Friday, August 28, 2009

மனமும் சேர்ந்தே விலைபோகும் இங்கே ...!


அது...
மனிதர்கள் பேரம் பேசும்..
மாடுகள் இடம் பெயரும்...
பெரும் பணம் கைமாறும்....
பெரிய மாட்டுச் சந்தை

இங்கே....
பொத்தி பொத்தி வளர்த்து
பெயர் வைத்து அழைத்து
குழந்தைபோல பாதுகாத்து
குடும்பத்துள் இணைத்து

வளமாய் வாழ்ந்து பின்
வஞ்சிக்கப்பட்ட மனிதரின்
வயிற்றுப் பிழைப்புக்காக
விலை பேசப்படும் மாடுகள்

முடிந்தபின்...
பணம் நிறைந்து இருக்கும் பைகளில்
மனம் நிறைந்து இருக்கும் வெறுமையில்
கட்டியிருந்த கயிறு மட்டும் கைகளில் - வீதியில்
கேட்டபடியே இருக்கும் மணியோசை காதுகளில்

"நல்ல வெலைக்குப் போச்சுது
நெறையப் பணமும் கெடைச்சது"

வெளியே சந்தோசமாய் சிரிக்கும்
வெளிச்ச முகமூடி மாட்டியபடி

'நல்ல இடத்துல சேருமா - இல்ல
அடி மாடாப் போயிருமோ'

கதறி உள்ளே அழும்
சிதறிய ஊமை உள்ளங்கள் .

ஓரமாய் ஆணியில் தொங்கும்
காற்றில் மெதுவாய் அசையும்
கழுத்து மணியின் ஓசை
ஆலய மணியின் அலறலாய்
அடிமனதுள் இறங்கும்.

தொடரும் வாரங்களிலும்
தொடர்ந்து வலம் வரும்
தொடர் அவலம் இங்கே !

அதே சந்தைதான்..
அதே வறுமைதான் !
வேறு மனிதர்களோடு..
வேறு மாடுகளோடு !!

Wednesday, August 26, 2009

திரும்பி வருவேன் ........!


நீருக்கு ஏற்ப வளைந்துபின்
நிமிர்ந்து நிற்கும் நாணலே...

உன்னைப்போல நானல்ல !

வளைவதாலேயே நானிங்கு
வீழ்ந்து போகிறேன் நாணலே...

உன்னைப்போல நானல்ல !

விறைத்து நிற்பாய் நானென்றே
வில்லில் பூட்டிய நாணே...

உன்னைப்போல நானல்ல !

நிமிர்ந்து நின்றால் தானே - இன்று
உதிர்ந்து மறைவேன் நானே...

உன்னைப்போல நானல்ல !

காலமது கூடுமே - அதுவரை
காத்திருப்பேன் நானுமே !

ஒருநாள் நானாவேன்...

திமிரும் நாணாவேன்...!
நிமிரும் நாணலாவேன்...!!

திலகம்சூட்டி வருவேன் நானுமே - அன்று
முகம்பொத்தி உலகமே நாணுமே !

Tuesday, August 25, 2009

நட்சத்திர உணவக விருந்து முடிந்து.....!


கடைசியில் ஆரம்பமாகியிட்டது
காத்திருந்த விருந்து

*காளான் சூப்
*கோழி பிரியாணி
*ஃப்ரைடு ரைஸ்
*மட்டன் மஞ்சூரியன்
*சிலோன் பரோட்டா
*பட்டர் நான்
*கிரில் சிக்கன்
*பட்டர் சிக்கன்
*தந்தூரி சிக்கன்
*ப்ரான் ஃப்ரை
*க்ராப் மாசால்
*சீஸ் பீசா
*எக் சாண்ட்விச்
*மிக்ஸ்டு பர்கர்
*புல்ஸ் ஐ
*இன்னும் .........
பெயரிடப்படாத
பல வகைகள்....
*ஆம்ப்லெட்டுடன்
*ஐஸ்க்ரீம் ......................( ஆங்கிலம்/வழியில்லை/மன்னிக்கவும் :)

நட்சத்திர உணவகம் என்றாலே
நடைமுறையில் இதுதான் சிக்கல் !
எல்லாம் வந்து சேரும்வரை
எதையும் மனதாலும் தொடமுடியாது !!

நாசுக்காய் ஊர்மெச்ச
நாக்கால் மட்டும் சுவைத்து.....
மொத்தமாய் வந்தது
அத்தனையும் மிச்சம் வைத்து ....
......................?!?!?!?!?!?!?

” கரண்டியால சாப்பிட்ட பின்ன்னால
கையக்கழுவி வாயத் தொடைக்க

கடைசியில வரும் பாரு !
குளுகுளு எலுமிச்சை சாறு !!
கெடைச்சா அடிக்குமே ஜோரு !!!
குடிச்சா அதுதானே பேறு !!!!

