Showing posts with label பாசம். Show all posts
Showing posts with label பாசம். Show all posts

Sunday, September 16, 2012

க(தை)விதை : நனையுதே மாராப்பு ..!

வாழ்க உறவுகள் ....
மிக நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட இடைவெளிக்குப்பின் க(தை)விதை சொல்ல வந்திருக்கிறேன்..
மரபில் / குறளில் கொஞ்சம் மூழ்கிப் போனதால் .... இதிலிருந்து விலகியே இருந்திருக்கிறேன் .....இது மீண்டும் இன்று எனக்கு நினைவுக்கு வந்தது உங்களின் கெட்ட நேரமாக இருக்கலாம் .......அனுபவியுங்கள் ...:))


பச்ச ஒடம்புக்காரீ’ன்னு
பவுசாத்தான் படுக்க முடியுமா ..?

கொளுந்தியாளப் போல நானும்
கெழுத்தியப்போலக் கெடக்க முடியுமா ..?

சாவலை எழுப்பி வெரட்டி
சாலையைக் கழுவி பொரட்டி

தூக்கத்தை மொத்தமா வெலக்கி
முத்தத்தை சத்தமில்லாம ஒதுக்கி
தூக்கை சுத்தப்பத்தமாத் தொலக்கி

நீச்சத் தண்ணிய ஊத்திக்கிட்டு
பச்சப் புள்ளயத் தூக்கிக்கிட்டு

எட்டுபோட்டு நடக்கோணும்
காட்ட மேட்டக் கடக்கோணும்
தோட்டம் போயிக் கெடக்கோணும்......

பச்சப்புள்ளய அமத்திப்போட்டு
புல்லறுக்கப் போகோணும்

கஞ்சித்தண்ணி கண்ணுலபட
நெஞ்சிமுட்ட சொமக்கோணும்

ம்ம்ம்ம்ம்...............


நட்ட நடு சாமத்துல
கெட்ட சுடும் விடிகாலப்
பொழப்பைப் பத்துன நெனப்பால
அரைக்கோழித் தூக்கத்துல
பொரண்டு நான் படுக்கையில

பச்சப்புள்ள ஏங்கியழும்
உச்ச சத்தம் கேட்டுத்தான்

அதறிப் பதறி எந்திரிச்சேன்
அவசரமாத்தான் பாத்துவச்சேன்

ஒதட்டுப்பால் குடிச்சுக்கிட்டு
எதமாத்தான் தூங்குதானே என்ராசா ...

நெலம தெரியாம எரிஞ்ச
நாதாரி வயித்த அணைக்க
குண்டு சொம்புத் தண்ணிய
மொண்டு ஊத்துப் போகையில

ஏதோ உறுத்துன்னு
என்னான்னு நான்பாக்க...

பசிச்ச என்வயிறு
கீழே வறண்டுகெடக்க
எங்கோ பசிச்ச வயிறுக்காக
இங்கே நனைஞ்சுக் கெடக்குது
என்னோட மாராப்பு..........!

Saturday, January 29, 2011

யாத்தே.....! என்ன செய்யப் போறேன்....!!



வீதியெங்கும் பரபரப்பு

விடிந்தால் தீபாவளி...

விதியை நொந்தபடி நான்....


பதறிப் போயிருக்கிறேன்

கையிருப்பும் காலியாகி இருந்தது...


யாத்தே......

என்ன செய்வேன்..?

எப்படி சமாளிப்பேன்..??

இதுதான் கடைசியும் கூட...........


வெறுமையால் நிறைந்திருக்கும்

அந்தக் குடிசையின் தரையில்

படுத்திருக்கிறார்கள் அவர்கள்


ஏதோ புரிந்ததால் கண்ணைமூடி

தூங்கியதுபோல நடிக்கிறது மூத்தது...

எதுவும் புரியாததால்

கேள்விகளால் துளைத்தபடி

புரண்டுக்கொண்டே இருக்கிறது சின்னது...


அம்மா...இது வடை தானே ??


பதட்டத்தை மறைத்தபடி

காதிலெதுவும் கேட்க்காததுபோல

இடையில் நிறுத்தாமல்

தொடர்ந்தபடி இருக்கிறேன் நான்...


அப்போ அந்த ராசா முன்னால

தொம்முன்னு குதிச்சதாம் ஒரு..........


சூழ்ந்திருக்கும் வீடுகளிலிருந்து

சூழ்ச்சி மணத்துடன் எழுந்து

கள்ளத்தனமாய்த் தவழ்ந்து

கூரையைப் பிளந்து நுழைந்து

குழந்தைகளின்முன் உருண்டு

குட்டிக்கரணம் அடித்தபடியே

என்னைக் கேலிசெய்து கொண்டிருக்கிறது...

விதவிதமாய் தாளிக்கும் சப்தமும்

வகைவகையான பண்டங்களின் வாசமும்....


