Wednesday, April 20, 2011

16 :நம் மரபைக் காக்க..இயன்றவரை என்னாலானதை இறுதிவரைச் செய்வேன் ....!


உலக மரபு தினம்..(18.04.11)

அழிவின் நுனி விளிம்பில்
பரிதாபமாய் நின்றபடி
பழைமையின் பெருமையை
பலன் எதிர்பாராது நம்முன்
பறைசாற்றிக் கொண்டிருக்கும்

’நினைவுச் சின்னங்களை
புராதானக் கோவில்களை
வண்ண நுண்ணோவியங்களை
கலைமிகு அழகுச் சிலைகளை’

மேலும் சிதையாமல்
யாரும் சிதைக்காமல்
பாதுகாக்கும் விழிப்புணர்வை
பொதுவில் உருவாக்கும் ஒரு
தன்னலமில்லாப் பண்பாளர்களின்
தன்னார்வச் சுற்றுலா அது .......

இந்தியா முழுதும் சுற்றிவந்து
இன்றுடன் முடிவடைகிறது
மன்றம் வைத்த மதுரையின்
மீனாட்சி அம்மன் கோவிலில்..........

நம் முன்னோரின்
கலை தொழில்நுட்பத்தின்
வானளாவிய முதிர்ச்சியை
இன்றும்காட்டிக் கொண்டிருக்கும்
காலக் கண்ணாடி அது......

கலையின் வீச்சில் மிரண்டு நான்
மலைத்துப் போய் நிற்கிறேன்
மறு நிமிடமே மனம் கலைந்து
வெறுத்துப் போய் விடுகிறேன்

சுற்றிலும் குப்பைகள்
சுகாதாரச் சீரழிவுகள்
சுற்றுச்சூழல் சீர்கேடுகள்
கசங்கிய காகிதப் பொட்டலங்கள்
காலியான குளிர்பானக் குடுவைகள்

”மாற்றவேண்டும் இந்த
மனிதனின் தன்மையை...
காக்கவேண்டும் கலைச்
சின்னங்களின் மேன்மையை....

நாம் மனது வைத்தால்தான்
நாளையாவது மாற்றங்கள் வரும் - எல்லாம்
நமது உடமைகள் எனக் கொண்டால்தான்
நம்மிடையுள்ள தடுமாற்றங்கள் தீரும்”

என்றாவது ஒரு நாளிந்த
உண்மை எல்லாருக்கும் புரியும்
என்னும் அதீத நம்பிக்கையோடு
அங்கிருந்து கிளம்புகிறேன்

”அட ,
.!!!”

கலைச் சின்னங்கள் பற்றிய
கவலையில் எனது மொத்த
கவனம் சிதறிப் போனதில்
முக்கியக் கடமை ஒன்றை
செய்யாமல் விட்டிருக்கிறேன் :(

’இந்தியா முழுதும் செய்ததை எப்படி
இங்கே முழுதாய் மறந்துபோனேன் ?
இங்கேவரும் வாய்ப்பெனக்கு
இனியும் இருக்குமோ எனத் தெரியவில்லை..!’

எனவே .........

கோவிலின்
சுவரிலில்
எனது வரவையும்
என்னவளின் பெயரையும்
சுரண்டிப் பதிக்கக் கிளம்புகிறேன் நான் ..............

Thursday, April 14, 2011

எனக்குள் இருப்பவன்...தேடிப்பாருங்கள் ...உங்களுக்குள்ளும் இருப்பான் ......!

ஒரு பயணத்தின் முடிவில்..........

தூத்துக்குடி.....
மூன்றுபக்கமும் தொழிற்சாலைகளாலும் , ஒருபக்கம் துறைமுகத்தாலும் சூழப்பட்ட தொழில் நகரம் ....
’மால்கள் , காம்ப்ளக்ஸ்கள்’ என அல்ட்ராமாடர்ன் சிட்டியாக மாறிக்கொண்டிருக்கும் நகரம் ...

வெளியூர் சுற்றுப்பயணம் முடித்து காலையில்தான் வீடுவந்து சேர்ந்திருந்தேன் ..அம்மா ஒரு திருமண அழைப்பிதழோடு வந்தார் .

“தம்பி ..(என்னை தம்பி என்றுதான் அழைப்பார் ) ...ஒரு முக்கியமான கல்யாணம் ... போயிட்டு வந்திரலாம்” என்றார் .

