Thursday, September 23, 2010

அடக் கடவுளே .........!


கோடிகளை விழுங்கி
கோபுரங்களாய் எழும்பி
அங்கங்கள் அத்தனையும்
தங்கத்தால் இழைத்து
பரலோகத்தைப்போல்ப் பரந்த
பிரமாண்ட பிரகாரங்களுடன்
பரபரப்பாய் இருக்கிறது கோவில்.

பக்தியின் உச்சத்தில்
சத்தமில்லாமல் அமர்ந்திருக்கும்...
சத்தமாய் வேண்டிக்கொண்டு
சுற்றத்தை ஈர்த்துநிற்கும்........
சிக்கலைத் தீர்ப்பதற்கு
சதத்தில்(%) பேரம்பேசும்......
நேர்த்தியாய் உடுத்திய சுத்தமான பக்தர்கள்.....

பட்டாடைகள் பளபளக்க
அணிகலன்கள் தகதகக்க
வருவோருக்கெல்லாம் அருளை
வாரி வாரி வழங்கியபடியே
கற்பக்கிரகத்துள் கடவுள் சிலை......


கருவேல மரத்தின் நிழலில்
கருகிய புதரின் நடுவில்.......
குழந்தைகள் ஒன்றுசேர்ந்து
அழுக்குக் கைகள்கொண்டு
உடைந்த செங்கலையும்
உளுத்த செத்தையையும்
ஒன்றாய் அடுக்கி வைத்து
‘கோவில்’ என்று பெயரிட்ட
குவியலுக்குள் நுழைந்து
தலைக்குக் கைவைத்து
தரையில் படுத்திருக்கிறார்

கடவுள்.....................


[கரு : நன்றி: குதசெ : -சங்கர பாண்டியன்]

.

Wednesday, September 22, 2010

பொய்......பொய் தவிர வேறில்லை.......!


எனது கண்களுக்குள் பார்த்தபடியே
பேசிக்கொண்டே இருக்கிறான்
அவன்........

பொய்...
அத்தனையும் பொய்....
அவன் வாயிலிருந்து வரும்
அத்தனையும் பெரும் பொய்.....

உண்மையைப் போலவே பொய்யையும்
திண்மையாய்ப் பேசுகிறான் அவன்....

எனக்கு எல்லாம் தெரியுமென்பது
அவனுக்கும் தெரியும்தான்

ஆனாலும்......

எப்படிதான் முடிகிறது
இப்படி எல்லாம் பேசுவதற்கு ....

எப்போதுதான் திருந்துவார்கள்
இத்தன்மை கொண்டவர்கள்......

பேசி முடித்துவிட்டான் அவன்
என்முகம் பார்த்து நிற்கிறான்

அவன் நிறுத்தத்தானே
காத்திருந்தேன் நானும்........

ஆவேசமாகத் தொடர்ந்து
பேச ஆரம்பிக்கிறேன்

உண்மையைப் போலவே
ஒரு பொய்யை நானும்.......

.

Monday, September 20, 2010

என்ன்ன்ன்ன்ன்ன்ன்திறன் ..........!


என்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்திறன் :

என்னையும் மதித்து தொடர்பதிவுக்கு அழைத்த நண்பர் சேட்டைக்காரன் அவர்களுக்கு நன்றி. நகைச்சுவை மன்னரின் அழைப்புக்கான பதிலை நான் அவரளவுக்கு இல்லாவிட்டாலும் ஒரளவுக்குத் தந்திருக்கிறேன் .. என நினைக்கிறேன் ...சரியில்லை எனில் மன்னிக்க வேண்டுகிறேன் ..

அனைத்து செயல்களுக்கும் ,விளைவுகளுக்கும் நல்லது ,கெட்டது என்ற இரண்டுமுகம் உண்டு . மூன்றாவது முகமாக நல்லதை மட்டுமே நமக்கு சாதகமாகக் கொள்ளும் முடிவைக் எடுப்போம் . நாளைப் பொழுது நல்லதாகவே விடியும் நமக்கு. நல்லவற்றிலிருந்து நமக்குத் தேவையானவற்றை எடுத்துக்
கொள்ளும் ஒரு தேடல் இது ....

( என் திறன் / நம் திறன் பற்றி எடுத்துச்சொல்ல ’எந்திரன்’ தேவைப்படுகிறார் இங்கு )

•வெண்பா என்பது எளிதென்பதையும் இங்கே சொல்ல முயன்றிருக்கிறேன். கசப்பு மருந்து என ஒதுக்கி வைத்திருப்பதை, இனிப்போடு/எந்திரனோடு கலந்து தரும் முயற்சி இது .. மருந்தின் உண்மை தன்மையை ஒருவராவது அறிந்து கொண்டாலே வெற்றியாகும் எனக்கு அது. ’இனிப்புக்கும்’ என்றும் நன்றியுள்ளவனாய் இருப்பேன் . )

எளிதன்று என்றபிறர் எண்ணத்தை; எல்லாம்
எளிதென்றே எள்ளி எழுது [01]


சில துண்டுச் செய்திகள் :
•இரண்டு வருட திட்டமிட்ட உருவாக்கம்..
தமிழகத்தின் தொழில் நுட்ப அறிவை உலகுக்குக் காட்டப்போகும் படைப்பாக்கம் . இந்தியாவின் ‘அவதார்’ என்ற சிறப்பை பெற்ற படம் . . உலகளாவிய வியாபாரம்..... மிகப் பெரிய வெற்றியை எதிர் நோக்கி இருக்கும் படைப்பு
ஆம் .......

