Monday, November 23, 2009

நான் ! மிகப்பெரியவன் நான் !!


சமூகத்தில் உயர்ந்த நிலையில் நான்

சான்றோர் நிறைந்த சபையில்
மேடையில் தலைமை தாங்கியிருக்கிறேன்
நிறைவு உரையாற்றிக் கொண்டிருக்கிறேன்

திடீரெனத் தடைபடுகிறது எனதுபேச்சு
தாமதமாக விடைபெறுகிறது எனதுமூச்சு

கீழேக் குழுமியிருக்கும் கூட்டத்தில்
தள்ளிக்கொண்டு என்னை நோக்கித்
தாவிவர முயல்கிறார் ஒருபெரியவர்

கலைந்த தலையும்
கசங்கிய உடையுமாய்,
மடித்துக்கட்டிய வேட்டியும்
மழிக்காத தாடியும் ,
மஞ்சள்ப்பை கக்கத்திலுமாய்....

எங்கோ பார்த்த முகம்? - ஆம்!
எங்கள் கிராமத்துக்காரர் அவர்
பால்ய வயதில் எங்கள்
பக்கத்து வீட்டுக்காரர் அவர்..

வரும் வேகம் பார்த்தால்
விவகாரமாகத்தான் படுகிறது

என்னவோ கேட்கப்போகிறார்
என்னிடம் என்னவோ கேட்கப்போகிறார்

பணமாகக் கேட்டால் பதுங்கிவிட வேண்டும்
உதவியாகக் கேட்டால் உதறிவிட வேண்டும்
கடனாகக் கேட்டாலும் கைகழுவி விடவேண்டும்

சிபாரிசு ஏதும்கேட்டு
சிக்கலில் மாட்டி விடுவாரா
கட்டிப்பிடித்து கூட்டத்தில்
கேவலப்படுத்தி விடுவாரோ

என்னவாக இருக்கும்
எனக்குள் ஏனிந்த இறுக்கம்

உரையைப் பாதியில் முடித்து
வேறு பாதையில் கிளம்புகிறேன்

கடவுளே !
இதோ இங்கேயும் வந்துவிட்டார்
வேறுவழி இல்லை
சந்தித்தேதான் ஆகவேண்டும்
சமாளித்துதான் ஆகவேண்டும்

”தம்பி !
நல்லா இருக்கீங்களா ?
வீட்டுல ஆத்தா , தாயீ
புள்ளக் குட்டியெல்லாம்
சொகமா இருக்குதா ?

பருவத்துல ஏஞ்சேக்காளிய
பாத்தது போலவே இருக்கீங்க !
உங்க அப்பாவை அச்சுல
வாத்தது போலவே இருக்கீங்க !!

இன்னும் பழசெல்லாம்
இந்தப் பாவிப்பயலோட

மொடங்கிப்போன நெஞ்சுக்குள்ள
முங்கிப் போயித்தான் கெடக்கு !

தம்பி .....
அதான் சொர்க்கம் ‘’


சொல்லி முடித்துவிட்டு
கண்களைத் துடைத்துக்கொண்டு
தனக்குள் ஏதோபேசிக்கொண்டே

வந்தவழியில் திரும்பி
இலக்கில்லாமல் நடக்கிறார் அவர்

ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டு
மறைந்துபோய் விட்டார் அவர்
ஒருவார்த்தைப் பேசமுடியாமல்
உறைந்துபோய் நிற்கிறேன் நான்

அவர் தான் பெரியமனிதர் !

நான் ?????

.

Saturday, November 14, 2009

மாடிவீட்டு ஏழைகளின் குழந்தைகள்தின வேண்டுகோள்


"பல்லாங்குழி ஆடியதில்லை
பச்சக்குதிரை ஏறியதில்லை
பம்பரஆக்கரு குத்தியதில்லை
பாவைக்குத்து பார்த்ததில்லை

ஐஸ்பால் ஆடியதில்லை
பால்ஐஸ் சாப்பிட்டதில்லை
கயிறுபஸ்ஸு ஏறியதில்லை
கள்ளன்போலீஸ் தேடியதில்லை

தட்டாமாலை சுற்றியதில்லை
கொட்டும் மழையில் நனைந்ததுமில்லை
சர்ப்பத்து சாப்பிட்டதில்லை
பாண்டியாட்டம் ஆடியதில்லை

