Sunday, January 18, 2009

நான்., மன்னார் குடா...!!!



நான் மன்னார் வளைகுடா
இரு நாடுகளின் கரையாய் இருக்கிறேன்
ஒரே இன மக்களின் தரையாய் இருக்கிறேன்

ஒரு மணிநேரம் பயணதூர இடைவெளியில்
அறுபதுவருட ஏற்றத்தாழ்வுகள் வாழும் நிலையில்

ஒரு கரையில் எப்போதும் கடல் காற்று வீசும்
மறு கரையில் இப்போதும் கண்ணீரின் வாசம்

கடல் நோக்கிக் காத்திருக்கிறார்கள் மக்கள்
கடல் காற்று வருமா என இங்கே
காக்க படகு வருமா என அங்கே
காதல் வளர்க்க அமர்ந்து இருக்கிறார்கள் இங்கே
காலன் வருவான் சேர்ந்து இருந்தால் அங்கே

மணல்வெளியில் தட்டுப்படுகிறார்கள் மழலைகள்
மணலில் வீடுகட்டி விளையாடுகிறார்கள் இங்கே
மணலே வீடாய் வீழ்ந்துகிடக்கிறார்கள் அங்கே

வான் நோக்கி எதிர்பார்த்திருக்கிறார்கள் சிறுவர்கள்
வானூர்தி பார்த்தவுடன் கையசைத்து
வழியனுப்பி வைக்கிறார்கள் இங்கே
விமான சத்தம் கேட்டவுடன் குழிக்குள்
வாய்பொத்திக் குதிக்கிறார்கள் அங்கே

நடந்து கொண்டிருக்கிறார்கள் பெரியவர்கள்
நல்ல தூக்கம் வரவழைக்க
நடைப் பயிற்சி செய்கிறார்கள் இங்கே
தூக்கத்தையும் சேர்த்து தூக்கி
துக்கத்தோடு நடக்கிறார்கள் அங்கே

வயிறு பிழைக்க படகேறுகிறார்கள் இங்கே
வாழ்க்கையே பிழைக்க கடலேறுகிறார்கள் அங்கே

வீதியில் அலையும் அவர்களின்
விதியின் உள்நோக்கம் புரியவில்லை
உறவை பிரிந்து தவிக்க அவர்கள்
குற்றமென்ன செய்தார்கள் தெரியவில்லை
பகுத்தறிந்து பார்த்தவரையில்
பகுதிக்குகூட விடை இதுவரை கிடைக்கவில்லை

உண்மையை யார் உணர்வார்?
நிலமையை எவர் உணர்த்துவார்?
அவலம் எப்போது தான் தீரும் !
நிலவரமும் எப்படித் தான் மாறும்!!

No comments: