Showing posts with label நடப்பு. Show all posts
Showing posts with label நடப்பு. Show all posts

Wednesday, September 22, 2010

பொய்......பொய் தவிர வேறில்லை.......!


எனது கண்களுக்குள் பார்த்தபடியே
பேசிக்கொண்டே இருக்கிறான்
அவன்........

பொய்...
அத்தனையும் பொய்....
அவன் வாயிலிருந்து வரும்
அத்தனையும் பெரும் பொய்.....

உண்மையைப் போலவே பொய்யையும்
திண்மையாய்ப் பேசுகிறான் அவன்....

எனக்கு எல்லாம் தெரியுமென்பது
அவனுக்கும் தெரியும்தான்

ஆனாலும்......

எப்படிதான் முடிகிறது
இப்படி எல்லாம் பேசுவதற்கு ....

எப்போதுதான் திருந்துவார்கள்
இத்தன்மை கொண்டவர்கள்......

பேசி முடித்துவிட்டான் அவன்
என்முகம் பார்த்து நிற்கிறான்

அவன் நிறுத்தத்தானே
காத்திருந்தேன் நானும்........

ஆவேசமாகத் தொடர்ந்து
பேச ஆரம்பிக்கிறேன்

உண்மையைப் போலவே
ஒரு பொய்யை நானும்.......

.

Thursday, July 15, 2010

அவரவர் நிலை..........


அரவமற்ற ஆலயம் ...

கருவறையில் கடவுளும்...

இறுகிய மனதுடன் எந்தன்
கோரிக்கையோடு நானும்...

உருகிக் கரைந்து
இருளை முடிந்த அளவுக்கு
விரட்டியபடியே மெல்லக்
குறைந்து கொண்டிருக்கும்
ஒற்றை மெழுகுவர்த்தியும்.....

கலைந்துபோன வாழ்வில்
விளக்கேற்றி வளமாக்க
மறுகி வேண்டி அவன்
திருமுகம் பார்க்கிறேன் .....

அவனும்...

கவலைதோய்ந்த முகத்தோடு
கண்ணிமைக்காமல் உறைந்துபோய்
கவனித்துக் கொண்டுதான் இருக்கிறான்...

இன்னும் சில நொடிகளில்
எல்லாமும் முடியப்போகும்
அந்த மெழுகுவர்த்தியை .....


.