Wednesday, February 10, 2010

நம்பிக்கையோடு காத்திருக்கும்....


பூங்காவின் ஓரத்தில்
பாப்பா நான்மட்டும் தனியாக ...

அங்கே...
தூரத்தில் தம்பியோடு
விளையாடிக்
கொண்டிருக்கிறார்கள்
அம்மாவும், அப்பாவும்.....

இங்கே....
எனக்குத் துணையாக....
என்றோ போட்ட
ரொட்டித் துண்டுக்காக
இங்கு நான்
வரும்போதெல்லாம்
என்னை ஏதோவொரு
நம்பிக்கையில்
சுற்றிவரும்
குட்டி நாயொன்று
இன்றும் என்னருகில்
என்முகம் பார்த்து
எதிர்பார்ப்போடு....

அங்கே....
அதே நம்பிக்கையில்
தம்பியோடு ..........

இங்கே...
நான் மட்டும் தனியாக ...

Sunday, February 7, 2010

எங்கும் நிகழ்வதுதான் ..! என்றாலும்....!!


மையப்புள்ளியை
தரையில் வைத்து
வானத்தில் வட்டமிடுகிறது
கள்ளப் பருந்தொன்று

அதன்பார்வை பயணித்து
முடிவடையும் இடத்தில்

கீழே
தூரத்தில்
தாயின் அச்சுறுத்தல் மீறி
உலகமே தனதென்று எண்ணி
எதையும் சட்டைசெய்யாமல்
துள்ளி விளையாடிய படி
அன்றுதான் தரைதொட்ட
குட்டி அணிலொன்று

திடீரென....
தன்நிழல் கணித்து
இலக்கு குறித்து
கவனம் குவித்து
பாதை மாற்றி
வேகம் கூட்டி
இறகு மடக்கி
தரை நோக்கி
தலைகீழாய்
இறங்குகிறது
அந்தப் பருந்து

கடைசி நொடியில்
மயிறிழையில்
அனிச்சையாய்த்
துள்ளி விலகி
தாவிப் பொந்துதினுள்
நுழைந்துபின் எட்டிப்பார்க்கிறது
அந்தக் குட்டி அணில்

நிலைகுத்திய பார்வையோடு
உறைந்துபோன உணர்வுகளோடு
மூச்சுவிட மறந்த இதயத்தோடு

நான் ............


.

Thursday, February 4, 2010

(மரபில்) காதல்.. காதல்...காதல்


1)அவசரமாய் :
சேலைக்குள் சோலையாய் சிட்டவள் ஈர்த்திட
மாலைக்குள் மங்கை மதிமுகம் பார்த்திட
சாலைக்குள் சிங்கமாய்ச் சீறிப் பறந்தேன்நான்;
மாலைக்குள் என்படம் இன்று

[வெண்பா/இன்னிசை/இரட்டை மடக்கு/திரிபு]



2)அமைதியாய் :
அக்கரையில் பாதையில் அன்னமவள் முன்செல்ல
இக்கரையில் பாறையில்நான் காலிடறி முன்சாய
அக்கறையில் அங்கவள் மேல்பதற; நானிங்கே
சக்கரையில் மூழ்கும் எறும்பு

[வெண்பா/இன்னிசை]