன்றுமாதக் குழந்தையில் பிரிந்து
மூன்றுவருட முடிவில் பார்க்கப்போகிறேன்
மூன்றுமாத விடுப்பு சொர்க்கமதை
மூச்சுவிடாமல் க(ழி)ளிக்கப்போகிறேன்


இன்றா நேற்றா....!

முன்னூறு நாட்களுக்கும் மேலாய்
தினம் தினம் நடக்கும் ஒத்திகையது
கனவிலும் தொடரும் நிகழ்ச்சியது - அதை
இன்று நிகழ்த்தப் போகிறேன்

அவளுக்குப் பிடித்தது கையில் கிடைத்தது
அத்தனையும் வாங்கியிருக்கிறேன்
அதிரடியாய்க் காட்டி - ஆனந்த
அதிர்ச்சியில் ஆழ்த்தப் போகிறேன்


அயலகம் விடுத்து
வானகம் கடந்து
தாயக வாசம் உணர்ந்து
தாய்மண்ணை நுகர்ந்து

அல்லல்பட்டு வெளிவந்து
அவதிப்பட்டு சாலைகடந்து

தலை வாசல் நுழைந்து
தாயவள் பாதம் பணிந்து

தங்கையவள் விழி துடைத்து
என்னவள் உச்சி முகர்ந்து - பின்

தேவதையவளை சந்திக்கத்
திட்டமிட்டபடித் தயாராகிறேன்

மனைவி காட்டிய இடத்திலிருந்த
மகளின் ஆசைப் பையிலிருந்த
அத்தனையையும் அதிலிருந்து
அகற்றிப் பார்க்கிறேன்

குளிர்பான மூடியும் , உடைந்த வளவியும்
கிழிந்த படமும் , கசங்கிய தாளும்
குப்பையும் , கூளமும்
எச்சமும் , மிச்சமுமாய்.....

அத்தனையும் கூட்டி
மொத்தமாய் அள்ளித்
தலையைச் சுற்றி
தெருவில் வீசுகிறேன்

விலை உயர்ந்த பொருளனைத்தையும்
வகையாய் உள்ளே அடுக்கிவைத்துவிட்டு
வசதியாய் ஓளிந்து கொள்கிறேன் - அவளின்
வ்ரவுக்காகக் காத்திருக்கிறேன்

பள்ளியிலிருந்து பறந்து வந்தவள்
சிட்டாக சிறகடித்து வந்தவள்
”அப்பா வந்தாச்சா ?” என்றவள்
அந்தப் பையை ஓடி எடுக்கிறாள்

பையைத் திறக்கிறாள்
பதறிப்போய்த் துடிக்கிறாள்
இடி விழுந்த கொடிபோல
கருகிப்போய் வெடிக்கிறாள்

ஒன்றும் புரியவில்லை எனக்கு
நடந்தது பொதுவாக - பின்
மூளைக்குள் தெளிவாகிறது
உண்மையது மெதுவாக

பையில் இருந்ததெல்லாம்
பாவிமகள் சொத்தல்லவா !
தேடித்தேடி சேகரித்ததெல்லாம்
விலையில்லா வித்தல்லவா !

அவள் வயதுக்கத்தனையும்
அவளின் உயிருக்கும்மேலான
ஆசைப் புதையலல்லவா !

எப்படி மறந்தேன் இதை
உணராமல் போனேன் இதை !

பணமீட்டும் பாதையில் நான்
குணத்தைப் புதைத்து விட்டேனோ ?

பணமென்னும் போதையில் நான்
சின்னமனமதை சிதைத்து விட்டேனோ ?

வாழ்க்கைப் பாடமது
வாழ்வின் கடைசிவரை
வழியிலேயே கிடைக்கும் !

இன்று அது
எனக்குக் கிடைத்திருக்கிறது
வழியில் இல்லை; வீட்டிலேயே !
என் மகளின் மூலமாக !

.

Monday, September 21, 2009

உன்னை, என்னை, நம்மைப் போல ஒருவன் ..!


