Sunday, December 28, 2008

இப்போதாவது முதலடி....


அமிழ்தினிய தமிழ்
அந்நிய மோகத்தால்
ஆங்கில மொழி தாக்கத்தால்
ஆழி நோய்க்கு ஆட்பட்டது போல
அல்லல் பட்டுக்கொண்டிருக்கிறது
அடித்தளமே கொஞ்சம்
ஆடிக்கொண்டுதான் இருக்கிறது

இது தான் தருணம்
இனியும் தாமதித்தால்
இலக்கியத் தமிழ் அல்ல
இனிய பேச்சுத் தமிழும்
இனிமேல் இங்கே
இல்லாமல் போகும்

அவசரச் சிகிச்சையாய் சில
அடிப்படை மாற்றங்கள்
அதிரடியாய் செய்ய வேண்டும்
அதுவும் உடனடியாய் செய்யவேண்டும்


தமிழ் கூறும் நல்லுலகில்
அலோவும் சாரும்புகுந்து
அவதிப்படாத அவதிப்படுத்தாத
தமிழ் வாய் ஏதேனும் உண்டா?

அலோவுக்கென தனியாய்
ஆழக்குழி தோண்டி
அதிலும் அதை
அடியில் வைத்துப்
அழுந்தப் புதைக்கவேண்டும்
சார் என்ற சொல்லே தமிழ்
சரித்திரத்தில் இல்லாமல்
சரி செய்யவேண்டும்

எளியோரைச் சேரும் வகையில்
இனிய மாற்றுச் சொற்களை
இங்கே அறிமுகம் செய்வோம்
இதை மற்றவருக்கும் சொல்வோம்

முதலடியை நாமே
முன் வந்து வைப்போம் !
முன் மாதிரியாய் நம்மையே
முன் வைத்து நிற்போம் !!

Wednesday, December 24, 2008

உதவி தேவை! அதுவும் உடனே..!!


ஊருக்கு வெளியே
ஒதுக்குப் புறமாய் வீடு
நட்ட நடு சாமம்
நடுநடுவே சாமந்திப்பூ வாசம்
துணைக்கு அங்கே யாருமில்லை
தூக்கமும் அருகில் வரவில்லை

எங்கும் நிசப்த்தம்
ஓங்கி சப்த்தமிட்டுக் கொண்டிருக்கிறது
கடும் குளிரில் மரங்கள்
நடுங்க மறந்து உறைந்து நிற்கின்றன
ஏதோ ஒரு காலடி ஓசை
எங்கிருந்தோ கேட்டுக்கொண்டே இருக்கிறது

அதிர ஒலிக்கிறது
அழைப்பு மணி வாசலில்
யாராயிருக்கும் இந்த நேரத்தில்
யோசனையோடு எழுந்து வருகிறேன்

சன்னல் திறந்து பார்க்கிறேன்
முன்னால் சுற்றுச் சுவர் அருகில்
தெரு விளக்கு வெளிச்சத்தில்
தெளிவில்லாமல் தெரிவது
நடுத் தெருவில் இருந்த
நெடு நாள் நண்பன்
தலையில் காயம் பட்டிருக்கிறான்
தள்ளாடியபடி நிற்கிறான்

எங்கோ வெளி நாட்டில் இருந்தானே?
எப்போது இங்கு வந்தான்?
இப்போது எதற்கு வந்திருக்கிறான்?
இனம் புரியாத பதட்டத்தோடு
மனம் குழம்பி கதவு திறக்கிறேன்

திடீரென அலறுகிறது
தொலைபேசியின் அழைப்புமணி
திறந்த கதவை விட்டுவிட்டு
திரும்பிச் செல்கிறேன்
தொலைபேசி இருக்கும் இடம்

நடுத்தெரு நண்பன்
நேற்று இரவு விபத்தில்
அகால மரணம்
அடைந்த செய்தி
உச்சந்தலையில் இறங்கி
உள்ளங்காலில் வெளியேறியது

இங்கே பார்த்தது பொய் இல்லையே!
இப்போது கனவும் காணவில்லையே!!
கையைக் கிள்ளிப் பார்த்துக்கொள்கிறேன்
கதவு வேறு திறந்து வைத்திருக்கிறேன்

முழுவதுமாய் இதயம் வேளியேவந்து
முன்னால் நின்று துடித்துக்கொன்டிருக்கிறது
வாசல்வரைப் போகலாமா?
வந்தது யார் பார்க்கலாமா?

உங்கள்உதவி வேண்டும்! அதுவும்
உடனே வேண்டும்!!

Tuesday, December 16, 2008

வரப்போகும் வானிலை அறிவிப்பேன்..!