எனக்கு சிறிது அசதியாக இருந்தாலும் சரி எனக் குளித்துக் கிளம்பினேன் .
காரில் ஏறும்பொழுது மெல்ல ”குலசாமி கோயில்ல கல்யாணம் .கார் கோயில் பக்கம் வரைக்கும் போக வழி கிடையாது “ என்றார் ...
”ஓ! ... நடக்கணுமா??? .. அப்போ என்னால வரமுடியாது .... நீங்க போய்ட்டுவாங்க ”என்று இறங்க ஆரம்பித்தேன் .

சட்டென என் கையைப் பிடித்து உக்கார வைத்தார்

” கண்டிப்பா போகணும் ...அப்பா வழியில் பையன் நெருங்குன சொந்தம் ..சென்னைல இருந்து இங்கே வந்திருக்காங்க ...பொண்ணு உங்க தாத்தா வழி (அம்மா வழிச் சொந்தம் ) ...கயத்தாறில் இருந்து வந்திருக்காங்க .....இங்கே கோயில்லதான் செய்யணுமுன்னு வேண்டுதலாம்... நமக்கும் தலைக்கட்டு உண்டு....சீக்கிரமா போய்ட்டு வந்திடலாம் “ என்றார் ....

தட்டமுடியவில்லை எனக்கு ....அரை மனதோடு கிளம்பினேன் அவர்களோடு
”அரைமணி நேரத்துக்கு மேலே இருக்க மாட்டேன் .எனக்கு ஆபீஸ்ல மீட்டிங் இருக்குது .இப்போவே சொல்லீட்டேன்” என்ற கண்டிசனோடு

15 நிமிடப் பயணம்தான் ..இடம் வந்துவிட்டது
வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி நடக்கத் தொடங்கினோம்.. இந்த இடம் பற்றிக் கேள்விதான் பட்டிருக்கிறேன் ...நேரில் இதுவரைக்கும் வந்ததில்லை....
மாடிவீடுகளுக்கு நடுவே ....ஒரு சிறிய பாதை..முடிவில் ஒரு வாழைத் தோரணத்துடன் ஒரு சின்ன அலங்கார வளைவு வரவேற்றது ...
இருவர் மட்டுமே ஒரே நேரத்தில் நுழையுமளவுக்கு சின்ன வாயில் ......

உள்ளே நுழைந்த எனக்கு ஆரம்ப அதிர்ச்சி காத்திருந்தது ...

அட....ஊருக்கு நடுவில் இப்படி ஒரு இடமா ???? உள்ளே சிறிய பூடத்துடன் கூடிய சுடலைசாமி கோவில்...முன்னால் பரந்து விரிந்த மரங்கள் அடர்ந்த தோட்டம் போன்ற அமைப்பு ..... பக்கத்தில் இருப்பவர் பேசுவது கேட்காத அளவுக்கு பலவிதமான பறவைகளின் குரல்கள் .......அவ்வப்போது விழுந்து சிதறும் எச்சம்....
முகம் சுழித்தபடியே உக்காரும் இடைத்தைத் துடைத்துவிட்டு அமர்ந்தேன்..

அடுத்து.........
கையைப் பிடித்துக் கொண்டு ”அப்பா போலவே இருக்கியே ராசா” என கண்ணத்தைப் பிடித்து இழுத்து உச்சிமுகர்ந்து முத்தம் கொடுத்த பாட்டிகள்......
எல ...இவனப்பாருல ... டவுனுக்குள்ள இருந்துக்கிட்டு நம்மூருப் பயமாதிரியே திரியறான் ‘ ( பெரிய மீசை வைத்திருக்கிறேனாம் !!) என கையைப் பிடித்துக் கொண்டு கிண்ண்டலடிக்கும் தாத்தாக்கள் ,பெரிசுகள்......

’ஏவுலா... ஆத்தா...அப்பத்தா....பூட்டி...கொளுந்தியா....மச்சான்...’என காதைச் சுற்றிலும் உறவுமுறைகள் துள்ளிவிளையாடும் நாகரீகம் துளியும் கலக்காத வெள்ளந்திப் பேச்சுவார்த்தைகள் ......

என்னை அப்படியே வேரோடு புடுங்கி ...எங்கோ நாடுகடத்தி.....ஏதோ ஒரு கிராமத்துக்குள் நட்டு வைத்ததைப் போல உணர்ந்தேன்...எனக்குள் எங்கோ புதைந்துகிடந்த ஏதோ ஒன்று பொங்கி எங்கும் பரவுவதையும் நன்றாகவே உணர்ந்தேன் ........