மகாபாரதம் :

துரியோதனன் கண்ணனிடம்
”துரோகம் இழைத்துவிட்டாய் கண்ணா
அவதாரமாய் இருந்தும்,
தர்மம் மீறி போர்க்களத்தில் நடந்து கொண்டாய் ,
வதந்தி பரப்பிக் குழப்பம் விழைவித்தாய் ,
கர்ணனை சூழ்ச்சியால் வீழ்த்தினாய் ,
அர்ச்சுனனுக்கு சாரதியாய் வந்து மாயம் செய்தாய் ,

அதர்மமாய் நடந்து கொண்டாய் கண்ணா
அதர்மம் விளைவித்துவிட்டாய் ! “

கண்ணின் பதில்
“அதர்மம் செய்பவர் , எதிரேயிருப்பவரிடம் தர்மம் எதிர்பார்ப்பது முறையில்லை !

அதர்மத்தை அதர்மத்தால் அழிக்கலாம் , தப்பில்லை !! ”

--இதுதான் படத்தின் செய்தி


அடர்ந்த கானகம் :
வேட்டைக்களம் .
உயர்ந்த பாறையின் மேல் அமர்ந்திருக்கிறது சிறுத்தை .
புகுந்து விளையாட வாய்ப்பிருந்தும் பொறுமையாய் ,
குட்டிகளுக்கு வேட்டையாட தளம் அமைத்துக்கொடுத்து விட்டு
நடப்பவற்றை நிதானமாகக் கவனித்துக் கொண்டிருக்கிறது பெருமையாய் !

-- இதுதான் (உலக) நாயகன்


ஆங்காங்கே குறிப்பால் உணர்த்தும் சின்னச் சின்ன செய்திகள் :
(படத்திற்கு சம்பந்தம் இல்லையென்றாலும் , நாம் தெரிந்துகொள்வதற்காக ....)

[படத்தில் வந்த வரிசையில்]

#)மனைவியால் தாக்கப்படும் (சிறுபான்மை) கணவன்மார்களுக்கான சட்டப் பாதுகாப்பு பற்றியக் கேள்விகுறி?
#) கன்ஸ்யூமர் சட்டங்களின் உண்மை நிலை பற்றிய சந்தேகம் ! ( குக்கர் )
#) இடதுகைப் பழக்கமிருந்தாலும் அடுத்தவருடன் புழங்கும்போது வலதுகையை உபயோகப்படுத்த வேண்டும் ( பேனாவைத் திருப்பிக் கொடுக்கும் போது )
#) அரசாங்க அலுவலகக் கட்டிடங்களின் நிலமை ( பாத்ரூமில் தண்ணி வராது )
#) லஞ்சத்தை எதிர்க்கும் இளைஞர்கள் இருக்கிறார்கள் ! கவனம் !!
#) இடமாற்றம் போன்ற இடர்களையெல்லாம் பொருட்படுத்தாமல் இயங்கும் இளைய சமுதாயம் ( காவல்துறையிலும் )வந்துகொண்டிருக்கிறது ! ( ஆரிப்)
#) விஞ்ஞான முன்னேற்றத்தை வரவேற்க வேண்டும் ( பேக்ஸ் வேண்டாம் , ஈ-மெய்ல் அனுப்பு)
#) பதட்டம் / அலட்சியம் குறைக்க வேண்டும் ( ஆரிப் - 20 மாடிகள் தேடி ஏறியவர், மொட்டை மாடிதானே எனக் கவனிக்காமல் விடுவது )
#)அரசியலின் உண்மை முகம் ( தேர்தல் வெற்றிக்கு பாதிப்பு வராதே )
#) புகழுக்காக செயல்படும் ஊடகங்களின் நிலை ( எது நிகழ்ந்தாலும் நேரடி ஒளிபரப்பு )
#) அரசியல் கனவில் உள்ள நட்சத்திரங்கள் ( ’தளபதி’ ஸ்ரீமான் )
#) பெண்களுக்கான முக்கியத்துவம் ( சக்தி வாய்ந்த ஹோம் செக்ரட்டரி , விஜெவுக்கு காவலதிகாரி சிகரெட் பற்ற வைக்கும் இடம் )
#) பலியாடுகளாக்கப்படும் உயரதிகாரிகளின் மனநிலை ( மோகன் லால் )
#) ஐடி இளைஞர்களின் தெளிவான பிம்பம் ( தொலைபேசியில் ‘கேர்ள் ப்ரண்ட்’ ,/ உண்மையான இடத்தைக் கண்டுபிடித்த பிறகும் , [ நிகழ்வது நியாயத்திற்குத்தான் எனத் தெரிந்தபின் ] கண்டுபிடிக்கவில்லை என மறுப்பது )
#) மதத்தின் புனிதத்தை தனக்கு சாதகமாக உபயோகப்படுத்திக்கொள்ளும் தீவிரவாதிகள்
#) உடனடி நீதியை எதிர்பார்த்து ,( தாமதமான நீதியைத் தவிர்க்க ) நமது சட்ட அமைப்பின் முன்னால் எழுப்பப் பட்டிருக்கும் கேள்வி !