பளீரென சுட்டெரிக்கும் வெயிலில்
பஞ்சை விரித்து உலரவைக்கையில்
கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை
கொடூரமாய் கொட்டியது மழை
தற்செயலாய் தான் கவனித்தேன்
தாண்டிப் போய்க்கொண்டிருந்தாள் அவள்

இலைகள் கூட அசைய மறுக்கும்
இறுக்கமான சூழலில்
மாவு திரித்து பதமாய்
மாடியில் பரப்பிவைக்கையில்
சுழற்றி அடித்து ஓய்ந்தது
சூறாவளியாய் காற்று
சுற்றிலும் தேடினேன் நான்
நினைத்தது போலவே வாசலில்
நின்றுகொண்டிருந்தாள் அவள்

இருமனங்கள் இணையும்
திருமண மண்டபத்தில்
தாலி கட்டப்போகும் நேரத்தில்
தானாக வியற்கிறது மூக்கின் மேல்

என்னவோ நடக்கப்போகிறது
என் மனதுக்குள் பட்சி அலறியது
மளமளவென குடை விரித்து
மணமேடையின் மேலிருக்கும்
மணமக்களுக்குப் பிடிக்கிறேன்

ஒட்டுமொத்தமாய் எல்லோரும்
ஒரு மாதிரியாய் பார்க்கிறார்கள் என்னை
பாவம்! ஒன்றும் புரியாதவர்கள்!!
பரிதாபமாய் நனையப்போகிறார்கள்!!!

எனக்கு மட்டும்தானே தெரியும்
என்ன நடக்கப்போகிறதென்று
வாசல் தாண்டி உள்ளே
வந்து கொண்டிருக்கிறாள் அவள்

Saturday, December 13, 2008

உள்ளே, வெளியே !


"புத்திகெட்ட மனுசனுக்கு
எத்தனை சொன்னாலும் புரியாது"

வாசலில் நுழைந்தவுடன்
வந்து விழுகின்றன வசவுகள்
எதற்காகவோ என்னை
ஏசிக்கொண்டே இருந்தாள்
கவனித்துவிட்டேன் ஆனாலும்
கவனிக்காமல் உள்சென்றேன்

பேருந்தில் இடம் பிடிக்க ஓடி
படியில் இடறி தடுமாறி
இடம் கிடைக்காமல் நின்றேன்
"இதுகூட முடியலின்னா
எதுக்கு மீசைன்னு ஒன்னு"

அவளின் கேலிப்பேச்சு
ஆழமாய்க் குத்தினாலும்
சட்டை செய்யாமல்
சன்னல் வழியே
வெளியே பார்த்தேன்

திரையரங்க வாசலில்
தெருவரையுள்ள வரிசையில்
முட்டி மோதும் சிறுவர்களுக்கு
ஓரம் ஒதுங்கி இடம் கொடுத்து
கொஞ்ச நேரம் கழித்து
கசங்கிப்போய் வெளியேவந்தேன்
"சின்னப் பசங்களக்கூட
சமாளிக்க முடியல
என்னத்த சாதிப்பிங்களோ?
என்னதான் பன்னுவீங்களோ?"

எப்போதும் போலவே
இந்தக்காதில் வாங்கி
அந்தக்காதில் விட்டு
அடுத்த வேலைக்குத் தயாரானேன்

கடற்கரையில் கால் நனைக்கையில்
"கொஞ்ச நேரம் இருங்க
குழந்தையை பாத்துக்கோங்க"

பதில் எதிர்பாராமல்
பரபரவென விலகிப்போனவள்
பதட்டத்தோடு திரும்பிவருகிறாள்
"வாங்க போயிறலாம் இங்கேயிருந்து
வம்பு செய்ராங்க ஏங்கிட்ட அங்கேயிருந்து"


அவளைக் கடந்து பார்க்கிறேன்
அங்கே திருட்டுப் பார்வையோடு
திடகாத்திரமாய் நால்வர்
தொடர்ந்து வந்திருக்கிறார்கள் அவளை

அடுத்த நான்கு நிமிடங்களில்
அங்கே யாரும் எதிர்பாராமல்
ருத்திரத் தாண்டவம் ஆடி அடங்குகிறேன்
யுத்தக் காண்டமே நடத்தி முடிக்கிறேன்

அந்த நால்வரும்
அவள் முன்னால் மண்டியிட்டு
மன்றாடி வேண்டி மன்னிப்புக் கேட்டு
மறு விநாடி மறைந்து போகிறார்கள்

"எந்தப் பிரச்சினையும் இல்லை
எல்லாம் முடிஞ்சு போச்சு
எங்கே போகலாம் அடுத்து?"

