Sunday, October 24, 2010

என்னிலை அறிக்கை...!


அழுகையில் கரையும் இரவுகளோடும்

ஆளுமையில் இறுக்கும் உறவுகளோடும்..

வரப்போகும் தருணம் ஒன்றிற்காக

வரம் வேண்டித் தவமிருக்கிறேன்....


அன்பென்ற பெயர்சொல்லி

ஆக்கிரமித்து எழுவான் அவன்...

அவனைப் பின்தொடர

அயர்ச்சியோடு கை நீட்டி

ஆதரவு கேட்பேன் நான்....

அலட்சியப் பார்வையால் ஒதுக்கி

அங்கிருந்து விலகுவான் அவன்....

தன்னையவன் உலர்த்த

நினைக்கும் பொழுதெல்லாம்

ஈரமாகிக் கொண்டிருக்கிறேன் நான்....


உரிமை என்ற உத்திரவாதத்துடன்

அவனது சுற்றத்தாரின்

அழுத்தும் தாக்கத்தாலும்

கொழுத்தும் வெப்பத்தாலும்

உருகிக் கொண்டிருக்கிறேன் நான்.....


என்னில்

கை நனைத்து

கால் அலம்பி

முகம் கழுவி

முதுகு தேய்த்து

தாகமும் தணித்து

மிதப்பாய் இருக்கிறார்கள் அவர்கள்....


எதற்கும் தயாராய் இருக்கச்

சொல்லி வையுங்கள் அவர்களிடம்....


அவர்கள் எதிர்பாராத தருணத்தில....

வரக்கூடும் ஒரு

காட்டாற்று வெள்ளம்............!


வந்ததொரு வாய்ப்பு


ஓட்டைகளால் வேயப்பட்ட

ஓலைக் குடிசையில்

சமையலை மறந்து

ஊமையாகிப் போன பாத்திரங்கள்....


அடைத்த செவியோடும்

ஒட்டிய வயிறோடும்

ஒரு ‘கொதிக்கும் கானம்

கேட்கத் தவமிருக்கிறேன் நான்.....


எதிர்பாராமல்

வந்ததோர் வாய்ப்பு.....


அவசர அவசரமாய்

பாத்திரங்களை எடுத்துப்

பரப்பி வைக்கிறேன் ...........


தாள லயத்தோடு

ஆரம்பமாகிறது கச்சேரி


ஏற்கனவே பெய்யத்

தொடங்கி இருந்தது மழை............!

.

ஏதோ புரிய ஆரம்பிக்கிறது எனக்கு ...!


காலை வேளையில் கடுமையாய்

கலவரப் படுத்துகிறது மேகம்....


அடிக்கும் காற்றில் தடுமாறி

கூட்டுக்குள் அடைகிறது காகம்....


நடுஇரவுப் பொழுதைப் போல்

திரண்டு நிற்கிறது இருட்டு.....


தரையில் தஞ்சம் புகுந்திட

தயாராகிக் கொண்டிருக்கிறது மழை...


நிலையைத் தாண்டிய பின்னரும்

நிலையில்லாமல் தத்தளிக்கிறது மனம்...


ஒரு நாள் மட்டும் தானே...

விடுப்பு எடுத்தால் என்ன..!

குடியா முழுகி விடும் ?

ஒருசில திட்டங்களோடு

ஓய்வெடுக்க முடிவெடுத்து

கதவைத் திறக்கக் கைவைக்கிறேன்


உணவைத் தேடியபடி

கதவின் இடுக்கின் ஊடாக

வீட்டின் உள்ளிருந்து

வெளியேறிக் கொண்டிருக்கின்றன

வரிசையாய் எறும்புகள்...........

.

அவரவர் பார்வையில்....!


அடர்பச்சைப் புதராய்

படர்ந்திருக்கிறது கொடி.....

ரத்தச்சிவப்பு நிறத்தில்

அசைந்து கொண்டிருக்கின்றன

அழகழகாய்ப் பழங்கள்........


அடர்பச்சை நிறத்தில்

வந்தமர்கின்றன கிளிகள்.....

ரத்தச்சிவப்பு நிறத்தில்

அழைத்துக் கொண்டிருக்கின்றன

அதனழகு அலகுகள்.....


புதரும் பறவையும்

வண்ணத்தில் ஒன்றாகி

எண்ணத்தை வென்றேகி

என்னுள் கலக்க......

என்னை நான் மறந்தே

படைப்பின் விந்தையை எண்ணி....

சிந்தை கலங்கி நிற்கிறேன்.


அங்கே....

விரித்த வலையின் சுருக்கை

சரிசெய்து கொண்டிருக்கிறான்

புதருக்குள் இருக்கும் அவன் .....

.

Thursday, October 14, 2010

ஒர் அதிகாரத்திற்கான சாட்சியாய் .......!

