Tuesday, October 27, 2009

முடிவில் ஆரம்பமாகும் பயணங்கள் ........


ஒட்டு மொத்த குடும்பமும்
ஒரு தோளின் மேல்.
தாங்கிப் பிடிக்கும் நடுகல்லாய்த்
தலைமகன் நான்.

சன்னல் கதவுக்கு ஒன்று
வாசல் காலுக்கு இரண்டென
வீட்டுக்கே மூச்சுத் திணறும்
கூட்டமாய்க் கூட்டுக் குடும்பம்

மணம் முடித்த அவளுடன்
மனம் விடுத்துப் பேசவே...
வந்தவளுடன் தனிமையில்
தொந்தரவின்றிப் பேசவே...
வாரம் ஒன்று முழுதாய் ஆனது

மண வாழ்வைத் தெடங்கவே
மாதம் மூன்றுக்கும் மேலானது

இயந்திர உலகில் கரையேற
இயந்திரம் போல் இயக்கம்..........

தங்கைகளின் சடங்கு , சீர் செனத்தி ,
திருமணம் , புகுந்தவீடு பயணம்........

தம்பிகளின் படிப்பு , வேலைவாய்ப்பு ,
தனி வீடு , வெளிஊர்ப் பயணம்.........

பெற்றோரின் நலம் , மருத்துவம் ,
பராமரிப்பு , கடைசிப் பயணம்...........

குழந்தைகளின் பள்ளி ,கல்லூரிப்படிப்பு
திருமணம் ,வெளிநாடுப் பயணம்.......


பயணம்,பயணம்,பயணம்............
பயணத்தைத் தொடர்ந்து
பயணிக்க வைக்க எனக்கும்
சயனம் இல்லாத பயணம்.........


எல்லாம் ஓயும்போது - இலவசமாய்
வந்துசேர்ந்தது பணி ஓய்வும்

இதோ.....

சுற்றியிருந்த உறவெல்லாம்
விட்டுச் சென்ற பிறகு நான்...
தலையணை தேடும் மனதுடன் !
தனிமையில் தொடரும் அவளுடன் !!

கடந்ததை அசை போட்டுக்கொண்டு ..
நடப்பதை எடை போட்டுக்கொண்டு..
அலையும் மனதை அழுத்திக்கொண்டு..
அசையும் காலியில் சயனித்துக்கொண்டு..

அடடா,,,, !!!!!!!!!!

உண்மையது எனக்கு அப்போதுதான்
உறைக்கத் தொடங்கியது .....!

உதறிச் சென்றொருக்கெல்லாம்
விரட்டித் தேடி செய்தேனே !
எனை நம்பி வந்தவளை
நினைக்க மறந்தே போனேனே !!

என்னவளின் எண்ணங்களை
எள்ளளவும் எனக்குள் வாங்கவில்லையே
கடமையின் நெரிசலில் அவளின்
ஆசைகள் எதையும் அறியவியில்லையே

குற்றஉணர்வில் உள்ளம் குறுகுறுக்க
குனிந்த படியே இருக்கிறேன்....
நேருக்கு நேராக அவளை
நிமிர்ந்து பார்க்க முடியாமல் .....

என்முகத்தை தனக்குள் அணைத்து
தன்மூச்சை எனக்குள் அழுத்தி

இச்சென முத்தம் ஒன்றை
உச்சந்தலையில் வைத்துவிட்டு ,
மெதுவாய் கையிலிருந்த உணவை
ஒருவாய் எனக்கு ஊட்டிவிட்டு ,

மெல்லத் திரும்பி நடக்கிறாள்
மெளனமாய் சிரித்து விட்டு !
’ நானிருக்கிறேன் ‘ என்ற சேதியை
நெஞ்சுக்குள் இறக்கிவிட்டு !!

ஐந்தில் அன்னையோடு மங்கிமறைந்தது
அறுபதில் அருவியாய் பொங்கிவருகிறது !

என்றோ தொடங்கிய மணவாழ்க்கை
எங்கோ முடியப் போகும் தருணத்தில்
இங்கே இதோ ஆரம்பமாகிறது இனிதாய் !
எங்களின் மன வாழ்க்கை புதிதாய் !!

Wednesday, October 7, 2009

விசமா ? வேசமா ?? விசேசமா ???.....


மெளனம்...........

இன்று அவளின் மெளனம் - அதனால்
ஆனதென் மனம் ஊனம்

ஒலி இல்லாமல் -
பேசும் மொழி இல்லாமல்

அவளின் மெளனம் -
அது ஆயிரம் வழியில் பேசும்

ஆம்........

