Sunday, November 6, 2011

வாரீயளா .....சொர்க்கலோகம் கூட்டிப் போறேன் ...... கலர்கலராக் காட்டப் போறேன் ....: 4

ச(ர்)க்கர :( இதுதான்யா சொர்க்கம் - 4)

என்ன செய்யலாம் ????

உச்சந்தலையைத் தடவிய படியே... வண்டி இருக்கையில் அமர்ந்து கண்மூடுகிறேன் ......

மனம்... ஒவ்வொருவருக்கும் உள்ளே இருக்கும் ஓர் உலக அதிசயம் ...

கண்மூடுவதற்காகவே காத்திருந்த்துபோல ...நொடியில் என்னை பின்னோக்கி 20ஆண்டுகள் கடத்திச் செல்கிறது அது.

#தூத்துக்குடி

“அம்மா ..தந்தி வந்திருக்கு

தந்தி – இந்த வார்த்தையைக் கேட்டவுடன் அம்மாவின் கைகாலெல்லாம் உதறலெடுக்க....

முகம் வெளிறத் தொடங்க ......

இதைப் பார்த்தவுடன் இப்போ தபால்கார்ருக்குப் பதட்டம் ஆரம்பிக்கிறது ..


“ஐய்ய்யோ...எம்மா .... கொஞ்சம் பொறுங்க ...நல்ல சேதிதான் .. நல்ல சேதிதான் “


“கட்டைல போறவனே.. இதை மொதல்லயே சொல்லித் தொலைகிறதுக்கு என்னாவாம் “ சேலை முந்தானையால் முகத்தைத் தொடைத்துக் கொண்டே அம்மா மெல்ல சிரிக்கிறாள் .. அவர்தான் எங்க ஏரியாவின் நிரந்தரப் ‘போஸ்ட்மேன்’ . எல்லாரிடமும் உள்வீட்டு ஆளப்போல பாசமாப் பழகுவார் ...


என்னத்த சொல்லவிட்டீய ...இப்போ மயக்கம் போட்டிருந்தீயன்னா எஞ்சோலியல்ல உங்க ஊட்டுக்காரரு முடிச்சிருப்பாரு ’’


சரிசரி ..என்னாவிசயமாம் ..இப்பயாச்சும் சொல்லு தம்பி


எம்மா ..மவராசி.. மொதல்ல எனக்குக் கொஞ்சம் நீச்சத்தண்ணியாச்சும் மோராச்சும் கொடுங்க ... போன உசிர திரும்ப வரவசுக்கிறேன் ..”

மெதுவாக தனக்குள் ”மொதல்ல இந்த ‘தந்தி’ கோண்டுபோற வேலைய விடணுமப்பா


உங்க ஊட்டய்யா தங்கச்சி மவா பெரியமனுசி ஆயிருக்குதாம் ...தாதன்குளத்துல கல்வூட்ல விசேசமாம் ..உடனே வரச்சொல்லி தந்தி கொடுத்திருக்காங்க ...

எங்கிட்டே திரும்பி ‘தொரே...உங்க அயித்த பொண்ணாம் ..ம்ம்ம் ..ஜமாய்என்கிறார்


ஓ..அம்மாவுக்குக் கொஞ்சம் சுதி எறங்கிப்போச்சு ...( அப்பா வீட்டு உறவுன்னா கொஞ்சம் அம்மாவுக்கு ஆகாது ... கலயாணமான புதுசுல ஏதோ பிரச்சினையாம் )


அப்பா வந்தவுடன் தடபுடலாய் டேப்ரெக்கார்டர்வச்ச வெள்ளை அம்பாஸ்ட்டர் கார் பிடிச்சு கெளம்பினோம் .


முக்கியமான ஒரு கேரக்டரை இங்கே அறிமுகப்படுத்தியே ஆகணும் .. என்னோட பிரண்டு ‘ராசாமணி .திருப்பூர்காரன் . ஸ்கூல்லீவுக்காக அவங்க சொந்தக்காரங்க வீட்டுக்கு வந்திருந்தவன்.. எங்களோடத் தொத்திக் கொண்டான் ...கொஞ்சமா வாய்மட்டும் ஜாஸ்தி ஆவனுக்கு...

அதான் மொதல்லயே அவன்கிட்டே சொல்லிவச்சுட்டேன்

எலேய் ..ஒங்கூரு மாதிரி இங்கே பேசிக்கிட்டிருக்காதே .... பாத்துக்கோ ...எல்லாப் பயலும் கத்தி வச்சிருப்பான்

பயந்துட்டேன் போல ... ரொம்ப அமைதியாகவே வந்தான் ...


#தாதன்குளம் :கிராமம்:

வண்டியில வந்த அலுப்புல..எல்லாரும் அடிச்சுப்போட்டாப்ல தூங்கீட்டோம் போல ..காலைல லேட்டாத்தான் எந்திரிச்சோம் நாங்க 2 பேரும் ... வீட்ல கொஞ்சம் பேருதான் இருக்காங்க .. வெளியே திண்ணைல பெரியாத்தா ... கூடத்துல புள்ளைங்க பல்லாங்குழி ,கலஞ்சி (தட்டாமாலை) வெள்ளாண்டுக்கிட்டு இருக்க ..பல்லுவெளக்காம நாங்க மட்டும்தான் போல ...


