Showing posts with label அறிவியல். Show all posts
Showing posts with label அறிவியல். Show all posts

Sunday, December 5, 2010

இருக்குமோ.............!

கருந்துளையின் ஆழத்தில்

நிகழ்ந்த பெருவெடிப்பின் ஓரத்தில்

நகர்ந்த பதினோராம் கிரகத்தில்....


பதிமூன்றாம் மாதத்தின்

முப்பத்திரண்டாம் நாளின்

இருபத்தைந்தாம் மணியின்

அறுபத்தொன்றாம் நிமிடத்தில்....


தமது ஏழாம் அறிவால்

எதையோ உணர்ந்து

உதட்டைச் சுழித்து

மெல்ல சிரிக்கிறது...



பிறந்து சில

நொடிகளேயான

அந்தக் குழந்தை ......

Thursday, June 25, 2009

முன்னேற்றமா? (அ) முட்டுக்கட்டையா?


கணினிக்குள் நுழைந்திருக்கிறான் அவன்
கண்ணிமைக்காமல் அமர்ந்திருக்கிறேன் நான்

அறிவியலின் முன்னேற்றம் பற்றி
அது செய்யும் மாயாசாலம் பற்றி
அது உருவாக்கும் வாய்ப்புகள் பற்றி
அதனால் உருவாகும் வசதிகள் பற்றி

கண்களைக் கணினிமேல் பதித்தபடி
கருத்தினைக் கண்டம்தாண்டி விதைத்தபடி
எதைஎதையோ இணையத்துள் தேடியபடி
இடையிடையே என்னிடன் பேசியபடி அவன்

"நமது ஊரின் வானிலை வேண்டுமா ?
நல்ல ஓசையில் வானொலி வேண்டுமா ?
அன்னைதேச நிலவரம் புரியவேண்டுமா ?
அண்டைதேச கலவரம் தெரியவேண்டுமா ?

இணையத்துக்குள் நுழைந்தால்
இப்போதே கிடைத்து விடும்

அன்னைக்கு அன்புமடல் - இங்கே
அமெரிக்காவிலிருந்து அனுப்பினால்
அரைநொடியில் அங்கு போகும்

அப்பாவின் கணக்கில்
இங்கே பணம் செலுத்தினால் - அங்கே
அரைமணியில் வங்கியில் சேரும்

அற்புதக் கணினி இல்லாத உலகமது
அதிகாலைக் கிழக்கு இருள் போல
அரைநொடியில் கலைந்து போகும் "

மிகத் தெளிவாக இருக்கிறான் அவன் !
ஏகக் குழப்பத்தில் இருக்கிறேன் நான் ?

அறிவியலோடு சேர்ந்து முன்னோட வேண்டும் - இதற்கு
மாற்றுக் கருத்து முன்மொழிய வேண்டாம் - அதற்காக
அதனுள் வீழ்ந்து மூழ்கிட முடியுமா ?

சன்னல் திறந்தாலே காற்றின் இதம்
உனக்கு வானிலை கூறாதா ?
சாலையில் நடந்தாலே சூரியனின் பதம்
உனக்கு வெப்பநிலைக் காட்டாதா ?
வானம் நோக்கினாலே நகரும் மேகம்
உனக்கு வரும்மழையினைச் சொல்லாதா ?

நால்வரோடு கலந்தால் தானே
நாட்டு நிலவரம் தெரியும் !?
நல்லவரோடு இணைந்தால் தானே
நல்லது கெட்டது புரியும் !?

