Showing posts with label இயற்கை. Show all posts
Showing posts with label இயற்கை. Show all posts

Friday, July 22, 2011

கடமையாற்ற விடுங்களேன்...கனவான்களே...!

ii (15).gif

அதிகாலையிலேயே நகரம்

பரபரவென அதிர ஆரம்பித்து

மிககிக வேகமாக

சரசரவென நரகமாக

உருமாறத் தொடங்கியிருக்கிறது..


தனது கடமையில் தோல்வியுற்று

இருக்குமிடத்திலிருந்து பதறி வெளியேறி

பகலெல்லாம் எங்கெங்கோ ஒளிந்திருந்து ....


பின்னிரவில் வெளிப்பட்டு

இறுக்கமான அடுக்குமாடிகளை

நெருங்கும்வேளையில்....


ஆங்காங்கே துருத்திக்கொண்டு

மூடியக் கதவுக்கு வெளியே

வெறிநாயெனக் காத்திருக்கும்

குளிரூட்டும் மிருகங்களின்

சன்னமான உறுமலால் மிரண்டு...


சரேலென தரை நோக்கி இறங்க..

அங்கும்

சாத்திய சன்னல்களே வரவேற்க


வேறுவழியின்றி......

சாலையியோரத்தில்

முடங்கிக் கிடக்கும்

தெருநாயின் தலையை

வருடத் தொடங்கும் வேளையில்...


திடுமென...

அதிகாலையிலேயே

அதிர ஆரம்பிக்கிறது நகரம்....


மீண்டும்..

பதறி விலகியோடத்

தொடங்குகிறது தென்றல்......


[நன்றி;கரு :யாழிசை/தங்கராஜ்]

Monday, February 14, 2011

10 : தினமும் தான் போராட்டம்....!சூரியனுக்கே வெற்றி இன்று ...!!

bhgtw (387).gifbhgtw (364).gif

வேருக்கு நீரில்லாப் பருவத்தில்

கருகாமல் உயிர் பெருக்க

தருவெல்லாம் பசிபொறுத்து

இரவெல்லாம் காத்திருக்க...


வாழ்வளிக்க வானிலிருந்து

துகள்துகளாய் தவழ்ந்திறங்கி

துளியாய் ஒன்றாகி உருவாகி

இலைகளைத் தொட்டவுடன் தங்கி

தலைவழி உணவாகியது போக

மீதமிருந்தது தேங்கி இருந்தது

புல்லின் நுனியின் முனையிலும்....

தாமரையின் இலையின் நடுவிலும்....


கிரீடம் கிடைத்த கர்வத்தில்

புல்தன் நிலையில் நிமிர்ந்திருக்க...

தன்னிலைதான் பெருமையென்று

தாமரை இலையும் மிதந்திருக்க...


புல்லின் கர்வத்தைத்

தட்டிப் பறித்திட

காற்றும் திட்டமிட...

இலையைக் கவிழ்க்கும்

அலையை எழுப்ப

கலங்கிய குளமும் முயல...


நடப்புகளைக் கவனித்தபடி

நிகழ்வுகளைக் கணித்தபடி

வெற்றிச் சிரிப்பூடன்

ஏற்கனவே பனித்துளியை

பருகத் தொடங்கி இருந்தான்

அதிகாலைச் சூரியன்......

tyhjui (64).gif
[ நன்றி :பாலாஜி ராமானுஜம்,தேசிங்கு ராஜா/ அண்ணாமலை]

Wednesday, January 5, 2011

ஓவியமாய் ஒருத்(தீ)தி :

அழகுக் கவிதைகள்..

அதீதக் கற்பனைகள்..

சிறுசிறு சீண்டல்கள்..

திடீர் தீண்டல்கள்...கலந்த

அற்புதக் கலவையிலிருந்து

எனதுவிரல் தூரிகையால்

வண்ணம் எடுத்துத்

தீட்டத் துவங்குகிறேன் நான்.....


சின்னச் சிணுங்கல்கள்..

செல்ல மிரட்டல்கள்..

தள்ளி உதறுதல்..

வெட்டி விலகுதல்...என

தூரிகையின் வண்ணங்களுக்கு ஏற்ப

நொடிக்கொரு ஓவியமாய்

மாறிக்கொண்டிருக்கிறாள் அவள்........


[நன்றி :கரு: இயற்கை சிவம்]

Sunday, December 26, 2010

அறிவியல் அறியாத மழைக்கான காரணம் ...

என்னவள்

தாய்மையுடன் சென்றிருக்கிறாள்


அவளது தாய்வீட்டுக்கு நேற்று..


வெள்ளி இல்லாமல்

துடைத்து விடப்பட்ட

நேற்றைய வானம் போலவே

ஒரேநாளில் அனைத்தும்

அணைந்து போனது எனக்குள்...