பொறவாசலப் பாத்தே உக்காந்திருக்கோமே நாங்க !
பொசுக்குன்னு வாச்சுமேனு வந்திருவானே இங்க !!

எப்பத்தான் சாப்பிட்டு முடிப்பாங்க அங்க ?
எவ்வளவு நேரமாத்தான் காத்திருக்கோம் போங்க ?? “

Sunday, August 23, 2009

இந்த வருட சாகித்திய அகாடமி விருது எனக்கு...


””மொரையோட அவங்கக்குடிக்கிற
அரைப்போனி பால்காப்பிக்காக
அலைபாயிதே எம்மனசு

டூரு போகும் குடும்பத்தோட
ஊரு சுத்திவர தவிச்சுபோய்
தெருவிலயே நிக்குதே எம்மனசு

ஊஞ்சலில தொத்திக்கிட்டு
உந்தித்தள்ள ஆளில்லாம
சுத்தும்முத்தும் பாக்குதே எம்மனசு

நடுத்தெருவு நண்பனோட
நாள்கணக்காப் பேசனுமுன்னு
நெஞ்சுமுட்டி ஏங்குதே எம்மனசு

பக்கவாதம் வந்து நொந்து
படுக்கையிலக் கெடக்கேனே
போத்திவிட ஆள்தேடுதே எம்மனசு

காத்திருக்கும் சேதியது
காலனுக்குப் போய்ச்சேரும்
காலத்துக்குக் காத்திருக்கே எம்மனசு

வாழ்க்கை இன்னும் நீளாம
வதைபடாமப் போய்ச் சேரும்
பாதையையும் நாடுதே எம்மனசு “”


இதோ
அன்பு உள்ளங்களே !
அருமை நெஞ்சங்களே !
உங்கள் முன் நான் ...
உறுத்தும் உண்மையோடு நான் ...

உள்ளத்தின் உள்ளே உள்ளதை
உள்ளபடி சொல்ல முடியாமல்
வெளியேயும் சொல்ல இயலாமல்
வெளியே திண்ணையில் வீழ்ந்த
வாழ்ந்து கெட்ட மனிதர்களின்
வார்த்தைகளுடன் உங்கள் முன் ..

வாழவைத்த வாலிபம் இங்கே
வீழ்ந்துகிடக்கிறது வயோதிகத்தில்..
வாழவைத்தவரை எதிர் நோக்கி ?
வாழவைப்பாரா என நோக்கி !

கோரிக்கை ஒன்றாவது
சேருமிடம் சென்றுவிட்டால்.....

ஒரேஒரு மனதாவது
ஆறுதல் பெற்றுவிட்டால்......

அதுவே எனக்கு
இந்த வருடத்துக்கான
சாகித்ய அகாடமி விருது !

வாழ்நாள் முழுதும்
விருது எனக்கேக் கிடைக்க
வேண்டி நிற்கிறேன் உங்களை !

Tuesday, August 18, 2009

இது நிலாச்சோறு அல்ல.,


பள்ளிக்கூடம் முடிஞ்சு
வீடுவந்து சேந்து

கொஞ்சமா வெளயாடீட்டு
கையக்கால கழுவீட்டு

வீட்டுப்பாடம் முடிச்சு
வயித்த தடவுனா

பசிக்குதே.......

வீட்டுக்குள்ள வந்து
வரிசையா உக்காந்தோம்

நாந்தான் கடைக்குட்டி
நாலாவதா இருக்கேன்

”முத்தத்துக்குப் போவோமா
நிலாச் சோறு திம்போமா’’


அம்மாகிட்ட கேக்கேன்
அவளும் சரீன்னாளே !

அப்பத்தானே பாக்கேன்
அஞ்சாவதா அது நிலா

வட்டமா ஏம்பக்கத்துல
வாட்டமா அவ இருக்கா

ஏனோ ஏம்பக்கத்துல
ஏக்கமா அவ இருக்கா

வானத்துல இருந்து அவ
வேகவேகமா வந்திருக்கா

தரையில இருக்கா - கூரை
ஓட்டை வழியா வந்திருக்கா

”அம்மா ....

இப்போ வேண்டாம்
நிலாச் சோறு !

இன்னிக்கு நம்ம வீட்டுல
நிலாவுக்கே சோறு !!”

Monday, August 17, 2009

நான்.....! .மிகப் பெரியவன் நான்.........!!


அவன்.....
லட்சத்தில் குளிக்கிறான் !
கோடியில் முகம் துடைக்கிறான் !!

