இனியொரு விதி செய்ய.. இனியாவது செய்ய...
Tuesday, April 13, 2010
முள்ளாய் .. ! வேலியாய்..!!
அதிகாலையில் எழுந்த உடன்
ஆதரவாய்த் தட்டி எழுப்பி
என்னுடன் குளிக்கக் கிளம்புகிறார்
என் அக்காவின் கணவர்
அடுக்களையில் இருக்கும்
அக்காவுக்குத் தெரியாமல்
எனக்குத் தலைவாரி சிரிக்கிறார்
என் அக்காவின் கணவர்
அக்காவுக்குக் கையசைத்தும்
கதவுக்குப் பின்னால் வந்து
எனக்கும் முத்தம் கொடுக்கிறார்
என் அக்காவின் கணவர்
மாலையில் திரும்பி வரும்போது
ஆசையாய் அக்காவுக்குப் பூவும்
எனக்கு அல்வாவும் வாங்கிவருகிறார்
என் அக்காவின் கணவர்
இருநூறு ரூபாயில் அக்காவுக்கும்
அறுநூறு ரூபாயில் எனக்கும்
புத்தாடை வாங்கிக் கொடுக்கிறார்
என் அக்காவின் கணவர்
பள்ளிக்கூடத்திற்கு சாயங்காலம்
பெற்றோர் சந்திப்பிற்கு வருவார்
எனது அப்பாவாய் வருவார்
என் அக்காவின் கணவர்
.
Monday, April 12, 2010
மணி என்ன ஆச்சு ???
பதட்டம்....
பதட்டம் ......
இரவு செல்லப்போகும்
இடம் நினைத்துத் தொற்றுகிறது
இப்போதே பதட்டம் எனக்குள்..
குறுகுறுக்கும் உள்ளத்தோடு
அறிந்துகொள்ளும் ஆர்வத்தோடு
அவன் அழைத்தவுடன் ஒத்துக்கொண்டேன்
என்றாலும் பயமாகத்தான் இருக்கிறது ..
இதோ வழக்கம்போல்
இன்றைய நாளும் ஆரம்பம் ..
அவசரமாய்க் கிளம்பி
ஆறடி நடப்பதற்குள்
வழக்கம்போலவே
ஆளாளுக்கு கேட்டு
மிருகமாக்குகிறார்கள் என்னை
’’மணி என்ன ஆச்சு/’’
நடைபாதையை ஆக்கிரமிக்கும்
பிச்சைக்காரன்.................
பூங்காவில் பகல்முழுதும் படுத்து
பொழுதுபோக்குபவன்.................
முக்குக்கடை வாசலிலேயே
முழு நாளும் கழிப்பவன்.................
இப்போது மணி என்ன
ஆனால்தான் என்ன ?
தெரிந்தவுடன் இவர்களுக்கு
ஆவப்போவதும் என்ன ?
பதில் சொல்லியே எனக்கும்
பாதிநாள்ப் பாழாகிவிடும்
எதிர்பார்த்த இரவு...........
கண்சிமிட்டிச் சிரித்து
உள்ளே தள்ளிவிட்டு அவன்
வேறிடம் துணையுடன் செல்ல
உள்ளே கட்டிலில்
கைகளைப் பிசைந்தபடி
பதட்டமாய் அவளும்........
ஒருவேளை என்னைப்போலவே
இவளும் புதியவளோ ?
மெதுவாய் முன்னேறி
விளிம்பில் அமர்கிறேன்
மெல்ல நிமிர்ந்தவள்
எனது கண்களுக்குள்
எதையோ தேடியபடி
மெதுவாகக் கேட்கிறாள்
''மணி என்ன ஆச்சு ?''
எங்கோ.....
இவள்வரவுக்குக் காத்திருக்கும்
முகம் தெரியாத சீவன்களின்
தெளிவில்லாத முகங்கள் என்னுள்
தோன்றி மறைகிறது
முதன்முதலாய் அந்தக் கேள்வி
மனிதனாக்கியது என்னை .........
Friday, April 9, 2010
. . . . . .ஏன் . . . . . . . .?
அவனது நிறைகள் ஈர்க்க
என்மனம் அதனுள் லயிக்க
விரும்பி அவனை நோக்கி
நகர ஆரம்பித்த வேளையில்
நெருங்கி வந்திருந்தான் இவன்
இவனது அருகாமையில்
அவனது குறைகளும்
இவனது நிறைகளும்
பெரியதாய் உருவெடுக்க
இவன் இருக்கும் திசைக்கு
மாறியிருந்தேன் நான்
அருகே அமர்ந்து
அவனது குறைகளை
இவனிடம் எடுத்து
உரைக்கும் நேரத்தில்
உடைகிறது கவனம் எனக்கு
’அட....தொலைவில்
வடிவாய் யார்அது ?’