நகர வாழ்க்கையில் சுத்தம் ,சுகாதாரம், நாகரீகம் என்று பெயரால் அண்டை மனிதர்களிடம் இருந்து விலகியே பழக்கப் பட்டுவிட்டேன் ...இப்பொழுது இந்த பாசமான வருடல்களும் , கைப்பிடித்தல்களும், தாங்கல்களும் எனக்கு ஒரு புதிய உலகினைக் காட்டிக் கொண்டிருந்தது ....... நான் இது நாள் வரையில் ஒர் உன்னதமான வாழ்க்கைமுறையை மிகவும் இழந்திருக்கிறேன் என்பதும் புரிந்தது .......

மிக எளிமையாய் திறந்த வெளியில் திருமணம்... மணமக்கள் முன்னிலையிலேயே சாப்பாடு ....
சாப்பாடு முடிந்து பழைய நினைவுகளை அசைபோட்டபடியே பெரிசுகள்..எனது முன்னோர்களைப் பற்றி கதைகதையாகச் சொல்லிக் கொண்டிருக்க .......ஒரு வார்த்தை சொல்லாமால் அத்தனையையும் திறந்த வாய் மூடாமால் கேட்டுக் கொண்டிருந்தேன் ..அவர்களுக்குள் ஒன்றிப் போயிருந்தேன் ....

நான்கு மணி நேரங்கள் போனதே தெரியவில்லை ........
அம்மா மெதுவாக வந்து ‘‘ தம்பி போவோமா ? “ எனக் கேட்டார் ....

மெல்ல சிரித்து ...’’என்ன அவசரம் ...இருங்கம்மா ..போகலாம் ’‘என்றேன் .....

அனைத்து சடங்குகளும் முடிந்து , அனைவரையும் வழியணுப்பிவைத்துவிட்டுக் கிளம்பி வீடு வந்து சேரும் போது மணி மாலை 5 ....

எதையோ இழந்தது போல மனம் கனக்க வண்டியிலிருந்து இறங்கினேன் ...
குழந்தைகள் எல்லாம் வாயைப் பொத்திக்கொண்டு என்னைப் பார்த்து கிண்டலடித்து சிரித்துக் கொண்டிருக்கிறார்கள் ....

எதுவும் புரியாமல் கண் சுருக்கிஎன்ன என்பதுபோல அவர்களிப் பார்க்க

கடைக்குட்டி “அப்பா ...சட்டைல காக்கா ஆயி “ என சத்தமாகச் சொல்ல ..(தோள்பட்டையில் ஏதோ ஒரு பறவையின் எச்சம் )....அதைக்கேட்ட மற்ற குட்டிப் பிசாசுகள் அனைத்தும் திசைக்கொன்றாகப் பறந்தன ...
நான் தொட்டுவிடக் கூடாதாம் ..தொட்டால் அவர்கள் குளிக்க வேண்டுமாம் .......

மற்ற நேரமென்றால் பதறி உடனே அந்தச் சட்டையைக் கழற்றி வீசி இருப்பேன் ....
அன்றென்னவோ தெரியவில்லை.....சட்டையைக் கழட்ட எனக்கு மனமே வரவில்லை........
அப்படியே நின்று கொண்டிருக்கிறேன்..............

ஏன் எனவும் புரியவில்லை!!!!!
என்னவாயிற்று எனக்கு ?????

உங்களுக்காவது தெரியுமா ????


இணைப்பு :
சில அலைபேசிப் படங்கள் :

வரவேற்ற (மறைந்துபோன) ஒலி பெருக்கி ....................தெய்வமாகிப் போன மரம் (வரலாறு இருக்கும்)
24032011(039)a.jpg 24032011(013)a.jpg

மணமக்கள் .(திறந்தவெளி மேடை )..............................திறந்தவெளி சாப்பாட்டுப் பந்தி
24032011(002)a.jpg 24032011(006)a.jpg

எளிய உணவு................................................................... நலம் விசாரிப்பு
24032011(007)a.jpg 24032011(016)a.jpg

கிண்டல் பேச்சுகள்....................
24032011(020)a.jpg 24032011(015)a.jpg

100 ஆண்டுகள் கடந்த நுரைக்கல் கிணறு......................கொடுக்காப்புளி ( நான் நிறைய பொறுக்கி சாப்பிட்டேன் :))
24032011(012)a.jpg 24032011(025)a.jpg

அடர்ந்த தோப்பு ...............................................................குழந்தைகளின் வழக்கமான சேட்டை :))
24032011(017)a.jpg 24032011(024)a.jpg

தலைமுறை.......................................................................மணமக்கள்
24032011(033)a.jpg 24032011(038)a.jpg

Thursday, April 7, 2011

எனது கோணத்தில் திருக்குறள் :வழக்கு 2 : வான் மழையும் , வெண் சுண்ணாம்பும் ஒன்றா ?