சக்தியின் அதிகார மய்யம் - அவனிடம்
சத்தியமே கைகட்டி சேவகம் செய்யும்
பெய்யென்றால் தான் மழையே பெய்யும்

அவன் வரும் வழியில்
அமைச்சர்கள் கைகட்டி இருப்பார்கள்
அதிகாரிகள் வாய்பொத்தி நிற்பார்கள்


அவனிருக்குமிடத்தில்
பணம் பந்தியில் விஞ்சி இருக்கிறது
குணம் கைகட்டி அஞ்சி நிற்கிறது

காசு கை காட்டும் இடத்தில் - மெய்யது
தூசு தட்ட காத்திருக்கிறது

விந்தையாய்த் தெரியாது இது
அகந்தை உள்ளிருக்கும் வரை

புதியதாய் அகம் அரியணை ஏறுகிறது
பழகிய முகம் அடுக்களை ஏகுகிறது


வீட்டில்...
எழுப்பிவிட.. தூக்கிவிட
பல்துலக்க.. பாதம்துடைக்க
துணி மடிக்க.. துவட்டிவிட
ஊட்டிவிட.. வாய்துடைக்க
செருப்பு மாட்ட.. ஆடை பூட்ட
வாசல் திறக்க.. வழி அணுப்ப

அப்பப்பா....
ஆயிரம் சேவகர்கள் !!


வெளியில்...
கால் பிடிக்க.. காக்கா பிடிக்க
செருப்பு துடைக்க.. உறுப்பு துடைக்க
கார் கழுவ.. கதவு திறக்க
அழைத்துசெல்ல.. அறிமுகம் சொல்ல
எழுதிக்கொடுக்க.. எடுத்துப் படிக்க
வாய்பார்க்க.. திறந்தவுடன் கைதட்ட
கைகூப்ப.. காலில் விழ

அப்பப்பப்பா...
ஆயிரம் ஆயிரம் சேவகர்கள் !!!

திடீரென.....
சகாராவில் மழைதுளி போல
சிம்லாவில் பனித்துளி போல
சுனாமியில் சுண்டைக்காய் போல
சூறாவளியில் பஞ்சுமிட்டாய் போல

எரிமலையில் தண்ணீர் போல
கடலலையில் கண்ணீர் போல
ஒருநொடியில் அத்தனையும்
ஒருங்கே காணாமல்போனது

பங்குசந்தையின் சரிவில்
சிக்கி சீரழிந்த காளையாகிறான்
சீக்கிரமே உயிரிழந்த கரடியாகிறான்

பணம் பாதாளம்வரை பாயுமாம் - இங்கே
பணம் பாதாளத்துள் புதைந்துவிட்டது !

தேரில் வந்து கொண்டிருந்தவன்
தெருவில் விழுந்து கிடக்கிறான் !!

இன்று இவன்....
கண்ணைக் கட்டிக்
காட்டில் விட்டது போல

கையைக் கட்டி
கிணற்றில் இறக்கியது போல

அடுத்த அடிக்கு பாதை புரியாமல்
அடுத்த வேளைக்கு வழி தெரியாமல் ?????
................................................................

இங்கே இன்று இவனுக்கு.....
பெரிசாக எதுவும் வேண்டாம் - வயிறாற
பரிசாக ஏதாவது கிடைத்தால்போதும் !

அங்கே அவர்கள் சேவகர்களாகவே
அவரவர் வேளையில்
அவரவர் வேலையில்

அவரவர் நிலையில் நிரந்தரமாய்........!
அவரவர் பொறுப்பில் கவனமாய்................!

Sunday, August 16, 2009

ஐந்தில் வளைந்தது....


வறுத்தெடுக்கும் வெயிலில்
வசதியாய் வாழப் பழகிவிட்டதால்
வந்துவிழும் மாமழையை
வாசலில் வரவேற்கத்
தெரியவில்லை

லட்சியம் கலங்க வைக்கும்
நிச்சயம் திணற அடிக்கும்
அச்சம் கொள்ள வைக்கும்
லட்சம் வார்த்தைகள் -
அதனால் என்ன?
கவலையில்லை

பேசாமல் இருந்து
பேதைமனம் புகுந்து
அடியில் தீவைக்கும்
அவளின் மெளனம் -
அதன் ஆழம்!
தாங்கவில்லை

????!!!!!!!!!??????!!!!!!!!!!!

Friday, August 14, 2009

சுதந்திரம் : ஒரு தியாகியின் மீள் பார்வையில் ...


சகோதர சகோதரிகளுக்கு
இனிய சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்

விடுதலைப் போராட்ட தியாகி ஒருவர்
தொடர்கிறார் உங்களிடம் :


””அன்று
அடிமை நாட்டில்.....

சுதந்திரம்
அது ஒன்றே
எங்களுயிர் மந்திரம்

ஒரே தலைமை
ஒன்றே இலக்கு

வேற்றுமையைப் போக்கும்
ஒற்றுமையே நோக்கம்

அமைதியாய் ஆர்ப்பாட்டம்
அகிம்சையேப் போராட்டம்

பலன் எதிர்பாராத எண்ணம்
நாட்டின் எதிர்காலமே திண்ணம்

தன்வாரிசுகளை மறந்த கூட்டம்
தாய்மண்ணின் எதிர்காலமே திட்டம்

வாங்கித்தந்தோம் சுதந்திரம் - பாதுகாக்கக்
கொடுத்துவைத்தோம் உங்களிடம்

இதோ..
கடந்துவிட்டது
அறுபத்திரண்டு ஆண்டுகள்

இன்று ...
சுதந்திர நாட்டில்

சுதந்திரம்........?
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்........???
சுதந்திரம் என்றால்........?

