Showing posts with label இலங்கை. Show all posts
Showing posts with label இலங்கை. Show all posts

Monday, July 6, 2009

காட்டுக்குள் காத்திருக்கும் கரும்புலி ....!


06-07-09
--------

காட்டுக்குள்...
--------------
வரிப்புலியென்றால்
வலுவிருக்கும் உறுதியில்,
உயிர் எடுக்கும் காட்டில்
உறவுகாக்க மறைந்திருந்து - எதிரியின்
உயிர் பறிக்கும் இறுதியில்

கரும்புலியென்றால்
கடும் சினமிருக்கும் உறுதியில்,
உயிர் கொடுத்துப் போரில்
உறவு காக்க வெளியே வந்து - எதிரியின்
உயிர் பறிக்கும் சடுதியில்

நீண்ட போராட்டத்தின் இறுக்கத்தில்
உண்டான மயக்கத்தின் கிரக்கத்தில்
சோர்ந்து கிடக்கும் புலியைச்சுற்றி

சேர்த்து மூடிவிட்டனர் வலைக்குள் - கொண்டாட
சார்ந்தோர் மூழ்கிவிட்டனர் போதைக்குள்

ஆம்.,

சிலந்திகளால் பிண்ணி முடிக்கப்பட
சிலுசிலு பகட்டு வலைகள் அவை

புலி விழித்து மீண்டும்
வாலசைந்தாலே சிதைந்துபோகும் - அந்த
வலுவில்லாத வலைகளும்
வலைபிண்ணிய சிலந்திகளும்

கரும்புக்குக் கூலியா? என
கானகம் அழித்துச் செல்லும்
காடையருக்குத் தெரியாது - உள்ளே
கரும்புலி காத்திருக்கும் சேதி

Saturday, June 20, 2009

சமஉரிமை என்பது......


"மிருகவதை செய்யும் மனிதர்களை
மாறுகை மாறுகால் வாங்குவோம்

பறவைகளை கூண்டில் வளர்க்கும்
கயவர்களை கூண்டில் அடைப்போம்"

கடையின்முன் மறியல் செய்து
கூட்டமாய்க்கூடி ஆர்ப்பாட்டம் செய்து
கூடுகளை உடைத்து பறவைகளை
கூண்டோடு பறக்க விட்டோம்

கிளியும் மைனாவும் திசைக்கொன்றாய்
களிப்புடனே பறந்து மறைந்துபோயின
கைதட்டி ஆரவாரமாய் ஆர்ப்பரித்தோம்

புறாவெல்லாம் கூட்டமாய்ப் பறந்து
திறந்துவிட்டக் கூட்டுக்கேத் திரும்பிவந்தன
திறந்தவாய் மூடாமல் திகைத்து நின்றோம்

குருவிகள் சிலநொடி நேரத்திலேயே
பருந்திடம் சிக்கி பரதேசம் போயின
இருண்ட முகத்துடன் உறைந்து நின்றோம்

காதல்பறவைகள் கண்முன்னாலேயே
கழுகிடம் மாட்டி சிதைந்தே போயின
அதிர்ந்துபோய் முழுதும் மூர்ச்சையாகி நின்றோம்

நடப்பதைப் பார்த்துக்கொண்டிருந்த
நடுநிலையாளர் மெதுவாய்ச் சொன்னார் :
"கூண்டிலாவது அது உயிரோடிருந்திருக்கும்"

தலைகுனிந்து அத்தனைபேரும்
நிலைகுலைந்து கலைந்து சென்றோம்

"எல்லோருக்கும் சமமான அளவுகோல்
எல்லாசமயத்திலும் சரியாய் வராதோ ?
வகைப் படுத்திப் பார்ப்பதுதான்
வாழ்க்கைக்கு உதவும் பாடமோ ??"

Monday, May 18, 2009

உதயசூரியன் கொண்டுவரும் சேதி..!