அம்மா ..காப்பி கொடு ந்னு சவுண்டு வுட்டுட்டு ( எப்படியும் அயித்த மகதான் கொண்டுவரப் போறாJ)

ராசாமணிகிட்டே கூச்சப்படாம கேட்டுவாங்கி சாப்பிடுல ந்னு சொன்னேன்..


நெனச்சாப்லயே அவதான் கொண்டுவந்தா...


காப்பியக் கையிலவாங்கி வாயிலவச்சவன் ..ஊருக்குள்ள வந்ததுல இருந்து மொதமொதலா வாயத் தொறந்தான்.

“எனக்கு சக்கர கம்மி .. கொஞ்சம் தாரீங்களா


திடீர்ன்னு அங்கே ஒரு அமானுஷ்ய அமைதி.......

அயித்தமக கைய ஒதறி வாயப்பொத்திக்கிட்டே உள்ளே ஓட.....

சளசளன்னு சளம்பிக்கிட்டிருந்து பொடுசுக எல்லாம் கப்புன்னு வாயமூடீட்டு ..அவன ஒருமாதிரியா குறுகுறுன்னு பாத்துட்டு..

அய்ய்ய்ய..ஆத்தா...இந்த அண்ணன் ஆயிஆயியாப் பேசுதுன்னு ஆத்தாகிட்டே கோத்துவுட்டுட்டு ... கத்திக்கீட்டே வெளியே ஓடுதுக


திண்ணைல இருந்து ஒரு கும்பா ராசாமணியப் பாத்து பறந்துவந்த்து முன்னே ...

பெரியாத்தா ஆவேசமா வந்தாள் பின்னே ....


“எடு வெளக்குமாற .. பொண்டுபுள்ளங்க இருக்குற எடத்துல யார்ல அவன் ..வாயப்பாரு ...ஏலே மாரி ..ஓடியால ..இந்தப்பயலப் புடிச்சுக் கட்டுல புளியமரத்துல.. பத்தலையாமுல்ல ...அந்தப் படுக்காளிப் பயலுக்கு கொஞ்சம்நஞ்சம் இருக்குறதையும் இழுத்துவச்சு ஒட்ட நறுக்கி காக்காய்க்குப் போடு“


ஈரத்துண்டால மூடிப்போட்ட கோழியப்போல நாடிநரம்பெல்லாம் ஒடுங்கிப்போச்சு அவனுக்கு ..........

மெதுவா என்கையைச் சொரண்டி டேய் ..என்னாடா நடக்குது இங்கே ... என்னை ஏண்டா இந்த்த் திட்டு திட்டுது .... நான் என்னடா பண்ணேன்...எதையோ அறுக்க வேற சொல்லுது பாட்டி ?


எலேய் ..கொஞ்சம் சும்மாத்தான் இறேன் ... அதான் ஒரே வார்த்தைல ஒருமாசத்துக்கு சனியன இழுத்திட்டீயே


ஏண்டா..உங்க ஊர்ல சக்கரைக் கேட்டாத் தப்பாடா,,கம்மியா இருக்கப்போயிதானடா கேட்டேன்


இங்கே சக்கரன்னா வேற அர்த்தம் மக்கா ...


அய்யோ ..எனக்குத் தெரியாதே ..அப்படீன்னா என்னடா


விடு விடு..இப்போ வேணாம் ..பொறவு சொல்றேன் ..


டேய் ...சொல்லுடா... எனக்கு இப்பவேத் தெரிஞ்சாகணும் ..


ம்ம்ம்...நீ சாவணுமுன்னு முடிவு பண்ணீட்டே ...நான் என்ன செய்ய ..சக்கரன்னா இங்கே குஞ்சுமணின்னு அர்தமுடியோய்.. ... அந்தப்புள்ள கீட்டே பத்தலன்னு நீ கேட்டது அதைத்தான்


இப்போ நான் சொன்னதக் கேட்டதும் நாக்கு மேலன்னத்தில் ஒட்ட...கண் சொருக ஆரம்பித்தது அவனுக்கு ...


நல்லவேளயா அப்பாவும் அந்தநேரத்துல அங்கே வர அவன் தப்பிச்சான் .


என்ன! ..ஆத்தாவச் சமாதானம் பண்னத்தான் நேரமாகிப் போச்சுது ........


20வருடங்கள் ஆகிவிட்டன ...

ராசாமணி இன்னும் சமாதானமாகவில்லை.. எப்போ சந்தித்தாலும் அவனோட மொதக்கேள்வி இதுதான் ...