சாதிக்கொரு தலைமை
சாதிக்க இல்லை நிலைமை

வீதிக்கொரு கொள்கை
விதியே என்ற வாழ்க்கை

காலையில் சாதி ஓழிப்புப் போராட்டம்
மாலையில் இடஒதுக்கீடு ஆர்ப்பாட்டம்

தாய் நாட்டையே மறந்த கூட்டம்
தன் வாரிசின் எதிர்காலமே திட்டம்


சுதந்திரம்......?
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.........??
சுதந்திரம் என்றால்......???

ஊர் வம்பே சுதந்திரம்
வெட்டிப் பேச்சே சுதந்திரம்

ஆணவப் போக்கே சுதந்திரம்
ஆடைக் குறைப்பே சுதந்திரம்

வீட்டினுள் மதுசேர்த்தல் சுதந்திரம்
வெளியில் மாதுசேர்தல் சுதந்திரம்

முதியோர் மதியாமை சுதந்திரம்
பெரியோர்சொல் கேளாமை சுதந்திரம்

அதிகாரிகாரங்கள் தேனெடுக்க சுதந்திரம்
அதிகாரிகளுகள் புறங்கைநக்க சுதந்திரம்

மதத்துக்குள் மோதல் சுதந்திரம்
மதத்துக்கே மதம்பிடித்தல் சுதந்திரம்

கலாச்சார சீரழிவு சுதந்திரம்
பாலியல் சீர்கேடு சுதந்திரம்

இன்றைய இளைஞர்களுக்கே
இதுதான் தெரிந்த சுதந்திரம் ..............

நாளைய நமது
வருங்காலத் தூண்களுக்கு ????

காந்திஎன்றால்....
கம்பூன்றிய தாத்தாவாகவும் .,
விடுதலையென்றால்.....
விடுமுறையும் இனிப்பும் .,
தமிழக வரலாற்றில் முதன்முறையாக
புத்தம்புதுத் திரைப்படத்தோடும் .,
சிறப்புப் பட்டிமன்றத்தோடும்
முடிந்தே போகும்...!

ஏ ., இளைஞனே !
இந்தியக் குடிமகனே !!

ஏமாளிகள் நாங்கள்
சந்ததியர் உங்களை நம்பி
வெள்ளையனிடம் போராடி
வாங்கித்தந்த சுதந்திரமதை

தானென்ற அகந்தையில்
தெரியுமென்ற போதையில்
மதிகெட்டு மமதையில்
வீதியில் தொலைத்துவிட்டு

எங்களைப்போல உங்களின்
வாரிசுகளிடம் சேர்க்காமல்
வாரிக் கொடுத்துவிட்டு
மீண்டும் அடிமையாகிக் கொண்டிருக்கிறாய்
அந்நிய மோகமென்னும்
கிழக்கிந்தியக் கம்பெனியின்
மாற்று உருவிடம் !


வேண்டும் வேண்டும்
இன்னும் ஒரு சுதந்திரம் !
இனியாவது சுதந்திரம் !!

ஆனால்.......
யாரிடமிருந்து !?!?!?!?!?!?!?

முடிவு செய் இன்றே !
முயற்சி செய் நன்றே !! “”

--தாய் மண்ணுக்கு வணக்கம் _/\_

Thursday, August 13, 2009

இரு தண்டுப் பூமரமாய்.......


நீதி தேவதையின் கையிலிருக்கும்
நியாயத் தராசின் நிமிர்ந்தமுள்
நிலை கொள்ளால் இருபக்கமும்
தலையாட்டிக் கொண்டிருக்கிறது

அசையாமல் ஆகாயவிமானம்
அந்தரத்தில் நின்று கொண்டிருக்கிறது

தடுமாறிப் போனத் தொடர்வண்டி
தடம்மாறிச் சென்று கொண்டிருக்கிறது

இது கண்டு ஆரவாரமாய்
இரு தண்டுப் பூமரமாய் - அதோ
வந்து கொண்டிருப்பது அவளேதான்
நிகழ்ந்து கொண்டிருப்பதும் அவளால்தான்

அவளின் அழகுமுகம் அறிந்த நாள்முதல்
ஆதவனென் அறிவுமுகம் அழித்து நிற்கிறேன்
ஏந்திழை முகவரி தெரிந்த நாள்முதல்
எனதிழை முகவரியும் தொலைத்து நிற்கிறேன்

"எனைநான் நினைவிலெடுக்க முயல்கிறேன்,
உனைத்தானே நகலெடுத்து முடிக்கிறேன் !
எந்தன்கனவினில் கவிதைகள் பிறக்கின்றதே !!
அந்தக்கவிதையிலும் கனவுகள் பறக்கின்றதே !!!"