தந்திரத்தை எந்திரத்தால் காலத்தே செய்வார்முன்
மந்திரம்என்(று) ஒன்றும்இல் லை [02]•’பின்நின்று’ நடத்துநராய் வாழ்க்கையைத் துவங்கியவர் அவர். இன்று ஒருதுறையினை ’முன்நின்று’ வழிநடத்திக் கொண்டு இருக்கிறார் . அயராத உழைப்பின் எடுத்துக்காட்டாக இன்று அவர் ........

விசிலடித்து வாழ்ந்தார்; உழைப்பால் உயர்ந்தார்
விசிலடித்து வாழ்த்துகிறோம் நாம் [03]•எதற்கும் இயலாதவர் /எதுவும் இல்லாதவர் என வெளியில்/ ஒருகோடியில் ஒதுக்கிவைக்கப் பட்டவர் அவர் . இன்று அவரின் கடைக்கண் பார்வைக்காக வரும்வழியில் ஒதுங்கி நிற்பவர்கள் பலகோடி

கறுப்பைப் பழிப்போரும் வாய்பிளப்பார் தன்னால்;
சிறப்பே இதுதான் அவர்க்கு [04]


•எந்திரம்போல உழைப்பார். எல்லாமுமாய் இருப்பார்
ஆனாலும்... ’தான்’ என்ற அகம் தன்னுள் இல்லாத சிகரம் அவர் .

எந்திரன் போல இருப்பாராம்; தன்திறன்மேல்
சிந்தனை இல்லா(த) அவர் [05]•ஒருவார்த்தை சொன்னாலும் , உலகம் ...ஓராயிரம் பொருள் கொள்ளும், புண்படுத்திக் கொல்லும் , இல்லாததை சொல்லும் . இருந்தாலும் எதையும் எளிதெனக் கொள்ளும் இனிமையாளர் அவர்...

புலியைப்போல் பாய்வார்; புழுதியையும் ஆய்வார்;
எளிதின் சிகரம் அவர் [06]


•துறைசார்ந்த உலகில் அவரது வாக்கே வேதவாக்கு. இல்லாதவரையும் இருப்பவராக்குவார். தயாரிப்பாளர் ஆக்குவார். தள்ளி நின்று ரசிப்பார் . தயாளன் அவர்

ஒருமுறை தான்சொல்வார்; நூறாக்கி வெல்வார்;
மறுபார்வை இல்லை அவர்க்கு [07]•அவரது அபிமானிகளை ஒரு பிரிவுக்குள் அடைப்பதென்பது இயலாத ஒன்று .. ஆறிலிருந்து அறுபதுவரை அத்தனை வயது வரம்பிலும் அவரது ஆதரவாளர்கள்......இதுதான் அவரது பலம்...

ஆறும் அறுபதும் மாற்றமெதும் இல்லாமல்
சொந்தமாம் என்றும் அவர்க்கு [08]

•தலையின் மேலிருப்பதை இழந்தாலும் , தன்னை தனது
உயிராகத் தலைக்குள் வைத்திருக்கும் கோடான கோடி ரசிகர்களைக் கொண்ட.... தலைசிறந்த கலைஞர் அவர்

மயிர்போனால் என்ன ; உயிர்தரும் தொண்டர்
உயர்சொத்தாம் என்றும் அவர்க்கு [09]


•இலக்கினை முடிவு செய்து பயணத்தைத் தொடங்கினால்
இலகுவாகும் வெற்றி என்பதை உலகுக்கு உணர்த்தியவர் அவர்.

எந்திரனின் முந்தைய வாழ்க்கை; உணர்த்தியது
என்திறன் பற்றி எனக்கு [10](தேவையா இதெல்லாம் ?? என்ற கேள்வி தோன்றும் உள்ளங்களுக்கு............
உழைப்பால் உயர்ந்த யாரையும் ,வழிகாட்டும் உதாரணமாகக் கொள்ளலாம் என்பதில் தவறில்லை என்றே நினைக்கிறேன்...)

தொடரைத்தொடர நண்பர் தேவாவையும் , அக்கா அஷிதாவையும் , தம்பி அச்சுவையும் , மரபுக்கவி ப்ரசாத்தையும் நகைச்சுவை மன்னரின் சார்பில் அழைக்கிறேன் .


.