வள்ளுவன் வாக்கினை வம்புக்(கு) இழுப்போர்முன்
வந்து தொடுப்போம் வழக்கு


அன்புப் பெரியோர்களே .......

திருக்குறளுக்கான விளக்கஉரையில், தவறான புரிதல் இருப்பதுபோலத் தோன்றும் இடங்களில் தெளிவு பெறுவதற்கான ஒரு முயற்சி இது

வழக்கு 2 :


பொருட்பால் :அங்க இயல்

அதிகாரம் : அவை அறிதல்

குறள் : 714

ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்

வான்சுதை வண்ணம் கொளல்.


திரு மு.வரதராசனார் உரை :

அறிவிற் சிறந்தவரின் முன் தானும் அறிவிற் சிறந்தவராக நடந்து கொள்ள வேண்டும், அறிவில்லாதவர் முன் தாமும் வெண் சுண்ணம் போல் அறிவில்லாதவராய் இருக்க வேண்டும்.

திரு மு.கருணாநிதி உரை :

அறிவாளிகளுக்கு முன்னால் அவர்களையொத்த பாலின் தூய்மையுடன் விளங்கும் அறிஞர்கள், அறிவில்லாதவர்கள் முன்னால் வெண்சுண்ணாம்பு போல் தம்மையும் அறிவற்றவர்களாய்க் காட்டிக் கொள்ள வேண்டும்.

திரு சாலமன் பாப்பையா உரை :

தன்னிலும் மேலான தனக்குச் சமமான அறிஞர் கூடியுள்ள அவையில் தன் நூல் அறிவும் சொல்வன்மையும் வெளிப்படப் பேசுக; தன் அறிவிலும் குறைவான மக்கள் கூடியுள்ள அவையில் அவருக்கு விளங்கும்படி இறங்கிப் பேசுக.


திரு.பரிமேலழகர் உரை :

ஒளியார்முன் ஒள்ளியர் ஆதல்- அறிவால் ஒள்ளியாரவைக்கண் தாமும் ஒள்ளியராக; வெளியார்முன் வான்சுதை வண்ணம் கொளல் - ஏனை வெள்ளைகள் அவைக்கண் தாமும் வாலிய சுதையின் நிறத்தைக் கொள்க.. அவர் மதிக்கும் வகை அவரினும் வெண்மையுடையராக என்பார், 'வான் சுதை வண்ணம் கொளல்' என்றார்.

மேலோட்டமாக ஒரு முதல் தகவல் அறிக்கை :

வெண் சுண்ணாம்பு, பால், வெள்ளை, வெண்மை என பல பெயர்கள் வந்துள்ளதே விளக்கவுரையில்....!. உவமைக்காக சுண்ணாம்பு பற்றி எல்லாமா அய்யன் சொல்லி இருப்பார்......?

வழக்கைத் தொடர்வோம் வாருங்கள் :

முக்கியமாக இடறுவது போலத் தோன்றும் இரண்டு சொற்களின் பொருளை ( ஒள்ளியர் , வான் சுதை ) முதலில் காண்போம்


ஒள்:

adj.பிரகாசமான;நல்ல; அழ குள்ள;அறிவுள்ள. In combination the ன் may change into ட் or ண் see ஒட்பம் ஒண்மை etc. , adj. bright, பிரகாசமான;


ஒள்ளி oḷḷi

, n. 1. Red gold; செம்பொன். 2. Šukra; சுக்கிரன்


சுதை cutai :

, n. < sudhā. Ambrosia; தேவாமிர்தம்.. Milk; பால்.

Whiteness; வெண்மை. (சூடா.) . Star; நட்சத்திரம். (அக. நி.) . Lightning; மின்னல். (சங். அக.), n. < sutā. Daughter; மகள். (பிங்.), n. Kicking cow; உதைகாற்பசு., n. < cyuta. Destruction; கேடு.

