Showing posts with label நட்பு. Show all posts
Showing posts with label நட்பு. Show all posts

Wednesday, September 22, 2010

பொய்......பொய் தவிர வேறில்லை.......!


எனது கண்களுக்குள் பார்த்தபடியே
பேசிக்கொண்டே இருக்கிறான்
அவன்........

பொய்...
அத்தனையும் பொய்....
அவன் வாயிலிருந்து வரும்
அத்தனையும் பெரும் பொய்.....

உண்மையைப் போலவே பொய்யையும்
திண்மையாய்ப் பேசுகிறான் அவன்....

எனக்கு எல்லாம் தெரியுமென்பது
அவனுக்கும் தெரியும்தான்

ஆனாலும்......

எப்படிதான் முடிகிறது
இப்படி எல்லாம் பேசுவதற்கு ....

எப்போதுதான் திருந்துவார்கள்
இத்தன்மை கொண்டவர்கள்......

பேசி முடித்துவிட்டான் அவன்
என்முகம் பார்த்து நிற்கிறான்

அவன் நிறுத்தத்தானே
காத்திருந்தேன் நானும்........

ஆவேசமாகத் தொடர்ந்து
பேச ஆரம்பிக்கிறேன்

உண்மையைப் போலவே
ஒரு பொய்யை நானும்.......

.

Friday, August 7, 2009

இது சுயநலமா? நட்பின் ஆழமா??


பிரசவ அறை வாயிலில்
பிரேதம் போலக் காத்திருக்கிறேன்
மருத்துவரின் வருகைக்காக - வரும்
அவரின் ஒரு வார்த்தைக்காக

எந்தக் குழந்தையானாலும் சரியென்பேன்
எனது நண்பனவன் பெயர் வைப்பேன்

அவன்.................

குழந்தையிலிருந்தே என்
கூடவே தான் இருக்கிறான்

நான் செய்யும் தப்புக்கெல்லாம்
தான் பழி ஏற்றிருக்கிறான்

குச்சி திருடியது நான்
உக்கிப் போட்டிருக்கிறான் அவன்

சடை இழுத்தது நான்
சாத்து வாங்கியிருக்கிறான் அவன்

நோட்டுக் கிழித்தது நான்
முட்டிப் போட்டிருக்கிறான் அவன்

அவன் பெயர் வைத்தேயாக வேண்டும்

பேருந்தில் எனக்காகப்
பாய்ந்து இடம் பிடித்திருக்கிறான்

கல்லூரியில் எனக்கவன்
காவலாளியாய் இருந்திருக்கிறான்

கயவர்களிடம் பாதுகாக்க
பயமில்லாமல் மோதியிருக்கிறான்

அப்பாவிடம் பொய்சொல்லி
ஆபத்திலிருந்து காத்திருக்கிறான்

அவன் பெயர் வைத்தேயாக வேண்டும்

காதலியவளை எனக்காகக்
கன்னம் வைத்துக் கடத்தியிருக்கிறான்

மிஞ்சி அவள் காலில்ஏற
நெஞ்சில் மிதி வாங்கியிருக்கிறான்

வாழ்க்கையில் காலூன்ற
வழி உண்டாக்கிக் கொடுத்திருக்கிறான்

அவன் பெயர் வைத்தேயாக வேண்டும்

தனெக்கென வாழாமல்
எனக்காகவே வாழ்ந்துகொண்டிருக்கிறான்

ஏதோ மருந்துவாங்க
இதோ எனைத்தாண்டி ஓடுகிறான்.......

அவன் பெயர் வைத்.....?!?!?!?!?!??????????

முடியாது !
வைக்க முடியாது !!
அவன் பெயர் வைக்கவே முடியாது !!!

எனது குழந்தை தியாகியாக
எனக்கு விருப்பமில்லை

இது

நானென்ற சுய நலமா ?
நானறிந்த நட்பின் ஆழமா ??

நட்புக்கு இலக்கணமா ?
நட்ப்பை உணர்ந்த லட்ச்சணமா ??

Wednesday, July 29, 2009

விளக்கேற்றிய நண்பனுக்கு.....


வீட்டின் முகப்பில்
வரவேற்பு அறையில்
ஒருபுறம் எனது திருமணப்படம்.,
மறுபுறம் அவனது திருஉருவப்படம்.

'எனது உயிர் நண்பனவன்
என்னுடன் இருக்கும் வரையில்
எனக்கொரு கவலை இல்லை
இனியொரு உவலை இல்லை


கானல்வரியாய் தெரிந்த என்கனவை
நாணல்திரியாய் எரிந்த என்நினைவை
நிழலாய் மாறஇருந்த என்வாழ்வை
நிஜமாய் மாற்றிக் காட்டியவன் அவன்

மொய் எழுதி வாழ்த்தி விட்டு
பொய் முகத்தோடு ஏக்கம் சுமந்து
திரும்பும் எனக்கும் வாழ்க்கையில்
திருமணம் என்ற ஒன்றைத்
திருவிழாவாக நடத்தியவனுக்கு
என் வாழ்நநாள் முழுதும்
நன்றிக் கடன் பட்டிருப்பேன்

அன்று
பெண்பார்க்கும் படலத்தில்
மணமகனின் நண்பனாய்
மிக நெருக்கத்தில் அவன்

"மாப்பிள்ளை கருப்புதான்,
....ஆனாலும் பரவாயில்லை"

"மாப்பிள்ளை குட்டைதான்,
....ஆனலும் மட்டம் இல்லை"

"மாப்பிள்ளை ஒல்லிதான்,
....ஆனாலும் பல்லிபோல இலலை"

"சுறுசுறுப்பு கம்மிதான்,
....ஆனலும் துருதுருப்புதான்"

"பல்லு ரெண்டும் எடுப்புதான்
....ஆனாலும் பளபளப்புதான்"

அருகில் அவனும் சொங்கிபோல
....தூங்கிக் கொண்டே இருந்தான்
அதனால் நானும் - அங்கே
....தூக்கலாகவேத் தெரிந்தேன்

எந்த வில்லங்கமும் இன்றியே
எல்லா விவகாரமும் முடிந்ததினிதே'


பெருமையோடு நண்பன் அவனுக்கு
உரிமையோடு வணக்கம் வைக்கிறேன்.