எதுவுமே நடக்காதது போல
அவள் முகம் பார்த்து கேட்டு
அப்பாவியாய் நிற்கிறேன்

அவளோ என்முகம் பார்த்து
அனைத்தும் உறைந்து நிற்கிறாள்
குழம்பிய முகத்தோடு
கலங்கிய சிந்தனையோடு
குற்ற உணர்ச்சியோடு
குறுகுறு பார்வையோடு
இதுவரைப் பார்த்துதற்கும்
இப்போது பார்ப்பதற்கும்
உள்ள வித்தியாசம்
உள்ளபடியே உணர்கிறேன்

மெதுவாய் என் கை பிடிக்கிறாள்
இதமாய் வாய் திறக்கிறாள்

"நீங்க போங்க முன்னாடி!"

மறுநாள் மாலை
மதிமயக்கும் வேளை
வரவேற்பு எதிர்பார்த்து
வீட்டுக்குள் நுழைகிறேன்
"புத்திகெட்ட மனுசனுக்கு....
..........................."

Wednesday, December 10, 2008

என் நிலை என்ன..?


சூறாவளியின் மையத்தில் நான்
சுனாமியின் சுழற்சிக்குள் நான்

என் கரு சுமப்பவள்
என்னை கருவில் சுமந்தவள்
இடையில் ஏதும் புரியாமல் நான்

தன் நிலை காக்க ஒருவள்
தன்னை நிலை நாட்ட மற்றவள்
என் நிலை தெரியாமல் நடுவில் நான்

இறுகும் சுருக்கு கயிறு கழுத்தில்
இரண்டு கத்தியின் மேல் நிற்கிறேன்
பிரச்சினையை நிறுத்த
பேசியே ஆக வேண்டும் நான்

எனக்குத் தெரிந்ததை அவர்களிடம்
எடுத்துச் சொல்லி அறிவுரித்தி
வேகமாகக் கோபத்தோடு
வெளியேறிப்போகிறேன் நான்

அந்திசாயும் நேரம்
அமைதியாய் உள் நுழைகிறேன்
ஆரவாரம் ஏதும் இல்லை
ஆள் அரவமும் இல்லை

அந்த அமைதி எனக்கு
ஆயிரம் அர்த்தங்கள் சொல்கிறது
என்னவோ நடந்திருக்கிறது
எதுவோ நடக்கவும் போகிறது

இருவரும் ஒன்றாய் சேர்ந்து
இருதுருவமும் ஒருசேர இணைந்து
எனக்கு எதிரே நிற்கிறார்கள்
எனக்கு எல்லாமே புரிந்துவிட்டது

எற்கனவே சமாதனம் ஆகிவிட்டது
ஏதோ உடன்படிக்கையும் முடிந்துவிட்டது

"எங்களுக்குள் ஆயிரம் இருக்கும்
உங்களை யார் இடையில் வரச் சொன்னது?"
முகத்துக்கு நேரே கேட்டுவிட்டு
முகம் திருப்பி உள்சென்று விட்டார்கள்

எதிர் எதிரே
எதிரியாய் நின்றவர்களுக்கு
எதிர்பாராமல் நான் இப்போது
எதிரியாய் ஆகிப்போனேன்

திருதிருவென விழித்துக்கொண்டு
தன்னந்தனியே நான்
என் நிலை என்னவென்று
எனக்கு இப்போதும் புரியவில்லை

சுய பரிசோதனை நேரம் !


அடிமட்ட மக்களுக்காகவே
அல்லும் பகலும் பாடுபடும் அரசு
பெறுமையாய் அறிவிக்கிறது
வருவாய் கூடிவிட்டதாக!
இருமடங்கைத் தாண்டிவிட்டதாக!!
....நிற்க...
மக்களின் வருமானமா கூடியிருக்கிறது ?
அது
மது விற்பனையில் வரும் பணம்!

விலைவாசி கூடிக்கொண்டே இருக்கிறது
வளமாய் மாறியிருக்கவேண்டும்
விவசாயியின் வாழ்க்கையும்
....நிற்க...
புள்ளி விபரங்கள்
புரிய வைக்கின்றன
உணர்த்துகின்றன
உண்மை நிலவரங்கள்
கூடிக்கொண்டே போகிறது
விவசாயி தற்கொலைகளும்
விபரீத இடப்பெயர்வுகளும்


சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட
மக்கள் வாழ்வை பாதுகாக்க
புதியதாய் அரசுப் பணியில்
பதினாயிரம் காவலர்கள் சேர்ப்பு
....நிற்க...
கடந்த ஆண்டைவிட
கூடியே இருக்கிறது
குற்றங்களின் எண்ணிக்கையும்

இவை சிலதான்..
இதுபோல் இன்னும் பல....

