Friday, July 30, 2010

'தங்க’க் கூடு...............!தொடுவானம் வரையிலும்
எட்டுத்திக்கும் பரந்திருக்கும்
கடல் போன்றதொரு
தோப்பு............!

சுற்றிலும் வேலியிட்டு
சுத்தமாய்க் களை பறித்து
அற்புதப் பராமரிப்பில்
ஆயிரம் ஆயிரம்
மரங்கள்……..!!

வேலிக்கு வெளியே
தன்னந்தனியாய்
நிற்கும் ஒற்றைக்
கருவேல மரத்தில்
கூட்டம் கூட்டமாய்க்
கூடுகட்டி இருக்கின்றன
பறவைகள்…………!!!

.

Thursday, July 29, 2010

கனவு,இலக்கு,வெற்றி.........!


கனவுகளை மொத்தமாய்
கனரக வாகனத்துள்
கடுகளவும் இடையின்றி
கட்டி அடைத்துக்கொண்டு..
திட்டங்களை அணைத்துக்கொண்டு...
எட்டியிருக்கும் இலக்கினை
அடைந்துவிடும் வேகத்தில்
பளபளக்கும் சாலையில்
புலியின் பாய்ச்சலில் நான் .....

ஒற்றையடிப் பாதையில்
ஒரே ஒரு சுமையைத் தூக்கி
எனக்குப் பின்னால்
நடக்கத் தொடங்கியவர்கள்
ஏற்கனவே தொட்டிருந்தார்கள்
வெற்றியின் கோட்டை.
.

Wednesday, July 28, 2010

உண்மை உரை(றை)க்கும்.......!


எல்லாம் முடிந்து சிதையில்
எரிந்து கொண்டிருக்கிறது
ஒரு உடல்

சுற்றிலும்
குளமாய் நிறைந்து
தளும்புகின்றன கண்கள்

புகையாய் மண்டும்
நினைவுகளால் சில....

மண்டிச் சூழும்
புகையால் பல.......
.

Monday, July 26, 2010

நான் இந்தியன் ......... !


26-07-10 :
கார்கில் வெற்றி(யின்)வீரர்களின் நினைவுநாள் :

வீரச் சகோதரர்களுக்கு சமர்ப்பணம் :


கார்கில்

- இங்கே

சூரியனும் பதுங்கியே
...சலனமின்றி பயணம் வரும்
சந்திரனும் பயந்துபோய்
...சந்தடியின்றி தவழ்ந்து வரும்

காற்றும் பயத்தோடு
...கலங்கியபடியே வீசும்
மரங்களும் தங்களுக்குள்
...மெளனமாகவே பேசும்

எதிரிக்கு எப்பவுமே
...இதன்மேல் நேசம்
எல்லையில் இப்பவுமே
...தொல்லையின் நாசம்

மலையெங்கும் மழைபோல
...வெண்பனியே பேசும்
வாழ வழியில்லாமல் எங்கும்
...வஞ்சனையின் வாசம்

ஆனாலும் என்ன
அது என் தாயின் தேசம்


அரைஜான் ஆக்கிரமிக்க எண்ணி
...அரையடி முன் வைத்தாலும்
அரைஞாண் அவிழும் வரை
...அடித்தே விரட்டிடுவேன்

அன்னை பூமியில்
...அந்நியன் ஒருவன்
அனுமதியின்றி புகுந்து
....அங்கே தேவையின்றி

உதிர்ந்து கிடக்கும் ஒரு - வீண்
...மயிரைக்கூடத் தொடவிடேன்
எதிரியைத் தடுக்க எனது - இன்
...உயிரையும்கூடத் தந்திடுவேன்

நான் இந்தியன்..
நாம் இந்தியர்கள்...

வாழ்க எல்லைக் காப்பாளர்கள்....
வளர்க அவர்தம் குடும்பங்கள்......

.

Sunday, July 25, 2010

தில்லாலங்கடி ; தில்லா சொல்லியடி .......


தில்லாலங்கடி ; தில்லா சொல்லியடி

சங்கரின் பார்முலாவில் வந்த தெலுங்கு ‘கிக்’ ஒன்றை ’தில்லாலங்கடி’யாக்கி இங்கே தில்லா சொல்லி அடிச்சிருக்காங்க .
வெற்றியை.