Wednesday, September 15, 2010

தொடக்கம் : (வெண்பாவும்,என்பாவும்)


தொடக்கம் : ( வெண்பா / நேரிசை)

மரத்தினடி நோக்கிவரும் ஆதாம் ; உருகி

வரவுக்குக் காத்திருக்கும் ஏவாள் - அருகில்

உருவில் குறைந்ததோர் ஆப்பிள்; தொடங்க

மரத்தின்மேல் காத்திருக்கும் பாம்பு

தொடக்கம் : [என்பா / க(தை)விதை ]


மரத்தின்மேல் வலைவிரித்த பாம்பு;
மரநிழலில் காத்திருக்கிறாள் ஏவாள்; அருகில்
கடிக்கப்பட்ட ஒரு கனி ; தொலைவில்............
வந்து கொண்டிருக்கிறான் ஆதாம் !


( நன்றி:கரு : யாழி )

Tuesday, September 14, 2010

அறிந்துகொள்வோம் இவர்களையும் ....!


குறுந்தகவல் இதழ்கள் :

12.09.10 . திருச்சி ; ஒரு சந்திப்பு ; 70பேர் சந்தித்துக் கொண்ட ஒரு சிறிய சந்திப்பு. ஆனால் கலைத் தமிழுலகம் அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமானதொரு சந்திப்பு. குறுந்தகவல் (SMS) பறிமாற்றத்தை அடிப்படையாகக் கொண்ட கலைஞர்கள் சந்தித்துக் கொண்ட ஒரு முப்பெரும் விழா . எளியோரின் இணையமாக மாறி இருக்கும் அலைபேசித் தகவல் பரிமாற்றத்தின் இன்னுமொரு பரிணாம வளர்ச்சியின் சாட்சியான சந்திப்பு இது . இதற்குப் பின்புலமாக மறைவில் இருக்கும் சக்திகளை வெளிக்காட்டும் பதிவு இது .SMS குறுந்தகவல் செய்தி . இன்றைய தொலைத் தொடபில் மிக முக்கியமான ஒன்று . வியாபார, விளம்பர நிறுவனங்கள் இதனைத் தவறாகப் பயன்படுத்தி தொல்லைத் தொடர்பாக மாற்றிக் கொண்டிருக்கும் வேளையில், ஒரு இனிய , ஊக்கமளிக்கும் செய்தியும் இதில் உண்டு

.ஆம்

குறுந்தகவல் இதழ்கள் ....20 க்கும் மேற்பட்ட குறுந்தகவல் இதழ்கள்.

தினம் ஒரு படைப்பாளியின் படைப்பினை ,கவிதையினை ,கருத்தினை தமிழகம் முழுவதும் குறைந்தது 10000 வாசகர்களிடம் குறுந்தகவல் மூலமாக கொண்டு சேர்க்கின்றன இவைகள் .கண்காணாத இடத்தில் தனக்குள் புழுங்கிக் கொண்டிருக்கும் படைப்பாளிகளை , அவர்களின் படைப்புகளை வெளியிட்டு ,

வெளி உலகுக்குக் காட்டி , அவர்களுக்கு ஊக்கம் ஊட்டி , புதிய கவிஞர்கள் , கலைஞர்கள் ,படைப்பாளிகளை உருவாக்கி வருகின்றன் .முன்பெல்லாம்

படைப்புகளை உருவாக்கிவிட்டு ,

பத்திரிக்கைகளுக்கு அனுப்பிவிட்டு ,

வழிமேல் விழி வைத்துக் காத்திருந்த கவிஞர்கள், கலைஞர்கள் ஏராளம் ..பொதுப் பார்வைக்கு சமர்பிக்கும் முறையறியாமல் ,

புதைந்து போன புதையல்களோ ஏராளம் , ஏராளம் ...........இன்று நிலைமை மாற்றம் வந்திருக்கிறது . மாற்றாக ஒரு புதிய தொழில் நுட்பம் துணைக்கு வந்திருக்கிறது

தொட்டுவிடும் தூரத்தில் தொடுவானம் போல் ,

கணினி , இணையத்தளம் தொட முடியாதவர்களின் முன்னால்

விரல் நுனியில் ஒரு இலவசப் பதிவுலகம் . அலைபேசியால் இணைக்கும் அற்புத உலகம் அது .முக்கிய செய்தி ; இந்தச் செய்தி பரிமாற்றம் ஒரு இலவசச் சேவை . இவை இணைய கூகுள் ,யாகூ குழுமங்கள் போன்ற இலவசச் சேவை .. அனால் அவைகளைப்போல பலம் படைத்த பின்புலம் கொண்டவைகள் அல்ல. ஆம். ஒவ்வொரு இதழாசிரியரும் தனிமனிதனாய் நின்று தமிழுக்கு ஆற்றும் சேவை இது .


இந்த இதழ்களைத் தலைமை ஏற்று நடத்திக் கொண்டிருப்பவர்கள் எல்லாம் வாழ்கையில் வசதியான இடத்தில் இல்லை . தானிருக்கும் இடத்தையே தக்கவைத்துக்கொள்ள போராடிக் கொண்டிருக்கும் பொருளாதார பலமில்லாத நடுத்தரத்தில் ஊசலாடிக்கொண்டிருக்கும் சராசரியானவர்கள்தான் . தனது தினக் கூலியில் இருந்து , மாத வருமானத்தில் இருந்து , பொருள் ஒதுக்கி இந்தச் சேவையைத் தொடர்பவர்கள் இவர்கள். பணிச் சுமைக்கு இடையிலும் , குடும்பச் சூழலுக்கு நடுவிலும், பொருளாதாரச் சிக்கல்களுக்கு ஊடாகவும் கடமையாக நினைத்து கருத்தாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் செயல் வீரர்கள் இவர்கள் . எந்தவிதப் பலனும் எதிர்பாராமல் இவர்கள் ஒவ்வொருவரும் பிற முகமறியாத கலைஞர்களின் படைப்புகளை 500லிருந்து 1000 பேர்வரையிலும் கொண்டு சேர்க்கிறார்கள் குறுஞ்செய்திகள் மூலமாக .’அப்படி என்னய்யா வந்துச்சு இவங்களுக்கு ?