கூடவே நானும் சிறகுடன்..........!
கூடவே அவளுடன் நானும்.......!!

Wednesday, August 12, 2009

கண்ணுக்குத் தெரியாதது ...?!?!


இன்று பிறந்த நாள் எனக்கு
இனிய விழா மாலையில் இருக்கு

இதோ....

என்னை வாழ்த்திப் பரிசளிக்க
ஆளாளுக்குக் காத்திருக்கிறார்கள்
கடைக்குட்டி அவளும் அதற்காக
காலையிலிருந்தே தயாராயிருக்கிறாள்

வாழ்த்துகளில் நனைந்து
விழிகலங்கி இருக்கிறேன்
பரிசுகளில் முற்றும்மூழ்கி
பரவசமாகி இருக்கிறேன்

*பெற்றோரின் ஆசீர்வாதம்
*உற்றோரின் ஆரவாரம்

*மனைவியின் முத்தப் புன்னகை
*மகள்தந்த புத்தம்பு துநகை

*என்மகன் அணிவித்த கைக்கடிகாரம்
*நண்பரின் அணிவகுத்த வாழ்த்துகானம்

உற்சாகம்....
எங்கு நோக்கினும் உற்சாகம்......

அடடா .....

அற்புதமான வேளையில்
அபரிதமான மகிழ்ச்சியில்
கடைசியில் அவளை மறந்தே போனேனே
கடைக்குட்டியைக் கவனிக்கவேயில்லையே

அதோ .......

என்முகம் பார்த்தே அமர்ந்திருக்கிறாள்
எதிரேயே அமர்ந்திருக்கிறாள் - எதையோ
எதிர்பார்த்தே அமர்ந்திருக்கிறாள்

அருகே அழைக்கிறேன்
அவளை அணைக்கிறேன்
பரிசை வாங்குகிறேன் - மெல்லப்
பிரித்துப் பார்க்கிறேன்

அட்டைத் தாளை வைத்து
அவளது மூளை உபயோகித்து
அவளாகவே தயாரித்து முடித்த
அளவான பரிசுப் பெட்டி அது !

ஒன்றுமே இல்லைப் பெட்டிக்குள் !
வெறுமையே இருந்தது பெட்டிக்குள் !!


ஆச்சரியமாக கண்சுருக்கி
நான் அவளைப் பார்க்கிறேன் !
அதிர்ச்சியாக கண் விரித்து
அவள் என்னைப் பார்க்கிறாள் ??


’’பத்து முத்தம் உள்ளேஇருக்கு - தெரியலியா
அப்பா அது இன்னும் உனக்கு’’


உறைந்து போகிறேன் - எனக்குள்
உடைந்தும் போகிறேன்

நானென்ன பெரியவன் ?- இங்கே
அவளென்ன சிறியவள் ??

Tuesday, August 11, 2009

நல்ல திட்டம்தான்..., நடக்காமத்தான் போச்சு .... !


வீதியில உருண்டு பொரண்டு
வீட்டுக்குள்ள வந்த பொறவுதான்
வீட்டுப்பாடம் செய்ய மறந்தது
விசுக்குன்னு ஞாபகம் வந்தது

காலைல வாத்தியாரு
கண்டபடி சாத்துவாரே !
முட்டிப்போட்டு வாசலிலே
முழுநாளும் நிறுத்துவாரே !

கக்கத்துல உள்ளி வச்சா
காய்ச்சல் உடனே வருமுன்னு
எங்கூடவே உள்ள ஒருகிருமி
ஏடாகூடமா சொன்னத நம்பி

வெங்காயத்த நெறயா உரிச்சு
வெளியே தெரியாம மறைச்சு
கக்கத்துக்குள்ள ஒளிச்சு வச்சு
கனாக்கூடக் காணாம கண்முழிச்சு
காலைல வரைக்கும் காத்திருந்தேன்

ராப்பொழுது முடிய முழுசாய்
ரெண்டு நாளு ஆகிப்போச்சே
காலைல எனக்கு லேசாவே
காய்ச்சலும் வந்தது போலவே.....

சோகமா முகத்த வச்சிக்கிட்டு
சுத்தி வந்தேன் அம்மா பின்னால...
நடக்கவே முடியாதவனப்போல
நடந்து காட்டினேன் அப்பா முன்னால....

சமையல முடிச்சு எடுத்து வச்சு
சாப்பாட்ட அடைச்சு கூடைல திணிச்சு
வாசல்வரை வந்து டாட்டா காட்டி
வாய் நெறைய சிரிச்சு வண்டியில ஏத்தி
வழியணுப்பியும் வச்சிட்டாங்களே......!

ஆகா....!
என்ன ஆச்சு !!
எங்கோ தப்பு நடந்துருச்சு !!!

