Wednesday, February 25, 2009

ரஹ்மான் உணர்த்தும் உண்மை......Aது யாR ரஹ்மான்?
அவரு என்ன சாதிச்சாரு????
இது உலகில் நேற்று வரை

AR ரஹ்மான்!!!!
அட அவரைத் தெரியாதா!!!
இது உலகின் இன்றைய நிலை

இரண்டு ஆஸ்கார் மூலம்
இருண்ட கிடந்ததுபோல் தோன்றிய
இந்தியக் கலை உலகத்தினை
உலக அரங்கில் உயர்த்திப் பிடித்திருக்கிறான்
உலக நாயகன் எங்கள் ரஹ்மான்

இருங்கள்,கொஞ்சம் இருங்கள்
இதற்கே இப்படி என்றால்
இனியும் தொடர்ந்து பாருங்கள்

விருது கிடைத்த மகிழ்ச்சியில்
விண்ணுக்கும் மண்ணுக்கும் குதிக்காமல்
உண்மை நிலையை கொஞ்சம்
உரசிப் பார்க்கலாம் வாருங்கள்

ரோஜாவின் தமிழா தமிழா_வை விடவா
பம்பாய்_ன் உயிரே உயிரே_யை விடவா
ஸ்லம் டாக்_ன் ஜெய் ஹோ சிறந்தது??????????????

ஒரு அந்நிய நாட்டுப் படத்தின் மூலமே
ஒரு ஆந்நிய மொழிப் படத்தின் மூலமே
ஒரு அற்புதக் கலைஞன் அவன்
ஒருவழியாய் அடையாளம் காணப்பட்டிருக்கிறான்

ஏன் இந்த அவல நிலை??
என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் நம்மவர்கள்???
ஒரு இந்தியப் படைப்பாளியாய்
ஒரு இந்தியக் கலைஞனாய்
ஆஸ்கார் களத்தில் தடம் பதிக்க
ஆவன செய்ய முடியாதா????

இங்கே வழி நடத்த ஆள் இல்லையா?
இல்லை வழிதான் தெரியவில்லையா??
இல்லை வழியாரும் தரவில்லயா???

தாமதமான அங்கீகாரம் என்றுமே
மறுக்கப்பட்ட நீதிக்கு சமமல்லவா!
சரியாக மேலே உள்ளவர்கள் வழிநடத்தி இருந்தால்
சாதித்திருப்பார்களே நம்மவர்களும்
சரிக்கு சரியாய்! சாரி சாரியாய்!!

உண்மையை உணர்ந்தால்
உலகமே நம் காலடியில்!

Friday, February 20, 2009

மந்திரவாதி நான்.........


நான்...........

மந்திரம் தந்திரம் அறிந்தவன்
மனோவசியம் தெரிந்தவன்
மாயாஜாலம் புரிந்தவன்

அரைநொடியில் ஆயிரம் மைல் நடப்பேன்
ஒரேநொடியில் முழுக் கண்டமும் கடப்பேன்
அதேநொடியில் உங்கள் அருகிலும் இருப்பேன்

சோதித்துப் பார்க்கிறீர்களா என்னை?
சந்திக்கத் தயாராகுங்கள் உண்மையை!!!

நீங்கள் இப்போது
எங்கே இருந்தாலும்
எனக்குக் கவலை இல்லை

பக்கத்தில் இருந்தால்
பத்து மைல் தூரம்
பாக்தாத்தில் இருந்தால்
பலஆயிரம் மைல் தூரம்
அமெரிக்காவில் இருந்தால்
ஆயிரம் ஆயிரம் மைல் தூரம்

இதோ கடந்து விட்டேன்

இதைப் படித்துக்கொண்டிருக்கும்
இந்த நேரம் இங்கிருக்கும் நான்
உங்களின் கண் வழி நுழைந்து
உங்களுக்குள் தான் இருக்கிறேன்

நேரம் தின்று விட்டேன்
தூரம் கொன்று விட்டேன்
கண் இமைக்கும் நேரத்திற்குள்
கூடுவிட்டு கூடு பாய்ந்து விட்டேன்

உண்மையா இல்லையா ?
உள்ளபடி கூறுங்கள்!!
உங்களின் பதிலுக்காக

நான்........

Tuesday, February 17, 2009

சதியை மதியால்.....


என்னோட மவராணியே
என்ன மாதிரியான ஒலகமிதுன்னு
ஒரு மண்ணும் வெளங்கலியே

என்னையும் ஒன்னையும்
ஒன்னுபோலப் பாக்கணுமுன்னு
ஒட்டுமொத்தமா கேக்கிறானுவளே

சேத்துப் பாத்தா எப்படியும்
சத்தமா எதுப்பானுவன்னு
எதிர்பாத்து இருந்தா இப்படி
ஏங்கிப்போயி கெடக்கிறானுவளே

சதி வேலயா இருக்குமோ?

சாதி சரியில்லன்னு சொல்லி
சங்கப் பிடிச்சிருவாங்களோ?
ஒன்னுபோல பாத்த பின்னால
ஒதுக்கிப் பிரிச்சிருவாங்களோ?

என்ன நடந்தாலும் சரிதான்னு
எதுக்கும் துணிஞ்சிட்டேன் மக்கா

முள்ள முள்ளால தானே எடுக்கணும்
சதிய மதியால தானே வெல்லணும்

சரி !

இங்கேயே பாக்கணுமா ?
இப்போதே பாக்கணுமா ??
பக்கத்துல வந்துக்கோங்க !
உத்து உத்துப் பாத்துக்கோங்க !!
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
N1

Monday, February 16, 2009

எங்கே ஆரம்பமானது...?


"கம்பங்கூழும் நீச்ச தண்ணியும்
கஞ்சிச் சோறும் கடிக்க மிளகாயும்
கேப்பை களியும் சோள தோசையும்
கருவாடோடு முந்தாநாளு கூட்டிவச்ச
கறிக் குழம்பும் கொடிக் கறியும்
சகட்டுமேனிக்கு சாப்பிட்ட தாத்தா

நூறுவயசத் தாண்டிய பின்னாலும்
மருந்துக்குக் கூட மருந்து வாங்க
மருத்துவமனை வாசல மிதிச்சதில்லை
மலை போல இன்னும் இருக்கிறார்"


குக்கர் சாதமும் பீசா ரொட்டியும்
உடனடிக் குழம்பும் தடாலடி உணவும்
சத்து மாவும் சக்தியூட்டும் பானமும்
திட்டமிட்டு தினமும் சாப்பிடும் அப்பா

மறந்துபோய் நூறுநாள் தாண்டியும்
மருந்து வாங்க மருத்துவம் பார்க்க
மருத்துவமனை வாசல் மிதிக்காவிட்டால்
தடுமாறித் திணறிப்போய் விடுகிறார்

"சாதாரணமாய் சாப்பிட்ட தாத்தா நல்லா
சம்முன்னுதானே இருக்காரு
கணக்குப் பண்ணி சாப்பிடும் அப்பா ஏன்
கசங்கிப் போயி கிடக்காரு"


தவறு எங்கே நிகழ்ந்தது?
தடம் எப்போது மாறியது?
ஆரம்ப புள்ளியாய் அது
ஆரம்பித்த இடம் எது?

Saturday, February 7, 2009

காதலர் தின டைரிக் குறிப்பு...!!


காதலர் தினம்....
காதலின் உண்மை கனம் அறிய
கடவுள் நான் களத்தில் இறங்குகிறேன்

தேர்ந்து எடுத்திருக்கிறேன் அவர்களை
தேரியில் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்

நெடுநாள் காதலர்கள் போலும்
நெருக்கமாய் அமர்ந்து இருந்தாலும்
இடைவெளி அதிகமாகவே தெரிகிறது
இடையே அனல் காற்று வீசுகிறது

கடுமையாய் மோதிக் கொள்கிறார்கள்
கடுஞ்சொல் பறிமாறிக் கொள்கிறார்கள்
திசைக்கு ஒருவராய் திரும்பி
தடம் மாறிச் சென்றுவிடுகிறார்கள்

இரவு முழுவதும் கவலையில்
இருவரும் ஒருநொடி தூங்கவில்லை
மனதில் தோன்றியதை டைரியில்
மொத்தமாய்க் வடித்து வைக்கிறார்கள்

அடுத்தவர் டைரியைப் படிப்பது
ஆண்டவனே ஆனாலும் குற்றம் தான் !
ஆனாலும் என்னதான் எழுதி இருப்பார்கள்
அறிந்து தானே ஆகவேண்டும் !!

அவளின் டைரிக் குறிப்பு:
ஒருமுறை விட்டுக் கொடுத்து இருக்கலாமோ ?
ஒரே அடியாய் தோற்கடித்து விட்டோமே!

அதற்காக இப்படியா நடந்து கொள்வது!
அவர்களைத் தேடிப் போய் இருக்கிறோம் என்ற
ஆணவம் தானே அவர்களுக்கு!

அமைதியாய் இருந்துவிட்டால்
அடங்கிப் போய்விடுவோம் என்ற
திடமான எண்ணம் தானே அவர்களுக்கு!

இருந்தாலும் கொஞ்சம் நாமும்
அமைதி காத்து இருந்திருக்கலாமோ?
அவனும் காயம் அடைதிருப்பானோ?

தொங்கிப்போன அவன் முகம்
இங்கே கண் முன்னால் விரிகிறதே
இரவெல்லாம் கவலையாய் இருப்பான்
இதைப் பற்றியே நினைத்திருப்பான்

இன்றய பொழுது முடியட்டும்
இனிமையாய் காலை விடியட்டும்
நாளை அவனை சமாதனம் செய்வோம்
நாள் முழுவதும் சந்தோசமாய் இருப்போம்


அவனின் டைரிக் குறிப்பு:
ஒருமுறை விட்டுக் கொடுத்து இருக்கலாமோ?
ஒரே அடியாய் தோற்கடித்து விட்டோமே!

அதற்காக இப்படியா நடந்து கொள்வது?
அவர்களைத் தேடிப் போய் இருக்கிறோம் என்ற
ஆணவம் தான் அவர்களுக்கு!

தவறான முடிவுகள் கொடுத்தால்
தடுமாறி விடுவோம் என்ற
தன்னம்பிக்கை தான் அவர்களுக்கு!

சச்சினை சாய்த்துவிட்டால்
சமாளிக்க மாட்டோம் என்ற
சிறுமதி தானே அவர்களுக்கு!

சோதனைகளை எல்லாம் ஓரமாய்
சாத்தி வைத்து விட்டு
சாதித்துக் கொண்டுதானே இருக்கிறோம் !!

எனது டைரிக் குறிப்பு:
???????????????????????????????

Wednesday, February 4, 2009

ஆண் பாவம்...!!!


என் வீட்டில் உள்ளோருக்கும்
என் சொந்தங்கள் எல்லோருக்கும்
அம்மாவின் ஒரு வார்த்தைதான்
ஆண்டவனின் திரு வார்த்தை
அம்மாவை சுற்றித்தான் இங்கே
அனைவரும் சுழன்று வருவோம்

அவளன்றி அங்கே ஒரு
அணுவும் கூட அசையாது
அப்பா வெறும் பார்வையாளராய்
ஒப்புக்குத் தனியாகவே இருப்பார்

நடப்பது எதையும் ஒன்றும் சொல்லாமல்
நிகழ்வது எதுவானாலும் கண்டு கொள்ளாமல்
மெலிதாய் சிரித்து விட்டு அவர்
மெல்லக் கடந்து போய்விடுவார்

மாமியாருக்கு ஏற்ற மருமகளாய்
மாறாமல் வந்துசேர்ந்தாள் என்னவள்

குடும்பத்தின் நிகழ்ச்சிகள்
குழந்தைகளின் பராமரிப்பிகள்
பெரியவளின் கல்யாண வேலைகள்
அடுத்தவனின் கல்லூரிக் கனவுகள்
வரவு செலவு விபரங்கள்
வயல் வெளி நிலவரங்கள்
................
................
சொந்தங்களை சேர்த்து
பந்தங்களைப் பாதுகாத்து
அனைத்தையும் முன் நின்று
அவள்தான் பார்த்துக் கொள்கிறாள்

ஊர்கூடி நின்று அவளை
உயர்த்தி வைத்து பேசுகிறது
நான் வலம்வரும் இடமெல்லாம் அவள்
நலம் பற்றித்தான் தான் விசாரிக்கிறது

வருடம் இருபது கடந்தபின் எந்தன்
பொறுமை முழுவதும் இழந்துவிட்டேன்

"இங்கு நான் ஒருவன் இருப்பது
உங்கள் கண்ணுக்குத் தெரியவே இல்லையா?

என் தோளில்மீது அமர்ந்துதான் அவள்
எல்லாவற்றையும் தாங்குகிறாள்
என்பது யாருக்கும் புரியவே இல்லையா?

எனது தைரியத்தால் தான் அவள்
எதிர் நீச்சல் போடுகிறாள்
என்பது யாருக்கும் உறைக்கவே இல்லையா?

மொத்த சுமையையும் தாங்கிக்கொண்டு
சத்தமில்லாமல் நின்று கொண்டிருக்கும்
எங்களையும் கொஞ்சமாவது
ஏறிட்டுத்தான் பாருங்களேன்"


அப்போதுதான் தற்செயலாய்
அப்பாவை கவனிக்கிறேன்

அப்பாவிடம் அங்கே
அம்மாவைப் பாராட்டி
என்னவோ சொல்லிவிட்டு
எழுந்து போகிறார் யாரோ ஒருவர்

மெல்லிய சிரிப்புடன்
மெதுவாய் தலையாட்டியபுடி
எதுவுமே நடக்காதது போல
ஏகாந்தமாய் அமர்ந்து இருக்கிறார் அவர்

நான் அந்த சிரிப்பை கடந்த
நாற்பது வருடங்களாகப் பார்த்திருக்கிறேன்
ஆனாலும் அதன் முழுஅர்த்தத்தை
அப்போது தான் உணர்ந்துகொள்கிறேன்
விட்டுக் கொடுக்கும் வாழ்க்கைப் பாடத்தை
வரிக்கு வரி புதியதாய் தெரிந்துகொள்கிறேன்

நாலே நொடியில் மனதிற்குள் அப்பா
நாலு மடங்காய் உயர்ந்து நிற்கிறார்