டேய் ..உங்க பெரியாத்தா அன்னிக்கு எதையோ இழுத்துவச்சு அறுக்கணுமுன்னு சொன்னாங்களே ..அது என்னடா “


‘ நாக்கைத்தான் அவங்க சொன்னாங்கன்னு எத்தனை தடவைதான் உங்கிட்டே சொல்றது


அவன்தான் இன்னும் இன்றுவரையிலும் என்னை நம்பியதுபோலத் தெரியவில்லை ..

நீங்களாவது நம்புறீங்களா ????

(போய்க்கிட்டே இருப்போமா ............)


Tuesday, November 1, 2011

பெரியாத்தா : -- இதுதான்யா சொர்க்கம் -3

வாரீயளா .....சொர்க்கலோகம் கூட்டிப் போறேன் ...... கலர்கலராக் காட்டப் போறேன் ....:3


வேப்பம்பழம் பொறுக்கி, கொட்டை எடுத்துக் கொண்டிருக்கும் ஆத்தா
தூரத்தில் ஓட்டுவீடுகள் தெரிய ஆரம்பிக்கின்றன .. ஆங்காங்கே சில மட்டப்பா வீடுகளும்....

என்வண்டியைத் தாண்டி சைடு எடுத்துச் சென்ற டிவிஎஸ் 50 ஒன்று சட்டென ப்ரேகடித்து நின்றது .
(TVS 50 - எனது கனவுவாகனம் ... இப்போதுக்கூட யாராவது என்னிடம் அந்த வண்டிக்கு எனது காரை எக்ஸ்சேஞ்ச் தர ஒப்புக்கொண்டால் உடனே தரும் மன நிலையில்தான் இருக்கிறேன் ... )

அவசரமா ஸ்டாண்டுபோட்டு என்னைப்பார்த்து ஓடிவரும் அது ...அட ...எசக்கி

‘’எண்ணே.....பாத்து எம்புட்டு நாளாச்சு .... இதாம் புள்ளைங்களா...’’
என்று கேட்டபடியே கன்னத்தை பிடித்து கிள்ளிவிட்டு
வூட்டம்மாவைப்பார்த்து ’‘கும்புடறேன் தாயி ‘’ என்றான் ....

சின்னவயசுல எனக்கு அவந்தான் ‘பாடிகார்டு’ ... (3 அடு உயரத்துல நான்....ஒரு 2 அடி உயரம்தான் அவன் இருப்பான் ) ..ஆளுதான் வளந்திருக்கான் ...முகம் இன்னும் மாறவே இல்லை

அவனை தோள்சேர்த்து பற்றிக்கொண்டேன் ...ம்ம்ம் .. தோட்டத்திலிருந்து வருகிறான் போலும் ...மண்வாசம் ...

’’ஏண்ணே ... கொடைக்கு வந்தியா ..பெரியாத்தா விசயம் தெரியுமா உனக்கு’’

லேசான அதிர்ச்சி எனக்கு ...
”என்னல ஆச்சு ” எதையோ மறைத்திருக்கிறார்கள் ...

பெரியாத்தா .... அப்பாவின் அம்மாவோட அம்மா .... 100வயசு தாண்டி ஒரு மாமாங்கம் ஆகிஇருக்கும் ..

ஒருவாரமா சோறுதண்ணீ எறங்கலண்ணே ... உசுறு வாய்க்கும் தொண்டைக்குமா இழுத்துக்கிட்டு கெடக்கு...
ஏதோ நெனப்புலத்தான் உசிறு இன்னும் ஒட்டிக்கிட்டு கெடக்குது .... உன்னைப் பாத்தான்னா ஒடனே போய்ச் சேந்திருவாண்ணே “

’ஓ .... என்னை கைகுள்ளேயே வச்சு பொத்திப் பொத்தி வளர்த்தவள் அவள் ..
வேகமாக வண்டியில் ஏற ஓட எத்தனிக்க ..எசக்கி என்கையைப் பிடிச்சு தடுக்கிறான் ...

“அண்ணே ...உடனே போய் பார்த்திறத... ரெண்டுநாள்ல கொடை இருக்கு... முடியட்டும் ...இப்போ உன்னைப் பாத்தவுடன் ஆத்தா புட்டுக்கிச்சுன்னா ... தேரு வெளியேவராது ...கொடை நின்னுபோவும்...12 வருசம் கழிச்சு நடக்குற கொடைக்காவ வெளுயூருல இருந்து ஊருசனாமெல்லாம் வந்திருக்காங்க ... நெறையா ஏற்பாடெல்லாம் நடந்திட்டிருக்கு...எல்லாம் உன்னால கெட்டுப் போச்சுன்னு பின்னால யாரும் சொல்லீரக் கூடாதுண்ணே “

உண்மை உறைக்க ஆரம்பிக்கிறது எனக்கு ...
மெதுவாக பாக்கெட்டைத் தடவிப் பார்க்கிறது எனது கை ...
உள்ளே இருக்கும் இரண்டு ‘சுகர் ஃப்ரீ டாப்லெட்’ பாக்கெட்டுகள் என்னைப்பார்த்து சிரிக்கின்றன ...

