Friday, July 22, 2011

கடமையாற்ற விடுங்களேன்...கனவான்களே...!

ii (15).gif

அதிகாலையிலேயே நகரம்

பரபரவென அதிர ஆரம்பித்து

மிககிக வேகமாக

சரசரவென நரகமாக

உருமாறத் தொடங்கியிருக்கிறது..


தனது கடமையில் தோல்வியுற்று

இருக்குமிடத்திலிருந்து பதறி வெளியேறி

பகலெல்லாம் எங்கெங்கோ ஒளிந்திருந்து ....


பின்னிரவில் வெளிப்பட்டு

இறுக்கமான அடுக்குமாடிகளை

நெருங்கும்வேளையில்....


ஆங்காங்கே துருத்திக்கொண்டு

மூடியக் கதவுக்கு வெளியே

வெறிநாயெனக் காத்திருக்கும்

குளிரூட்டும் மிருகங்களின்

சன்னமான உறுமலால் மிரண்டு...


சரேலென தரை நோக்கி இறங்க..

அங்கும்

சாத்திய சன்னல்களே வரவேற்க


வேறுவழியின்றி......

சாலையியோரத்தில்

முடங்கிக் கிடக்கும்

தெருநாயின் தலையை

வருடத் தொடங்கும் வேளையில்...


திடுமென...

அதிகாலையிலேயே

அதிர ஆரம்பிக்கிறது நகரம்....


மீண்டும்..

பதறி விலகியோடத்

தொடங்குகிறது தென்றல்......


[நன்றி;கரு :யாழிசை/தங்கராஜ்]

Tuesday, July 5, 2011

க(தை)விதை : அந்தக் கட்டை விரல் ........!


குருதட்சணை என்றபெயரால் குரூரமாய்க்

குறிவைத்து வெட்டி எறியப்படுகிறது

கட்டைவிரல் ஒன்று ........


கற்றுத்தர மறுத்த குருவின் தேவையை

நிறைவேற்றிய மகிழ்ச்சியில் திளைக்கிறான்

விரலை வெட்டிக் கொடுத்தவன்...


தானே கற்றறிந்த மாணவனின் கலையை

வேரறுத்த களிப்பில் மிதக்கிறார்

விரலைக் கேட்டுப் பெற்றவர்...


குருதட்சணை கொடுப்பதற்காக

அந்தத் துரோணரினரின் கட்டைவிரலுக்குக்

குறிவைத்துக் காத்திருக்கிறேன்.....


ஏகலைவனை குருவாகக் கொண்டு

வித்தை பயின்று கொண்டிருக்கும்

நான்........



[நன்றி :- கரு: யாழி]