அதிகாலைச் சூரியனின்
அற்புத தரிசனத்திற்காக
கிழக்குக்கடற்கரை மணல்வெளியில்
கீழ்திசைநோக்கிக் காத்திருக்கிறேன்

குருதிப்புனலில் முகிழ்கும்
இறுதி நீர்க்குமிழ்போல
மெல்ல வெளிவரும்
காலைக் கதிரவனின்
சென்நிற கிரகணக்கரங்கள்
காத்திருக்கும் என்னிடம்
மொத்தமாய் அள்ளிக்
கொண்டுவந்து சேர்க்கின்றன

உணவில்லா வயிற்றின் ஓலத்தையும்
மருந்தில்லா காயத்தின் ஒப்பாரியையும்
உறுப்பிழந்த உடல்களின் கதறலையும்
உறவிழந்த உள்ளங்களின் உளரலையும்

ஒழுகும் குருதியின் ஓசையையும்
அழுகும் பிணங்களின் வாடையையும்
அழுதோய்ந்த குழந்தைகளின் விசும்பலையும்
கருகிமடிந்த காவல்தெய்வங்களின் சாம்பலையும்


அரைமணி பயணக் கீழ்திசையில்
அத்தனையும் அப்படியே தலைகீழாய் !
எனக்கான அதிகாலை போல
எப்போதங்கே விடியல் வரும் !!

அதிகாலை உதய சூரியனே !

அதிகாரம் படைத்தோரின்
குளிர்சாதன அறைக்குள் சென்று
தயங்குவோருக்கு உண்மை உணர்த்த
தூங்கும் உணர்வுகளை தட்டியெழுப்ப

உன்னால் மட்டுமே
உடனே முடியும் !

உன்னால் உயர்ந்தோரை
உன்சொல் கேட்கவைக்க

உன்னால் மட்டுமே
உடனே முடியும் !!

யுத்தமில்லாமல் பூமிகாக்க
ரத்தமில்லாமல் தேசம்பார்க்க

உன்னால் மட்டுமே
உடனே முடியும் !!!

Friday, May 15, 2009

இந்த IPL அறிந்துகொள்ளுங்கள்...!


அகிலத்தின் மொத்த கவனமும்
குவிந்திருக்கிறது அங்கே

பட்டினியாக் கிடக்கும் நாடு
பலஆயிரம் கோடி செலவில
பலநாடுகளிடம் கடன் வாங்கி
பகட்டுக்காக நடத்தி வரும்
பரபரப்பான ஆட்டம் அது

நடுமைதானத்தில் இவர்கள்
நாற்புறமும் சுற்றி அவர்கள்

எளியோர் இவர்களை ஆட்டமிழக்க வைக்க
வலியோர் அவர்கள் தயாராயிருக்கிறார்கள்


அவர்கள்

ஆயத்தமாய்த் தாக்குதல் நடத்த
சூழ்ந்து நிற்கிறார்கள்

அடிக்கடிக் கூடிப்பேசி பல
திட்டம் தீட்டுகிறார்கள்

எல்லையைத் தாண்ட விடாமல்
தடுத்துப் பிடிக்கிறார்கள்

ஆனவமாய்ப் பேசிப் பார்க்கிறார்கள்
ஆவேசமாய் வீசித் தாக்குகிறார்கள்
ஓடவிடாமல் தடை செய்கிறார்கள்


இவர்கள்

தடுத்து ஆடுகிறார்கள்
தலை தப்ப ஓடுகிறார்கள்
எல்லைக் கோட்டை நாடுகிறார்கள்
மூன்றாம் நடுநிலையாளரின்
தீர்ப்புக்காகக் காத்திருக்கிறார்கள்


இடைவேளையில்

வேட்டு சத்தம் காதைப்பிழக்கிறது
வெடி சத்தம் வின்னைக் கிழிக்கிறது
நடுமுதுகில் எழும்பில்லாதவர்கள்
நடுநடுவே நடனமாடுகிறார்கள்