இந்தக் கிராமத்தைவிட்டு நான்வெளியேறும் முன்னால்... என்றோ ஒருநாள்
‘ எய்யா .. பெரியவனே ...எனக்கு ஏதோ சுகராம்..இவளுவோ கருப்பட்டிய என்கண்ணுலயே காட்ட மாட்டக்காளுவ.. என்னமோ இனிப்பு மாத்தரன்னு இருக்காமே அது எனக்கு கொஞ்சம் வாங்கித் தாரியா ???’

கருப்பட்டியும் , வெல்லமுமாய் காய்ச்சி ஊருக்கெல்லாம் கொடுத்தவள் ...இனிப்புக்காக ஏங்கி என்னிடம் கேட்டது மங்கலாக இன்னும் மனக்கண்முன்னால் ஓட ..........

என்ன செய்யப் போகிறேன் நான் ...????????????

(என்ன செய்யலாம் சொல்லுங்க மக்களே ...ஊருக்குள் நுழையாமல் தூரத்தில் தெரியும் அந்தக் கல்வீட்டை பார்த்தபடியே உடைந்துபோய் காத்திருக்கேன் )

Saturday, October 29, 2011

வாரீயளா .....சொர்க்கலோகம் கூட்டிப் போறேன் ...... கலர்கலராக் காட்டப் போறேன் ....: 2

2 . ஊருணி :

வண்டி ஊரை நெருங்க நெருங்க எனக்குள் ஒரு பதட்டம் தடதடவென அதிர ஆரம்பிக்கிறது .
மிக நீண்ட நாட்களாகப் பிரிந்திருந்த மிக நெருங்கிய உறவொன்றை சந்திக்கப்ப்போகிறேன் ...
அதோ தொலைவில் புள்ளியாகத் தெரிய ஆரம்பித்த...... அட !..என்ன இது ??? ...முட்செடிகளின் நடுவே ...அருகில் நெருங்கக் கூட பாதையின்றி பராமரிப்பின்றி பரிதாபமாக அந்தக் கிணறு ...

வேகமாக வண்டியை முட்செடிக்குள் திருப்புகிறேன் ....
இருபக்கமும் ‘க்ரீச், க்ரீச்’ எனக் கோடுகள் விழும் சப்தம் கேட்க , குழந்தைகளும் , வீட்டம்மாவும் என்னை ஒரு சித்தம் கலங்கியவனைப் பார்ப்பது போல பார்க்க ஆரம்பிக்கிறார்கள் .( வண்டியில் யாராவது சாய்ந்து நின்றாலே ஓடிவந்து துடைத்துவிட்டு ...சத்தம் போடுவேன் நான் ).

பதைபதைப்போடு இறங்கி ஓடிச் சென்று பார்க்கிறேன் ....
அந்தக்கிணறா ? அளவில் பாதியாக ... அன்று சதுரமாக , பாறை விளிம்புகளோடு அங்கங்கே உக்கார, தொங்கி ஏற வசதியாக இருந்தது ..இன்று சிமெண்ட் வைத்து ..வட்டமாக மொழுமொழுவென்று ..சுருங்கிப்போய்...கிளவியை அலங்கரித்ததுபோல :(((
aqw (164).gif#அன்னிக்கு ரெட்டைக் கெணறு உண்டு எங்கூருல
பகலில் சாப்பாட்டு நேரம்போக எங்க குடியிறுப்பே இங்குதான் ...

ஒண்ணு குடிதண்ணிக்கு , இன்னொண்ணு குளிச்சுக் கும்மாளமடிக்க ....

20 -30 அடி ஆழத்துல பளிங்குத்தண்ணீ ...
அதுக்கும் கீழே 20 அடிக்கும் பளப்பளான்னு தெரியும் செதில்செதிலான பாறைத்தரை...
பெரிய மீசையோடு கெளுத்திகல் , திட்டீர்னு சாய்ந்து கண்ல லைட் அடிக்கும் கெண்டைகள் ...
ஆழத்தில் ஓட்டையிலிருந்து தலையை அப்பப்போ நீட்டும் தண்ணிப் பாம்புகளோடு ..
நாங்களும் தண்ணி மட்டத்துல கெணத்துக்குள்ள உக்காந்து மேலே பாத்திருக்க ..

அங்கே கைப்பிடிச் சுவருக்கெ மேலே நீட்டிக்கிட்டு இருக்கும் மரக்கிளைல கையத்தூக்கி கும்பிட்ட போஸ்ல அசையாம நிக்கிறான் அவன் ....

ஒரு நொடியின் ஆயிரத்தில் ஒரு பங்கு நேரத்தில் திடீரெனக் கிளம்புகிறான் ..
காலுக்குக் கீழே பூமி நழுவ ..
(ஒரு பாலே நடனக்காரரின் திறமையோடு) கால்கட்டைவிரல் தண்ணீரில் முதலில் நுழைய ....
மிகச்சிறிய தண்ணீர் சிதறல்களோடு... வெண்ணைக்குள் கத்தி இறங்குவதுபோல ...
விசுக்கென(ஒரு 5* சாய்மானத்தில்) (ஒலிம்பிக் ‘ஃப்ரீபோர்டு டைவிங் போல)
தரையைத் தொட்டு , காலால் உடல் எடையைத்தாங்கி.. கொஞ்சம் கால் மடக்கி...
உந்தி மேலே தண்ணீரைக் கிழித்துக் கொண்டு வெற்றிக் களிப்போடு வெளியே வர .....