ஈழம் :1) கைவசமிருந்த கண்ணாடி பொம்மையை உடைத்துவிட்டு , அசையாதிருந்த மண்குதிரையை சாய்த்துவிட்டு,

வென்றுவிட்டதாய் பெரும்புரளியைக் கிளப்பிவிட்டு,

வெற்றுப்பரணியை ஊரெங்கும் பரப்பிக் கொண்டிருக்கும்

வெட்டிவீணருக்கு முதல் ஐந்தும் சமர்ப்பணம் :

ஆழம் அறியாத வேழத்தின் வீழ்ச்சியை

ஈழம் உணர்த்தும் உமக்கு [01]

யானை தனது சந்தேகத்துக்கிடமான பயணவேளைகளில் தரையின் தன்மையை துதிக்கையால் அழுத்தி சோதித்தபின்பே எடுத்துவைக்கும் அடுத்த அடியை. கொண்ட ஆணவத்தால் , உண்மைதன்னை உணராமல்,உணமைத்தன்மை அறியாமல் புதைக்குழியில் காலவைத்த யானையின் அழிவை உணர்த்தும் ஆவணமாய் இருக்கும் ஈழம்.

பதரென்(று) அழித்தாய்; பதறாமல் அங்கே

புதருள் இருக்கும் புலி [02]

எதிர்ப்பே இல்லாமல் ,எல்லாம் வெறும் பதராக இருப்பதாய் மகி(ழ்)ந்தே , நல்ல வேட்டை என காட்டை அழித்துச் செல்கிறாய் ..உனக்குத் தெரியுமா? பதறாமல் அருகிலேயே புதருக்குள் உனக்காகக் காத்திருக்கலாம் ஒரு புலி

அகம்தவிர் உன்னுள்; எதிர்க்கும் நிகர்எதிரி

உண்டாம் எதற்கும் அறி [03]

தான் என்ற அகத்தில் தலைகால் புரியாமல் ஆடுகிறாய் நீ .உனக்காக அன்றே நியூட்டன் சொன்ன சேதி ஒன்று இங்கு

எந்த ஒருவிசைக்கும் சமமான எதிர்விசை உலகில் உண்டு

புதைத்ததாய் தற்பெருமை கொள்வோரே ; எல்லாம்

விதையென்(று) அறிவீரா நீர் [04]

சுத்தமாய் அழித்து , மொத்தமாய் மழித்துப் புதைத்ததாய் எண்ணி தற்பெருமைக் கொள்வோரே! உண்மை ஒன்றை அறிந்து கொள்ளவீரா? வென்றதாய் எண்ணி, வெறியில் புதைத்தது அத்தனையும் வீரியவிதைகள் என்பதை.

ஈசலுக்கும் கூட இணையில்லார்; காட்டுவார்

ஈசனுக்கும் மேல்தம்மை இங்கு [05]

போர்தர்மம் குலைத்து , குற்றங்கள் இழைத்து , பிறர் உதவியால் பிழைக்கும் உமது வ(வெ)ல்லரசு மாயத்தோற்றம் வெகுவிரைவில் கலையும்/குறையும்/கரையும்/.

2) கூட்டுச்சதியாலும் ,கோடாரிக் காம்புகளாலும்

கூட்டம் கூட்டமாய் கூட்டை இழந்து தவிக்கும் குலக்கொழுந்தினருக்குதொடர்வது அனைத்தும் சமர்ப்பணம் :

வலியினைத் தாங்கும் வழியை அறிவாய்;

வலியதாய் ஆகும் மனது [06]

தீயுள் விழுந்துவிட்ட அங்கமல்ல; தீயில்

பழுத்துவிடும் தங்கம்போல் நாம் [07]

எளிதன்(று) எனமலைத்து நிற்கிறாய்; எல்லாம்

எளிதென்று வெல்வாய் உணர்ந்து [08]

ஆற்றல் அனைத்துமுண்டே ஆள்வதற்கு; தேவையா

ஆறுதல் வார்த்தை நமக்கு [09]

திலகம் அணிந்திடும் நாள்உண்டு; நம்பின்

உலகும் அணிதிரளும் அன்று [10]

மேலுள்ள எதற்கும்

விளக்கம் என்றெதுவும்

தேவையில்லை உனக்கு .

காலம்மும் கனியும் நமக்கு..

கலக்கம் தராதிரு மனதுக்கு....

உனைக்கண்டு மீண்டும் ‘அவர்கள்

கலங்கும்நாள் வெகுவிரைவில் இருக்கு .......


Wednesday, October 13, 2010

சர..சர..அவசர.......!