இவர்களின் வீழ்ச்சியை
அவர்கள் கொண்டாடுகிறார்கள்


சுற்றிலும்

பதட்டத்தோடு பார்த்துநிற்கும்
உற்றார் உறவினங்கள்
கூர்ந்து கவனிக்கும்
உலகப் பார்வையாளர்கள்

கருத்துச் சொல்லிப் பெயரெடுக்கக்
காத்திருக்கும் கணவான்கள்
தொடரும் நிகழவுகளை ஆரவாரமாய்
அறிவிக்கும் அறிவிப்பாளர்கள்

புதிய செய்திக்காக மட்டுமே
கவனித்திருக்கும் ஊடகங்கள்
தவறைத் தட்டிக்கேட்க முடியாமல்
திணரும் நடுநிலையாளகள்

இது எங்கோ நடக்கும் IPL
( இந்தியன் ப்ரீமியர் லீக் ) அல்ல

தெரிந்து கொள்ளுங்கள்
இது இங்கே நடக்கும் IPL
இது இனம் அழிக்கும் IPL

இலங்கையின் பழிவாங்கும் லீக் (IPL)
இலங்கையின் பலிகேட்கும் லீக் (IPL)
ஈழம் புறக்கணிக்கப்படும் லீக் (IPL)
ஈழம் புதைக்கப்படும் லீக் (IPL)

Monday, April 13, 2009

இப்படியும் ஒரு.......!!!!


விடியல் தினமும்
வந்து போனபோதும்
இருள் இன்னும் நீங்காத
இருண்டுபோன தேசம்

ஏன்? எதற்கு?
என்ற கேள்விகள்
தடை செய்யப்பட்டுள்ள
தடுமாறும் தேசம்

எங்கே? எத்தனை பேர்?
என்ற விபரங்கள் மட்டும்
பெருமையாய் வெளியிடும்
போதையிலிருக்கும் தேசம்

கணக்கு காட்ட
தனது மக்களையே
கொன்று குவிக்கும்
குழப்பத்திலிருக்கும் தேசம்

பத்திரிக்கையாளன்
பரபரப்பு செய்திகளை
பத்திரிக்கையில் தெரிந்துகொள்ளும்
பரிதாபமான தேசம்

பத்திரிக்கை சுதந்திரம்
படுகுழியில் தள்ளி
அதிபர் மாளிகை
அன்றைய செய்தி வெளியிடும்
அற்புதம் நிறைந்த தேசம்

சுண்டு விரல்
சூப்பும் பிள்ளையையும்
குப்பி சப்பும் போராளியென
பயந்துபோய் செல்லடிக்கும்
பதட்டத்திலிருக்கும் தேசம்

அபயம் தேடிவரும்
அப்பாவி மக்களையும்
பாதுகாப்பு வலையத்திற்குள்
படுகொலை செய்யும் தேசம்

புள்ளி விபரங்களால்
புளங்காகிதப் பட்டு
புல்லரித்துப் போயிருக்கும்
செல்லரித்த தேசம்

உள்ள நிலவரம் புரியாமல்
உண்மை நிலைமை தெரியாமல்
தன் முதுகை தானே
தட்டிக்கொள்ளும் தேசம்

நாட்டுக்கு உழைக்கும் பிள்ளைகள்
நாளை செயிக்கும் போது
நல்லோர் முன் மண்டியிடப் போகும்
நன்றி கெட்ட தேசம்

Saturday, March 7, 2009

அவன்,அவள்,நான்.......


கையில் விஷத்தோடும்
கண்களில் கலவரத்தோடும்
கையும் களவுமாய்
தலை குனிந்து அவன்
தரை பார்த்து நிற்கிறான்

தற்கொலை முயற்சி அது
தடைபட்ட வருத்தத்தில் அவன்
தலைவிறிக் கோலத்தில் அவள்

அண்ணன் என்றும் பாராமல்
அவள் அனலை வாரி வீசுகிறாள்

"சாகவேண்டும் என முடிவெடுத்தபின்
சாதிக்க வாய்ப்பு இருந்த போதும்
அமைதிச் சாவுதான் வேண்டுமெனில்
ஆணாய் பிறந்ததன் அர்த்தமென்ன ?