. சுதைக்குன்று cutai-k-kuṉṟu :, n. < சுதை¹ +. An artificial hillock plastered with chunam; சுண்ணாம்பு பூசிய செய்குன்று

கிடைத்த சான்றுகளில் இருந்து :

ஒள் = நல்ல ,அறிவுள்ள ,பிரகாசமான

ஒள்ளி = செம்பொன், தேவாமிர்தம் எனவும்

சுதை = அமுதம் , சுண்ணாம்பு

என்றிருந்தாலும்

வான்சுதை = வானமுதம்

= வானிலிருந்து வரும்அமுதம்

=மழை என்பதே பொருந்துவதால்......சுண்ணாம்பு விலக்கிக்கொள்ளப் படுகிறது

வான்சுதை வண்ணம் = மழை நீரின் வண்ணம்

=நிறமற்ற தன்மை என்பதுதான் பொருத்தமாக இருக்கும் .

வான்சுதை = வெண்சுண்ணாம்பு என்பதற்கான வாய்ப்பு இல்லை

வானமுதம் என்பது மழைதான் என்பதற்கான சான்றை அய்யனின் வான்சிறப்பு அதிகாரத்தில் இருந்தும் பெறலாம் .

அதிகாரம் 02 : வான் சிறப்பு

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்

தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று [02:01]

விளக்கக் குறள் :

மண்ணுயிரின் வாழ்வுயர வானிருந்து மண்புகும்

நல்லமுதம் என்றும் மழை

எனது தீர்வாகவும் உங்களின் ஒப்புதலுக்காகவும் உங்கள்முன் :

விளக்கவுரை :

அறிவிற் சிறந்தவரின் முன் தானும் அறிவிற் சிறந்தவராக, மின்னும் பொன்போல் / தேவாமிர்தம்போல் நடந்து கொள்ள வேண்டும், பிறர் / அறிவில்லாதவர் முன் தாமும் வானமுதம்போல் / மழைநீர்போல் வண்ணமில்லாத் தன்மையுடன் அறிவில்லாதவர் போலிருக்க வேண்டும்.

எனது விளக்கக் குறள்:

அறிஞர்முன் மின்னும்பொன் போலிரு; மற்றோர்முன்

வான்மழைநீர் வண்ணம்கொள் வாய்தீர்ப்புக்காகக் காத்திருக்கிறேன்

Tuesday, April 5, 2011

எனது கோணத்தில் திருக்குறள் :வழக்கு 1 : வள்ளுவன் சொன்னது இதைதானா...?

அறிமுகம் :


வள்ளுவன் வாக்கினை வம்புக்(கு) இழுப்போர்முன்
வந்து தொடுப்போம் வழக்கு

அன்புப் பெரியோர்களே ......

திருக்குறளின்மேல் ஓர் இனம்புரியாத பற்று உருவாகி , எளிய தமிழில், மரபிலக்கணம் மாறாமல், குறள்வெண்பா அமைப்பிலேயே விளக்கக் குறள்கள் படைக்கும் முயற்சியின் இடையில் தொடரமுடியாமல் பல தடங்கள்கள் ,தடைக்கற்கள்.......

தெளிவுபெற வேண்டி சான்றோரின் விளக்கவுரைகளைத் தேடி எடுத்து , என்னைச் சரி செய்து கொள்ள நினைத்த பல இடங்களில் ....

இதேக் குழப்பம் அன்றும் இருந்திருக்கிறதோ ? அல்லது அதை சரிசெய்யாமல் / கவனிக்காமல் இருந்திருப்பார்களோ ?

என்ற ஐயங்கள் தோன்றும் அளவுக்கு மொத்தம் 40 இடங்களுக்கும் மேல் இடறல்கள்....விளக்கக் குளறுபடிகள்.... இருப்பதாகத் தோன்றியது..

அய்யனின் வாக்குக்கும்...சான்றோர்கள் தந்த விளக்கத்துக்கும் என்னளவில் பெரிய மாறுதல்களை உணர்ந்தேன்...,

அகராதிகளின் துணையுடனும் , நான் அறிந்து கொண்ட வரையிலும், நடைமுறை( LOGIC) பார்வையுடனும், எனது விளக்கத்தை ஒருபக்கமாகவும் , சான்றோர்களின் விளக்கத்தை மறுபக்கமும் வைத்து உங்கள்முன் படைக்கிறேன் ....