பேசாம இருக்க வேண்டியதுதானே ??

எதுக்கு தேவையில்லாம இழுக்கணும் /சுமக்கணும் இதை ???’பலகேள்விகள் தோன்றலாம் மனதுக்குள் ....!அதற்கான விடையை என்னிலிருந்தே ஆரம்பிக்கிறேன் .தொடர்ந்து வருவது தற்பெருமை இல்லை . உண்மையை உலகுக்குச் சொல்லும் வேளையில் ( நெல்லும் நீர்பாய்ச்சும் வேளையில், சரிவிலுள்ள புல்லுக்கும் சிறிது கசிவது போல ) வெளிப்படும் செய்தி இதுநான் பிறந்த இடம் இது . நான் ஒரு கட்டுமானப் பொறியாளர் .ஆங்கிலவழியில் கல்வி கற்றவன் . கல்லையும் , மண்ணையும் , கலவையையும் , ,கட்டுமானத்தையும் தவிர எதுவும் தெரியாதவன் நான். 2008வரையில் பத்திரிக்கைகள் வாசிக்கும் வழக்கம் கூட இல்லாதவன் நான். விளையாட்டாக நான் எழுதிய ஒரு 3வரிகளை திரு.கன்னிக்கோவில் ராஜா அவர்கள் (திருத்தம் செய்து) , அவரது SMS இதழில் நான் எதிர்பார்க்காத வேளையில் வெளியிட்டார் .

நமது படைப்பை கண்முன்னால் பார்க்கும் வேளையில் ’நம்மாலும் முடியும் ‘ என்ற எண்ணத்தை ,

நம்மேலுள்ள தன்நம்பிக்கையை எனக்குள்ளேயே ஆழமாய் விதைத்து விட்டது அந்த குறுந்தகவல் செய்தி

’அட நமக்குள்ளும் ஏதோ ஒன்று இருக்கிறதே !!! , முயன்றால் நம்மாலும் முடியும் போல !!!’ என்று என்னையும் திசை திருப்பி விட்டது அது .இரண்டே வருடங்கள்குறுஞ்செய்தி இதழில் அறிமுகமாகி , இணையத்தில் இணைந்து ,( நன்றி : அய்யா . கிரிஜா மணாளன் அவர்களுக்கு )

இன்று எனக்கென வலைப்பூக்களை உருவாக்கி இருக்கிறேன் , ஒருங்குறித் தமிழில் ஒருவிரல் தட்டச்சில் ஓரளவு வேகம் காட்டுகிறேன் , கவிதைகளாய் கொடுக்கிறேன் , வெண்பாவாய் வடிக்கிறேன் , குறும்பாக்கள் தொடுக்கிறேன் , திருக்குறளுக்கு விளக்கமாக , குறளுரையாக 1330 புதியகுறள்களை வெண்பாவில் அமைத்திருக்கிறேன் .(எனக்குத் தெரிந்த அளவில்)குறுஞ்செய்தி இதழ்களின் விளைவுக்கு நானே நேரடிச் சான்று’.

எங்கோ ஆரம்பித்து, எப்படியோ சென்று கொண்டிருந்தவன் , இன்று இங்கே வந்து நிற்கிறேன் .

( இது நல்லதா , கெட்டதான்னு நீங்கதான் சொல்லணும் :)மிகச்சிறந்த எழுத்தாளர்கள் இங்கிருந்து உருவாகி இருக்கிறார்கள் . , உருவாகிக் கொண்டிருக்கிறார்கள் .....

தமிழகத்தில் சிறப்பாக இயங்கிக்கொண்டிருக்கும்

குறுந்தகவல் இதழ்கள் : ஆசிரியர்கள்கேகேஆர்-ன் SMS ஹைக்கூ: கன்னிக்கோவில்ராஜா,சென்னை[9841236965]

தேசிங்குராஜா குறுஞ்செய்தி இதழ்: இயற்கை சிவம்,விழுப்புரம்
[9941116068]

கேகேஐ குறுஞ்செய்தி இதழ் : கொள்ளிடம் காமராஜ்,திருச்சி

[9894058651]

சுந்தர் குறுஞ்செய்தி இதழ் : அண்ணாமலை,ஆரணி

[9842106170]

மழைத்துளி குறுஞ்செய்தி இதழ் : சத்யா

எண்ணத்தின் வண்ணம் : எம்.எஸ்.பாபு

ஜெயம் குறுஞ்செய்தி இதழ் : ஜெயக் குமார், அந்தியூர்

[9842163703]