( இதுக்குப் பேரு கடப்பாரை சொர்க் . .. ‘ மக்கா ..ஒரு சொர்க் அடிடா ‘ )

ஆரவாரத்தோடு ’எலேய் .. மக்கா ..சித்தப்பூ, மாமோய்...’ என கேலியும் கிண்டலும்மாய் பாசத்தால் நிரம்பி இருந்தது அந்தக் கிணறு அன்று ..........

இன்றும் நிரம்பித்தான் இருக்கிறது கிணறு ....கவனிப்பாரின்றி ....பச்சைக் கறைபடிந்து..... ’பாச’த்தால்
-- வாரீங்களா ..வாரீங்களா ???


Friday, October 28, 2011

வாரீயளா .....சொர்க்கலோகம் கூட்டிப் போறேன் ...... கலர்கலராக் காட்டப் போறேன்


”ஏவுலா. .... எனக்கு நம்ம சாதிசனத்தையெல்லாம் பாக்கணும் போல இருக்கே ........!”
வீட்டுப் பெரிசு முகத்தைச் சுருக்கிக்கிட்டு....
லேசா நெஞ்சைத் தடவியபடியே மெதுவா கெளவிகிட்டேசொல்லி வைக்க ......

திகுதிகுகென பத்திக் கொண்டது அது ...

எலேய்....மக்கா....
கெடாவப் பிடிச்சுக் கெட்டிப்போடு ......
கோயில் கொடக்காலை நட்ட ஓடு ........

கொலசாமிக்கு கொடைய கொடுத்த மாதிரியும் ஆச்சு...
எல்லா பயபுள்ளையையும் பாத்தமாதிரியும் ஆச்சு “

ஒண்ணு கூட விட்டுப்போகாம எல்லா வளவுக்கும் போனைப் போடு.........”


அடுத்து அங்கே ஒருமாசத்துக்குத் திருவிழாதான் ....

விவசாயத்துல மானமும் பூமியும் சேர்ந்து ஏமாத்துன பின்னால , சோர்ந்துபோயிருந்த பெரிசுகளே துள்ளிக் கெளம்பீருமுன்னா எளசுகளைக் கேக்கணுமா என்ன ?

கடனவொடன வாங்கியாவது .....வீட்டுக்கு வெள்ளையடிச்சு , புது டீப்லைட்டு மாட்டி , எட்டடி கூடத்துல முடிஞ்சா பேனையும் மாட்டி , புல்லட்டுக்கும் , ட்ராக்டருக்கும் பெயிண்ட் அடிச்சு, சைக்கிளுக்கு டயர்டீப்பு மாத்தி, புதுத்துணியும் , செருப்புமா சொந்தங்களை எதிர்பார்த்து ( முக்கியமா அத்தப் பொண்ணு, மாமன் பையன் :) அமர்களமான வாழ்க்கை ஆரம்பமாகும்.

‘ஆமால்ல..என்ன இருந்தாலும் நம்ம பவுச வுட்டுக் கொடுக்கமுடியாதுல்ல ’

சுருக்குப்பை முடிச்சை அவுத்து , சேகரிப்பை கையிலக் கொட்டி , கொழுந்துவெத்தல / கொட்டப்பாக்கு/ கொஞ்சம் போயல/சன்னமா சுண்ணாம்பும் சேர்த்து, பொக்கைவாய் அம்மாயி/ பல்லுபோன அப்பத்தாக்களின் கைக்குள்ளே இடிஉரல் முழங்கத் தொடங்க , செவந்த இடிவெத்திலைக்கு சின்னஞ்சிறுசுகள் வரிசையில் நிக்க....

சீரியல்பல்ப்பும் , சிரிப்பும் கும்மாளமுமாய்..............


வணக்கம் உறவுகளே .....
நகரமேல்த்தட்டு மக்களின் கெட்டுகெதர் போல,
கோவில் திருவிழா / கொடை விழா - இதுதான் கிராமத்துமக்கள் ஒண்ணுமண்ணா தங்களுக்குள் கலந்து கொள்ளும் ஒரு சடங்கு /வைபவம்/ நிகழ்ச்சி ...எப்படி வேணா எடுத்துக்கலாம் :)

இதுதான் நாம் மறந்து/துறந்து வரும் நமது உண்மையான பூலோகச் சொர்க்கம்....
இது எங்கோ மிகத் தொலைவில் எல்லாம் இல்லை .. நமக்கு அருகிலேயே தானிருக்கிறது ....தொட்டுவிடும் தூரத்தில்தான் இருக்கிறது .......