தனது இலக்கினைப் பற்றிய தேடலில் இருக்கும் ஒரு இளைஞனின் (வழ்க்கமான) கதை தான். அதைத்தான் அதக்களமாகச் சொல்லி இருக்கிறார்கள் . லாஜிக்கெல்லாம் பார்க்காமல் ஜாலியாக 3 மணி நேரத்தை எஞ்சாய் பண்ண நினைப்பவர்களுக்கு சரியான படம் இது ...

’இவ்வளவு ஜாலியான ஒருவன் காதலனாய்க் கிடைத்தால் ...
இப்படி ஒரு லூசுப் பொண்ணு காதலியாக கிடைத்தால்...
இந்தமாதிரி ஒரு அப்பா,அம்மா நமக்குக் கிடைத்திருந்தால்...........
இப்படி ஒருவேலை(க்ளைமாக்ஸ்) நமக்குக் கிடைத்தால்........’

இப்படி சில ஏக்கங்களை படம் முடிந்து வெளியே வருபர்களிடையே விதைத்திருப்பது இயக்குனரின் வெற்றி

தியேட்டருக்கு வெளியே வயிற்றுவலி மாத்திரையின் விற்பனையைக் கூட்டி இருப்பது திரைக் கலைஞர்களின் வெற்றி

ஒரேபாடலில் நாயகனும் நாயகியும் 15க்கும் மேற்பட்ட பாத்திரங்களாகக் கலந்து வருவது , மலேசியாவை ’நம்ம ஊரு’ போலக் காட்டுவது ஒளிப்பதிவாளரின் வெற்றி

ஒரு (பெண்)அரசியல்வாதியிடம் பண உதவி கேட்க , எதிரியான உனக்குத் தரமாட்டேன்,உன்னை என்காலில் விழவைக்க எவ்வளவு ஆனாலும் செல்வு செய்வேன் என அவர் கூற, தடாலென அவர்காலில் விழுந்து நாயகன் பணத்தைப் பெற்றுச் செல்ல , அரசியல்வாதி குழம்பி ‘இப்போ இங்கே செயிச்சது யாரு?’ என்று புலம்ப , அந்தக் கேள்வி அரங்கில் பார்வையாளர்களயும் தொற்றிக் கொள்கிறது . இது வசனகர்த்தாவுக்குக் கிடைத்த வெற்றி

பாடல்கள் வரும் நேரத்தில் கடைகளில் வியாபாரம் சூடு பிடிப்பது இசையமைபாளரின் வெற்றி


’ஏழையின் சிரிப்பில் இறைவன் இருக்கிறான் ’ / ’நாலுபேருக்கு நல்லது செஞ்சா எதுவும் தப்பு இல்ல’ என்பதை இன்று

– ’முடியாதக் குழந்தைகளுக்குச் செய்யும்போது அவங்க முகத்துல தெரியுதே ஒரு சிரிப்பு , அதுலதான் இருக்கு ’கிக்’கு. அதுக்காக என்னவேணா செய்யலாம்’’
என்று லேசாக மாற்றிச் சொல்லி இருக்கிறார்கள்

இது சொல்லவந்த செய்தி 1

அவ்வளவுதான் ., இதுதான் கதையும். அப்படியே கதையோட ஓட்டத்தில் போகுறபோக்குல ஒரு செய்தி வரும் பாருங்க

”தலைக்கனத்தைத் தரும் வெற்றியைவிட
ஜெயிக்கணும்ங்கிற வெறியைத் தரும் தோல்வியிலயும் ஒரு ‘கிக்’ இருக்கு ”

இதுதான் செய்தி 2 , மிக முக்கியமானதும் கூட ..

இதுமட்டும் புரிந்துவிட்டால் தோல்வியில் துவண்டு போவோர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்ட இதைவிட வேறு மருந்து இருக்க முடியாது

இந்த இரண்டு செய்திகளும் குறைந்தது இரண்டுபேரின் மனதுக்குள் பதிந்துவிட்டாலும் இந்தப்படத்திற்கு மாபெரும் வெற்றிதான் . ஏற்கனவே 50% வெற்றிப்படமாகிவிட்டது ( 1 ஆளுக்குள் (எனக்குள்) பதிந்துவிட்டதே :-)

வாழ்த்துகள் ...
.