அட....

இன்றும் வானில்

நேற்றைப் போலவே....

எங்கும் காணவில்லை

மின்னும் அந்த நட்சத்திரங்களை....


எதிரே..

வரண்டு போன

பளிங்குத் தரையைப் போல

வெறுமையாய் வெளிர்வானம்..


திடீரென வீசத்துவங்கியது

மண் வாசம்...

கடும் கோடையிலும்

மழையின் வாசம்...


என்வீட்டு முற்றத்தில் மட்டும்

மேகங்கள் திரண்டொரு

மழைக்கான முன்னேற்பாடு...


வாசலில் இருந்த

கோலத்தின் கோடுகளை

அழிக்கும் முயற்சியில்

மும்முரமாய் இருக்கிறது மழை...


அட

அப்போதுதான் கவனிக்கிறேன்


அதுவொன்றும் சராசரி மழையன்று...

இதுவொரு மீட்புப் போராட்டமென்று.....


இரண்டு நாட்களுக்கு முன்

என்னவள் வரைந்து......இன்னமும்

அழியாத கோலத்தின்

வளைவுகளுக்குள் சிக்கி

தரையெங்கும் இறைந்து

அடைபட்டுக் கிடக்கின்றன

அந்த நட்சத்திரங்கள்

புள்ளிகளாக ...................!

.

Tuesday, November 16, 2010

எனக்குப் பயனில்லாதது தான் ......


பசையில்லா வறண்ட

கரிசல் நிலத்தைப்

பரவலாய் ஆக்கிரமித்திருக்கிறது

பசுமையாய் கருவேலங்காடு.....


அடிமுதல் கலக்கும்

மிரட்டும் தோற்றத்துடன்

கூரிய முட்களும்

பாரிய கிளைகளுமாய்

பிரமாண்டமாய் காடு

என்கண் முன்னால்...


பயனில்லாத அதனை

பங்கம் ஏதுமின்றி

எப்படி அழிக்கலாம்

என்ற சிந்தனையில் நான்

இருக்கும் வேளையில்.....


என்னையும் தாண்டி

சருகொன்றைக் கொத்தியபடி

கருவொன்றைச் சுமந்தபடி

கூடுகட்ட இடம்தேடி

அந்தக்

காட்டுக்குள் மறைகிறது

சிட்டுக் குருவி

ஒன்று ..............

.

Saturday, November 13, 2010

இறுதியில் கிடைக்கும் இரண்டில் ஒன்று !




கிடைக்கக் கூடும் விடை ...!

சிறைப் பிடிக்கப்பட்ட கோபத்தில்

சீற்றத்தோடு சுற்றிவருகிறது

கூண்டுக்குள் சிங்கம் ஒன்று....


விடுதலையின் வேகத்தை

தூரிகையால் சிறைபிடிக்க

தீரத்தோடு காத்திருக்கிறான்

தூரத்தில் ஓவியன் ஒருவன்


சிதைந்த ஓவியனோ !?

அல்லதொரு

சிறந்த ஓவியமோ !?........

இரண்டில் ஒன்று

இறுதியில் கிடைத்துவிடும்....


கேயாஸ்தியரியில் (chaos theory)

புதைந்திருக்கக் கூடும்

உங்களுக்கான உறுதியான விடை .....!


.

Sunday, October 24, 2010

வந்ததொரு வாய்ப்பு


ஓட்டைகளால் வேயப்பட்ட

ஓலைக் குடிசையில்

சமையலை மறந்து

ஊமையாகிப் போன பாத்திரங்கள்....


அடைத்த செவியோடும்

ஒட்டிய வயிறோடும்

ஒரு ‘கொதிக்கும் கானம்

கேட்கத் தவமிருக்கிறேன் நான்.....


எதிர்பாராமல்

வந்ததோர் வாய்ப்பு.....


அவசர அவசரமாய்

பாத்திரங்களை எடுத்துப்

பரப்பி வைக்கிறேன் ...........


தாள லயத்தோடு

ஆரம்பமாகிறது கச்சேரி


ஏற்கனவே பெய்யத்

தொடங்கி இருந்தது மழை............!

.

ஏதோ புரிய ஆரம்பிக்கிறது எனக்கு ...!


























காலை வேளையில் கடுமையாய்

கலவரப் படுத்துகிறது மேகம்....


அடிக்கும் காற்றில் தடுமாறி

கூட்டுக்குள் அடைகிறது காகம்....


நடுஇரவுப் பொழுதைப் போல்

திரண்டு நிற்கிறது இருட்டு.....


தரையில் தஞ்சம் புகுந்திட

தயாராகிக் கொண்டிருக்கிறது மழை...


நிலையைத் தாண்டிய பின்னரும்

நிலையில்லாமல் தத்தளிக்கிறது மனம்...