வாலிதாசன் குறுஞ்செய்தி இதழ் :பாரதி ராஜா,பனையடி ஏந்தல்

[9894887705]

சம்பூரணம் குறுஞ்செய்தி இதழ் : தமிழாளி,அழகாபுரம்

[8144260620]

ராகா குறுஞ்செய்தி இதழ் : ராஜீவ் காந்தி,செய்யாறு

[9786098440]

செந்தமிழ் குறுஞ்செய்தி இதழ் : ராஜீவ் காந்தி,செய்யாறு

[9688429731]

சித்தன் குறுஞ்செய்தி இதழ் : நித்யானந்தம்,மாமண்டூர்

[9095942789]

தெனாலி குறுஞ்செய்தி இதழ் :கலைவாணி

உதயம் குறுஞ்செய்தி இதழ் : செல்லதுரை ,ஓசூர்

[9578129090]

சிற்பி குறுஞ்செய்தி இதழ் : ரம்யா,மாமண்டூர்

லிங்கம் குறுஞ்செய்தி இதழ் : ராமலிங்கம்,சிறுவந்தாடு

[9976227703]

யவசம் குறுஞ்செய்தி இதழ் : ஜானி அந்தோணிராஜ்,உறையூர்

[9842163703]

ஜாலி கவிக்கடல் : ஹயத்பாஷா , சென்னை

[9952071178]

தெரியுமா ? :ப்ராங்ளின் குமார்

[9843921471]

மற்றும்

யாழிசை : யாழி ,கோவை

[9976350636]
வேரின்றி மண்ணிலே நிற்பதாய் எண்ணியே
பாரமாய் எண்ணாதீர் பாரோரே - யாருமெதிர்
பாராத நேரமதில் பாரதிரப் பாய்வோம்;யாம்
பாரதியின் அக்கினிக் குஞ்சு ..


இந்த விதையை என்னுள் வித்தவர்கள் இவர்கள்


புதிய படைப்பாளிகளை உருவாக்கும்

இவர்களின் உன்னத உள்ளத்தை உணர்ந்து கொள்வோம் !

இவர்களின் தன்னலமில்லா உழைப்பு சிறக்க வாழ்த்துவோம் !!


சந்திப்பில் கலந்துகொண்டவர்களில் ஒரு பகுதி :


(சரஸ்வதி பஞ்சு (உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கம் , திருச்சி தலைமை) , கிரிஜா மணாளன், சேதுமாதவன் , சி.ம.சரவணன், ஆங்கரை பைரவி, நடராஜன்,கொள்ளிடம் காமராஜ்,முத்து நிலவன் ,பிச்சை முஹைதீன்,தஞ்சை மனோகர்,பேராசிரியர்.சந்திரா பெருமாள்,பாபு, தனலெட்சுமி பாஸ்கரன்,சேலம் சுமதி,ஜோதி லட்சுமி, சோமசுந்தரம்,ஸ்ரீகாந்த்(ஆல் இந்தியா ரேடியோ),யாழி , நாணல்காடான்,ப்ராங்ளின்குமார்,விநாயக மூர்த்தி, லெட்சுமணன்,மு.வேலா,அய்யாவாடி சத்யா,ஜெயக்குமார்,கீரைத்தமிழன்,ராஜீவ்காந்தி,சந்திரசேகரன்,சார்லஸ்,உதயகுமாரன் , யோகானந்தன், குமாரப்பாளையம் துரை, மற்றும் பெயர் அறியமுடியாத சகோதரர்கள் பலர் ...

வழக்கம்போல நான் தாமதம் :( . கோவையில் ஒரு விழாவில் கலந்துகொண்டு 11 மணிக்குக் கிளம்பி 1.45க்குத்தான் போய் சேர்ந்தேன் . காலை நிகழ்ச்சி முடிந்து பலர் கிளம்பி இருந்தனர் )வாழ்க உறவுகள் !

--
என்றும் அன்புடன் -- துரை --

வெண்பாக்கள் : ‘மரபுக் கனவுகள்’ : http://marabukkanavukal.blogspot.com/
கவிதைகள்: 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.com
ஹைகூ : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவுகள் : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதைகள் : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம் : 'தமிழ்த் தென்றல்' :http://groups.google.co.in/group/thamizhthendral

Wednesday, September 8, 2010

பதிவுகள்(2) : வாழும் வழிகாட்டி
14.04. 2000 :

தாதன்குளம் , தூத்துக்குடி மாவட்டம் . ஒரு பள்ளிக் கூடம கட்டும்வேலை சம்பந்தமாக எனக்கு ஒரு அழைப்பு . 13மாவட்டங்களில், 100க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களின் தலைவர் , தமிழகத்தின் குறிப்பிடத்தக்கப் பெரியவர்களுள் ஒருவரை சந்திக்கப் போகிறோம் என்ற எண்ணமே பெரும் மகிழ்வைத் தந்தது . ஒரு கார்ப்பொரேட் அலுவலகம் , ரிசப்சனிஸ்ட் , நுனி நாக்கு ஆங்கிலத்தில் கேள்வி பதில்கள் என சில எதிர்பார்ப்புகள் / ஒத்திகைகளுடன் கிளம்பிச் சென்றேன் .