ம்ம்ம் .! அயலகத்தில்...!! அவனுக்கென்ன..!!!


ஏக்கப் பெருமூச்சுகளால்
முழுதும் நிரம்பிவழிகிறது அறை

சுற்றிலும் காற்றிருந்தும்
சுவாசிக்கத் திணறுகிறது இதயம்

துக்கம் இமை நனைக்க
தூங்க மறுக்கின்றன நினைவுகள்

எனது தனிமையோடு
ஆவேசமாகப் போட்டியிட்டு
செயித்துக் கொண்டே இருக்கிறது

அந்தக்
கடிகாரத்தின் நொடிமுள்........
.

Thursday, July 15, 2010

அவரவர் நிலை..........


அரவமற்ற ஆலயம் ...

கருவறையில் கடவுளும்...

இறுகிய மனதுடன் எந்தன்
கோரிக்கையோடு நானும்...

உருகிக் கரைந்து
இருளை முடிந்த அளவுக்கு
விரட்டியபடியே மெல்லக்
குறைந்து கொண்டிருக்கும்
ஒற்றை மெழுகுவர்த்தியும்.....

கலைந்துபோன வாழ்வில்
விளக்கேற்றி வளமாக்க
மறுகி வேண்டி அவன்
திருமுகம் பார்க்கிறேன் .....

அவனும்...

கவலைதோய்ந்த முகத்தோடு
கண்ணிமைக்காமல் உறைந்துபோய்
கவனித்துக் கொண்டுதான் இருக்கிறான்...

இன்னும் சில நொடிகளில்
எல்லாமும் முடியப்போகும்
அந்த மெழுகுவர்த்தியை .....


.

Monday, July 12, 2010

அழகென்றால் அப்படியே .........!


அழகென்றால் அப்படியே
அள்ளி அணைப்பேன்

அழகில் என்னை இழப்பேன்
உலகம் தன்னை மறப்பேன்

கடலின் பொங்கும் நுரைபோல
கரைபுரண்ட வெள்ளைக்காடு
உள்ளம் தொலைத்தேன்
உள்ளே தொலைந்தேன்
வெளியேற மனமில்லை - அது
குண்டுமல்லித் தோட்டம்


வானவில்லைத் தெளித்தாற்போல்
வண்ண மலர்க் கூட்டம்
கண்மூடி இறங்கினேன்
என்னுள்ளே கிறங்கினேன்
மீண்டுவர மனமில்லை - அது
செண்டுமல்லித் தோட்டம்

பூரணநிலவின் உதயநிறத்தில்
சூரியனைப் பார்த்தபடியே
சிரித்துக் குலுங்கிய கானகம்
உள்ளே மெல்ல நுழைந்தேன்
உள்ளம் முழுதும் இழந்தேன்
உதறிவர இயலவில்லை – அது
சூரியகாந்திக் கூட்டம்

விண்ணுலகின் மஞ்செல்லாம்
மண்ணுலகில் புகுந்ததுபோல்
பஞ்சுப் பொதியாய் மலர்வனம்
நெஞ்சம் கொள்ளை கொள்ள
உள்ளே விழுந்தேன் - உடனே
உருண்டேன் புரண்டேன்
வெளியேர விழைந்தேன்
வழிதான் தெரியவில்லை – எனக்கு
வலியும் குறையவில்லை

அது...........

மலர் மூடிக்காத்திருந்த
நெறுஞ்சிமுள்க் காடு

அழகென்றால் அப்படியே
அள்ளி அணைக்க.............. !?!?!

.

Friday, July 9, 2010

யார் சொல்லி........!


’’பச்ச ஒடம்புக்காரீ’ன்னு
பவுசாத்தான் படுக்க முடியுமா ..?

கொளுந்தியாளப் போல நானும்
கெழுத்தியப்போலக் கெடக்க முடியுமா ..?