உன் சாவு சந்தேகத்தோடுதானே
உரசப்படும் இந்த உலகத்தால் !

எதனால் இது நிகழ்ந்தது ?
எப்படி இது நடந்தது ?
மருந்து குடித்தாலா ?
மாரடைப்பு வந்ததாலா ?
பயம் பிடித்ததாலா ?
பாசம் மிகுந்தலா ?
நோய் நொடியாலா ?
நொந்து போனதாலா ?

ஆளாளுக்கு ஒன்று கூறி
அசிங்கத்தின் ஒட்டு மொத்த
அடையாளமாகவே நீ
ஆக்கப் பட்டுவிடுவாயே!

மறந்து விட்டாயா அல்லது
மன்னித்து விட்டாயா ?

அம்மாவையும்
அப்பாவையும்
பொறுக்கி எடுத்து
எரியூட்டி முடித்து
எட்டுநாள் தானே ஆகிறது

அக்காவும் மாமாவும்
அவளது குழந்தையும்
சென்ற இடம் பற்றிய விபரம்
இன்றுவரைத் தெரியவில்லை!
உயிரோடாவது இருக்கிறார்களா ?
உண்மை இன்னும் புரியவில்லை!

எட்டத்தில் உள்ள சொந்தங்கள்
என்னவானார்கள் எனப் புரியவில்லை
பக்கத்தில் உள்ள பந்தங்கள்
பதுங்கிய இடம் தெரியவில்லை

உன்னால் முடியும்!
உண்மை உணர்!!

காயம்பட்ட இதயங்களுக்கு
களிம்பு தடவ முயற்சி செய்!
ஆயிரத்துக்குள் ஒன்றாய் இருந்துவிடாமல்
ஆயிரத்து ஒன்றாய் தனித்து நில்!

மண்ணோடு புதைந்த பின்னும்
உன்னோடு முடிந்து விடாமல்
உன்னுடய தடம் பதித்து செல்!
எதிரியின் மனதில் ஆழமாய்
என்றும் மறையா பயம் விதைத்து செல்!

வாழ்த்தி உன்னை நானே
வழி அனுப்பி வைப்பேன்"


வயதுக்கு மீறிய ஆவேசத்தோடு
வார்த்தைகளைக் கொட்டி விட்டு
இடுப்பில் கட்டியிருந்த என்னையும்
இடை மறைவிலிருந்த பொத்தானையும்
இதமாய் வருடிக்கொடுத்து விட்டு

ஏதோ முடிவோடு
எங்கோ கிளம்புகிறாள் அவள்

Sunday, January 18, 2009

நான்., மன்னார் குடா...!!!



நான் மன்னார் வளைகுடா
இரு நாடுகளின் கரையாய் இருக்கிறேன்
ஒரே இன மக்களின் தரையாய் இருக்கிறேன்

ஒரு மணிநேரம் பயணதூர இடைவெளியில்
அறுபதுவருட ஏற்றத்தாழ்வுகள் வாழும் நிலையில்

ஒரு கரையில் எப்போதும் கடல் காற்று வீசும்
மறு கரையில் இப்போதும் கண்ணீரின் வாசம்

கடல் நோக்கிக் காத்திருக்கிறார்கள் மக்கள்
கடல் காற்று வருமா என இங்கே
காக்க படகு வருமா என அங்கே
காதல் வளர்க்க அமர்ந்து இருக்கிறார்கள் இங்கே
காலன் வருவான் சேர்ந்து இருந்தால் அங்கே

மணல்வெளியில் தட்டுப்படுகிறார்கள் மழலைகள்
மணலில் வீடுகட்டி விளையாடுகிறார்கள் இங்கே
மணலே வீடாய் வீழ்ந்துகிடக்கிறார்கள் அங்கே