தோட்டத்து பண்ணைவீட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஒருசிலரைத் தவிர நான் எதிர்பார்த்த பரபரப்பு ஏதுமில்லை . கதர்துணியில் தைக்கப்பட்ட பனியன் , பழைய நைந்துபோன தேங்காய்ப்பூத்துண்டுடன் ஒரு பெரியவர் , வந்திருந்த யாரையோ கார் கதவைத் திறந்துவிட்டு , வழியனுப்பி வைத்துக் கொண்டிருந்தார்.

வாசலில் நின்றுகொண்டிருந்தேன் . காத்திருந்த வேளையில் மெலிதான பதட்டம் . கைகள் பக்கதிலுள்ள வேப்பமரத்தின் இலைகள் ஒவ்வொன்றாக கிள்ளிக் கொண்டிருந்தது .

சிறிது அமைதி . பின்னாலிருந்து எனது தலையில் செல்லமாக ஒரு குட்டு விழுந்தது . அதே பெரியவர் பின்னால் நின்றிருந்தார் .

’’அந்த மரம் உங்களை என்ன பண்ணுச்சு கண்ணு ’’

தீர்க்கமாக எனது கண்களுக்குள் பார்த்துவிட்டு

“தம்பிக்கு சாப்பிடக் கொடுங்க”


எனச் சொல்லிவிட்டு உள் நோக்கி சென்றுவிட்டார் .மரம்தானே , இலைதானே என சாதாரணமாக நினைத்துக் கொண்டிருந்த எனக்கு அந்தக் கேள்வி சம்மட்டி அடியாய் விழுந்தது . ஏதோ தவறாக செய்து கொண்டிருக்கிறேன் என்பது மட்டும் புரியத் தொடங்கியது அந்த நொடியில் .

உள்ளே சென்றேன் . வெளிமுற்றத்தில் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தார் அவர் .

‘எங்கே போனாலும் இவருதான் இருக்காரு ,யாராய் இருக்கும் ?’


மேற்கொண்டு விசாரிக்க அருகில் யாரும் இல்லை . மெதுவாக அவரிடமே விசாரிக்க முடிவு செய்தேன் .

”இங்கே சேர்மன்.குப்புசாமி சார் அவர்களை பார்க்கணும்”


”சொல்லுங்க கண்ணு , நான் தான் குப்பன்”

இடி இறங்கியது போல உணர்ந்தேன் . எனது கணிப்புகள் / எதிர்பார்ப்புகள் எல்லாம் குலைந்து நொடியில் பாலையில் ஒருபிடி மண்ணைப்போல என்னை உணர்ந்தேன் .

இந்த அளவுக்கு எளிமையாய் நான் இதுவரையில் யாரையும் சந்தித்ததில்லை .அப்போதைக்கு இருசக்கர வாகனத்திலிருந்து நான்கு சக்கரத்திற்கு மாறி இருந்தைதையே நான் உலக சாதனைபோல எண்ணியிருந்தது அப்போதுதான் எனக்கு உறைத்தது . அய்யாவின் சந்திப்பு வாழ்க்கையில் புதிய மாற்றத்தை எனக்குள் உரைத்தது .
எனக்கான போதிமரம் அங்கே இருந்தது .

நான் வந்து சேர்ந்த இடம் பற்றி தெரியத் தொடங்கியது எனக்கு. உழைப்பின் பொருள் புரிய ஆரம்பித்தது எனக்கும் . புதியதாய் ஒரு உலகம் விரிய ஆரம்பித்தது எனக்குள்.

அவர்
ஆர்.வி.எஸ்.கல்வி அறக்கட்டளையின் தலைவர் .
திரு.கே.வி. குப்புசாமி அய்யா .அவர்கள்
. 69 வயதிலும் அரை நொடி ஓயாமல் அனைத்து இடங்களிலும் சுழன்று வருகிறார் . கல்வித்துறையில் மிகப் பெரிய சாதனையாளர் . இங்கே அவருக்குள் மறைந்திருக்கும் விவசாயியையும் , மனித நேயத்தையும் வெளியுலகப் பார்வைக்கு எடுத்து வைப்பதே கட்டுரையின் முதன்மை நோக்கம் .

திட்டங்களை நடைமுறைப் படுத்துவதில் புதிய செயல் முறைகளுக்குச் சொந்தக்காரர் அவர். திட்டங்களை விளையாட்டாய் ஆரம்பித்து ,வித்தியாசமாய்த் தொடர்ந்து , விதிமுறைகளைக் கடந்து , விசுவரூபமாக்கிக் காட்டுவார்.

