Wednesday, January 27, 2010

வட்டத்தில் ஓட்டம்...!


தேடுதலே வாடிக்கையாகிப்போன
வேடிக்கை உலகத்தில்
வாழ்நாளெல்லாம் பயணித்து
வழியெல்லாம் வலைவிரித்து
விடாமல் தேடிக்கொண்டே
இருக்கிறான் மனிதன்.,
கடவுளை...........

ஆங்காங்கே அவதரித்து
அருகிலேயே உருவெடுத்து
அதே நம்பிக்கையோடு
தேடிக்கொண்டே தான்
இருக்கிறார் அவரும்.,
மனிதனை..........

.

Monday, January 18, 2010

நவ( நாகரீக) கலியுகம்...!


நுனி நாக்கில்
குழைவாய் பசப்பலாய்
நளினமாய் நாசுக்காய் வலைவீசி
எதிரியையும்
சுண்டிஇழுக்கும்
வண்ணம்; வண்ணம் பூசிய
வசீகரிக்கும் வார்த்தைகள்..

பகலுக்கே கண்கூசும்படி
பகட்டு தெரிக்கும்
நவீனத்தில் மூழ்கிய
நவ நாகரீக ஆடைகள்...

எதிர்க்கண்கள்
கவனிக்காத பொழுதில்
அவசரகதியில் அத்துமீறி
கண்ட இடங்களைத்
தொட்டுத் திரும்பும்
பசிகொண்ட பார்வைகள்....

நூற்றாண்டுகள் கடந்தும்
உள்ளே ஆழ்மனம்
கற்கால மனிதன்போல
ஆடையில்லாமல்
இன்னும் அம்மணமாய்.....


.

Wednesday, January 13, 2010

நான் ..! எனது திருநாளில் ......! / துரை. ந. உ


1) பொங்கல் விருந்து :
======================

வரும்விருந்தைப் போற்றி வரவேற்று பொங்கல்
விருந்தோம்பப் பேராசை உள்ளே எனக்கு;
விதைப்பை சிறுத்துதான் உள்ளே இருக்கு;
விதைப்பை நிறுத்து அதுக்கு

[அமைப்பு : வெண்பா/ இன்னிசை/ ஈரடி மடக்கு(யமகம்)]


வரும்விருந்தைப் போற்றி வரவேற்று வாழ்த்தி
விருந்தோம்ப உள்ளம் இருக்கு – தரவே
விதைப்பை அளவேநெல் மீதம் இருக்கு
விதைப்பை நிறுத்து அதுக்கு

[அமைப்பு : வெண்பா/ நேரிசை/ ஈரடி மடக்கு(யமகம்)
விதைப்பை = விதையிருக்கும் பை
விதைப்பை = விதையிடுதலை ]

2) வீரமுன்னா ...!
------------------

வாழையை வெட்டியே வீழ்த்தி; இளம்குரும்
பாளையைச் சீவியே வீரமென்பார் - காளைக்கு
திட்டிவா சல்கதவின் பக்கம் பதறாமல்
எட்டுநொடி நீநின்று காட்டு.....


[அமைப்பு : வெண்பா/ நேரிசை]

Sunday, January 10, 2010

உருவமும் உள்ளமும்......ஒருவாய் பழைய சோறு
இல்லையென மறுத்து
அறைந்து பூட்டியது
ஆளுயர வாசல்க் கதவு

பாதிப் பசியாற்ற
யாருக்கும் தெரியாமல்
சூடான சாதத்தின்
வாசத்தை வாசலுக்குக்
கொண்டு வந்து சேர்த்தது
கொஞ்சமே திறந்திருந்த
குட்டிச் சன்னல் ஒன்று

உருவமும் உள்ளமும்
ஒன்றாய் இருப்பதில்லை
எப்போதும்
.

Thursday, January 7, 2010

கவனம் குவி / காரியம் கூடும்


கவனம் குவி / ஒரு நிலைப் படுத்து :

கோவில் திருவிழா...

அலையலையாய் சனத்திரள்
ஒலிபெருக்கியின் அலறல்
செவிகிழிக்கும் பலகுரல்...

யானைபுகுந்த
பாத்திரக்கடையின் கூக்குரலும்கூட
கடலில் கரைந்தக் காயமாய்ப்
காணாமல் போகுமதந்த பேரிரைச்சலுள்

ஓரமாய் அமர்ந்திருந்த
பார்வையற்ற அவனின்
இதழோரம் தோன்றியதோர்
கீற்றுப் புன்னகை…….

சுற்றியுள்ள எல்லாம் ஒதுக்கி
தட்டில் விழும் நாணயத்தின்
மெல்லிய ஒலிக்காக
மட்டுமே காத்திருக்கும்
அவனது செவிகள்
சொன்ன சேதிகேட்டு …………..

.

Monday, January 4, 2010

மிக முக்கிய அறிவிப்பு / உங்களுக்கும் செய்தி உண்டு இதில்...மரணம்.....
மனம் பதற வைத்த
அகால மரணம்......
யாருமே எதிர்பாராமல் நிகழ்ந்த
மாரடைப்பு மரணம்.....

அவனுக்கு முப்பது தான்
தாண்டி இருக்கும்....

அங்கே.....
நிலைமையின் தீவிரம் தெரியாமல்
அவன் காலைச் சுற்றிவிளையாடும்
குட்டிக் குட்டிக் குழந்தைகள் .

எதிர்பாராத வேளையில்
எதிர்காலமே இருண்டுபோய்
உணர்ச்சியெல்லாம் உறைந்துபோய்
தலைமாட்டில் விழுந்துகிடக்கும்
வெளி உலகம் தெரியாத மனைவி

கரையேறும்காலத்தில்
கரையேற்றுவான் என
நம்பியிருந்த ஒரேமகனை
கரையேற்றும் கட்டாயத்தால்
கலங்கிப் போயிருக்க்கும்
தளர்ந்துபோன பெற்றோர்

இழப்பின் தீவிரம் அறிந்து
இதயம் துடித்து ஓடிவந்து
சுற்றி நிற்கும் சுற்றத்தார்


இன்றிலிருந்து
அதிகாலை வேளையில்
எப்படியும் தொடர்ந்து
ஒருமாத காலத்திற்காவது
கூட்டத்திற்குக் குறைவிருக்காது

’எங்க ஊரு
நடைப்பயிற்சி மைதானத்தில்’

[ இந்த ஆண்டின் முதல்மடல். உடற்பயிற்சியின் தேவையை உணர்த்துவதற்காக இதுபோல ஆரம்பித்துவிட்டேன் . மன்னிக்கவும் . இதனால் ஒருவர் பயிற்சி செய்ய முடிவெடுத்தாலும் / தொடர்ந்தாலும் எனக்கு வெற்றியே ]