எதிர் மறையாகவே
இருந்திருக்க வேண்டிய
இந்த மாற்றங்கள் எல்லாமே
எல்லா இடத்திலும்
ஏறுமுகமாகவே இருக்கிறது

என்னதான் நடந்துகொண்டிருக்கிறது?
எங்கேநாம் சென்றுகொண்டிருக்கிறோம்?

Tuesday, December 9, 2008

உனது அச்சாணி..


அன்றொரு நாள்
அதிகாலை நேரம்
ஆழ்ந்த உறக்கம்

கடவுள் வந்து நின்றார்
கண்ணெதிரே என் கனவில்
கேள்விகள் பல கேட்டார்

பிடித்தவர்கள் பெயர் சொல் என்றார்
அம்மா அப்பா பெயர் சொன்னேன்
அமைதியாய் சிந்தித்தார்
அடுத்து சொன்னார்
"எதிர்காலம் நன்றாக இருக்கும்"

கனவுகள் பற்றிக் கேட்டார்
காதலி அவள் பெயர் சொன்னேன்
கண்மூடி தியானித்தார்
"நல்ல வாழ்க்கை அமையும்"

நெடுநாள் ஆசை கேட்டார்
நிலவு தொடும் வரம் கேட்டேன்
கொஞ்சம் தயங்கினார்
"நிச்சயம் நிறைவேறும்"

தொடரும் நட்பு பற்றிக் கேட்டார்
நண்பா உன்பெயர் சொன்னேன்
கேட்டதும் சிரித்தார்
சிறிதும் யோசிக்கவில்லை
உடனே பதில் சொன்னார்
"நீ எல்லாம் எங்கே உருப்படப் போகிறாய்''

Monday, December 1, 2008

வாரணம் ஆயிரம் இருந்தாலும் !


திடீரென அழுகுரல் கேட்டு
திடுக்கிட்டு விழிக்கிறேன் நான்
விடியவில்லை இன்னமும்
விரலில் நகம் கூடத் தெரியவில்லை

படபடத்து எழுகிறேன் பதறிக்கொண்டு
பக்கத்தில் குழந்தை கதறிக்கொண்டு
பால்க்காரன் இன்னும் வரவில்லை
பசியடக்க என்ன செய்ய தெரியவில்லை

சிரித்தபடி இருக்கிறாள் அவள்

பால்பொடி பெட்டியை திறந்து
பதட்டத்தில் போட்டு உடைத்து
மீதியை அள்ளி எடுத்து
பாத்திரத்தில் சேர்ப்பதற்குள்
பாதி உயிர் போய்விடுகிறது எனக்கு

சிரித்துக்கொண்டிருகிறாள் அவள்

எரிவாயு உருளையையும்
எரியாத அடுப்பையும் பார்த்ததும்
ஏழு உலகம் சுற்றுகிறது எனக்கு
"ஏன் இந்த பொழப்பு நமக்கு?"


சிரித்துக்கொண்டே இருக்கிறாள் அவள்

ஒருவழியாய் பாத்திரத்தில் அடைத்து
ஓடிப்போனவன் ஒடுங்கிப்போய் நிற்கிறேன்
சலனம் ஏதுமின்றி குழந்தை அங்கே
சகலமும் அடங்கிப்போகிறது எனக்கு இங்கே

எதிர்பார்த்து எதிர்பார்த்து
ஏங்கி ஏங்கிஅழுது குழந்தை
விரல் சப்பி விழி மூடி
தானாகவேத் தூங்கிப் போயிருக்கிறது

சிரித்துக்கொண்டுதான் இருக்கிறாள் அவள்

எனக்கு என் மேலேயே வந்த கோபம்
எதிர்பாராமல் திரும்புகிறது அவளிடம்

"அதற்குள் என்ன அவசரம் உனக்கு?
எதுவுமே தெரியவில்லையே எனக்கு?
என் நிலை பார்த்தபின் சிரிக்கலாமா?
என்னைத் தவிக்கவிட்டு நீ போகலாமா?

நிகழ்காலம் என் கண்ணை மறைக்கிறது
எதிர்காலம் என்னை ஏளனம் செய்கிறது
தனியே இருந்து நான் சமாளிப்பேனா?
நினைவிலாவது துணையாய் இருப்பாயா?"

இன்னும் அவள்
சிரித்துக்கொண்டுதான் இருக்கிறாள்
அந்தப்புகைப் படத்துக்குள் இருந்து.