( ஏடுத்துக் காட்டாக
: மாலை ஆறுமணி . செம்மண்சரல் அடித்து நிரப்பப்பட்ட குழந்தைகளுக்கான பள்ளி மைதானத்தில் வந்து அமர்ந்தார் . மெதுவாக சில கற்கலைப் பொறுக்க ஆரம்பித்தார் . நாங்களும் தொடர்ந்தோம் . அந்த வழி வந்தவர்களும் தொடர்ந்தார்கள் .மூன்றே நாட்கள் .. விளையாட்டாக அந்த மைதானமே குழந்தைகள விழுந்து விளையாடும் அளவுக்கு சுத்தமாகி இருந்தது )

2010 :பத்தாண்டுகளில் மழைமறைவுப் பிரதேசங்களாக இருந்த , மேய்ச்சல் நிலங்களாக , காலடித்தடமே படாத வறண்ட இடங்களில் மழையின் நேசம் , மண்வாசம் வீசத்துவங்கி இருக்கிறது

தரிசாகக் கிடந்த இடங்களை சோலைகளாக்கி , மரங்களுக்கு நடுவில் மழை நீரை சேகரிக்க ஒரு குளம் வெட்டி , வறண்ட் பூமிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரவைத்து , தன்னை சுற்றியுள்ள விவசாயிகளின் வாழ்வு உயரவும் வழி செய்திருக்கிறார் .

ஒரு தனிமனித முயற்சியில் ,பத்தாண்டுகளில் இது சாத்தியமென்றால் , ஆள்வோரும் ,அதிகாரவர்க்கமும் அய்யாவின் பாதையில் தொடர மனம்வைத்தாலே போதும் ., தமிழகம் சொர்க்கமாகும் காலம் வெகுதொலைவில் இருக்காது .


அசோகர் மரம் நட்டினார் ,கரிகாலன் குளம் வெட்டினார் என்று பள்ளிப்பாடங்களில் வரலாறாகப் படித்தை நேரில் காணும் வாய்ப்பும் , அந்நிகழ்வில் பங்குபெறும் பாக்கியமும் பெற்றதே எனது பிறவிப் பயனாகும் .

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் பரந்து விரிந்த மிகப் பெரியக் கூட்டுக் குடும்பம் இவருடையதுதான் என்று சொன்னால் அது மிகையாகாது . குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை 3 லட்சங்களுக்கும் மேல் . ஆம் அவர் தனது குழந்தைகளாக பராமரித்து வரும் மரங்களின் எண்ணிக்கை இது . ஒவ்வொரு மரத்திற்கும் தனித்தனி கவனிப்பு முறைகள் , வளர்ச்சிக் குறிப்புகள் , சொட்டு நீர்ப்பாசன வசதிகள் , இயற்கை உரங்கள் .

எங்கோ ஒரிடத்தில் ஒருமரத்தின் கிளை முறிந்தாலும் உடனடியாக செய்தி அவரை வந்து சேரும் அளவுக்கு மிகப்பெரிய அமைப்பை ஏற்படுத்தி வைத்திருக்கிறார். மரங்களின் மேல் பாசம் கொண்ட ஒரு தனி மனிதச் சாதனையாகும் இது .


அவருக்குச் சொந்தமான கல்வி நிறுவனங்களில் பல கட்டிடங்கள் நேர்கோட்டில் இல்லாமல் சில இடங்களில் விலக்கிக் கட்டப் பட்டிருக்கும் . சிறிது கூர்ந்து கவனித்தால்தான் தெரியும் .அது பொறியாள்ர்கள் தவறல்ல என்பதும் ,அவை மரங்களுக்காக தனது நேர்த்தியை விட்டுக்கொடுத்து ஒதுக்கிக் கட்டப்பட்டுள்ளன என்பதும் .இங்கே கட்டிடமே முதன்மை என்றாலும் , ஏதாவது ஒரு மரத்தின் ஒரு கிளை கூட இதனால் ஊனமாக அவர் ஒருபோதும் ஒத்துக்கொள்ள் மாட்டார்

மரம் வளர்த்து ,மண்ணுயிர் போற்றி , வரும்காலம் காக்கும் மாமனிதரின் அருகில் குடியிருக்க ஆண்டவனும் விரும்புவார் . விரும்புகிறார் .

ஆம் .... அய்யா இருக்கும் கோவை , சூலூரில் அவரது அயராத உழைப்பில் ,தமிழகத்தின் ஆறுபடை முருகனும், ஆந்திரத்தில் இருந்து பூதேவி, ஸ்ரீதேவியுடன் திருப்பதியும்
எற்கனவே குடிகொண்டு விட்டார்கள் .

12.09.10ல் கேரளத்தில் இருந்து பகவதி அம்மனும் குடியேறுகிறார்

உழைப்புக்கு ஒர் உண்மையான எடுத்துக்காட்டு .
உலகைக் காக்கும் மரம் வளர்ப்புக்கு ஒரு வாழும் வழிகாட்டி .

பலன் எதிர்பாராமல் பாரம் சுமந்து கொண்டிருக்கிறார். அதையும் கடமையாய் செய்து கொண்டிருக்கிறார் .

அவரது அயராத உழைப்பினை உணர்ந்து கொண்டுள்ளோம் எனபதை அவருக்குத் தெரியப் படுத்துவோம் . உற்சாகம் அளிப்போம் . [அய்யாவின் அலைபேசி எண் : 9443169333 , 9842288333]

அய்யா அவர்களின் வழி தொடர்வோம். வருங்காலம் காப்போம் !