அணைப்பில் சம்மதம் சொல்லும்
அரவணைப்பில் என்மனம் வெல்லும்

மகிழ்வில் மனம்கொள்ளை கொள்ளும்
இகழ்வில் தினம்என்னைக் கொல்லும்

கோபத்தில் கொடுவாளை எடுக்கும்
தாபத்தில் விடியலைத் தடுக்கும்

பழக்கத்தில் சாமரம் வீசும்
குழப்பத்தில் சமரசம் பேசும்

கொஞ்சுகையில் வீணையே கெஞ்சும்
மிஞ்சுகையில் நானே தஞ்சம்

மஞ்சத்தில் எனைத் தகிக்கும்
தஞ்சத்தில் எனையேத் துதிக்கும்

ஒட்டிவந்தால் வாடையாய் வீசும்
எட்டிநின்றால் சாடையில் பேசும்

ஆனாலும்......

அவளின் மெளனம்....
இன்றவளின் மெளனம்........

அது..........

வீழ்த்தும் விசமா ? வெறும் வேசமா ??
உள்ளுக்குள் எதுவும் விசேசமா ???

அர்த்தமென்ன இதுவரை! தெரியவில்லை - அதன்
ஆழமும் எதுவரை? புரியவில்லை

.

Monday, October 5, 2009

பார், பார்,.....காத்திருக்கும் பார் ...!


பார் ! பார் !!

அதிகாரமையத்தின் ஆளுமையைப் பார்
அதிகாரவர்க்கத்தின் ஆணவத்தைப் பார்

அதிகாரிகள் அடக்குவதைப் பார்
வியாபாரிகள் விழுங்குவதைப் பார்

பாதிக்கப்பட்டோரின் சூழ்நிலை பார்
மிதிக்கப்பட்டோரின் கீழ்நிலை பார்

ஆசீர்வதிக்கப்பட்டோரின் வளமை பார்
அவதிப்படுவோரின் நிலமை பார்

வளமை ஓரிடமே சேரும் காரணம் பார்
வறுமையை ஓட விரட்டும் நிவாரணம் பார்

பணம் கைகொட்டி வரும் வலம் பார்
குணம் கைகட்டி நிற்கும் அவலம் பார்

அணுதினமும் உதிரும் வியர்வை பார்
அவனுதிரமாவது உயரும் தீர்வைப் பார்

களம் இருந்தும் திணறுவோர் பார்
தளம் புகுந்தும் தடுமாறுவோர் பார்

உனக்காகக் காத்திருக்கிறது பார் - ஆம்
உனக்காகவே காத்திருக்கிறது இந்தப் பார்

உன்வரவை எதிர்பார்த்திருக்கிறது பார் - ஆம்
உன்வரவுக்காகவே பார்த்திருக்கிறது இந்தப் பார்

வா !

எழுந்து வா !
வீறுகொண்டு எழுந்து வா !
விதி சமைக்க விரைவாய் எழுந்து வா !
வீர நடைபோட்டு விரைவாய் எழுந்து வா !

Friday, October 2, 2009

கலி வெண்பா(!) : காந்தி விடச்சொன்னார் ...!


அந்நிய நாட்டவரின் இந்தியச் சுற்றுலா
வந்தயிடத் தில்கணையாய் வந்துவிழும் வார்த்தைகள்

காந்தியின் வாழ்வினைக் கேள்விகளால் துளைக்கிறார்
காந்தியின் கொள்கையைக் கர்வமாய்க் கேட்கிறார்

எமக்கான வாய்ப்பினை ஏற்றே அமைகிறேன்
எம்மகான் ஆசை எடுத்துமுன் வைக்கிறேன்


”இம்சைக் கிடம்கொடா(து) உந்தி விடச்சொன்னார்

அந்நிய மோகமதை அப்போ(து) விடச்சொன்னார்


தீண்டாமை யைத்தூரத் தள்ளி விடச்சொன்னார்

ஆணாதிக் கம்அவநம் பிக்கை விடச்சொன்னார்


ஆள்க்கொள் ளுமாசை அடியோ(டு) விடச்சொன்னார்

ஆழ்மன வேற்றுமையை மானுடம்வி டச்சொன்னார்


வாய்மைப் பெருக்கியே பொய்மை விடச்சொன்னார்

சோம்பல் அதனை சுத்தமாய்வி டச்சொன்னார்


மண்ணில் மதவேற் றுமையை விடச்சொன்னார்

உன்னில் பயமும் சுயமும் விடச்சொன்னார்”


எடுத்தத் தலைப்பில் எடுப்பாய் முடித்தேன்
அடுத்தொரு கேள்வியைத் தானவர் தொடுத்தார்

”சொன்னார் மகாத்மாவும்; சொன்னதெல்லாம் உங்களுக்கு !
என்னவெல்லாம் விட்டீர்கள் ? என்னிடம் சொல்லுங்கள் !!”

ஒருவரியில் கேட்டு ஓய்ந்தார வர்தாம்
ஒருநொடியில் மூச்சு ஒடுங்கியதெ னக்கு

எதிர்பார்க்க வில்லைஎதிர்க் கேள்வியதை நானும்
எதையும் விடவில்லை! ஏனென்(று) தெரியவில்லை?

அவர்பிறந்த நாள்அன்று விட்டதொன்று மட்டும் ;
அவர்சொல்லா(து) இன்று விடுப்பு