யாருமே கவனிக்கலியே ?
எந்திட்டமும் பலிக்கலியே ?
என் நடிப்பும் கெலிக்கலியே ?

அம்மா... ஒத்த வார்த்த கேக்கலியே ?
அப்பா... நிமிந்து கூடப் பாக்கலியே ?
அய்யோ... எஞ்சோலியும் முடிஞ்சிருச்சே !

வாசலில பெரம்போட
வாத்தியாரும் காத்திருப்பாரு
வானத்துல ஏறப்போகுது
இன்னைக்கு எம்மானம் பாரு

வெங்காயத்த வச்சு நல்லா - உள்ள
வெந்து போக வச்சுட்டானே !
தப்பா சொல்லிக் கொடுத்து - இப்போ
தவிக்க வச்சிட்டுப் போயிட்டானே !!

எங்க இருப்பான் அந்தக் கிருமி !
நொங்க தேடித்தான் பிடிக்கணும் - நல்லா
வாங்கினத திரும்பக் கொடுக்கணும் இனி !!

Monday, August 10, 2009

அவனது சிரிப்பின் ரகசியம்


நெடுநாளைக்குப்பின் விழாவில்
குடும்பத்துடன் சந்திக்கிறோம்

நண்பனவன் இல்லாள் அங்கு
பம்பரமாய்ச் சுழல்கிறாள்

வருபவர்கள் யார் என்றாலும்
வாய்நிறைய வரவேற்கிறாள்


அவனைப் பார்க்கிறேன்
மெதுவாய் சிரிக்கிறான்
”அப்படித்தான்” என்கிறான்
”கொடுத்து வைத்தவன்” என்கிறேன்

குழந்தைகளுக்குத் துடைத்து எடுத்து
கால்கழுவி விடுகிறாள்


அவனைப் பார்க்கிறேன்
மெதுவாய் சிரிக்கிறான்
”எப்பவுமே அப்படித்தான்” என்கிறான்
”யோகம் அமைந்தவன்” என்கிறேன்

விழாவின் வேலைகளெல்லாம்
விழுந்து விழுந்து செய்கிறாள்


அவனைப் பார்க்கிறேன்
மெதுவாய்ச் சிரிக்கிறான்
”அவள் எப்பவுமே
...அப்படித்தான்”
என்கிறான்
”சொர்க்கத்தோடு வசிக்கிறாய்” என்கிறேன்

வயதானவர்கள் காலில் விழுந்து
வாழ்த்துப் பெறுகிறாள்


அவனைப் பார்க்கிறேன்
மெதுவாய் சிரிக்கிறான்
”வெளியே அவள்
.....எப்பவுமே அப்படித்தான்”
என்கிறான்
”கடவுள் உன்னுட........”

எனது வார்த்தை பாதியில் உடைந்துபோனது
அது வரும் பாதையில் உறைந்துபோனது

வார்த்தையது செய்தியை உரக்கசொன்னது
அவனது சிரிப்பின் ரகசியம் விளக்கிச்சென்றது

அவனும் வெளியே மட்டுமே சிரிக்கிறான்’

Sunday, August 9, 2009

காதல் யு(மு)த்த விண்ணப்பம்...


வா...... :(

காத்திருக்கிறேன் உனக்காகவே நித்தம்
காதுக்குளே உன் வளவியின் சத்தம்

கலங்கியதே இப்பிறவியில் சித்தம்
குறையுமா உனைப் பற்றிய பித்தம்

நீயாய் வா.... :(

வா என்றபின் வருவதா யுத்தம்
தா என்றபின் தருவதா முத்தம்

தானாய் வருவதல்லவா யுத்தம்
தன்னால் தருவதல்லவா முத்தம்

வந்தால் தொடருமே முத்தயுத்தம்
தந்தால் அதிருமே யுத்தமுத்தம்

தீயாய் வா..... :(

வருவாயெனில் பிழைப்பேனே செத்தும்
வந்தபின்னால் பறக்குமே பத்தும்

வருவாயா என்மன முற்றம்
வரும்வரை காக்குமென் சுற்றம்

அன்பே உன் கரம் பற்றும்
நாள்வரை என் சிரம் சுற்றும்

அதுவரை எதையும் கவனியேனே சற்றும்
அந்நாள் தான் இப்பிறப்பு முற்றும்

அதோ............. :)

Friday, August 7, 2009

இது சுயநலமா? நட்பின் ஆழமா??


பிரசவ அறை வாயிலில்
பிரேதம் போலக் காத்திருக்கிறேன்
மருத்துவரின் வருகைக்காக - வரும்
அவரின் ஒரு வார்த்தைக்காக

எந்தக் குழந்தையானாலும் சரியென்பேன்
எனது நண்பனவன் பெயர் வைப்பேன்

அவன்.................