'நண்பனே ,
அரைப் பக்கத்தில் கடிதம் எழுது
கரைத் தாண்டி சுமந்து செல்லுமது
உனது விலையில்லா பாசத்தையும்
உனது உயிரின் வாசத்தையும்

அன்புமகனின் மடல்தனை
வாசித்து அறிவோரைவிட
உச்சி முகர்ந்து உள்ளம் சேர்த்து
சுவாசித்து உணர்வோரே அதிகம்

உனது எழுத்தில்
உனது முகம் தெரியும்
அதிசயம் அங்கேதான் நிகழும்
அதுஇங்கே உனக்கெப்படிப் புரியும்'

மெதுவாய் விலகி நடக்கிறேன் வீட்டுக்கு
மெல்லத் தழுவிக் கடக்கும் குளிர்காற்று
அன்றைய வானிலையை எனக்கு
அழுத்தமாய்ச் சொல்லிச் செல்கிறது !

Monday, May 4, 2009

நகைப் பெட்டி



வீட்டில் நட்டநடு நாயகமாய்
கூடத்தின் நடுவில் அந்தப் பெட்டி.

பரம்பரை பரம்பரையாய் தொடர்ந்து
பாதுகாக்கப்பட்டு வரும் பெட்டி.

நூறு ஆண்டுகளுக்கு முன்னால்
மறைந்துபோன பொருளின் மாதிரி
அதனுள் இன்னும் இருக்கிறது
அதுவும் ஒன்றுதான் இருக்கிறது

சிறு குழந்தையாய் இருக்கும்போததை
ஒருமுறை நேரில் பார்த்திருக்கிறேன் !

குடும்பத் தலைவிக்கும் மகளுக்கும்
கேள்விஞானம் தான் அதைப்பற்றி !!

எனது பேரக் குழந்தைகளுக்கு
என்னவென்றே தெரியாது அது !!!

இந்தப்பெட்டியை திறந்து பார்க்கத்தான்
இங்கே வந்து கொண்டிருக்கிறார்கள்.

வாசல் வரை வந்து அவர்களை
வரவேற்று அழைத்துச் செல்கிறேன்
இருக்கையில் அமரச் செய்கிறேன்
இருண்டுகிடக்கிறது அனைவரது முகமும்

ஆர்வமாய் கேட்கிறது குழந்தை
"அது இன்னுமிங்கே இருக்கிறதா ?
எப்படி இருக்கும் அது ?
இப்போதே பார்க்க வேண்டுமே !"


அமைதியாய் பதில் சொல்கிறேன்
"புது வருடப் பிறப்புக்கான
பரிசு உங்களுக்கு அதுதான் !
பார்ர்க்கலாம் அதைக் அதிகாலையில் !!


விடிந்த பின் எல்லோருக்கும்
வந்திருக்கும் அனைவருக்கும்

சிரிப்பின் முகம் காட்டக் காத்திருக்கிறது
சிரிப்பின் மாதிரி அடைக்கப் பட்டிருக்கும்

அந்த நகைப் பெட்டி( சிரிப்புப் பெட்டி )

விடிந்தால் புதுவருடம் கி.பி.2200

Saturday, January 31, 2009

ஏமாந்தது யாரிடம்.?



சாதகப் பொறுத்தம் பார்த்து
சாதகம் பாதகம் பேசி
நல்ல நேரம் பார்த்து
நாலு முறை கூடிப் பேசி
நல்லபடியாய் முடிவு செய்தனர்
நண்பன் அவன் திருமணத்தை

அங்கே.....

அவளை பற்றி அறிய
அவளைப் பின் தொடர்ந்தார்
அலுவலகத்திலிருந்து அவனின் மாமா

அலுவலக வாசல் தாண்டிய
அடுத்த நிமிடம் குனிந்த தலை
ஆறாவது தெருவில் இருக்கும்
அவள் வீடு வரும் வரை
அங்கே இங்கே திரும்பவில்லை
அரை அங்குலம் கூட நிமிரவில்லை

குடும்பத்தில் விளக்கேற்ற
குலமகளைத் தேடிய இடத்தில்
குத்து விளக்கே கிடைத்த மகிழ்ச்சி
குதூகலமாய் கிளம்பிப்போனார் மாமா

இங்கே......

