Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

Tuesday, November 18, 2008

அவசியம் வேணும் வாரிசு அரசியல் !


இன்று சனநாயகநாட்டில்
இந்தத் தலைவர்களின்
வாரிசாகப் பிறந்ததாலேயே
வந்து சேர்ந்துவிடும் அந்த
அடுத்தத் தலைமைப் பதவியும்
அதற்கான முதன்மைத் தகுதியும்

இன்று அரசைத் தலைவர்கள் ஆள
நாளை அவர்களின் வாரிசுகள் ஆள
அன்று அடிமை நாட்டில்
நின்று போராடிய

வீட்டிற்கு சேர்த்துவைக்க மறந்த
வாரிசுகளை உயர்த்திவிட மறுத்த
நாட்டின் விடுதலைக்கும்
நமக்கும் சேர்த்து உழைத்த
தன்னலமற்ற தலைவர்களின்

வீட்டில் பிறந்ததாலேயே
வாழ்க்கை இழந்து
வாழ வழி தேடி
பிச்சை எடுக்கும்
பரிதாப வாரிசுகளின் நிலை

எத்தனை பேர் அறிவோம்?
அவர்களின் அவல நிலை
அகற்ற ஆவன செய்வோம்!
அதற்கு ஆவனம் செய்வோம்!!

இந்த வாரிசு அரசியலைப் போற்றுவோம்!!!

Wednesday, November 5, 2008

ஒய்யாரக் கொண்டை


கோடிகளைக் கொட்டி
குளிர்சாதன வசதியோடு
கோபுரமாய் எழுந்து நிற்கும்
கல்யாண மண்டபம்

லட்சங்களில் தோரணம் கட்டி
நோட்டுக்களால் கம்பளம் விரித்து
வாகனங்களால் நிரம்பி வழியும்
வரவேற்பு நுழைவாயில்

மிச்சம் வைப்பதையே அந்தஸ்த்தின்
உச்சம் எனக் கருதும்
தட்டை கையில் ஏந்திய
மேல்தட்டு மக்கள்
சாப்பாட்டு அறையில்

பட்டுச் சேலையில்
தொட்டுப் பேசாத
நாகரீக நங்கைகள்
நவீன மணமேடையில்

ஒட்டு சேலையில்
பட்டினியோடு
எல்லோருக்கும்
சமைக்கும்
சமையல்காரி
சமையலறையில் .

Sunday, November 2, 2008

மனிதன் என்ற ஒருவன்


விபத்தில் காயம் பட்டு
சாலையில் கிடப்பவரை
பாவப்பட்டுக் கொண்டே
கடந்து செல்கிறோம்

தெருவில் கல்லடிபட்ட நாய்க்காக
இரக்கப்பட்டுக் கொண்டே
இறைச்சிக் கடையில்
வரிசையில் நிற்கிறோம்

பத்தாயிரம் செலவு செய்ய மனமில்லாமல்
முப்பதாயிரம் நன்கொடை கொடுத்து
முதியோர் இல்லத்தில்
சேர்த்து வருகிறோம்

பசியோடு வருபவருக்கு
இல்லையென மறுத்து
பல கோடி காணிக்கையாய்
உண்டியலில் செலுத்தி
புண்ணியம் தேடுகிறோம்

வீடு தாண்டி வெளியே
உள்ள உறவு முறை
தெரியாமலேயே போனதை
பெறுமையாய் பேசுகிறோம்

உங்களுக்குத் தெரியுமா?

முன்பு ஒரு காலத்தில்
மனிதன் என்ற ஒருவன்
இருந்தான் என்று

Thursday, October 16, 2008

ஆன்-லைன் வர்த்தகம்?


கன்னியாக்குமாரியில்
இல்லாத பொருளுக்கு
காஷ்மீரிலிருந்து
பேரம் பேசி

விவசாயியிடம் விலைகுறைத்து
விநியோகத்தில் விலைகூட்டி
தரகர்கள் மட்டுமே தங்கள்
தரம் உயர்த்திக்கொண்டு போகும்

சீர்திருத்தம் என்ற பெயரில்
சாமானியர்களின் வாழ்க்கையை
சீரழித்துக்கொண்டிருக்கும் அது

ஆன்-லைன் வர்த்தகமா?
ஆப்-செய்யும் வர்த்தகமா! இல்லை
ஆப்பு வைக்கும் வர்த்தகமா!!

Monday, October 13, 2008

தாமஸ் ஆல்வா எடிசனுக்கு இந்தியஅஞ்சலி


வருடத்துக்கு ஒருநாளில்
அவரின் பிறந்த நாளில்
இரண்டு நிமிடம் விளக்கு அணைத்து
இருளில் இருந்து
அஞ்சலி செலுத்துகிறார்கள்
அமெரிக்காவில்

வருடத்துக்கு இரண்டு நிமிடமல்ல
தினமும் ஆறரை மணிநேரம்
அமெரிக்கருக்கு
அஞ்சலி செலுத்துகிறோம்
இந்தியாவில்

பெறுமை கொள்வோம்.!

Tuesday, October 7, 2008

இலவச அழைப்பு


போக்குவரத்து நெரிசலில்,
விளம்பரப் பலகையிலிருந்து
அழைத்துக்கொண்டே
இருக்கிறாள் அவள்.
தன்னை மட்டுமே
அழைப்பதாய் எண்ணி,
வாய் பிளந்து,
வைத்த கண் எடுக்காது,
தொடர்ந்து செல்லும்
வாகன ஓட்டிகள்
சீக்கிரமே ' போய்' சேருகிறார்கள்
சம்பந்தமே இல்லாதவர்களையும்
சேர்த்துக்கொண்டு.

Monday, October 6, 2008

என்ன தான் நடக்கிறது?


சாமானியர்கள் சாப்பிடும்
.பெருநகர சிற்றுண்டிச் சாலையில்

சாம்பாரில் குளித்த இட்லி,வடையை
.கரண்டி கொண்டு வெட்டி

சாதனையாக சாப்பிட்ட பின் வரும்
.தோசையை கை கொண்டு

சாப்பிடுவதை குழம்பிப்போய்
.பார்க்கிறான் படிக்காத பாமரன்.

சரிதானா இது? முதலிலேயே
.செய்து இருக்கலாமே இதை !

Monday, September 29, 2008

மழை சொல்லும் செய்தி,


விதவை
வருமா,வராதா
என ஏங்கி
வானம் பார்த்து
காத்திருக்கையில்

தைரியமாய்
நெற்றியில்
பொட்டுவைத்து
வந்தது
மழை

Sunday, September 28, 2008

அவசியம் என்ன?


கடந்த கால திரைஇசையில்
கொஞ்சும் தமிழில் பெண்கள்
குயில் போன்ற குரலில்
கொஞ்சி கொஞ்சிப் பாடினார்கள்

தற்கால திரையோசையில்
கொஞ்சம் தமிழில் பெண்கள்
மயில் போன்ற குரலில்
முக்கி திக்கிப் படிக்கிறார்கள்

ஆண் குரலில் பெண்கள் பாட
அவசியம் என்ன வந்தது?
அநாவசியமான மாற்றத்தின்
ஆரம்பம் எங்கே நிகழ்ந்தது?