Showing posts with label தேர்தல். Show all posts
Showing posts with label தேர்தல். Show all posts

Saturday, May 16, 2009

நான் ஏற்கனவே செயித்துவிட்டேன்....!!!


ஓட்டு எண்ணும் முன்னரே
ஒருதுளி சந்தேகமின்றி
எனதுதொகுதித் தேர்தலில்
ஏற்கனவே செயித்துவிட்டேன்

சனநாயகத்தில் மக்கள்தாம்
முடிவுக்காகக் காத்திக்கவேண்டும்
பணநாயகத்தில் வீட்டு வாசலில்
முடிவு எனக்காகக் காத்திருக்கும்

எனது கட்சிக்காரருக்கும்
எதிர் கட்சிக்காரருக்கும்
என்கணக்கில் பாதியும்
காந்திகணக்கில் மீதியுமாய்
தேர்தல்நிதியாய்ப் பணத்தை
தண்ணீராய் இறைத்திருக்கிறேன்

எனது பணத்துடன்
எனது பணம் மோதி
எனது பணம் செயித்து
என்னையும் செயிக்கவைக்கும்
எட்டாவது அதிசயமிதை
எங்கேனும் கண்டதுண்டா !

எவர் செயித்தாலும் கிரீடம்
என்தலைக்கு வந்து சேரும் !!

செயிக்கும் அணியிலேயே இருந்தவன்
செயிக்கும் அணியில்தான் இருக்கிறேன்
செயிக்கும் அணியில்தான் இருப்பேன் !!!

Monday, March 30, 2009

தெரியும்...! ஆனால் தெரியாது..!!


அமைச்சர்கள்வரும் அந்தத் தார்சாலை
அன்றுதான் போட்டதென்பது
அவர்களுக்குத் தெரியாதா?

சாலையோரம் தூவப்படும்
நோய்த் தடுப்பு மருந்துகள்
அன்று மட்டும்தான் என்பதும்
அவர்களுக்குத் தெரியாதா?

தெருவிளக்கு எரியாமல் கிடக்க
ஆடம்பர விளக்குகள் ஆயிரம்எரிவது
அன்று மட்டும்தான் என்பதும்
அவர்களுக்குத் தெரியாதா?

எங்களுக்குத் தெரியும் என்பதாவது
அவர்களுக்குத் தெரியுமா?தெரியாதா??

Tuesday, January 6, 2009

சொர்க்கத்தின் மறுபெயர்...!



"கால் கடுக்க நின்னு
கையெடுத்துக் கும்பிட்டாலும்
கண்டுக்காம போயிருவானுக,
கடவுளே! இப்ப வந்து எங்
காலுல இல்ல உழுறானுங்க!"

"நாதியத்துப்போன என்ன
நாய்கூட மோந்து பாக்கலியே,
நாலு நாளா கார்ல வந்து
நல்லா இருக்கியான்னு நாலுவார்த்த
எந்த ஊரு மவராசங்களோ
எங்கிட்ட வந்து கேட்டுப் போறாங்களே!"

"கட்ட எப்ப சாயும் திண்ண எப்ப காலியாவுமுன்னு
பாட கட்டிக் காத்திருந்தாங்க பெத்த மகனுங்க,
படுபாவி மகளே போய்சேந்திராதேன்னு
பொத்திப் பொத்திப் பாத்துக்கிறாங்க வந்த புள்ளைங்க!"

"நாலணாகாசு கேட்டாக்கூட
நாக்கத் துறுத்திட்டு தொரத்துவானுவோ
நான் கைய நீட்டுறதுக்கு முன்னாடியே
நூறு நூறா வெட்டுறானுவளே"


இல்லாத சாலைகள் கிடைக்கும்
இலவசமாய் சேலைகள் கிடைக்கும்
வேட்டி சட்டையும் சேர்ந்து கிடைக்கும்
வட்டி கட்டவும் பணம் கிடைக்கும்
திருவிழாபோல கறிசோறு
திகட்டும் மட்டும் கிடைக்கும்
வேலை வேண்டுமே என்ற
கவலை இனிமேல் வேண்டாம்
தினம் தோறும் ஐந்நூறு
தவறாமல் கிடைத்து விடும்
இந்தியாவே இப்ப இருட்டுக்குள இருந்தாலும்
எங்க ஊரு எப்பவும் வெளிச்சத்திலேயே மிதக்கும்

இருங்க!...இருங்க!!....இருங்க!!!.....

ஊர்மக்களின் பேச்சைக் கேட்க கேட்க
உள்ளபடியே சந்தேகம் பூதாகரமாய் எழுகிறது!
சொர்க்கத்திலா இருக்கிறார்கள் அவர்கள்?
சந்தேகமாய் இருக்கிறது எங்களுக்கு!

அட!இடைத் தேர்தல் அறிவித்திருக்கிறார்கள் அங்கே
ஆமாம்!!இலவச சந்தையை திறந்திருக்கிறார்கள் அங்கே

சந்தடிச் சாக்கில் எங்களுக்குள்ளும்
அந்த சாத்தான் எட்டிப் பார்க்கிறது

இனிமேல் எல்லா தொகுதியிலும்
இடைத்தேர்தலாகவே இருந்தால் என்ன?
ஒருமாத இடைவெளி விட்டு
ஒவ்வொன்றாய் நடத்தினால் என்ன??

நடத்தி முடிக்க கொஞ்சம் பேசிப் பார்க்கலாம்!
நடந்தால் நாமும் நாலு காசு பார்க்கலாம்!!

சட்டத் திருத்தம் கொண்டுவந்தால்
நாட்டு மக்கள் அனைவருமே
நலம் பலப் பெறுவார்களே!
நல்வாழ்க்கை அடைவார்களே!!

Friday, November 21, 2008

கேள்வியும் பதிலும் ..?!


கேட்க்கும் கேள்விகளுக்கெல்லாம்
கவனமாய் வந்து விழுகின்றன பதில்கள்

"கூடிக்கொண்டே போகிறதே விலைவாசி" என்றால்
கேரளாவை விட குறைச்சல் என்கிறார்கள்

"பேருந்துக்கட்டணம் அதிகம்" என்றால்
பஞ்சாபில் பாதிதான் என்கிறார்கள்

"மின்கட்டணம் கூடுதல்" என்றால்
மிசோரத்தில் முக்கால் வாசிதான் என்கிறார்கள்

"ராத்திரியெல்லாம் மின்தடை" என்றால்
ராஜஸ்தானில் மின்சாரமே இல்லை என்கிறார்கள்

எந்தக்கேள்வி கேட்டாலும்
இந்தியாவின் பெயரைச் சொல்லி தப்பிக்கிறார்கள்

ஆனாலும் இந்தக் கேள்விக்கு மட்டும்
அவர்களிடம் இருந்து பதிலே இல்லை

"ஒருவேளையாவது கஞ்சி
ஒழுங்காய் குடிக்கவேண்டும் இங்கே
ஒருவழியாவது சொல்லுங்கள்" என்றால்
விடை தெரியாமல் முழிக்கிறார்கள்
விழி பிதுங்கி நிற்க்கிறார்கள்

ஐந்தாண்டு என்று இருப்பதை
அவ்வப்போது என மாற்றிவிட்டால்
அந்தக் கேள்விக்கான விடைகள்
அவ்வப்போதே கிடத்துவிடும்!