நாம்தான் முகவரியைத் தொலைத்துவிட்டதாய் எண்ணிக்கொண்டு ... எதையும் தொடராமல்/தொடாமல் விலகி/விலக்கி வருகிறோம்
நாளடைவில் இந்த சொர்க்கம் இருந்ததற்கான தடம்கூட நமதுகுழந்தைகளுக்கு தெரியாமல் போகக் கூடும்

சிறிது நேரம் ஒதுக்கி என்னோடு வாருங்கள் ..என்னால் முடிந்த அளவுக்கு உங்களை அங்கே அழைத்துச் செல்ல முயல்கிறேன் ...

1.சொர்க்கத்தின் நுழைவாயில் :
இந்த இடம் வந்தவுடன் அம்மா/அப்பா கையை உதறிவிட்டு இறங்கி ஓடுவோம் .. தண்ணீதேங்கி இருக்கும் அந்த ஓடையைத் தாண்டும் முன் கால்முழுக்க களிமண் அப்பிக்கொண்டு ‘சகதி சூ’ ஓட்டுக்கும் ...:))
விரல் இடுக்கெல்லாம் நுழைந்து கால் 4 மடங்கு பெருதாக , யானைக்கால் போல காலைத்தூக்கிவச்சு நடப்போம். காலைச் சரியாக்க ,சகதியை உதற ..அது அப்பா / பக்கத்துல உள்லவங்க சட்டை வேட்டியெல்லாம் தெறிக்க ....
அப்பா முறைக்க , அந்த நாளின் ஆரம்பமே ‘முதுகில் டின்’ னோடத்தான் தொடங்கும் :))

(இன்று காரில் அந்த இடத்தைக் கடக்கும் போது எதையோ இழந்ததுபோல உணர்ந்தேன் ...
எனது குழந்தைகளுக்கு இந்த ‘சகதிச் செருப்பு’ என்றால் என்னவென்பதே தெரியாமல் போனது )

.
எங்கூட வருவீங்களா ? மாட்டீங்களா.....................?


Saturday, August 20, 2011

கொள்ளை போகுதே எம் பிள்ளைகளின் எதிர்காலம் ....!


தொலைவிலிருந்தே பாருங்கள் கனவான்களே.....
அங்கே அரசாங்க ஆணையுடன்
சாரிசாரியாய்க் காத்திருக்கிறார்கள் கயவர்கள்........
DSCN3263bf.jpg


வருங்காலத்துக்குச் சேர்த்துவைப்பதாய்
குருட்டுக் கணக்கிட்டுக் கொண்டு
தம் குழந்தைகளின் எதிர்காலத்தையும்
சேர்த்தேபோய் கொள்ளையடிக்கிறார்கள்...
மொத்தமாய்ப் புதைக்க
சோர்ந்தேபோகாமல் குழியெடுக்கிறார்கள்......
DSCN3266bf.jpg
DSCN3269bf.jpg
DSCN3268bf.jpg

ஆற்றுப் படுகையிலிருந்து ஒரு மரண வாக்குமூலம் :

கல்தோன்றி, மண் தோன்றா...... என நம் மக்கள் பேசும்போதெல்லாம் , நம்மையும் ஒரு பொருளாக எடுத்துப் பேசுகிறார்களே என்று மணல் பெருமைபட்டிருக்கும் முன்பு..

ஆனால்........

தொடரும் அடுத்த 10ம் ஆண்டின் முடிவில்

கல்தோன்றி, மண் தோன்றா...... என மேடை போட்டுப் பேசுபவரிடமே கேட்டுக் கொண்டிருப்பவர் எதிர் கேள்வி கேட்பார்

‘எல்லாம் சரிதான் ..மண்ணு, மண்ணுங்கறீங்களே ..

அப்படீன்னா என்ன ?

கடந்த 20 ஆண்டுகளில் , ஆற்று மணலின் இருப்பில் பாதியை கொள்ளையடிக்கப் பட்ட அவலம் கண்டு ,பொங்கி எழுவோர் யாருமில்லை... தவறி யாரும் எழுந்தாலும் அவருக்கு துணைவருவோர் யாருமில்லை .. நம் குழந்தைகளின் வருங்காலம் நம் கண்முன்னே கொள்ளை போய்க் கொண்டிருப்பதை யாரும் உணர்ந்ததுபோலவேத் தெரியவில்லை .

உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா ?

ஆற்றுப் படுகையில் 1 அங்குலம் உயரத்திற்கு மண் சேகரமாகிப் படிய ஆகும் காலம் 5000 ஆண்டுகள் ..

நமது அரசு ஆற்றில் மணல் அள்ளுவதற்கு அளித்திருக்கும் அளவு 3 அடி ..அதாவது 36 அங்குலம் தோண்டிக்கொள்ளலாம் ...

அதாவது 1,80,000 ஆண்டுகள் சேமிப்பை அரசாணை என்ற பெயரில் அபகரிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது ...

ஆனால் ... நடப்பது என்ன ???