(இது கொஞ்சம் அதிகப்பிரசங்கித் தனமாகத்தான் எனக்கேப் படுகிறது ...இருந்தாலும் தவறு எங்கிருந்தாலும் சரி செய்யப் படவேண்டும் என்று நக்கீரனின் சீடனாக உங்கள்முன் நிற்கிறேன். எனது வாதத்தில் தவறு இருக்கலாம்...இருக்கும் இடங்களில் உங்களின் மாணவனின் தவறாக நினைத்து மன்னித்து விடுங்கள் )

திருக்குறளிலிலிருந்து அவரவர் எண்ணங்களின் அளவுகோலுக்கு ஏற்ப புதுப்புது விளக்கங்கள் கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும் அதிலிருந்து குறளுக்கு ஒத்த அதிர்வுடைய பழுதில்லாத சிறந்த ஒன்றைத் தேர்ந்து கொள்ளலாமே என்ற எண்ணத்தில் விளைந்த தொடர்

இது ..

ஆதரவு அளியுங்கள் பெரியோர்களே ......

தங்களின் மேலான தீர்ப்புக்காகக் காத்திருக்கிறேன்..

[பி.கு : இது திருக்குறளைப் பற்றிய விவாதத் தொடர் அல்ல....

திருக்குறளைப் புரிவதில் ஏதும்பிழை இருக்குமோ? என்ற ஐயமும் ,அதற்கான விளக்கமுமே இந்தத்தொடரில் தொடரும்..]


வழக்கு 1 :

பொருட்பால் : அங்க இயல் /
அதிகாரம் : குறிப்பறிதல் :
குறள் 701:


கூறாமை நோக்கக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்

மாறாநீர் வையக் கணி.


உரை 1:

ஓருவர் சொல்லாமலே அவறுடைய முகத்தை நோக்கி அவர் கருதிய குறிப்பை அறிகின்றவன் எப்போதும் உலகத்திற்க்கு ஓர் அணிகலன் ஆவான்.


உரை 2:

ஒருவர் எதுவும் பேசாமலிருக்கும் போதே அவர் என்ன நினைக்கிறார் என்பதை முகக்குறிப்பால் உணருகிறவன்உலகத்திற்கே அணியாவான்.


உரை 3:

ஒருவன் வாயால் சொல்லாமல் இருக்க, அவனுடைய முகத்தையும் கண்ணையும் பார்த்தே அவன் மனக்கருத்தை அறிந்து கொள்பவன், எப்போதும் வற்றாத கடலால் வளைக்கப்பட்ட இவ்வுலகத்தவர்க்குஆபரணம் போன்றவன்.


உரை 4:

குறிப்பு கூறாமை நோக்கி அறிவான் - அரசனால் குறித்த கருமத்தை அவன் கூறவேண்டா வகை அவன் முகத்தானும் கண்ணானும் நோக்கி அறியும் அமைச்சன்; எஞ்ஞான்றும் மாறாநீர் வையக்கு அணி - எஞ்ஞான்றும் வற்றாத நீரால் சூழப்பட்ட வையத்துள்ளார்க்கு ஓர் ஆபரணமாம்.


பார்வை :

அய்யன் வள்ளுவன் ஒரு செய்தி சொல்லும்பொழுது விளக்கத்திற்காக ஒரு உவமையும் சொல்லிச்செல்வார்.

இங்கே..........அமைதியான முகம்பார்த்து ஆழ்மனத்தின் குறிப்பை அறிபவன் , எதற்காக சம்பந்தமில்லாமல் வற்றாத/ஆழ்கடல் சூழ்ந்த உலகத்துக்கு அணிகலனாக வேண்டும் ?

உலகின் ஆபரணம் என்று சொல்லி இருக்கலாமே ?

தொடர்பில்லாமல் இங்கே எதற்காக கடல்பற்றிய குறிப்பு வருகிறது ??

எதையும் போகிறபோக்கில் சொல்லிச் செல்ல அய்யன் எதற்கு???


’மாறாநீர் வையக் கணி’. = ’வற்றாத நீரால் சூழப்பட்ட வையத்துள்ளார்க்கு ஓர் ஆபரணமாம்.’ என்று தவறாகக் கணித்து விட்டோமோ?


வழக்குத் தொடர்வோம் வாருங்கள் :

தமிழில் ஒரு சொல்லுக்கு பல பொருட்கள் உண்டு (கடலுக்கு மட்டும் 100 வகையான பெயர்கள் இருப்பதாகக் கேள்விப் பட்டிருக்கிறேன் .....