வான் நோக்கி எதிர்பார்த்திருக்கிறார்கள் சிறுவர்கள்
வானூர்தி பார்த்தவுடன் கையசைத்து
வழியனுப்பி வைக்கிறார்கள் இங்கே
விமான சத்தம் கேட்டவுடன் குழிக்குள்
வாய்பொத்திக் குதிக்கிறார்கள் அங்கே

நடந்து கொண்டிருக்கிறார்கள் பெரியவர்கள்
நல்ல தூக்கம் வரவழைக்க
நடைப் பயிற்சி செய்கிறார்கள் இங்கே
தூக்கத்தையும் சேர்த்து தூக்கி
துக்கத்தோடு நடக்கிறார்கள் அங்கே

வயிறு பிழைக்க படகேறுகிறார்கள் இங்கே
வாழ்க்கையே பிழைக்க கடலேறுகிறார்கள் அங்கே

வீதியில் அலையும் அவர்களின்
விதியின் உள்நோக்கம் புரியவில்லை
உறவை பிரிந்து தவிக்க அவர்கள்
குற்றமென்ன செய்தார்கள் தெரியவில்லை
பகுத்தறிந்து பார்த்தவரையில்
பகுதிக்குகூட விடை இதுவரை கிடைக்கவில்லை

உண்மையை யார் உணர்வார்?
நிலமையை எவர் உணர்த்துவார்?
அவலம் எப்போது தான் தீரும் !
நிலவரமும் எப்படித் தான் மாறும்!!

Saturday, January 17, 2009

அகதி அகற்ற....!


"அங்கு விரைந்துசென்று போரிடலாம் வா" என்று
இங்கு வீரவசனம் பேசி வாதிடலாம்
இளையோர் கூட்டம் சேர்த்திடலாம்-முதலில்
இங்குள்ள நடைமுறையைப் புரிந்து கொள்
இந்த நாட்டுநடப்பை தெரிந்து கொள்

அபயம் தேடி ஆதரவு நாடி
அண்டி வாழ வந்தவர்களை
அகதி என ஒதுக்கி வைத்து
அவமானப்படுத்திக் கொண்டிருக்கிறோம்

"அகதிகள் இல்லாத
அகன்ற உலகம் படைக்க
அலைகடலென படை திரண்டு.....
................................."

அர்த்தமற்ற மேடைப் பேச்சுகளை
அவர்கள் பாடை ஏறும் முன்பாவது நிறுத்துவோம்
அகதி என்ற சொல்லையாவது முதலில்
அகராதியிலிருந்து எடுக்க வலியுருத்துவோம்

'வந்தாரை வாழவைக்கும் தமிழகம்' என்று
நம்பி வெம்பி வந்தவர்களில்
இங்கு வந்து படித்தவர்களுக்கும்
அங்கேயே பட்டம் வாங்கியவர்களுக்கும்
கொஞ்சமும் இடமில்லை வேலை வாய்ப்புகளில்

பொறியாளர் பொதி சுமக்கிறார்...
ஆசிரியர் ஆடு மேய்க்கிறார்......
மேளாலர் மண் வெட்டுகிறார்.....
இயக்குனர் கல் உடைக்கிறார்......
.......
.......

வயிற்றுப் பிழைப்புக்காக
வந்த வேலையை தட்டாமல்
விதியை நொந்து செய்து கொண்டிருக்கிறார்கள்

வந்தவர்களை போட்டியாக நினையாமல்
வேலை வாய்ப்பில் தடம் பதிக்க
இட ஒதுக்கீட்டில் இடம் கிடைக்க
இயன்றதைச் செய்ய முயலுவோம்

மாற்று மொழி,இனத்தாரை
மண் ஆளும்வரை உயர்த்தியிருக்கிறோம்
தன் இனம் தேடிவந்த
தொப்புள்கொடி உறவுகளையும்
தூக்கிப் பிடிக்க தன்னாலானதைச் செய்வோம்