குழந்தையிலிருந்தே என்
கூடவே தான் இருக்கிறான்

நான் செய்யும் தப்புக்கெல்லாம்
தான் பழி ஏற்றிருக்கிறான்

குச்சி திருடியது நான்
உக்கிப் போட்டிருக்கிறான் அவன்

சடை இழுத்தது நான்
சாத்து வாங்கியிருக்கிறான் அவன்

நோட்டுக் கிழித்தது நான்
முட்டிப் போட்டிருக்கிறான் அவன்

அவன் பெயர் வைத்தேயாக வேண்டும்

பேருந்தில் எனக்காகப்
பாய்ந்து இடம் பிடித்திருக்கிறான்

கல்லூரியில் எனக்கவன்
காவலாளியாய் இருந்திருக்கிறான்

கயவர்களிடம் பாதுகாக்க
பயமில்லாமல் மோதியிருக்கிறான்

அப்பாவிடம் பொய்சொல்லி
ஆபத்திலிருந்து காத்திருக்கிறான்

அவன் பெயர் வைத்தேயாக வேண்டும்

காதலியவளை எனக்காகக்
கன்னம் வைத்துக் கடத்தியிருக்கிறான்

மிஞ்சி அவள் காலில்ஏற
நெஞ்சில் மிதி வாங்கியிருக்கிறான்

வாழ்க்கையில் காலூன்ற
வழி உண்டாக்கிக் கொடுத்திருக்கிறான்

அவன் பெயர் வைத்தேயாக வேண்டும்

தனெக்கென வாழாமல்
எனக்காகவே வாழ்ந்துகொண்டிருக்கிறான்

ஏதோ மருந்துவாங்க
இதோ எனைத்தாண்டி ஓடுகிறான்.......

அவன் பெயர் வைத்.....?!?!?!?!?!??????????

முடியாது !
வைக்க முடியாது !!
அவன் பெயர் வைக்கவே முடியாது !!!

எனது குழந்தை தியாகியாக
எனக்கு விருப்பமில்லை

இது

நானென்ற சுய நலமா ?
நானறிந்த நட்பின் ஆழமா ??

நட்புக்கு இலக்கணமா ?
நட்ப்பை உணர்ந்த லட்ச்சணமா ??

Wednesday, August 5, 2009

பயந்தாங்கொள்ளிகள்........!


வங்கியில் சம்பளம்
வாங்கிய கையோடு
பேருந்தில் பயணித்து
நிறுத்தத்தில் இறங்கும்போது

திடீரென வந்தது மின்தடை
தடுமாறி நின்றது என்நடை

"தெருவில் தொடருமே நாய்ப்படை !
ஆரம்பிக்கிறதா எனக்குப் பீடை ?
மனிதனின் நிலை தெரியாமல்
மாதாந்திரப் பராமரிப்பா தேவை !

இருளில் நடக்கவேண்டும்
திருடர்களைக் கடக்கவேண்டும்
பதட்டம் மறைக்கவேண்டும்
பாதுகாப்பாய் இருக்கவேண்டும்
பத்திரமாய் வீடு போய்சேர்வதற்குள்
பாதி உயிர் போய்சேர்ந்துவிடும்"


உயிரைக் கையில் பிடித்து
தெருவில் இறங்கி நடக்கிறேன்

குட்டிச்சுவற்றில் நாலுபேர்
வெட்டியாய் அமர்ந்துகொண்டு
குத்துமதிப்பாய் என்னையே
உற்றுப் பார்த்துக்கொண்டு !

நுரையீரல் வெளியே துள்ளி
தரையில் வலிய விழுகிறது
தாண்டியபின் கவனிக்கிறேன் - அட
தெருவைத்தான் பார்தது இருக்கிறார்கள்

தூரத்திலிருந்து ஆளரவம் வேகமாய்
அருகே நெருங்கி வருகிறது
இருக்கும் இடத்திலிருந்து இதயம்
குதித்து நொறுங்கி விழுகிறது

வரிசையாய் என்னைச் சுற்றி
வியூகம் அமைக்கிறார்கள்
ஒருநொடியில் 'ஐஸ்பால்' சொல்லி
திரும்பிப் பறக்கிறார்கள்

*எதிரே கட்டியிருக்கும் எருமை
*என்னைச் சுற்றியிருக்கும் கருமை
*வேகமாய்த் துரத்தி ஓடும் நாய்
*வெகுதூரத்தில் ஊளையிடும் பேய்

உலகமே ஒன்றுகூடி என்
ஒருவனைத்தான் கவனிக்கிறது !
இருளிலும்கூட இது எனக்குத்
தெளிவாகவேப் புரிகிறது !!