ஒரு நாள் மட்டும் தானே...

விடுப்பு எடுத்தால் என்ன..!

குடியா முழுகி விடும் ?

ஒருசில திட்டங்களோடு

ஓய்வெடுக்க முடிவெடுத்து

கதவைத் திறக்கக் கைவைக்கிறேன்


உணவைத் தேடியபடி

கதவின் இடுக்கின் ஊடாக

வீட்டின் உள்ளிருந்து

வெளியேறிக் கொண்டிருக்கின்றன

வரிசையாய் எறும்புகள்...........

.

அவரவர் பார்வையில்....!


அடர்பச்சைப் புதராய்

படர்ந்திருக்கிறது கொடி.....

ரத்தச்சிவப்பு நிறத்தில்

அசைந்து கொண்டிருக்கின்றன

அழகழகாய்ப் பழங்கள்........


அடர்பச்சை நிறத்தில்

வந்தமர்கின்றன கிளிகள்.....

ரத்தச்சிவப்பு நிறத்தில்

அழைத்துக் கொண்டிருக்கின்றன

அதனழகு அலகுகள்.....


புதரும் பறவையும்

வண்ணத்தில் ஒன்றாகி

எண்ணத்தை வென்றேகி

என்னுள் கலக்க......

என்னை நான் மறந்தே

படைப்பின் விந்தையை எண்ணி....

சிந்தை கலங்கி நிற்கிறேன்.


அங்கே....

விரித்த வலையின் சுருக்கை

சரிசெய்து கொண்டிருக்கிறான்

புதருக்குள் இருக்கும் அவன் .....

.

Thursday, August 19, 2010

குறி வச்சாச்சு .....


அமைதியாய் ஒரே திசைபார்த்து
அமைந்த நேரம் விசைவிடுத்து

காற்றை வகிடெடுத்து
இலக்கை இல்லாமல் அழிக்க
விரைகிறது தோட்டா ஒன்று

குறிவைக்கப் படுவதைக் குறித்து
கவனிக்கப் படுவதைக் கணித்து
கடைசி நொடிவரையில் காத்திருந்து
கம்பியிலிருந்து துள்ளியெழுந்து
காற்றில் கலக்கிறது சிட்டு ஒன்று

பட்டுத்
தெறிக்கிறது தோட்டா....
துண்டாகித்
துடிக்கிறது கம்பி......

இன்னமும் அதிர்வு அடங்கவில்லை
அந்தக் கம்பியில்...

எனக்குள்ளும் ....!

நன்றி :கரு:யாழி

Thursday, April 8, 2010

யாருக்கும் வெட்கமில்லை..!




எனக்கும் அந்த
இடைக்கும் நடுவில்
இடைவெளி என்றாலும்
இடையில் எந்தவித
இடையூறும் இல்லாததால்

தலையை சாய்த்தபடி
அரைக்கண் மூடியபடி
அமைதியாய் ரசித்தபடி
ஆனந்தமாய் நான்

அமைதியாய்ப் பக்கம் வந்து
அரைநொடி சுழற்றி அடித்து
நிலையைச் சாதகமாக்கி விட்டு
நில்லாமல் நகர்ந்தது காற்று

அதிரடியாய் அத்தனையும் விலகி
அங்கங்கே அங்கம் தெரிய

மணிவண்ண தேகத்தில்
பிறைநாபி பளீரென வெளிப்பட

மிஞ்சிய பாகத்தில்
மிச்சமுள்ள மச்சங்கள் மின்னிட

திருடனாய் நான் மட்டும்
திருவிழாவைத் தனியே ரசிக்க

அங்கங்கே அவசரமாய் ஓடி
அகப்படும் அங்கம் மறைத்து

நடப்பது தெரியாமல் இருக்கும்
வானத்தின் மானம் காக்க

துடித்துக் கொண்டிருக்கிறது
தன்னந்தனியாய் அந்த

மேகம்......


.

Sunday, April 4, 2010

........2........!


ஊருக்கு வெளியேத்
தள்ளியிருக்கு வீட்டுக்குள்
தாயும் குழந்தையுமென
உறுப்பினர்கள் இரண்டு

கூடத்தில் தொங்கிய
கடிகாரத்தில் சரியாக
மணி மதியம் இரண்டு

தோட்டத்து மரக்கிளையில்
சன்னல்வழியே வீட்டுக்குள்
குறுகுறுவெனக் கவனித்தபடி
சிட்டுக் குருவிகள் இரண்டு

வீட்டையே இரண்டாக்கி
சோற்றை அள்ளி விசிறி
அறையெங்கும் பரப்பியபின்
குழந்தை விழுங்கிய
உருண்டைகள் இரண்டு