--இது(வும்)தான் படம்


பி.கு : 20 மாடிகளுக்கும் மேலான கட்டிடத்தின் , கைப்பிடிச் சுவறில்லாத மொட்டைமாடியின் விளிம்பில் முன்னும் பின்னும் அசைந்துகொண்டே நாயகன் நிற்பது (பயமாக இருந்தாலும் (இருக்கும்)வெளியே காட்டிக்கொள்ளாமல் இருப்பது ) ஒரு மிகப்பெரிய சாதனை

உயரத்திலிருந்து உலகினை (பறவைப் பார்வையில்) உள்ளபடி காட்டிய தொழில் நுட்ப்பக் கலைஞர்கள் , படைப்பாளிகள் அனைவருக்கும் வெற்றிப் பயணம் தொடர உளமார்ந்த வாழ்த்துக்கள்


காட்சிக்குக் காட்சி ரசிங்க
திரையரங்குக்குப் போய் ருசிங்க

தவறு நடக்கும்போதே தட்டிக் கேளுங்க
தீவிரவாதத்தை வேரிலேயே வெட்டிக் கொளுத்துங்க

வாழ்க பாரதம் !


.

Friday, September 18, 2009

கண்தானம்


இறந்தபின் மண்ணில் புதைத்துவிடாமல்
இல்லாதவரின் கண்ணில் விதைத்துவிடு...
காத்திருக்க வேண்டாமே மறுபிறவி பார்க்க
காணலாமே உலகையுடனே இப்பிறவி முழுக்க...

கண்தானம் செய் உடனே...
கண் விழித்து சேவகம் செய்ய
காலமெல்லாம் காத்திருப்பார்
கடவுள் உன்னுடனே...


. (நன்றி : கரு/ கு.த.செய்தி)

Thursday, September 17, 2009

பொய் X பொய் = மெய் = நான்


கண்ணால் காண்பதும் பொய் !

ஆம்....! இது பொய் !

கல்லுடைக்கிறேனா? - நான்
கல்லுடைக்கிறேனா மலையில்?

நன்றாகப் பாரும்...

உடைத்துக்கொண்டிருக்கிறேன் மலையை !
சிதைத்துக்கொண்டிருக்கிறேன் அதன் நிலையை !!

காதால் கேட்ப்பதும் பொய் !!


ஆம்...! இதுவும் பொய் !!

மணலுக்குள் எனைப் புதைத்துவிட்டதாய்
மாட்சிமைப் பேசித் திரிவோரே ....

இதையும் கேளும் ....

கவிழும் மணலுக்காகவே - நான்
காத்திருக்கும் விதையாவேன்

மூழ்கியபின் ஊடுருவுவேன் - நான்
ஆழமாய் வேர்விடுவேன்

வீரியமாய் வள்ர்வேன் - நான்
விருட்சமாய் விரிவேன்

தீர விசாரிப்பதே மெய் !!!

ஆம் !....


தீயினில் விழுந்த அங்கமல்ல - நான்
தீயினில் பழுத்த தங்கம்

இருவிழியில் நெருப்பை உமிழ்வேன் - நான்
எரிகுழம்பின் இருப்பை இகழ்வேன்

ஒருநாள்......