அவசரமாய் விழித்து

அவசரமாய் எழுந்து

அவசரமாய்க் கிளம்பி

அவசரமாய் முத்தமிட்டு

அவசரமாய் ஓடி

அவசரமாய் ஏறி

அவசரமாய் இறங்கி

அவசரமாய் நுழைந்து

அவசரமாய் அமர்ந்து

அவசரமாய் எழுதி

அவசரமாய்க் கூட்டி

அவசரமாய்க் கழித்து

அவசரமாய்த் திட்டமிட்டு

அவசரமாய் வெளியிட்டு

அவசரமாய்த் திட்டுவாங்கி

அவசரமாய் மறந்து

அவசரமாய் மூடி

அவசரமாய் வெளியேறி

அவசரமாய் ஓடி

அவசரமாய் ஏறி

அவசரமாய் இறங்கி

அவசரமாய் ஓய்வெடுத்து

அவசரமாய் சொல்லிக் கொடுத்து

அவசரமாய் உணவெடுத்து

அவசரமாய்த் தூங்கவைத்து

அவசரமாய்ப் படுத்து

அவசரமாய்ப் படித்து

அவசரமாய் முடித்து

அவசரமாய்க் கண்மூடி சயனித்து

அவசரமாய்க் கனவில் பயணித்து

..........................

அவசரமாய் விழித்து

அவசரமாய் எழுந்து

அவசரமாய் கிளம்பி

அவசரமாய் முத்தமிட்டு

அவச......................


சே.... என்ன இது ?

என்னதான் வாழ்க்கை இது !

ஒரு நொடியில் உறைகிறேன்

மறு நொடியில் சரிகிறேன்

சன்னலைத் தாண்டி எங்கோ

சூனியத்தில் வெறிக்கிறேன்


அருகிருந்த கிளையில்

நிதானமாய்

நகர்ந்து கொண்டிருக்கிறது

நத்தை ஒன்று


.


Saturday, October 2, 2010

காந்தி ஜெயந்தி..: அவருக்கென்ன ?...விடச் சொன்னார் தான் ...!


விடிந்தால் பள்ளிவிடுமுறை

வீட்டிற்குப் போகும்முன்

நல்லதாக நாலுவார்த்தை

நாமளாவது காந்தியைப் பற்றி

நறுக்குன்னு சொல்லியணுப்புவோம்

பசங்களா .....

காந்தித் தாத்தா...

அவரது அறிவுரைகளைப் பற்றி

அணுஅளவாவது தெரிஞ்சிக்கோங்க .....

ஆழ்ந்த கருத்துக்களைப் பற்றி

மேலாகவாவது புரிஞ்சுக்கோங்க....

அவர்.........

இம்சைக் கிடம்கொடா(து) உந்தி விடச்சொன்னார்
அந்நிய மோகம் அணை(னை)த்தும் விடச்சொன்னார்

தீண்டாமை யைத்தூரத் தள்ளி விடச்சொன்னார்
ஆணாதிக் கம்அவநம் பிக்கை விடச்சொன்னார்

ஆள்க்கொள் ளுமாசை சித்தம் விடச்சொன்னார்
ஆழ்மன வேற்றுமையை உன்னில் விடச்சொன்னார்

வாய்மைப் பெருக்கியே பொய்மை விடச்சொன்னார்
சோம்பல் அதனை மொத்தம் விடச்சொன்னார்

மண்ணில் மதவேற் றுமையை விடச்சொன்னார்
உன்னில் பயமும் சுயமும் விடச்சொன்னார்


எடுத்தத் தலைப்பில் எடுப்பாய் முடித்தேன்

என்ன சந்தேகம் என்றாலும்

என்னிடம் கேளுங்கள் என்றேன்

இரண்டுபேர் எழுந்தனர்

ஆளுக்கொன்றாய் தொடுத்தனர்...

இதுவரைக்கும் என்னவெல்லாம் விட்டீங்க சார் ?

இன்றைக்கு லீவும் விடச் சொன்னாரா சார் ??

குட்டிக் குழந்தைகளின் கேள்விகள்

நெற்றிப் பொட்டில் அறைந்தன .....

‘விடச்சொன்னார் ..சரிதான் ...!

விட்டிருக்கிறோமா நாம் ? - அவர்

சொன்னது எதையும் விடவில்லை ஆனால்

சொல்லாததை எல்லாம் விட்டிருக்கிறோம் ..!

இரவெல்லாம் என்னைச் சுற்றிலும்

ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தன

அந்தக் கேள்விகள்......!


தூங்கவில்லை நான்........!

”நீங்கள்” ............?


Friday, October 1, 2010

வழுக்கல்கள் : இரண்டு ..........!


நடைபாதை ஓரத்தில்

தடம் வழுக்கியே

தடுமாறிச் சரிகிறேன் நான்..


எதிர்பாராத தருணமதில்

எங்கிருந்தோ வருகிறாள அவள்...


அறிமுகம் இல்லாத என்னை

பதறித் தாங்குகிறாள்....


தோள்களைப் பற்றி என்னைத்

தூக்கி நிறுத்துகிறாள்.....


பிடறியை உதறிய படியே

திடுக்கென விழித்துக் கொள்கிறது

போர்த்தியிருந்த பசுத்தோலுக்குள்

உறங்கிக் கொண்டிருந்த


என் மனம்........


.