திடீரெனத் துள்ளி எழுந்த ‘சின்னது

பிரகாசிக்கும் கண்களுடன்

மூச்சை இழுத்து விட்டு


ம்ம்ம்ம்......இது முறுக்கு...! என்றதும்

ஈரக்குலை அறுந்தது எனக்கு


கையைப் பிடித்து இழுத்து

முகத்தை அடிமடிக்குள் புதைத்து

உரத்த குரலில் ஆரம்பிக்கிறேன்

தெரியவில்லை என்றாலும்

புதிய கதையொன்றை ..............


ஒரே ஒரு ஊருல ..................

.

( நன்றி : கரு : ப்ராங்க்ளின் குமார்)

Thursday, January 6, 2011

புலம் பெயர்ந்ததோர் உடலின் புலம்பல்


அது ஒரு

ஐப்பசியின் மழைக் காலம்….

தூங்கும் நம்குழந்தை..

அவளைத் தாங்கியபடி நீ..

உன்னைத் தொங்கியபடி நான்


உலகமே ஒரு நொடியில்

எனது காலடிக்கும் கீழாகிப்போனது


என்னை மறந்தேன் நான்..மிதந்தே

எங்கெங்கோ பறந்தேன் நான்


இது ஒரு

வளைகுடாவின் பனிக்காலம்...

ஏங்கியபடி நம்குழந்தை..

அவளைத் தாங்கியபடி அங்கே நீ..

உன்னைத் தொங்கியபடி எனது நினைவுகள்..

அவற்றைத் தூக்கியபடி இங்கே நான்..


ஏனோ ஒரு நொடியில்

எல்லாமே தலைகீழாகிப்போனது


எனதுலகை இழந்திருக்கிறேன்.. இங்கே

ஏதோ இருக்கிறேன்...........

Monday, November 22, 2010

ஏன்?..எதற்கு??....எப்படி???


அனைவரும் கிளம்பியபின்

அத்தனையும் அணைத்து

அலுவலகம் முடித்துக் கிளம்ப

எப்படியும் அரைமணி ஆகிவிடும் ....


ம்ம்ம்ம்....


பாப்பாவின் பத்தாவது

பிறந்த நாள் கொண்டாட்டம்

பரபரப்பாய் முடிந்திருக்கும் ....


இப்போதே பத்தாகப் போகிறது

அரக்கப் பரக்க விரைந்தாலும்

இன்னும் அரைமணி தாண்டிவிடும்


பதட்டமாய் இருக்கிறது எனக்கு...


ஏங்கிப் போயிருப்பள் அவள்.....

தூங்கிப் போகும்முன் முன்நின்று

சிரிக்க வைத்துவிட வேண்டும்...

நெற்றியில் முத்தமிட்டுவிட வேண்டும்


மிகவும் பதட்டமாய் இருக்கிறது எனக்கு....


வேகவேகமாய்க் கதவடைத்து

அவசர அவசரமாய் படிஇறங்கத்

தொடங்குகிறேன் நான்....


எதிர் கீழே

மெல்லிய இருளில்

மங்கிய உருவில்

கலங்கிய முகத்துடன்

ஒரு நிமிடம் நிற்க

சொல்லி கெஞ்சலாய்

சைகை செய்த படியே

கீழ்ப் படியிலிருந்து

மேலேறத் தொடங்குகிறாள் அவள்


பலநாள் பழகிய முகம்.......

மிகமிக அறிமுகமான உருவம்.......


இவர் யாராய் இருக்கும் ?

இங்கே யாரைப் பார்க்க ??

இந்த நேரத்தில் எப்படி ???


உள்ளே கேள்விகள்

வளையமிடும் வேளையில்

பாப்பாவின் நினைவுகள் தூண்டிலிட.....


குடையாய் சுருங்கிய புருவங்களுடன்

அவசரமாய் அவளைக் கடக்கிறேன்


அந்த நொடியில்

திடுக்கிட்டுப்போய் நிற்கிறேன்


வாசம் ....

அக்காவின் வாசம் ...

பத்தில் பறந்துபோன

பாசமிகு அக்காவின் வாசம்....


இந்த வயதிலிருந்தால்

இப்படித்தான் இருப்பாள் அவள்


அதிர்ந்து திரும்புகிறேன் ...


அங்கே யாரும் இல்லை

அருகில் ஒருவரும் இல்லை


ஒருவேளை மேலேறிச் சென்றிருக்கலாம் ?

அல்லது வெறும் பிரம்மையாய் இருக்கலாம் ??


ஆராய நேரமின்றி

ஒரு நொடி தாமதித்து

என்னையே தேற்றிக் கொண்டு

தாவி இறங்கி தரையைத் தொடுகிறேன் ....


ஒரு நொடியின்

நூறில் ஒருபங்கு

நேர இடைவெளியில்

என்னையும் முந்திக்கொண்டு

எனது இருசக்கர வாகனத்தின்


மேலேறி........

நகராமல் நிற்கிறது

நகரப் பேருந்து ஒன்று ......!

.