Tuesday, September 30, 2008

நியாயம் வேணும்


ஊரு பெரிசுங்க ஒண்ணா சேர்ந்து
ஆயிரமாய் செலவு செஞ்சி
வெளிஊர சுத்திட்டு வந்து
சூப்பர் டூருன்னு சொல்ராங்க

வயசு பசங்க நாங்க
ஒரு செலவும் செய்யாம
உள் ஊர சுத்திவந்தா
தண்டச் சோறுன்னு சொல்ராங்க

நீங்களே வந்து இந்த
அநியாயத்த கேளுங்க.

நானும்,எனது மகனும்,அந்த வேப்பமரமும்


முழுப்பரிட்சை முடிஞ்சு வரும்
மூணுமாச விடுமுறைக்காக - அன்று
ஏக்கத்தோடு காத்திருப்போம் நானும்
எங்க வீட்டு வேப்பமரமும்.

குரங்கு போல ஏறி
குதித்து விளையாடி
ஊஞ்சல் கட்டி ஆடி
மஞ்சள் பை முழுவதும்
வேப்பங்கொட்டை பொறுக்கி
வீறுநடை போட்டு
ஐந்து பைசாவுக்குவிற்று
ஐம்பது ரூபாய் சம்பாதித்ததுபோல
ஆனந்தமாய் சுற்றி வருவோம்
அந்த வேப்பமரத்தை.

பரிட்சை முடிந்து - இன்று
பள்ளிக்கு விடுமுறை.
அன்பு மகன்
ஆறே வயதில்
கண்ணாடி மாட்டி
கணினிக்குள்உக்கார்ந்து
புரியாத மொழியில் ஏதேதோ
புதியதாய் செய்துகொண்டே இருக்கிறான்.

வீட்டு வாசலில் அந்த
பரிதாப வேப்பமரம்
ஊஞ்சல் கட்டி ஆட
ஏறி விளையாட
கூடுதல் கிளையோடும்.,
வீதியெங்கும் வாரியிறைத்த
வேப்பங் கொட்டைகளோடும்
ஏக்கத்தோடு யாருக்காகவோ
காத்துக்கொண்டே இருக்கிறது .................

Monday, September 29, 2008

மழை சொல்லும் செய்தி,


விதவை
வருமா,வராதா
என ஏங்கி
வானம் பார்த்து
காத்திருக்கையில்

தைரியமாய்
நெற்றியில்
பொட்டுவைத்து
வந்தது
மழை

Sunday, September 28, 2008

மீசை முறுக்கும் ரகசியம்


அவசரமாய் வீடுதிரும்பி
ஆத்திரத்தோடு அறைக்குள் நுழைந்து
இல்லாளிடம் பேச நினைத்து

எல்லாமே தலைகீழாய் மாறி
நன்றாக வாங்கிக் கட்டி
வெளியே வந்தபின்

சுற்றும் முற்றும் பார்த்து
ஆதரவாக மீசையை
தடவிக்கொடுக்கும் விரல்கள்

அவசியம் என்ன?


கடந்த கால திரைஇசையில்
கொஞ்சும் தமிழில் பெண்கள்
குயில் போன்ற குரலில்
கொஞ்சி கொஞ்சிப் பாடினார்கள்

தற்கால திரையோசையில்
கொஞ்சம் தமிழில் பெண்கள்
மயில் போன்ற குரலில்
முக்கி திக்கிப் படிக்கிறார்கள்

ஆண் குரலில் பெண்கள் பாட
அவசியம் என்ன வந்தது?
அநாவசியமான மாற்றத்தின்
ஆரம்பம் எங்கே நிகழ்ந்தது?

Saturday, September 27, 2008

நியாயம் வேணும்


எலுமிச்சை சாறு சேர்த்து
எலுமிச்சைசோறுன்னு சொல்றீங்க

புளியை புழிஞ்சு ஊத்தி
புளிசோறுன்னு சொல்றீங்க

பருப்பை போட்டுக் கிண்டி
பருப்புசோறுன்னு சொல்றீங்க

தயிரை சேத்து தாளிச்சு
தயிர்சோறுன்னு சொல்றீங்க

எங்களைப் பார்த்தவுடனே
எப்படி தண்டச்சோறுன்னு சோல்றீங்க

விளக்கம் சொல்லுங்க.அதையும்
விளக்கமாவே சொல்லுங்க.

ஊருக்குத்தான் உபதேசம்


--"காடு அழிப்பவனை
காலன் கொண்டு போகணும்

மரம் அறுப்பவனின்
கரம் முறிஞ்சு போகணும்"

ஊருக்கு உபதேசித்தே என்
உறக்கம் குறைந்து போனது.

ஊஞ்சல் ஒண்ணு செய்யவேணும்
மஞ்சள் கடம்பா மரத்தில்

படுத்தவுடன் வருமாமே
பகலில்கூட உறக்கம் அதில்

Sunday, September 21, 2008

விதையின் பயணக் குறிப்பு.


விதையாய் தரை புகுந்து
தளிராய் தலை நிமிர்ந்து
கோடையில் கருகாமல்
வாடையில் மருகாமல்

கொத்து கொத்தாய்
கதிர் பிடித்து
அறுவடையில் உதிராமல்
கட்டு கட்டாய்
களம் புகுந்து
போரடிக்கையில்சிதறாமல்

வியாபாரத்தளம் கண்டு
உன் வீடு அடைக்கலம் கொண்டு
சோறாகி இலைக்கு வந்து
பிறவிப் பயன் அடைய இருக்கையில்

மிச்சமாகி
குப்பைக்குப் போனது
அந்த அரிசி

தாய்மொழி உயர்த்து.


வெளி நாட்டில் குழந்தை கூட
துளி பிசகாமல்
ஆங்கிலத்தில் பேசும்
அதிசயம் கண்டு,
உள் நாட்டில் உன் குழந்தையும்
நுனி நாக்கில்
அவசியம் பேச
ஆசை கொள்ளும்
அற்ப மனிதனே. அது
அவனுக்குத் தாய்மொழி.--நீ
அன்நிய மோகம் ஒழி.
உணர்ந்து கொள் முதலில் !
உன்னிடம் உள்ளது
உலகின் முதல் மொழி !!. அதுதான்
உலகுக்கேத் தாய்மொழி !!!

என் ஜன்னல் வழியே..



அதிகாலைப் பயணம்.
ஜன்னலுக்கு வெளியே
வெகு தூரத்தில்
புள்ளியாய் கையசைக்கும்
குட்டிக் குழந்தைகள்.

நொடிப்பொழுதில் நானும்
குழந்தையாய் மாறி,
எழுந்து நின்று,
கையசைக்க நினைத்து,

சுற்றம் பார்த்து,
முற்றும் உறைந்து,
பார்வையையே பதிலாக்கி
உள்ளே சகலமும்

முடங்கிப் போன
நான்

வணக்கம்.


அன்புடன்
-துரை.ந.உ