தீயிலிருந்தே விளைந்து வருவேன் - நான்
தீயினிற்கே விருந்தும் தருவேன்

Monday, September 14, 2009

சுகமா?....சுகம் சுகமா??.....சுகமே சுகமா???


பெறுநர் : எம்புருசன் ,
.அயலகம்



எம் மாமாவுக்கு ..,

அயலகத்தில் நீ சுகமா ?
அருகிலேயே நானும் சுகமா ?

உனது தனிமை சுகமா ?
உடனென் இனிமை சுகமா ?

உனது மனம் சுகமா ?
உணர்ந்த எனது மணமும் சுகமா ?

உனது திமிர் சுகமா ?
அருகிலென் உயிரும் சுகமா ?

உனது தினவு சுகமா ?
உருகுமென் கனவும் சுகமா ?

உனது முன் கோபம் சுகமா ?
அதைத்தேடுமென் தாபம் சுகமா ?

உனது தெனாவட்டு சுகமா ?
மனதிலென் முகவெட்டும் சுகமா ?

உனதிரவுத் தூக்கம் சுகமா ?
விழித்திருக்குமென் ஏக்கம் சுகமா ??

நானிருக்கும் உனதுள்ளம் சுகமா ?
நீயில்லா என்மனப்பள்ளம் சுகமா ?

உயிருக்குள் ஊடுருவும் பார்வை சுகமா ?
உனைத்தேடி வாடுமென் வியர்வை சுகமா ?

எல்லாம் இங்கிருந்தும் நீயங்கு சுகமா ?
எதுவுமே இங்கில்லாத நானங்கு சுகமா ?

இப்படிக்கு
.உம் மனைவி
.வி. முத்துப் பேச்சி
.வடுகப் பட்டி


.

Sunday, September 13, 2009

இடிவந்து தாக்கியது போல...!


மந்திரிச்சுவிட்டக் கோழிபோல் நான்
எந்திரிச்சு உன்னிடம் வந்திருக்கிறேன்

கோவில்முரட்டுக் காளைபோல நான்
காதல் சொல்ல வந்துநிற்கிறேன்

’’மறுத்துவிடாதே என்கண்ணே !
மூர்ச்சையாகிவிடுவேன் உன்முன்னே !!


மற்றவன் பார்வைக்கு எப்போதும்நீ
அரைக்கிழவியாய் இருந்தாலும்

உற்றவன் எனக்கு இப்போதும்நீ
பேரழகியாகத்தான் தெரிகிறாய் !

மறுத்துவிடாதே என்கண்ணே !
மூர்ச்சையாகிவிடுவேன் உன்முன்னே !!


ஏதோ ஒருகணத்தில் மட்டும்நீ
ராட்சசியாகத் தெரிந்தாலும்

எல்லாக் கோணத்திலும் எனக்குநீ
ரட்சகியாகவே இருக்கிறாய் !

மறுத்துவிடாதே என்கண்ணே !
மூர்ச்சையாகிவிடுவேன் உன்முன்னே !!


அஞ்சுகமே உனை எந்தன்
மஞ்சத்தில் வைத்திருப்பேன் !

வஞ்சகமின்றி நானும் உந்தன்
நெஞ்சத்தில் வாழ்ந்திருப்பேன் !

மறுத்துவிடாதே என்கண்ணே !
மூர்ச்சையாகிவிடுவேன் உன்முன்னே !!


குறிவைத்து என் இதயமதை
பறித்து விட்டாயே திருடி !

பறிகொடுத்த வெற்று இடமதை
இறகால்தடவி விடுவாயா வருடி !

மறுத்துவிடாதே என்கண்ணே !
மூர்ச்சையாகிவிடுவேன் உன்முன்னே !!


சரியென்று வந்தபின்னே நீ
சொன்னதெல்லாம் ஒத்துப்போவேன் !

சரியாக வில்லையெனில் நான்
சொல்லாமலேயே செத்துப்போவேன் !

மறுத்துவிடாதே என்கண்ணே !
மூர்ச்சையாகிவிடுவேன் உன்முன்னே !! ‘’



நேருக்கு நேர் பார்க்கிறேன்.....
நெஞ்சை நிமிர்த்தி கேட்கிறேன்......