கீழுள்ள சாட்சிகள் ...தேடலில் இருந்து கிடைக்கப் பெற்றவை

  • மாறாநீர் māṟā-nīr =. Sea, ocean; கடல்.
  • வையம் vaiyam : (page 3856) =தொழுக (புறநா. 8). 2. Chariot drawn by horses; குதிரை பூண்டிழுக்கும் இரதம் (சிலப். 6, 120.) (பிங்.) 3. Covered cart; கூடாரவண்டி. மானமர் நோக்கி யும் வைய மேறி (சிலப். 6, 120). 4. Palanquin; சிவிகை. (சூடா.) 5. Conveyance; ஊர்தி. (பிங்.) 6. Bullock; எருது. (பிங்.) 7. The 4th nakatra. See உரோகிணி. (பிங்.) 8.cf.வையம் (p. 902) [ vaiyam ] , s. the earth பூமி; 2. the 4th lunar mansion, உரோகிணி; 3. a palankeen, பல்லக்கு; 4. a car, தேர்; 5. a carriage, வண்டி; 6. a bullock-cart, மாட்டுவண்டி; 7. a conveyance in general, வாகனம்.
  • அணி³ ai = ஆபரணம் ., Array of an army; படைவகுப்பு. 2. Forepart of a vessel, stem, prow; கப்பலின் முன்பக்கம்.


இதிலிருந்து

  • மாறா நீர் = கடல்
  • வையம் = ஊர்தி /வாகனம் எனவும் கொண்டால்
  • மாறாநீர் வையம் = கடல் ஊர்தி /வாகனம் = கப்பல் / படகு எனக் கொள்ளலாம்
  • அணி = கப்பலின் முன்பக்கம் எனக் கொள்வோம் (முன்இரண்டு வார்த்தைகளுடன் [மாறாநீர் வையம்] தொடர்பு இல்லாமையால் ஆபரணமும் ,அணிவகுப்பும் இங்கே பொறுந்தாது )


மொத்தமாக

மாறாநீர் வையக் கணி = ஆழ்கடலைக் கிழித்துச் செல்லும்/ வெல்லும் படகின் முன்பாகம் .


எனது தீர்வாகவும் உங்களின் ஒப்புதலுக்காகவும் உங்கள்முன் :


விளக்கவுரை :

முகத்தைப் பார்த்தே ஆழ்மனதைக் கிழித்து உள்ளிருக்கும் குறிப்பை அறிபவன் , ஆழ்கடலைக் கிழித்து வெல்லும் படகின் முன்பகுதிக்கு ஒப்பானவன்

( இங்கு உவமை பொறுந்தி வருவதாக எனக்குப் படுகிறது )


எனது விளக்கக் குறள் :

முகக்குறிப்பால் உண்மை உணர்ந்துகொள்வோர்; ஆழ்கடல்

நீர்க்கிழித்து வெல்லும் படகு


பெரியவர்களின் தீர்ப்புக்காக காத்திருக்கிறேன் .....Friday, April 1, 2011

மறையும் பழைமையை நிலைநிறுத்த முயலும் ஒரு புதிய பயணத்தின் தொடக்கம்...!

--இது விளம்பரம் அல்ல--
அன்பர்கள் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று

நாள் : 27.03.11
இடம் : திருநெல்வேலி

ரீச் பவுண்டேசன் ஏற்பாடு செய்திருந்த செய்முறை விளக்கப் பட்டறையில்
தமிழ்மரபு அறக்கட்டளை/மின்தமிழின் பின்வரிசை மாணவன் என்ற தகுதியுடன் திருமதி.சாந்திதுரை அவர்களுடன் கலந்துகொண்டேன்...

(ஒரு சிறு அறிமுகம் :
ரீச் பவுண்டேசன் : ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் , சென்னை
குறிக்கோள் : அழிந்துகொண்டிருக்கும் புராதானச் சின்னங்கள் ,கல்வெட்டுகள் ,கோவில்களைக் கண்டறிதல்,அதன் சிறப்பை வெளிப்படுத்துதல், புனரமைத்தல், பாதுகாத்தல்.... இன்னும் பல)

கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் கல்வெட்டுகள்/கோவில்களின் தொன்மை மாறாமல் சீரமைக்கும் முறைகளையும் ,சிதிலமாவதிலிருந்து தடுக்கும் பாதுகாப்புவழிகளையும் மிக எளிமையாய் கற்றுத்தந்த சந்திப்பு அது