சிதறிய எண்ணம் உதறி
ஒரு நொடியில் மீண்டு
இவனிடத்தில் மீண்டும்
நெருங்கிய நான்
மறு நொடியில்
உறைந்துபோகிறேன்
மெதுவாக ......
அவனது சாயலுக்கு
மாறிக் கொண்டிருக்கிறான்
இவனும்..............!
.
Thursday, April 8, 2010
யாருக்கும் வெட்கமில்லை..!
எனக்கும் அந்த
இடைக்கும் நடுவில்
இடைவெளி என்றாலும்
இடையில் எந்தவித
இடையூறும் இல்லாததால்
தலையை சாய்த்தபடி
அரைக்கண் மூடியபடி
அமைதியாய் ரசித்தபடி
ஆனந்தமாய் நான்
அமைதியாய்ப் பக்கம் வந்து
அரைநொடி சுழற்றி அடித்து
நிலையைச் சாதகமாக்கி விட்டு
நில்லாமல் நகர்ந்தது காற்று
அதிரடியாய் அத்தனையும் விலகி
அங்கங்கே அங்கம் தெரிய
மணிவண்ண தேகத்தில்
பிறைநாபி பளீரென வெளிப்பட
மிஞ்சிய பாகத்தில்
மிச்சமுள்ள மச்சங்கள் மின்னிட
திருடனாய் நான் மட்டும்
திருவிழாவைத் தனியே ரசிக்க
அங்கங்கே அவசரமாய் ஓடி
அகப்படும் அங்கம் மறைத்து
நடப்பது தெரியாமல் இருக்கும்
வானத்தின் மானம் காக்க
துடித்துக் கொண்டிருக்கிறது
தன்னந்தனியாய் அந்த
மேகம்......
.
Tuesday, April 6, 2010
........3........(மூவர்) ..!
யார் ? :
கிண்ணத்தில் கொடுத்த
பால் முழுவதையும்
மொத்தமாய் எதுவும்
மிச்சம் வைக்காமல்
குடித்தக் குழந்தையை
வாரி அணைக்க..
பொங்கும் மகிழ்ச்சியில்
பாசமாய் அன்போடு
அழைக்கிறாள் அம்மா.....
கிண்ணத்தில் கொடுத்த
பால் முழுவதையும்
மொத்தமாய்க் குடிக்காமல்
மிச்சம் பாதி வைத்ததால்
அடிக்கக் கூப்பிடும்
அம்மாவை எண்ணி..
விஞ்சும் பயத்தில்
நடுங்கியபடி அடியெடுத்து
நுழைகிறாள் குழந்தை.....
இருவரையும் கவனித்தபடி
உள்ளுக்குள் சிரித்தபடி
பரணின்மேல் படுத்திருக்கிறது
பதட்டமில்லாமல் பூனை. :)
.
Sunday, April 4, 2010
........2........!
ஊருக்கு வெளியேத்
தள்ளியிருக்கு வீட்டுக்குள்
தாயும் குழந்தையுமென
உறுப்பினர்கள் இரண்டு
கூடத்தில் தொங்கிய
கடிகாரத்தில் சரியாக
மணி மதியம் இரண்டு
தோட்டத்து மரக்கிளையில்
சன்னல்வழியே வீட்டுக்குள்
குறுகுறுவெனக் கவனித்தபடி
சிட்டுக் குருவிகள் இரண்டு
வீட்டையே இரண்டாக்கி
சோற்றை அள்ளி விசிறி
அறையெங்கும் பரப்பியபின்
குழந்தை விழுங்கிய
உருண்டைகள் இரண்டு
ஊட்டி முடித்தபின்
சிதறியதை எல்லாம்
அலுப்போடு கூட்டியள்ளி
குப்பைப்பைக்குள் திணிக்கும்
அம்மாவையே இமைக்காமல்
சன்னலில் அமர்ந்து
பதறியபடி கவனிக்கும்
உதறும் இதயங்கள் இரண்டு
அங்கோ ...........
பசித்த வயிறோடு
பெற்றோரின் வரவுக்காகக்
காதுகளைக் கூராக்கிக்
கூட்டில் காத்திருக்கும்
குஞ்சுகள் இரண்டு
இங்கே .............
சிதறியதில்
பார்வையிலிருந்து பதுங்கி
துடைப்பத்திலிருந்து ஒதுங்கி
சன்னலுக்கு மிகஅருகே
சத்தமில்லாமல் சேர்ந்திருந்தது
பருக்கைகள் இரண்டு
.
Subscribe to:
Posts (Atom)