இயந்திரங்களின் உதவியோடு 20 அடி ஆழம் தாண்டியும் மணல் தோண்டி எடுக்கப் படுகிறது ....அனுமதிக்கப்பட்ட அளவைவிடவும் பல்லாயிரம் மடங்கு அதிகமாக......

என்னவாகும் ஆற்றுக்குப் பக்கத்திலுள்ள இடங்களில் நிலத்தடி நீரோட்ட நிலைமை ?

ஆற்றின் நீர்மட்ட அளவைப் பொறுத்தே அமையும் கிணற்றின் நீர்மட்டங்களும் ....ஏற்கனவே 20 அடியில் கிடைத்த தண்ணீர் இப்பொழுது 40 அடியைத் தாண்டியும் கிடைப்பதில்லை.

கடல் மட்டம் உயரும் பொழுது உள் நுழையும் நீர் பள்ளங்களில் தேங்கி பக்கவாட்டில் நீரோட்டங்கள் மூலமாக விளை நிலங்கள் , கிணறுகளில் கலந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் குலைக்கிறது ... குடிமக்களின் குடி நீர் ஆதாரங்களை அழிக்கிறது

இனி அணைகளில் திறந்துவிடப்படும் நீர்.... இடையிலேயே இந்தப் பள்ளங்களில் தேங்கி, கடைமடையை அடையாமலேயே போகக் கூடும்..

கேரள ஆறுகளில் மணல் எடுக்க அங்கே தடை உள்ளது.அந்த அரசுக்கு மணலின் தேவை புரிந்திருக்கிறது ...ஆனால் இங்கோ...!!

இரவு,பகல் பாராமல் பணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இங்கிருந்து நம் மணல் வளங்களை கேரளாவுக்குக் கடத்தி கொண்டிருக்கிறோம்....

ஏன் ..நமக்கந்த விழிப்புணர்ச்சி இல்லை...எங்கே போனது நம் சுயபுத்தி .... எப்போதிரிந்து இப்படி சுயநலமாகவே சிதிக்கத் தொடங்கினோம் ?

பழமொழிகளின் பெருமையே அது காலத்தைத் தாண்டியும் நிலைத்து நிற்பதுதான்...

ஆனால் நம் முன்னால் அது தோற்கப் போகிறது ... ஆம் பழமொழிகளின் பெருமையை சிதைத்த பெருமையை நாமே முதன்முதலில் அடையப் போகிறோம்

RIVERS NEVER GO REVERSE

--இந்தப் பழமொழி விரைவில் காணாமல் போகும்...ஆம் ..கடல் ஒருநாள் பொங்கும் போது .. நாம் தோண்டி வைத்திருக்கும் பள்ளங்களின் வழியே கடல்நீர் ஆறாக பின்னோக்கி ஓடத்தான் போகிறது ...

வாழ்க நமது திறமை !...வளர்க அதன் புகழ் ..!!


Monday, August 15, 2011

இன்றே / இன்றாவது பதியமிடுவோம் ......!

இன்றே / இன்றாவது பதியமிடுவோம் .....!


இருவண்ணம் சிறப்படைய
ஒரு வண்ணம் சிந்தி
மூவண்ணம் உயரச் செய்த
முகவண்ணம் தெரியாத

மூத்த உறவுகளின்
தியாகச் சுவடுகளை

இன்றைய இனிப்பையும்
ஒருநாள் விடுப்பையும்
’உலகத் தொலைக்காட்சியில்
முதல்முறையாக’வைத் தாண்டியும்

இன்று
ஒரு தளிர் இதயத்தில்
பதமாய்ப் பதியமிடுவோம்..

அங்கொன்று இங்கொன்று
என்றாலும் ஒருநாள்
ஒன்றாய் சேர்ந்தே தீரும்...
புதிய தலைமுறை
ஒன்று நம்முன் உருவாகும்....

சேர்ந்தே
உருவாக்குவோம்.....

தாய்மண்ணே வணக்கம் !

( நன்றி :படம் :இணையம் )

Friday, August 12, 2011

குழந்தையும் , கோடுகளும்...!

butterfly.gif
எனது அலுவலகக் கோப்பை விரித்து
கையில் கிடைத்த எதையோவைத்துக்
கிறுக்கிக் கொண்டிருக்கிறாள் அவள்

அதிர்ந்து நான் நிற்க
நிமிர்ந்த அவள் முகத்தில்
தொக்கி நின்ற கேள்வியுள்
கரைந்து போகிறதென் கோபம்

சிங்கமா என்கிறேன்
இடம் வலமாகத் தலையசைக்கிறாள்

புலியா என்கிறேன்
உதட்டைப் பிதுக்குகிறாள்

பூனையா என்கிறேன்
ஆமென்று துள்ளிக் குதிக்கிறாள்

இப்பொழுதுதான் கவனிக்கிறேன்
அந்தக் காகிதத்தில்
நடைபெற்றுக் கொண்டிருக்கும்
அசைவுகளை...

தாறுமாறாக
சிதறி இருந்த கோடுகள்
பதறி அவசர அவசரமாக
ஒரு பூனையாக
உருமாறிக் கொண்டிருந்தன...!