நம் பண்டைய மரபு,பண்பாடு,கலாச்சாரம் பற்றிய ஒரு புதிய புரிதலை, எனக்குள் விளக்காய் ஏற்றி, வழியனுப்பி வைத்த சந்திப்பு அது

’ நம்மைப்பார்த்து மற்றவர் வியந்து போற்றும் வகையில் வாழ்ந்திருகிறோம்...ஆனால்..தெளிவான புரிதலின்றி , சரியான வழிகாட்டுதலின்றி.... ’நாம் பிறரைப் பார்த்து வாய்பிளந்து நின்று கொண்டிருக்கிறோம் ’ என்ன்னும் உண்மையை உரத்துச் சொன்ன சந்திப்பு அது

தென்தமிழகத்தின் சிறப்பினை,( மலைத்துப்போகும் அளவுக்கு இருக்கின்றன ...மறைக்கப்பட்ட பெருமைகள் ), உலகறியச் செய்யவேண்டும் என்ற உத்வேகத்தை உறுதியுடன் எடுத்துகொள்ள வைத்த சந்திப்பு அது

இன்னும்...இன்னும்...பல புதிய செய்திகள்...அருமையான பெரியவர்களுடன்...மிகச் சிறந்த நாளாகிப்போனது .....இந்தநாள் எங்களுக்கு...

மதிய உணவுக்குப் பின்...செயல்விளக்கப் பட்டறைக்காக (திருநெல்வேலியில்)அருகில் இருக்கும், சிதிலமாகி இருக்கும் உச்சிஷ்ட மகா கணபதி திருக்கோயில், மணிமுத்தீசுவரம், சென்றோம்...

தலச் சிறப்பு : ( நானறிந்த வரையில் மட்டும் .....)
ஒரே கருவறையில் கணபதியும், சிவனும்
அன்னையை மடியில் வைத்திருக்கும் கணபதி
சித்திரையில் கணபதிமேல் சூரிய ஒளிபடும் அமைப்பு
மிகப்பெரிய நுழைவாயில் கோபுரம்.......................

27032011A.jpg 27032011(010)A.jpg
பராமரிப்பில் உள்ளது கோபுரத்தின் மேல்பகுதி மட்டும்தான்..................பிரம்மாண்ட நுழைவாயில்


27032011(002)A.jpg 27032011(004)A.jpg
சிதிலமான சுற்றுச் சுவர்


27032011(013)A.jpg 27032011(014)A.jpg
தொழில் நுடபக் குறைபாடுகள் உள்ள கல் உத்திர அமைப்பு.....விழும் நிலையில் கருவறை முகப்பு


27032011(016)A.jpg 27032011(008)A.jpg
சிதிலமாகிக் கொண்டிருக்கும் மேற்கூரை....................... நுழைவாயிலில் மரத்துடன் தூண்

27032011(024)A.jpg 27032011(029)A.jpg
உள்பிரகாரச் சுவர்.............................................................சுற்றுச் சுவர்


27032011(026)A.jpg 27032011(027)A.jpg
கல்வெட்டின் பொருள்தேடி.................................................ஒரு கலந்தாய்வு

27032011(028)A.jpg 27032011(032)A.jpg
வெளிச் சுற்றுச் சுவர்.......................................................வெளிக் கோபுரம்


27032011(019)A.jpg
நல்லதொரு விடியலை எதிர்பார்த்து.........................

ஒரு வேண்டுகோள் : இணைய அன்பர்களே ....தங்கள்பகுதியில் உள்ள கவனிப்பாரற்ற புராதானச் சின்னங்கள் , கல்வெட்டுகள் , பழங்காலக் கோவில்கள் , பற்றிய விபரங்கள் இருந்தால் அறியத் தாருங்கள்..... உங்கள் மூலமாக முன்னோர் பெருமைகளில் ஒன்று உலகின்முன் புதியதாய்ப் பிறந்து வந்ததாக இருக்கட்டும் ...........

’இயன்றதைச் செய்வோம்.....முடிந்தவரை முயல்வோம்.....எண்ணம்போலவே எல்லாம் அமையும்’

நன்றி : மிக அருமையாய் வரவேற்று ,ஒருங்கிணைத்த அன்பர்களுக்கும்.....
வந்து வழிகாட்டிய பெரியவர்களுக்கும் ,அரியனவற்றை அறியத்தந்த அறிஞர்களுக்கும்........
கலந்துகொண்டு பெருமை சேர்த்த ஆர்வலர்களுக்கும்..............
நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.........
வாழ்க ......