அவன் நிலைமை விசாரிக்க
அவனிருக்கும் இடம் சென்றார்
ஆர்வத்தோடு அவளின் தாத்தா

இடையிலேயே பார்த்துவிட்டார் அவனை
இடைஞ்சலான போக்குவரத்திலும்
இருசக்கர வாகனத்தில் போகும் அவன்

கரம் கூப்ப வழி இல்லாததால்
சிரம் தாழ்த்தி வணங்கிச் செல்லும்
அவனின் சிறந்த பண்பால்
அங்கமெல்லாம் சிலிர்த்து
ஆரவாரமாய் கிளம்பிப் போனார்

எந்தவிதக் கேள்வியும் இல்லாமல்
அந்தத் திருமணம் இனிதே முடிந்தது

நன்று:ஆனாலும்

ஒரு உண்மை எல்லோருக்கும்
தெரிந்தே தான் ஆக வேண்டும்

அன்று அவள்.......

அலுவலக வாசலில் குனிந்து
அனுப்ப ஆரம்பித்தாள் குறுந்தகவல்(SMS)
அவள் வீடு போய்சேரும் வரை
அதுவும் போய் சேரவே இல்லை
அவளின் குனிந்த தலையும்
அதுவரை நிமிரவே இல்லை

அன்று அவன்.......

கழுத்துக்கும் காதுக்கும்
தோளுக்கும் இடையில் அந்த
அழுத்திப் பிடித்து இருந்த
அலைபேசியில் பேச
தலையை சாய்த்த அவன்
தாறுமாரான போக்குவரத்திலும்
தலையை தூக்கவே இல்லை
தாத்தாவையும் பார்க்கவே இல்லை

இரு வீட்டாரும் சேர்ந்து
இணைந்தே ஏமாந்து போனார்கள்
அவர்கள் எதிபார்க்காத ஒன்றிடம்!
அந்த அலை பேசியிடம்!!

Thursday, November 13, 2008

எங்கே அவன் ?


புத்தாண்டு 2108 ல்
புதிய உலகம் கண்டுபிடிக்க
புறப்பட்டோம் பிரபஞ்சப்பயணம்
பறக்கத் தொடங்கி ஆண்டுகள்
பல பறந்து போயின

சூரியனிலிருந்து சக்தி பெற்று
சளைக்காமல் எங்களை
சுமந்து செல்லும்
சின்னஞ்சிறிய விண்கலம்

வானில் சூழல் புரிந்து
வந்துபோகும் திசை தெரிந்து
வரப்போகும் இடர் அறிந்து
வழி நடத்த நான்

என் சைகை புரிந்து
தன் கணினியுடன் இணைந்து
கண நேரம் இமைக்காமல்
கலம் செலுத்த அவன்

இருக்கை மட்டுமே எங்கள்
இருப்பிடமும் உலகமும்
இருவரும் இதுவரை
இரு நிமிடம் பிரிந்ததில்லை
இருந்தாலும் சேர்ந்தார்ப்போல
இரு நிமிடம் பேசியதுமில்லை

பூமியிலிருந்து கிளம்பி
சூரியனிலிருந்து விலகி
நிலவு தாண்டி
செவ்வாய் கடந்து
தொடர்ந்து ஒளிவேகத்தில்
போய்க்கொண்டே......... . . . . . . . . .

திடீரென உறக்கம் கலைந்தேன்
தடுமாற்றம் கலத்திலும் உணர்ந்தேன்
எதிர்பார்க்கவே இல்லை
எதிரே புதிய விண்கோளம்

ஒன்று ஒன்பதாக
ஒன்பது எண்பதாக
வெடித்துச் சிதறி
பெருகிக்கொண்டே இருக்கிறது
நெருப்பு மழையாக

உயிர் தப்ப வேண்டுமெனில்
உடனே கலம் திருப்ப வேண்டும்
உள்ளம் துடிக்கத் திரும்பினேன்

உடன் இருந்தவன் அங்கு இல்லை.