ஊட்டி முடித்தபின்
சிதறியதை எல்லாம்
அலுப்போடு கூட்டியள்ளி
குப்பைப்பைக்குள் திணிக்கும்
அம்மாவையே இமைக்காமல்
சன்னலில் அமர்ந்து
பதறியபடி கவனிக்கும்
உதறும் இதயங்கள் இரண்டு

அங்கோ ...........
பசித்த வயிறோடு
பெற்றோரின் வரவுக்காகக்
காதுகளைக் கூராக்கிக்
கூட்டில் காத்திருக்கும்
குஞ்சுகள் இரண்டு

இங்கே .............
சிதறியதில்
பார்வையிலிருந்து பதுங்கி
துடைப்பத்திலிருந்து ஒதுங்கி
சன்னலுக்கு மிகஅருகே
சத்தமில்லாமல் சேர்ந்திருந்தது
பருக்கைகள் இரண்டு

.

Tuesday, August 18, 2009

இது நிலாச்சோறு அல்ல.,


பள்ளிக்கூடம் முடிஞ்சு
வீடுவந்து சேந்து

கொஞ்சமா வெளயாடீட்டு
கையக்கால கழுவீட்டு

வீட்டுப்பாடம் முடிச்சு
வயித்த தடவுனா

பசிக்குதே.......

வீட்டுக்குள்ள வந்து
வரிசையா உக்காந்தோம்

நாந்தான் கடைக்குட்டி
நாலாவதா இருக்கேன்

”முத்தத்துக்குப் போவோமா
நிலாச் சோறு திம்போமா’’


அம்மாகிட்ட கேக்கேன்
அவளும் சரீன்னாளே !

அப்பத்தானே பாக்கேன்
அஞ்சாவதா அது நிலா

வட்டமா ஏம்பக்கத்துல
வாட்டமா அவ இருக்கா

ஏனோ ஏம்பக்கத்துல
ஏக்கமா அவ இருக்கா

வானத்துல இருந்து அவ
வேகவேகமா வந்திருக்கா

தரையில இருக்கா - கூரை
ஓட்டை வழியா வந்திருக்கா

”அம்மா ....

இப்போ வேண்டாம்
நிலாச் சோறு !

இன்னிக்கு நம்ம வீட்டுல
நிலாவுக்கே சோறு !!”

Thursday, May 21, 2009

அம்பும் வில்லும் எதிரெதிராய்....!?






பதுங்க நேரம்தராமல்
பாதுகாக்க தடம்விடாமல்
எதிர்பாராத நேரத்தில்
எதிரிகளின் தாக்குதல்

திடீரென வானிலிருந்து பொழியும்
தொடர் மழை அம்புகள்
தரையைத் தாக்கும் வேகத்தில்
நிலை குலைய வைக்கின்றன

எதிர் கணைகளைத் தொடுக்க
ஏழு வண்ணங்களில் எட்டு திக்குமாய்
வான்நோக்கி விரிந்து இருக்கும்
வானவில்லை எடுத்து நிறுத்துகி்றோம்

வில்லைப் பார்த்தவுடன்
விலகி ஓடுகின்றனர் எதிரிகள்
அம்புகளின் தாக்குதலும்
அப்படியே நின்று போகிறது

ஏவலாய்ப் பாய்ந்துவரும் அம்புகள்
எதிர்பார்க்காமல் எதிரியாய் அங்கே
எதிரே வில்லைப் பார்த்தவுடன்
விதிர்த்துப்போய் மலைத்து நிற்கிறது

வெஞ்சினத்தோடு பாய்ந்து வந்தவை
பூஞ்சாரலாகி சாமரம் வீசுகிறது
வில்லிருக்கும் வரை நமக்கு
வெற்றியின் துணை இருக்கும்

Friday, May 1, 2009

அலையின் சீற்றமா?....



அழகுக் குழந்தைபோல
ஆர்ப்பாட்டம் செய்யாமல்
அமைதியாய் இருப்பவனை

விளையாடும் ஆசையோடு
வரிசையாய் அசைந்தாடி
விரும்பி வருபவனை

தரை தொட்டவுடன்
தலைகுனிந்து வெட்கி
திரும்பி ஓடுபவனை

ஏழைக்கு உதவுபவனை
எதிர்பார்ப்பு இல்லாதவனை
எதுவுமே தெரியாதவனை

ஏமாற்றித் தூண்டிவிட்டு
பிரமாண்டமாய் எழுப்பிவிட்டு
ஆர்பரிக்க வைத்துவிட்டு
ஏதேதோசொல்லி ஏவிவிட்டு
கரையும் தாண்ட வைத்துவிட்டு

எதுவுமே தெரியாததுபோல
நல்லவன்போல நாடகமாடி
நமுட்டுச் சிரிப்போடு
நடப்பதைப் கவனிக்கிறது
நயவஞ்சகக் காற்று