Friday, January 2, 2009

நான் கடவுள்....!?!?!?


நான் கடவுள்

நீண்ட இடைவெளிக்குப் பின்
மண்ணுலகம் வந்து கொண்டிருக்கிறேன்
மக்கள் நலம் நேரில் அறிய

நிலவும் தாண்டி வந்து விட்டேன்
மிகவும் உயரத்தில் இருக்கிறேன்

கூட்டம் கூட்டமாய் மக்கள்
கண்ணுக்குத் தெரிகிறார்கள்
கூடி வாழ்கிறார்கள் போலும்
குதூகலமாகிறது மனது

அருகில் வந்துவிட்டேன்
அப்போதுதான் வித்தியாசமாய் உணர்கிறேன்

அனைவரும் அமைதியாய்
அவரவர் பாதையில்
ஒருவருக்கொருவர் பேசாமல்
ஒருவரை ஒருவர் பாராமல்
ஒரே திசையில் சென்று கொண்டிருக்கிறார்கள்

தனித் தனிப் புள்ளியாய் மக்கள்
தள்ளித் தள்ளி நின்று கொண்டிருக்கிறார்கள்

எங்கோ தவறு நடந்திருக்கிறது!
என்னவென்று அறிய வேண்டும்!!
எதுவானாலும் சரி செய்ய வேண்டும்!!!
எதிர்ப் பட்டவனின் மனதுக்குள்
ஏறி போய்ப் பார்க்கிறேன்

"என் துணைக்கு யாருமில்லையே?
என்ன செய்யப் போகிறேன்?
என்னை யாருக்கும் புரியவில்லையே?
எப்படி வாழப் போகிறேன்?
??????????????????????????"


அங்கு அனைத்தும் கேள்விகளாகவே!
அதிர்ச்சியாய் இருக்கிறது எனக்கு!!
அருகிலேயே அனைவரையும் வைத்துக்கொண்டு
அநாதைப் போலத் திரிகிறான் இவன்
தன்னைச் சுற்றிப் பார்க்காமல்
தனக்குள்ளேயே மூழ்கி
தன்னம்பிக்கை இன்றி இருக்கிறான் இவன்

சரியாகப் படவில்லை இவன்
சரேலென்று அடுத்தவனுக்குள் நுழைகிறேன்
அட! அங்கேயும்அதே கதை தான்!!
அடுத்தவன்....!!!
அடுத்தவன்......!!!!!

அவர்களிடம் இருந்து விட்டு விலகி
அவசர அவசரமாய் மேலே போகிறேன்
அங்கே இருந்து திரும்பிப் பார்க்கிறேன்
கூட்டம் கூட்டமாய் மக்கள்!
கூட்டு வாழ்க்கை மறந்த
கூட்டுக் குடும்பம் தொலைத்த மக்கள்!!
............................

பார்க்கப் பார்க்க
படபடப்பாய் வருகிறது எனக்கு
பதட்டமாய் இருக்கிறது எனக்குள்
என்னவோ ஆகிவிட்டது எனக்கு
என்னவானதென்று அறிய
என் மனதுக்குள் இறங்கிப் பார்க்கிறேன்

"என்ன செய்யப் போகிறேன் நான்?
எத்தனை பேரை சரிசெய்ய முடியும்?
என் துணைக்கு யாருமில்லையே?
????????????????????????????"

No comments: