Showing posts with label கடவுள். Show all posts
Showing posts with label கடவுள். Show all posts

Saturday, February 26, 2011

13.இந்த நூற்றாண்டின் நிலவரம்...கலவரமாய்..........!

போர்க்களம்.....


தம் கலையைக் காட்ட

தம்மை நிலை நாட்ட

எதிர் எதிர் துருவங்கள்

வெற்றியைக் குறிவைத்து

வெறியுடன் மோதும் ஆடுகளம் ...


அடியார்கள் கூடிவர

பெரியோர்கள் பாடிவர

தேவதைகள் ஆடிவர

அமைதியாய் வருகிறார் கடவுள்


அரக்கர்கள் வெடிவெடிக்க

ஆயுதங்கள் சடசடக்க

அங்கங்கள் துடிதுடிக்க

ஆர்ப்பரித்து நிற்கிறான் சாத்தான்


பாந்தமாய் நடுவர் கொடியசைக்க

பார்ப்போர் மனதுக்குள் இடிஇடிக்க

இந்தப் பூகோளம் ஒடுங்கிநிற்க

அந்தக் பாதாளம் நடுங்கிநிற்க

தொடங்கிய போராட்டம்....


கடுமையான விதிமுறைகளுடன்

கொடுமையான வழிமுறைகளுடன்

வியூகங்களைப் புரிந்துகொண்டும்

சாகசங்களால் முறியடித்தும்

சமயத்தில் சறுக்கிவிழுந்தும்....

முடிவேத் தெரியாமல்

விடைகாண முடியாமல்

விடாமல் தொடர்கிறது..............


ஏற்கனவே ‘எங்கோ’

செய்துகொண்ட ஒப்பந்தப்படி

கடவுள் வெற்றிபெற்றதாக

’வழக்கம் போலவே’

அறிவிக்கப் படுகிறது......


தேவதைகளின் எண்ணிக்கையும்

கூடிக்கொண்டே இருக்கிறது

நடுவரின் அந்தப்புரத்தில் ....!




[கரு : யாழி]

[படம் : இணையம் /யாரையும் குறிப்பிட்டு அல்ல :) ]

Tuesday, December 7, 2010

என்னவாயிற்றாம் அவருக்கு ?


இன்னல்கள் தீர

இருக்கும் நிலை உயர

நிலைத்த செல்வம் பெற

நீண்ண்ண்ண்ட ஆயுள் அடைய

கடவுளை நோக்கி

கடும் தவமிருக்கிறேன் நான்....


அவர்

இதுவரையிலும் வரவில்லை....

என்னவாயிற்றோ தெரியவில்லை...


பொறுமை இழந்து

விசாரித்த எனக்கு

இடியாய் வந்து சேர்ந்தது

நம்பகமான தகவலொன்று......

ஊரானுக்கு உதவிட

ஓயாமல் உழைத்திடும்

உதவாக்கரை ஒருவன்...


தன்னைப் பற்றியும்

ஒரு நொடியாவது

நினைக்க வேண்டுமென்று

அவனை நோக்கி

கடும் தவத்திலிருக்கிறாராம் அவர் ..


அட..........!

என்னவாயிற்றாம் இவருக்கு ?

Tuesday, November 23, 2010

தேடுகிறேன் ... தேடுகிறேன் ...தேடிக்கொண்டே.........!


காடெல்லாம் தேடியும்

மேடெல்லாம் ஓடியும்

தவத்தினை நாடியும்


கோவிலைச் சுற்றியும்

ஆலயத்தைத் தட்டியும்

பள்ளியில் முட்டியும்


கடவுளைக் காணும்

வழியெதுவும் தெரியாமல்

நித்தமும் எனது

சித்தம் கலைந்து சிதறவே...


எல்லாம் உதறி

போதுமென்ற நிலையில்

வெளியேறும் வேளையில்

எதிர் நிலையிலுள்ள

கண்ணாடியில் தெரிந்து

மறைகிறது......


எனது பிம்பம்.......

.
(பி.கு : படம் நானில்லை :)

Thursday, September 23, 2010

அடக் கடவுளே .........!


கோடிகளை விழுங்கி
கோபுரங்களாய் எழும்பி
அங்கங்கள் அத்தனையும்
தங்கத்தால் இழைத்து
பரலோகத்தைப்போல்ப் பரந்த
பிரமாண்ட பிரகாரங்களுடன்
பரபரப்பாய் இருக்கிறது கோவில்.

பக்தியின் உச்சத்தில்
சத்தமில்லாமல் அமர்ந்திருக்கும்...
சத்தமாய் வேண்டிக்கொண்டு
சுற்றத்தை ஈர்த்துநிற்கும்........
சிக்கலைத் தீர்ப்பதற்கு
சதத்தில்(%) பேரம்பேசும்......
நேர்த்தியாய் உடுத்திய சுத்தமான பக்தர்கள்.....

பட்டாடைகள் பளபளக்க
அணிகலன்கள் தகதகக்க
வருவோருக்கெல்லாம் அருளை
வாரி வாரி வழங்கியபடியே
கற்பக்கிரகத்துள் கடவுள் சிலை......


கருவேல மரத்தின் நிழலில்
கருகிய புதரின் நடுவில்.......
குழந்தைகள் ஒன்றுசேர்ந்து
அழுக்குக் கைகள்கொண்டு
உடைந்த செங்கலையும்
உளுத்த செத்தையையும்
ஒன்றாய் அடுக்கி வைத்து
‘கோவில்’ என்று பெயரிட்ட
குவியலுக்குள் நுழைந்து
தலைக்குக் கைவைத்து
தரையில் படுத்திருக்கிறார்

கடவுள்.....................


[கரு : நன்றி: குதசெ : -சங்கர பாண்டியன்]

.

Thursday, July 15, 2010

அவரவர் நிலை..........


அரவமற்ற ஆலயம் ...

கருவறையில் கடவுளும்...

இறுகிய மனதுடன் எந்தன்
கோரிக்கையோடு நானும்...

உருகிக் கரைந்து
இருளை முடிந்த அளவுக்கு
விரட்டியபடியே மெல்லக்
குறைந்து கொண்டிருக்கும்
ஒற்றை மெழுகுவர்த்தியும்.....

கலைந்துபோன வாழ்வில்
விளக்கேற்றி வளமாக்க
மறுகி வேண்டி அவன்
திருமுகம் பார்க்கிறேன் .....

அவனும்...

கவலைதோய்ந்த முகத்தோடு
கண்ணிமைக்காமல் உறைந்துபோய்
கவனித்துக் கொண்டுதான் இருக்கிறான்...

இன்னும் சில நொடிகளில்
எல்லாமும் முடியப்போகும்
அந்த மெழுகுவர்த்தியை .....


.

Wednesday, January 27, 2010

வட்டத்தில் ஓட்டம்...!


தேடுதலே வாடிக்கையாகிப்போன
வேடிக்கை உலகத்தில்
வாழ்நாளெல்லாம் பயணித்து
வழியெல்லாம் வலைவிரித்து
விடாமல் தேடிக்கொண்டே
இருக்கிறான் மனிதன்.,
கடவுளை...........

ஆங்காங்கே அவதரித்து
அருகிலேயே உருவெடுத்து
அதே நம்பிக்கையோடு
தேடிக்கொண்டே தான்
இருக்கிறார் அவரும்.,
மனிதனை..........

.

Wednesday, May 13, 2009

ஆண்டவனுக்கு ஒரு அவசரத் தந்தி.....!


வானுகத்தில் கடவுள்
வாட்டமாய் இருக்கிறார்
நிலவரம் புரியாமல்
நிலைகுழம்பி இருக்கிறார்
பூமியில் நடப்பதறியாமல்
புலம்பிக் கொண்டிருக்கிறார்

"அன்று
தமிழகம் முழுவதும் வறட்சியில் மிதக்க
திருமங்கலம் மட்டும் வசதியாய் தெரிந்தது !
உலகிலேயே செழிப்பான நகரம் என்ற
உயர்ந்த பட்டமும் கொடுத்தோமே !!

இன்று
உலகம் முழுவதும் வறண்டு கிடக்க
உணவு கிடைக்காமல் புரண்டு படுக்க
இந்தியா முழுவதும் பசுமையாய்த் தெரிகிறதே !!!

அட !
அப்படி என்னதான் அங்கே ?!

வறட்சி காலத்திலும்
வளமாய் இருக்கும் ரகசியம் !
வறண்ட நேரத்திலும்
வாழ்வு செழிக்கும் அதிசயம் !!

உலகெங்கும் நடப்பதென்னவோ
கலிகாலம் மட்டும் தானே !
இந்தியாவுக்குள் மட்டும் என்ன
இப்போது நடப்பது பொற்காலமா ?

எப்படி இந்த மாற்றம் ?
எதனால் இந்த ஏற்றம் ?
என்ன தான் நடக்குமங்கு ?
எத்தனை நாள் தொடருமிது ?

ஒன்றுவிடாமல் தெரிந்துகொண்டு
ஏனையநாடுகளுக்கும் உடனேபரப்ப
ஆவன செய்யவேண்டும் !
அவர்களும் பிழைக்கவேண்டும் !!

ஒடுங்கி இருக்கும்
உலகப் பொருளாதாரம்
உயிர்பெற்று தலைதூக்க
உதவி செய்யவேண்டும் "


இந்தியப் பயணத்துக்கு தயாராகிறார்
இன்று இரவுதான் கிளம்பப்போகிறார்

இன்றுதான் மே 13
இன்றுதான் கடைசி நாள்

எதிர்பார்த்து வருபவர்
தாமதமாக வந்தால்
ஏமாந்துதான் திரும்புவார்

நாலும் தெரிந்தோரே
நாலு மணிக்குள் வந்துசேர
உண்மை நிலை விளக்கி
உடனடியாய் தந்தி கொடுங்கள்

Thursday, April 2, 2009

நெற்றிக்கண் திறப்பினும்............!


வானத்துக் கடவுள்களின் மேல்
வழக்குகள் பல தொடுத்திருக்கிறேன்


பார்வைக் குறைபாடுள்ள
பச்சிளம் குழந்தைகள்
மனவளர்ச்சிக் குன்றிய
மழலைச் செல்வங்கள்
உடல் ஊனத்தோடு
உழலும் பிள்ளைகள்

ஆக்கும் கடவுளுக்கு
அதிகப்படியான வேலைபளுவா?
அதனால் இந்தக் கவனக் குறைவா??

உருவாக்கும் கடவுளின் மேல்
வழக்கொன்று தொடுத்திருக்கிறேன்!


தீவிரவாதி ஒருவன்
தற்கொலை செய்துகொள்கிறான்
அப்பாவிப் பொதுமக்கள்
அநியாயமாகச் செத்துமடிகிறார்கள்
ஒன்றுக்கு நூறு
என்ற விகிதாச்சாரத்தில்

மறைந்திருந்து இயக்கும்
மரண வியாபாரிகள்
நலமாய் இருக்கிறார்கள்
நல்லபடி வாழ்கிறார்கள்

காக்கும் கடவுளுக்கு
கணக்கில் தடுமாற்றமா?
கணிப்பில் குளறுபடியா??

நலம் காக்கும் கடவுளின்மேல்
வழக்கொன்று தொடுத்திருக்கிறேன்!


தொடர்வண்டி விபத்துகள்
தொடரும் சாலை ஆபத்துகள்
இனப் படுகொலைகள்
இயற்கைப் பேரழிவுகள்

கொத்து கொத்தாக
மொத்தமாய்ப் போய்ச்சேரும்
எதிர்காலக் கனவிலிருக்கும்
நாதியற்றக் குடிமக்கள்

அழிக்கும் கடவுளுக்கு
அப்படி என்ன அவசரம்?
குறியீட்டு அளவின் நிறைவேற்றமா?
(TARGET ACHIEVEMENT)
குறுக்குவழியில் நடைபெறுகிறதா??

மொத்தமாய் அழிக்கும் கடவுளின் மேல்
வழக்கொன்று தொடுத்திருக்கிறேன்!


சாட்சிகளோடு காத்திருக்கிறேன்!
சத்தியமாய் செயிக்கப் போகிறேன்!!
நீங்களும் சாட்சியாய் வாருங்கள்!
நிச்சயமாய் செயித்து விடுவோம்!!

Friday, January 2, 2009

நான் கடவுள்....!?!?!?


நான் கடவுள்

நீண்ட இடைவெளிக்குப் பின்
மண்ணுலகம் வந்து கொண்டிருக்கிறேன்
மக்கள் நலம் நேரில் அறிய

நிலவும் தாண்டி வந்து விட்டேன்
மிகவும் உயரத்தில் இருக்கிறேன்

கூட்டம் கூட்டமாய் மக்கள்
கண்ணுக்குத் தெரிகிறார்கள்
கூடி வாழ்கிறார்கள் போலும்
குதூகலமாகிறது மனது

அருகில் வந்துவிட்டேன்
அப்போதுதான் வித்தியாசமாய் உணர்கிறேன்

அனைவரும் அமைதியாய்
அவரவர் பாதையில்
ஒருவருக்கொருவர் பேசாமல்
ஒருவரை ஒருவர் பாராமல்
ஒரே திசையில் சென்று கொண்டிருக்கிறார்கள்

தனித் தனிப் புள்ளியாய் மக்கள்
தள்ளித் தள்ளி நின்று கொண்டிருக்கிறார்கள்

எங்கோ தவறு நடந்திருக்கிறது!
என்னவென்று அறிய வேண்டும்!!
எதுவானாலும் சரி செய்ய வேண்டும்!!!
எதிர்ப் பட்டவனின் மனதுக்குள்
ஏறி போய்ப் பார்க்கிறேன்

"என் துணைக்கு யாருமில்லையே?
என்ன செய்யப் போகிறேன்?
என்னை யாருக்கும் புரியவில்லையே?
எப்படி வாழப் போகிறேன்?
??????????????????????????"