ஆவியம் தாண்டியதில்லை
சோவிதாயம் ஆடியதில்லை
மரக்குரங்கு ஏறியதில்லை
மணலில்வீடு கட்டியதில்லை

குட்டிக்கரணம் அடித்ததில்லை
கூட்டாஞ்சோறு பொங்கியதில்லை
கோலிக்குண்டு பார்த்ததில்லை
கல்கோணா சப்பியதில்லை

டயறு வண்டி ஓட்டியதில்லை
கண்ணாமூச்சி ஆடியதில்லை
கட்டவண்டியில போனதில்லை
காம்புப்பால் குடிச்சதில்லை

கோவில்கொடைக்குப் போனதில்லை
கொடிக்கறியும் சாப்பிட்டதில்லை
வேட்டைசாமிய பார்த்ததில்லை
விபூதி வாங்கி பூசியதில்லை

அடுக்குமாடிக் குடியிருப்பை
அதிசயமாய் அண்ணாந்து பார்க்கும்
வசதிஇல்லா கிராமத்துக் குழந்தைகளுக்கு
வாய்ப்பாய் அத்தனையும் கிடைக்கிறதாம்

ஆனால்......

அதிசயத்துக்குள் குடியிருக்கும்
அபூர்வப் பிறவிகள் எங்களுக்கும்
அதில் பாதியாவது கிடைக்கவேண்டும்

குழந்தைகள் தினமாம் இன்று !

ஆள்வோருக்கோர் அவசர வேண்டுகோள்...
அதிரடிச் சட்டம் ஏதாவதுபோட்டு
இன்றே நாங்கள் விளையாட
ஆவன செய்ய முடியுமா !

.

Monday, November 9, 2009

எதனால் இந்த நடுக்கம் ....?


இயலாமை !
வயோதிகத்தால் எனது உடல் நடுங்குகிறது

இருள் இன்னும் விலகாத
மார்கழி மாத அதிகாலை..
ஆற்றில் மூழ்கி தலைதுவட்டாது
அப்படியே நடந்து வருகிறேன்

தாங்கமுடியாமல்
குளிரால் எனது உடல் நடுங்குகிறது

தாங்கித்தான் ஆகவேண்டும்

காஷ்மீரக மலையில் எனது
கால்கள் நடந்தே ஆகவேண்டும்

வாழ் நாள்க் கனவு அதை
வீழுமுன் நடத்திக் காட்டவேண்டும்

தென்கரையிலிருந்து வடகோடிக்குத்
தவழ்ந்தேயானாலும் போய்ச் சேருவேன்

மலைமீது காலடி வைத்தபின்புதான்
மேலுலகம் போய்ச் சேருவேன்

பயிற்சியும் அதற்கான முயற்சியும்
எடுத்தேதான் ஆகவேண்டும்

முடியுமா ?
கவலையால் எனது உடல் நடுங்குகிறது


‘ எண்பது தாண்டியும்
.ஏன் இப்படி அலையுது ? ’
‘ கட்டைல போற கெழவிக்கு
.காஷ்மீரு போறஆசையப் பாரு’
’அதுக்குத்தான்யா ஆண்டவன்
.அளந்தே வச்சிருக்கான்’


கேலியும்,கிண்டலும் !
சுடுசொல்கேட்டு எனது உடல் நடுங்குகிறது

கடைசிவரையில்ப் போராடி
பார்க்கவேண்டியவரை பார்த்து
விழவேண்டிய காலில் விழுந்து
ஒருவழியாய் சாதித்துவிட்டேன்

இதோ ...........
மலையேறிக் கொண்டிருக்கிறேன்
எங்கு நோக்கினும் வெண்பனி
என்னைச் சுற்றிலும் வீரர்கள்

பாதுகாப்பாய் இருந்தாலும்
கடும்பனியால் எனது உடல் நடுங்குகிறது

காலடி எடுத்து வைக்கிறேன்
கார்க்கிலின் கடும் பாறையில்

நின்று நிதானித்து
இழுத்து உள்வாங்குகிறேன் மூச்சை..

இதில் எப்படியும் கலந்திருக்கும்
இங்கே உலாவிக் கொண்டிருக்கும்
எனது மகனின் இறுதிமூச்சும்........

இப்பொழுதும் எனது உடல் நடுங்குகிறது

ஆனால் இது எதனால்...????
எனக்குத் தெரியவில்லை .........


.