”காதலிக்கிறேன் உன்னை !” என்கிறேன்

கைநீட்டினாலும் எட்டாத தூரத்தில்
கைகட்டித் தயாராய் (!) நிற்கிறேன்

”ஆமாம் நானும் !!” என்றாள்

உலகமே இருண்டது முன்னே !
உள்ளபடியே மூர்ச்சையானேன் அண்ணே !!




.

Friday, September 11, 2009

தெரியுமா பாரதமே...? இன்று பாரதியின் நினைவுநாள் ........!!


மகாகவியின் நினைவு நாளில் ( 11-09-2009)
அவரின் நினைவில் :


ஏ தேசமே..
என் இனிய பாரத தேசமே...


உனக்காகவே போராடி
உனக்குள் புதைந்த ஒருவனை

அறிமுகப் படுத்துகிறேன் உனக்கு !
அத்தனையும் வாங்கிக்கொள் உனக்குள் !!

அவன் ........

கடவுளிடம் வாதாடும்
திண்மை கொண்டவன்...

வீணையின் புனிதமாய்
தன்னை அறிந்தவன்....

காலம்கடந்து சிந்தித்து
காணாமல் போனவன்....

கனவுகளில் வாழ்ந்து
காற்றில் கரைந்தவன்.....

ஏட்டு சுரைக்காயின்
உண்மை உணர்ந்தவன்.....

எதிர்பார்த்து ஏங்கியே
ஏதுமின்றி ஏமாந்தவன்.....

எதற்கும் பணியாமல்
எல்லாம் இழந்தவன்....

ஊருக்கு உழைத்து
தெருவில் நின்றவன்....

பதுமைப்பெண் வேரறுத்து
புதுமைப்பெண் வரவேற்றவன்....

பாரதி ! - ஆம்
பாரதி என்ற பரதேசி அவன் ......!


நெஞ்சிலேதும் இடமுண்டா? - அவனைப்பற்றிய
நினைவுகள் ஏதும் மிச்சமுண்டா??
....................................................
...................................................

ஏ தேசமே.......!
என் இனிய பாரத தேசமே.......!


தேசத்தின் கனவுகள் மெய்ப்பட
தேடித்தேடி வேண்டியவனின்
கனவுகளைப் பொய்யாக்கிய
கடவுளின் தேசமே !

இனியொரு விதிசெய்ய
இறந்து விரும்பியவனின் ஆசைகளை
இன்றுவரை நிறைவேற்றாத
இனிய தேசமே !

காணிநிலம் கேட்டு
பராசக்தியிடம் வேண்டியவனை
பாராமுகம் காட்டியே
கோணியில் கட்டிய
புண்ணிய தேசமே !

இறுதிவரை போராடியவனின்
இறுதி யாத்திரைக்கு
இருபதுபேர்கூட அனுப்பாத
இந்திய தேசமே !

வா.......................
இதுதான் சமயம் !
பரிகாரத்திற்கு இதுவே சமயம் !!

அவனது கனவு மெய்ப்பட
ஆவன செய்வோம் ! - அதற்குடனே
ஆவணம் செய்வோம் !!

இளையோர் வாழ்வு வளம்பெற
இனியொரு விதி செய்வோம் ! - வா
இனியாவது செய்வோம் !!...


.

Sunday, September 6, 2009

எல்லாம் தெரிந்தவர்கள் ...!


எல்லாம் தெரிந்தவர்கள்!
இவர்கள் எல்லாம் தெரிந்தவர்கள்!!


கைமண்ணளவே படித்து
எல்லாமும் முடித்ததாய் நினைப்பார்கள்
அதற்குள் இலக்கு நிர்ணயித்து
பல இலக்கணம் வகுப்பார்கள்

எல்லாம் தெரிந்தவர்கள்!
இவர்கள் எல்லாம் தெரிந்தவர்கள்!!