காலைல...
சாவலை எழுப்பி வெரட்டி
சாலையைக் கழுவி பொரட்டி

தூக்கத்தை மொத்தமா வெலக்கி
முத்தத்தை சத்தமில்லாம ஒதுக்கி
தூக்கை சுத்தமா தொலக்கி

நீச்சத் தண்ணிய ஊத்திக்கிட்டு
பச்சப் புள்ளயத் தூக்கிக்கிட்டு

எட்டுபோட்டு நடக்கணும்
காட்ட மேட்டக் கடக்கணும்
தோட்டம் போயிக் கெடக்கணும்......

புள்ளய அமத்திப் போட்டு
புல்லறுக்கப் போகணும்

அரை வயிறு கஞ்சிக்கு
நெஞ்சிமுட்ட சொமக்கணும்

ம்ம்ம்ம்ம்...............”

நட்ட நடு சாமத்துல
காதடைக்கும் பசியால
கெட்ட சுடும் நெனப்புல
அரைக்கோழித் தூக்கத்துல
பொரண்டுத்தான் படுக்கையிலெ

ஏங்காதுக்குள்ள பச்சப்புள்ள
ஏங்கியழும் சத்தம் கேட்டு நான்

ஒதறிப் பதறி குத்தவச்சேன்
அவசரமாத்தான் பாத்துவச்சேன்

ஒதட்டுப்பால் குடிச்சுக்கிட்டு
எதமாத்தான் தூங்குதான் என்ராசா

’கெழக்கால ஒருபுள்ள
பாலுக்கு அழுதிருக்கு’


பாயில சாயயிலத்தான்
பாவிமக கவனிக்கேன்....

எங்கேயோ கேட்ட
ஏங்கியக் குரலுக்காக
இங்கே நனைஞ்சிருக்குது
என்னோட மாராப்பு.............................!


.

Monday, July 5, 2010

என்னோட அப்பாவும்.............


அய்ய்ய்ய்யா.......
குட்டிராசு அப்பாரு
முதுகுமேல அவன
மூட்டைத் தூக்கிப் போறாரு

அய்யய்யோ.....
அழகோட அப்பாரு
அவனோட காதப் புடிச்சி
தரதரன்னு தெருவுல
இழுத்துக்கிட்டேப் போறாரு

அய்யோ அய்யோ.....
சுரேசோட அப்பாரு
அரைப்பெடல்ல சைக்கிள்
அவனுக்கு ஓட்டிக் காட்டி
கீழேவிழுந்து கெடக்காரு

ஓஓஓ.....
முத்துப்பேச்சி அப்பாரு
முக்குக்கடை மூலைல
முக்காடு போட்டுக்கிட்டு
புகையப் போட்டு நிக்காரு

அங்கப்பார்ரா.....
மாடசாமி அப்பாரு
அப்பத்தா திட்டுனாலும்
அப்படியே வாங்கீட்டு
வாயப்பொத்தி சிரிக்கிறாரு

ஆகா.....
சுந்தரியோட அப்பாரு
பொட்டிக் கடைல இருந்து
பொரிகடல உரலுமுட்டாயி
வாங்கீட்டுப் போறாரு

ம்ம்ம்ம்ம்.....
என்னோட அப்பாரு
.
.
.ம்
..ம்
...ம்

.......எங்கூட
இன்னும் கொஞ்சம்
நாளு கூட
இருந்திருக்கலாம் :(

.

Saturday, July 3, 2010

மந்தையில் சில ஆடுகள் .............!மந்தையில்

மொந்தையாய் சில ஆடுகள் .......கர்வத்தோடு தலை நிமிர்ந்து

கம்பீரமாய்த் திறிகின்றன .........முதுகிலுள்ள

அடையாளக் குறியீடு

அனைவருக்கும் தெரியும்படி

ஆணவத்தோடு அலைகின்றன...........’’சனி இரவில்

வழக்கம்போல வண்டி வருமே....

’அவங்க’
போன மாதிரியே

வாகனமேறி பயணம்

நாங்களும் போவோமே’’குதூகலத்தில் பெருமிதத்தோடு

குதியாட்ட்ம் போடுகின்றன .......’போகும்’ இடம் தெரியாத

’போய்’ச் சேரப்போகும்அந்த ஆடுகள் .............................!