பதைபதைக்கும் மனத்தையும்
பையிலிருக்கும் பணத்தையும்
தடவிக் கொடுத்தபடியே
வீதிக்குள் நுழைகிறேன்

வரும் வழியெல்லாம் தப்பி வந்தவன்
வீட்டுவாசலில் தடுக்கி விழுகிறேன்
திடுக்கிட்டுப் எழுகிறேன்


கால்களுக்கு இடையில் புகுந்து
கருப்பு உருவம் ஒன்று
அலறிக் கொண்டு ஓடுகிறது

"அப்பா வந்தாச்சு - இதோ
அப்பா வந்தாச்சு - இனி
பயமில்லை நமக்கு"


மீசையைத் திருக்கிக் கொண்டு
தரையைத் தடவிக் கொண்டே
தலை நிமிர்ந்து வீட்டுக்குள்

மெல்ல நுழையும்போது
மெதுவாய் முணுமுணுக்கிறேன்

"சரியான பயந்தாங்கொள்ளிகள்"

Tuesday, August 4, 2009

அற்பமாகவும் அற்புதமாகவும் நான்.....



என்னவளில்லாப் பொழுதில் அவளது நினைவில்
என்னைச் சுற்றியுள்ள அனைத்தும்
எனக்கு அற்பமாகவேத் தோன்றுகிறது !
என்னை அற்புதமாக உணர்கிறேன் !!

என்னவளுள்ள பொழுதில் அவளது நிழலில்
என்னைச் சுற்றியுள்ள அனைத்தும்
எனக்கு அற்புதமாகத் தோன்றுகிறது ?
என்னை அற்பமாகவே உணர்கிறேன் ??

எனக்குள் ஏனிந்த மாயம் :( -ஆனாலும்
எனக்கு வேண்டுமே நியாயம் !
பட்டியல் அதைப் பாருங்கள் - என்
பரிதாப நிலை நீக்குங்கள்

அன்பு கோரிக்கை வைக்கும்போது
...அவள் திருக்கும் என் நுனிச்சட்டை

வாகனத்தில் விரையும்போது
...இறுக்கிப் பிடிக்கும் கழுத்துப்பட்டை


கடல் நோக்கி அமரும்போது
...விரலுள் புதைந்திருக்கும் கைக்குட்டை

கால்நனைய நடக்கும்போது
...சங்குகால் தொட்டுப்போகும் மணல்திட்டை

இன்னும் இருக்கிறது...........!!

அவளது முத்தம்பல மொத்தமாகக்
...கிடைக்கும் சுட்ட சோளத்தட்டை

அவளது முத்துப்பல் மெத்தெனக்
...கூசிக்கடிக்கும் புளிப்பு மாங்கொட்டை

அவளது எச்சில் சுவைத்துப் பித்தாகி
...உருகி வழியும் பனிக்கட்டிப்பட்டை

என்னை இன்னும் அவையெல்லாம
ஏளனமாகவேப் பார்க்கின்றன - அந்தப்
பாக்கியம் வேண்டும் எனக்கும் !
பழிவாங்க வேண்டும் நானும் !!

Monday, August 3, 2009

சட்டம் தன் கடமையை.....


விளை நிலங்கள்
துண்டாடப்பட்டு
வீதிகளாய்....
வீட்டு மனைகளாய்....

ஏரி குளங்கள்
தூர்க்கப்பட்டு
கட்டிடங்களாய்....
குடியிறுப்புகளாய்....

விதிமீறல்களைத் தடுக்க
விரிவாக்கங்களை அகற்ற
எதற்கும் மடியாமல்
யாருக்கும் பணியாமல்

அரசு தன் நிலையில்
அழுத்தமாகவே இருக்கிறது !
சட்டமும் தன் கடமையில்
கடுமையாகவே இருக்கிறது !!

மழைநீர் சேகரிக்கும் தொட்டி
கட்டவில்லை என்றால்
கட்டிடத்திற்கான அனுமதி
கண்டிப்பாகக் கிடைக்காது !

குளத்துக்குள்ளே கும்மி....


வறண்டக் குளத்தில
...முங்கிக் குளிக்கையில
கெண்டையொன்னும்
... கெழுத்தியொன்னும்
வந்து சிக்கியது
...வசமா எங்கையில

சிண்டப் புடிச்சு
...யாரோ தூக்கிவிட்டாங்க
மண்டையில நாலு
...சாத்துப் போட்டாங்க
முதுகுலயும் நால
...சேத்துப் போட்டாங்க

கெண்டை மீனோட
...கையில நானிப்போ
மிரண்டு போய்
...மாட்டி நிக்கேன்

கரண்டக் கையில
...புடிச்சதப்போல - நா
வறண்டு போய்
...விக்கி நிக்கேன்

தெரண்டாலும் வழுவழுனு
...கெண்ட மீனெப்படி
உருண்டையா இப்படின்னு
...அப்பவே நெனச்சேனே ?????

கரண்டாக் கையில அடிச்சது
...சிலேப்பிக் கெண்டயுமில்ல
கெழுத்தி மீனுமில்ல - மக்கா !
....கொழுந்தியா அவளோட
கரண்டக் காலு மக்கா !
....கரண்டக் காலு அது!!!