Tuesday, December 9, 2008

உனது அச்சாணி..


அன்றொரு நாள்
அதிகாலை நேரம்
ஆழ்ந்த உறக்கம்

கடவுள் வந்து நின்றார்
கண்ணெதிரே என் கனவில்
கேள்விகள் பல கேட்டார்

பிடித்தவர்கள் பெயர் சொல் என்றார்
அம்மா அப்பா பெயர் சொன்னேன்
அமைதியாய் சிந்தித்தார்
அடுத்து சொன்னார்
"எதிர்காலம் நன்றாக இருக்கும்"

கனவுகள் பற்றிக் கேட்டார்
காதலி அவள் பெயர் சொன்னேன்
கண்மூடி தியானித்தார்
"நல்ல வாழ்க்கை அமையும்"

நெடுநாள் ஆசை கேட்டார்
நிலவு தொடும் வரம் கேட்டேன்
கொஞ்சம் தயங்கினார்
"நிச்சயம் நிறைவேறும்"

தொடரும் நட்பு பற்றிக் கேட்டார்
நண்பா உன்பெயர் சொன்னேன்
கேட்டதும் சிரித்தார்
சிறிதும் யோசிக்கவில்லை
உடனே பதில் சொன்னார்
"நீ எல்லாம் எங்கே உருப்படப் போகிறாய்''

Tuesday, November 25, 2008

நண்பனுக்கு ஒரு கடிதம்...


அன்பு நண்பன் இளங்கோவனே
அன்பு செலுத்த புது நாய்க்குட்டி தேடும்
இனிய அன்பனே
இன்றும் என்றும் நீ
இளம் கோ வாகவே
இருக்க விரும்புகிறேன்
இருக்கவேண்டும் நம் நட்பும்
இளமையாகவே
இதுபோல இனிமையாகவே

கவனிக்க....!

நீடிக்கும் நட்புக்குத் தடை போட
ஆர்ப்பரிக்கும் அன்புக்கு அணை கட்ட
படை திரட்டி வந்திருக்கிறார்கள்
பல திட்டம் தீட்டி இருக்கிறார்கள்
போட்டிகள் பலவும் வைத்திருக்கிறார்கள்

அவர்கள் வென்றால்
நட்புக்கு நிரந்தரத் தடையாம்
அவர்கள் வீழ்ந்தால்
நான் வெல்வேன்
நாம் வெல்வோம்
நம் நட்பு வெல்லும்
அந்தத்த் தடைக்குத் தான்
இனிமேல் என்றும் தடை

சில எளியக் கேள்விகளை
அவர்கள் முன்
எடுத்து வைத்திருக்கிறேன்
சரம் சரமாய்த் தொடுத்திருக்கிறேன்

"தொலைவில் தெரிகிறதே
தொடு வானம்,
அதை சீக்கிரம்
தொட்டு வா பார்க்கலாம் ! "

துரத்திக் கொண்டு போய் இருக்கிறார்கள்

"தூரத்தில் இணைகிறதே
தண்டவாளம்,
அது சேரும்
புள்ளீயின் தூரம்
இங்கிருந்து அளந்து வா பார்க்கலாம் !"

அளந்து கொண்டு போய் இருக்கிறார்கள்

"பெரியது எது?
புவியின் ஈர்ப்பு விசையா?
பூவின் ஈர்ப்பு விசையா?
புவியின் ஈர்ப்பு வென்றிருந்தால்
பூவிலிருந்து காய் வீழ்ந்திருக்கும் .
காய் இல்லையெனில் கனி இல்லை,
நீ இல்லை நான் இல்லை,
இப்போது சொல்,
எது பெரியது ?
அறிந்து வா பார்க்கலாம் !"

மரத்தின் கீழ் அமர்ந்து
மேல் நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்

"பயங்கர அழகு:
கொஞ்சம் கூடுதல்:
ரொம்ப குறைச்சல்:
எதிர் எதிர்ச் சொற்கள்
ஒன்றாய் கூடி
ஒரே அர்த்தம் தரும்
வார்த்தைகள் இன்னும்
பத்து கொண்டு வா பார்க்கலாம் !"

பல திசைகளுக்கும் பறந்து போய் இருக்கிறார்கள்

எனக்குத் தெரியும்
அவர்களில் யாரும்
திரும்பவேப் போவதில்லை

உனக்குத் தெரியும்
இதோ நான்
வந்து கொண்டிருக்கிறேன்
அந்த அழகான
புது நாய்க் குட்டியாக.....

Friday, October 31, 2008

இடுக்கண் களையும் நட்பு ?


வறுமை சூழலில் நான்
வசதியாய் இருக்கிறார் நண்பர்
பிறந்தநாள் வாழ்த்துச் சொல்ல
அலைபேசியில்
அழைக்கும் போதெல்லாம்
அவரது மகள்தான்
மறுமுனையில்
"அப்பா குளித்துக்கொண்டிருக்கிறார்"

ஒரு வாரமாகவா ?
ஒன்றும் புரியவில்லை.
உண்மை ஏதேனும்
உங்களுக்குத் தெரிகிறதா ?