எனக்கு முடிந்த அளவில்
அய்யாவுக்கு ஓரு குறள் அதிகாரம் :


உலகத்தைக் காக்க மரம்வளர்ப்போர் சுற்றி
உலவ விரும்பும் இறை...........................[01]

மரம்வளர்த்து மண்ணுயிர் காப்போர் அருகில்
குடியிருக்க எண்ணும் இறை.......................[02]

இரங்கும் மனம்கொண்டு இல்லாதோர் போற்று;
இறங்கும் உனக்குள் இறை........................[03]

செந்தமிழால் வாழ்த்துவார்; வந்தாரைப் போற்றுவார்
கந்தனே சாமி அவர்க்கு...........................[04]


ஐயன் அருகிருந்தால் ஐயம் தெளியும்;
வாய்க்கும் சிறந்தநல் வாழ்வு......................[05]

எட்டு திசையும் எடுத்துரைப்போம்; அய்யனென்றால்
நட்பென்றும் ஓர்பொருள் உண்டு...................[06]

எங்கிருந்து வந்தாலும் நல்அபயம் வாய்த்திடும்;
கொங்கில் கிடைத்திடும் வாழ்வு....................[07]

எதுவும் நிலையில்லை என்ப(து) உணர்ந்தார்க்(கு)
எதுவும் மலையில்லை இங்கு.....................[08]

வாழ்த்த வயதில்லை; வானுயர் அய்யாவின்
வாழ்க்கைத் தடம்தொடர் வோம்...................[09]

காணும் கனவெல்லாம் மெய்ப்படும்; மொத்தமாய்
வானமும் நம்வசப்ப டும்.........................[10]


என்றும் அன்புடன் -- துரை --

வெண்பாக்கள் : ‘மரபுக் கனவுகள்’ : http://marabukkanavukal.blogspot.com/
கவிதைகள்: 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.com
ஹைகூ : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவுகள் : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதைகள் : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம் : 'தமிழ்த் தென்றல்' :http://groups.google.co.in/group/thamizhthendral

Tuesday, September 7, 2010

வீழ்வேன் என்று நினைத்தாயோ ?


இருள் சூழும் வேளையில்
குளிர் அணைக்கும் மாலையில்
வெம்மை படர்கிறது எனக்கு மட்டும்

ம்ம்ம்ம்.........

இங்கே மேடையில்
எரியூட்டப்படுகிறது எனது உடல்

நான் என்ற ’அது’....
நாளைக் காலையில்
சுடுகாட்டின் கூரையில் படர்ந்த
கரியின் கறையினைத் தவிர்த்து
கரைந்தே போயிருக்கும் உதிர்ந்து

ஆனாலும் ...
அவ்வளவு எளிதில் நான்
”வீழ்வேன் என்று நினைத்தாயோ ?”

இருந்த விதியைப்
புறந்தள்ளுவேன் நான்..
ஒரு புதிய விதியை
உருவாக்குவேன் நான்..

ஒன்றை இழந்து ,
இரண்டைக் கொடுத்து ,
இரண்டின் அழிவைத் தடுத்து
இரண்டோடு மூன்றாகித் தொடரப்போகிறேன்

அங்கே தயாராக
பதப்படுத்தப்பட்ட பேழையுள்
பாந்தமாய் இருக்கிறது என்இதயம்...

குளிரூட்டப்பட்ட குடுவையுள்
குளித்துக் கொண்டிருக்கிறது கண்கள்...

.

Saturday, September 4, 2010

பலி ஆடுகளும், ஆடு களமும்....


இவனிடமிருந்து கிளம்பி
அவன் முகத்தில் அறைகிறது
‘அந்த வார்த்தை’

அதிர்ந்து போகிறான் அவன்
‘ இவ்வளவு கடினமாய்
சொல்லி இருக்கக் கூடாது நீ’

உணர்ந்து கொள்கிறான் இவன்
‘அட ஆமாம். மிகவும்
கெட்ட வார்த்தைதான் அது”

கேட்டவன் சமாதானமாக
ஏவியவன் சமரசமாக
தோள்கோர்த்து கிளம்புகிறார்கள்.

அங்கே
பலியாடாக்கப் பட்ட ‘அந்த’
ஏவப்பட்ட வார்த்தை
அவமானப் பட்டு
காத்திருக்கத் தொடங்குகிறது

எங்கோ.. யாரோ
செய்யப் போகும்
அடுத்த ஏவலுக்கும்
அதைத் தொடரப் போகும்
கடுத்த அவமானத்திற்கும்.......


என்னைப் போலவே ....


.

Thursday, September 2, 2010

மரபில்..... ’மரபில்லா மட்டைப் பந்தாட்டம்...’.


தூசி பறக்கிறது; தூள்மட்டைப் பந்தாட்டம் ;
பாசியுள்ள மண்தரையோ? ’பத்தும்போச்!’ - யோசித்தால்
பேசிவைத்(து) ஆடி இருப்பாரோ!; பேசாமல்
யாசித்துத் திங்கலாம் போ.

.
(வெண்பா/ நேரிசை)