ஊர்வலம் என்றாலே அது
தே(கா)ர் ஊர்வலம் மட்டுமே என்பார்கள்
பாதசாரிகள் ஊர்வலம் பற்றி எல்லாம்
அறிந்தும் அறியாதவர் போலிருப்பார்கள்

எல்லாம் தெரிந்தவர்கள்!
இவர்கள் எல்லாம் தெரிந்தவர்கள்!!


பிறக்கும்போதே நாவில் விழுந்தது
சரசுவதியின் கையொப்பம் என்பார்கள்
வரம் வாங்கி வந்ததாய்ப் பல
சுரம் பாடிக் காட்டுவார்கள்

எல்லாம் தெரிந்தவர்கள்!
இவர்கள் எல்லாம் தெரிந்தவர்கள்!!


மழலையின் கிறுக்கலை ஒரு
விரலசைவில் மறுப்பார்கள்
தனது ஆரம்பமும் கிறுக்கலென்பதை
திட்டமிட்டே மறப்பார்கள்

எல்லாம் தெரிந்தவர்கள்!
இவர்கள் எல்லாம் தெரிந்தவர்கள்!!


எல்லாம் எமக்குத்தெரியும் என்ற
ஏகாந்தப் போர்வைக்குள் வசிப்பார்கள்
எல்லையைச் சுருக்கிக்கொண்டு
எதிரேயிருப்பதைப் பரிகசிப்பார்கள்

எல்லாம் தெரிந்தவர்கள்!
இவர்கள் எல்லாம் தெரிந்தவர்கள்!!


போர்வைக்குள் சூழ்ந்திருக்கும்
புதிரான இருட்டுக்குப் பழகியிருப்பார்கள்
பழங்கதைப் பேசி தனியேப்புழங்கி
பலகாத தூரம் விலகியிருப்பார்கள்

எல்லாம் தெரிந்தவர்கள்!
இவர்கள் எல்லாம் தெரிந்தவர்கள்!!


தன்னைத்தாண்டி எதுவுமில்லை என
தனக்குள்ளேயே மூழ்கி இருந்து
தன்னையும் அறியாமல் இதுவரை
தன்னையேத் தாண்டாதவர்கள்

எல்லாம் தெரிந்தவர்கள்!
இவர்கள் எல்லாம் தெரிந்தவர்கள்!!


தன்னைச் சுற்றி அமைத்த
தான் என்ற வேலியை
தன்னையும் தாண்டி வளரவிட்டு
தாண்டிவரத் தெரியாதவர்கள்

எல்லாம் தெரிந்தவர்கள்!
இவர்கள் எல்லாம் தெரிந்தவர்கள்!!

Wednesday, September 2, 2009

உயிருக்கும் உண்டோ அளவுகோல்....... ?


சாட்சிகளாய்ப் பார்த்துக்கொண்டே..

கோழிப் பண்ணையின் சுற்றுச் சுவரில்லா
கிணற்றில் தவறிவிழுந்த திருட்டுப் பூனை

பார்த்துக்கொண்டு இருக்கின்றன கோழிகள் !

காப்பாற்ற கயிறு கடப்பாரையோடு தீயணைப்புத்துறை
காவலுக்கு கடமை உணர்வோடு காவல்துறை

பார்த்துக்கொண்டு இருக்கின்றன கோழிகள் !

ஓர் உயிரை காப்பாற்ற ஒற்றுமையாய்
ஒட்டுமொத்த ஊரும் திரண்டு வந்துநிற்கிறது

பார்த்துக்கொண்டே இருக்கின்றன கோழிகள் !

காப்பாற்றிய திருட்டுப் பூனையை கையிலேந்தி
ஆர்ப்பாட்டமாய் ஊர்நுழையும் அதிரடிவீரர்கள்

பார்த்துக்கொண்டே இருக்கின்றன கோழிகள் !

உயிர்பற்றிய கவலையோடு அப்பாவியாய்
உயிர்பறிக்கவே வளர்க்கப்படும் உயிர்கள் !

பார்த்துக்கொண்டே....!

வாழும் வாய்ப்புக்காகக் காத்திருக்கும் - ஆனாலும்
வழியேயில்லாத ஆயிரமாயிரம் அனாதை சீவன்கள் !!

சாட்சிகளாய்ப் பார்த்துக்கொண்டே...........!