அங்கு அனைத்தும் கேள்விகளாகவே!
அதிர்ச்சியாய் இருக்கிறது எனக்கு!!
அருகிலேயே அனைவரையும் வைத்துக்கொண்டு
அநாதைப் போலத் திரிகிறான் இவன்
தன்னைச் சுற்றிப் பார்க்காமல்
தனக்குள்ளேயே மூழ்கி
தன்னம்பிக்கை இன்றி இருக்கிறான் இவன்

சரியாகப் படவில்லை இவன்
சரேலென்று அடுத்தவனுக்குள் நுழைகிறேன்
அட! அங்கேயும்அதே கதை தான்!!
அடுத்தவன்....!!!
அடுத்தவன்......!!!!!

அவர்களிடம் இருந்து விட்டு விலகி
அவசர அவசரமாய் மேலே போகிறேன்
அங்கே இருந்து திரும்பிப் பார்க்கிறேன்
கூட்டம் கூட்டமாய் மக்கள்!
கூட்டு வாழ்க்கை மறந்த
கூட்டுக் குடும்பம் தொலைத்த மக்கள்!!
............................

பார்க்கப் பார்க்க
படபடப்பாய் வருகிறது எனக்கு
பதட்டமாய் இருக்கிறது எனக்குள்
என்னவோ ஆகிவிட்டது எனக்கு
என்னவானதென்று அறிய
என் மனதுக்குள் இறங்கிப் பார்க்கிறேன்

"என்ன செய்யப் போகிறேன் நான்?
எத்தனை பேரை சரிசெய்ய முடியும்?
என் துணைக்கு யாருமில்லையே?
????????????????????????????"

Tuesday, November 18, 2008

கடவுளும்,கந்து வட்டியும்


கந்துவட்டி வசூலித்து
கட்டைப் பஞ்சாயத்தில் காசு சேர்த்து
கவனமாய் பங்கு பிரித்து
காணிக்கையாய் உண்டியலில் செலுத்தி

கவலை மறந்து சிரிக்கிறான் மனிதன்
"பாவம் தொலைந்தது !" என்று

கடவுளும் சேர்ந்து சிரிக்கிறான்
"பாவம் அந்த மனிதன் ?"என்று

Monday, November 10, 2008

அந்த ஐந்தாவது நபர் !


அம்மா மடியில் நான்
தலை வைத்திருக்க
அப்பா கால் அமுக்க
அக்கா விரல் சொடுக்க
அரைக்கண் திறந்து
அறையோர சன்னலைப் பார்க்கிறேன்
சாத்திய கதவுக்குப்பின்னால்
ஏக்கத்தோடு இரு கண்கள்
என்னையே பார்த்துக்கொண்டிருப்பது
எனக்கு மட்டும் தெரியும்

சனிக்கிழமை சாயங்காலம்
அப்பா வாங்கிவரும்
இனிப்புச் சேவுக்கும்,
அம்மா பாசத்தையும் சேர்த்து
கரைத்துவைத்த கஞ்சிக்கும்
அரைத்துவைத்த துவையலுக்கும்
அக்காவோடு சண்டைபோட்டு
வரிசையில் நிற்கும்
கடைக்குட்டி எனக்கு
பின்னாலிருந்து
நீட்டிக் கொண்டிருக்கும்
இரண்டு கைகள்
எனக்கு மட்டும் தெரியும்

அப்பாவின் கண்ணைக் கட்டிவிட்டு
அம்மா கதவுக்குப் பின் மறைய
அக்கா கட்டிலுக்கு கீழே பதுங்க
அவசரமாய் இடம் தேடி நான்
அலமாரி கதவு திறக்க
அங்கே எற்கனவே முக்காடிட்டு
ஒளிந்திருந்தது யார் என்று
எனக்கு மட்டும் தெரியும்

அப்பாவின் மிதிவண்டியில்
எங்களுக்கே இடமில்லாதபோது
விடாமல் பின்னால்
அடம் பிடித்தபடி
தொங்கிக்கொண்டே வரும் அந்த
ஐந்தாவது நபர் யார் என்று
எனக்கு மட்டும் தெரியும்

அப்பாவுக்கு நெஞ்சுவலி என
அவசர சேதி வர
புதை மணலில் நெஞ்சம்
பதைபதைக்க ஓடும்
என்னைத் தாண்டி
முன்னால் பதியும்
காலடித்தடங்கள்
யாருடையது என்பது
எனக்கு மட்டும் தெரியும்

எல்லோருக்கும் தெரியும்
என்குடும்பம் ஒரு கோவில் என்று

எனக்கு மட்டுமே தெரியும்
அந்த ஐந்தாவது நபர்
கடவுள் என்று.