.

குழந்தையும் , குப்பையும்....!

bbaby (15).gif

1aaa.gifஉணவூட்டும் வரையில்

அங்கிங்கு அசையாமல்

பார்த்துநின்ற நிலவையும்

விளையாடும் ஆசையில்

ஓடிவந்து வாசலிலேயே

காத்திருக்கும் கடவுளையும்

நொடிப்பொழுதில்

விலக்கி விட்டு

விரல் சப்பித்

தூங்கிப்போகிறது குழந்தை....


இதுவரையிலும்

சேர்த்துவைத்தக் குப்பைகளை

கண்காணித்துக் கொண்டும்

இனிமேலும்

சேரப்போகும் சொத்தைகளை

கணக்கிட்டுக் கொண்டும்

விடியவிடிய

தூங்காமல் இருக்கிறேன் நான்......!1aaa.gif,Monday, August 1, 2011

இங்குமா/ இன்னுமா இனபேதம்???????????

ஆம்..

அதனால்தான் எனக்குப்

பிடிக்காமல் போனது அதை.....


நூற்றாண்டுகள் பலகடந்தும்..


சூழ்நிலைகள் திட்டங்கள்

சூழ்ச்சிகள் நகர்தல்களுக்கேற்ப...

தொடர்ந்து நடந்து

கொண்டிருக்கும் போராட்டம்தான் - ஆனாலும்


வெற்றி தோல்வி பின்வாங்குதல் என

பல முடிவுகளைக் கண்டும்

முடியாமல் தொடர்ந்து கொண்டிருக்கும்

போர்க் களம்தான் - ஆனாலும்


இரு பக்கமும்

சரி சமமான அளவில்

படைத்தளம் தான் ஆனாலும்


இரு பக்கமும்

சரி சமமான எண்ணிக்கையில்

படைபலம்தான் ஆனாலும்


கறுப்பு வெள்ளை எனப்பெயரளவில்

முன்மொழிந்து உயர்த்துவதுபோல

அழைக்கத்தான் செய்கிறார்கள் - ஆனாலும்


முதல் நகர்த்தலுக்கான வாய்ப்பு

இன்னும் வழங்கப்படவே இல்லை

சதுரங்கத்தில்..........


அந்தக் கருப்புக் காய்களுக்கு மட்டும்...!!!!!


(நன்றி:யாழி)


Friday, July 22, 2011

கடமையாற்ற விடுங்களேன்...கனவான்களே...!

ii (15).gif

அதிகாலையிலேயே நகரம்

பரபரவென அதிர ஆரம்பித்து

மிககிக வேகமாக

சரசரவென நரகமாக

உருமாறத் தொடங்கியிருக்கிறது..


தனது கடமையில் தோல்வியுற்று

இருக்குமிடத்திலிருந்து பதறி வெளியேறி

பகலெல்லாம் எங்கெங்கோ ஒளிந்திருந்து ....


பின்னிரவில் வெளிப்பட்டு

இறுக்கமான அடுக்குமாடிகளை

நெருங்கும்வேளையில்....


ஆங்காங்கே துருத்திக்கொண்டு

மூடியக் கதவுக்கு வெளியே

வெறிநாயெனக் காத்திருக்கும்

குளிரூட்டும் மிருகங்களின்

சன்னமான உறுமலால் மிரண்டு...


சரேலென தரை நோக்கி இறங்க..

அங்கும்

சாத்திய சன்னல்களே வரவேற்க


வேறுவழியின்றி......

சாலையியோரத்தில்

முடங்கிக் கிடக்கும்

தெருநாயின் தலையை

வருடத் தொடங்கும் வேளையில்...


திடுமென...

அதிகாலையிலேயே

அதிர ஆரம்பிக்கிறது நகரம்....


மீண்டும்..

பதறி விலகியோடத்

தொடங்குகிறது தென்றல்......


[நன்றி;கரு :யாழிசை/தங்கராஜ்]


Tuesday, July 5, 2011

க(தை)விதை : அந்தக் கட்டை விரல் ........!


குருதட்சணை என்றபெயரால் குரூரமாய்க்

குறிவைத்து வெட்டி எறியப்படுகிறது

கட்டைவிரல் ஒன்று ........


கற்றுத்தர மறுத்த குருவின் தேவையை

நிறைவேற்றிய மகிழ்ச்சியில் திளைக்கிறான்

விரலை வெட்டிக் கொடுத்தவன்...


தானே கற்றறிந்த மாணவனின் கலையை

வேரறுத்த களிப்பில் மிதக்கிறார்

விரலைக் கேட்டுப் பெற்றவர்...


குருதட்சணை கொடுப்பதற்காக

அந்தத் துரோணரினரின் கட்டைவிரலுக்குக்

குறிவைத்துக் காத்திருக்கிறேன்.....


ஏகலைவனை குருவாகக் கொண்டு

வித்தை பயின்று கொண்டிருக்கும்

நான்........[நன்றி :- கரு: யாழி]