Showing posts with label பெண். Show all posts
Showing posts with label பெண். Show all posts

Tuesday, March 8, 2011

14 : மகளிர் தினமாம்...மகளிர் தினம்...! ...தேவையா இது ...!!


ஆண் மகன் நான்
ஆணவத்துடன் கேட்கிறேன் ....

தேவையா இதுபோன்று
மகளிருக்கென தனியே ஒருநாள்..!!

தடம் பதிக்கிறேன் குழந்தையாய்
தாங்கிப் பிடிக்கக் காத்திருக்கிறாள்
ஒரு பெண் அங்கே
என் தாயின் வடிவில்

வளர்ந்து வருகிறேன் பாலகனாய்
கூடி விளையாட காத்திருக்கிறாள்
ஒரு பெண் அங்கே
என் அக்காவின் உருவில்

படித்து வருகிறேன் மாணவனாய்
வழிகாட்டி உயர்த்தக் காத்திருக்கிறாள்
ஒரு பெண் அங்கே
என் ஆசிரியரின் வடிவில்

வலம் வருகிறேன் சுமைதாங்கியாய்
ஊன்றுகோலாய்த் தாங்கக் காத்திருக்கிறாள்
ஒரு பெண் அங்கே
என் மனைவியின் உருவில்

உறைந்துபோய் இருக்கிறேன் பாறையாய்
உருக்கி மனிதனாக்கக் காத்திருக்கிறாள்
ஒரு பெண் அங்கே
என் மகளின் வடிவில்

ஓய்ந்துபோய் இருக்கிறேன் முதியவனாய்
மீண்டும் குழந்தையாக்கக் காத்திருக்கிறாள்
ஒரு பெண் அங்கே
என் பேத்தியின் உருவில்

எங்கும் அவள் ..
எதிலும் அவள் ....
எல்லாமே அவள் .....
எல்லா நாளுமே அவள்
.....

பிறகு ஏன் இந்தநாள்?
அவளுக்கென
தனியே ஒரு நாள்!

Friday, February 4, 2011

ராணி..மகாராணி...ராஜ்ஜியத்தின் ராணி......!

a.gif

ராவுல கதை சொல்லி

தூங்க வைக்குது தாத்தா

காலைல காப்பியோட

வந்து எழுப்புது ஆத்தா...


aaa.gif

இட்டிலிக்குத் தொட்டுக்க

மணக்கும் சட்டினி இருக்குது

தட்டுல இடியாப்பம்

மொத்தமாக் கொட்டிக் கெடக்குது..


a.gif

எனக்கு சடைகட்டி

பொட்டுவைக்க போட்டி நடக்குது

எம்மாமன் பகலாட்டம்

கூட்டிப்போயி லூட்டி அடிக்குது...

aa.gif

சீறும்ஆறும் பயந்துப் பதுங்கி

எம்முதுகைத் தழுவி சொக்குது

ஊரும்பேரும் பதுங்கிப் பயந்து

என்பின் மெதுவாய் நழுவி நிக்குது...

EMO (278).gif

சும்மாத்தான் முறைச்சவுடன்

வெலகி ஓடுது சூறாவளி

எம்மா நான் நினைச்சவுடன்

வந்து நிக்குது தீபாவளி...


திடீரெனப் பொடரியில வெடிச்சு

மடியில எறங்கியது இடியொண்ணு


கண்ணச்சுத்தி மின்னலாப் பொரிபறக்க

என்னச்சுத்தி எல்லாமே கிறுகிறுக்க

மங்கலா முன்னால பொங்கிநிக்குது

மங்கம்மா போல எங்கவூட்டம்மா ...

eyes8[1].gif

தலைக்கு மேலிருக்கும் வேலயில

பட்டப்பகல் வேளயில

சட்டிப்பானையத் தேய்க்காம

கெட்ட சொப்பனம் கேக்குதோ

பொட்டக் கழுதைக்கு.....


hgj (3).gif........... :(


--
என்றும் அன்புடன் -- துரை --

Wednesday, December 22, 2010

பெண்ணியத்தைப் போற்றடா....!



பாதி(50%) கேட்டு

நீதியை நிலைநாட்ட

நாளை நடத்தப்போகும்

மாபெரும் ஆர்ப்பாட்டம்

ஒரு வருங்கால

வரலாறாகப் போகிறது.......


போராட்டமாய்த் தொடங்கி

ஒருபுரட்சியாய் முடியப்போகிறது

நாளைய பொழுது.....


பெண்ணியத்தைப் போற்றவும்

பெண்ணினத்தின் முன்னேற்றவும்

தலைவன் நானே தெருவிலிறங்கி

என்னுயிரையும் தாரைவார்த்து

தீக்குளிக்கவும் தலைமை

ஏற்பேன் அப்பொழுது.......


நாளைய எனது உரை....

ஆண்களின் சுயநல முகத்திரையை

அகற்றும்படி அமையப் போகிறது...

ஒவ்வொரு வார்த்தையிலும்

பொறி பறக்கப் போகிறது...

கூடி இருக்கும் கூட்டத்துள்

தீப் பிடிக்கப் போகிறது....


இதோ.....

33%தான் தருவோமென

வேசமிட்டிருக்கும் ஆண்முகத்தை

ஆவேசமாகக் கிழித்து வெளிப்படுத்தும்

வாசகங்களை உருவாக்கிக் கொண்டிருக்கும்

அந்திசாய்ந்த வேளையில்.........


மெல்லக் கதவுதிறந்து

உள்ளே வருகிறாள் அவள்...!


முன்னாலிருந்த அந்த

பாதி மீதியிருந்த கோப்பையை

ஓரத்திற்கு ஒதுக்கி வைக்கிறேன் நான் ...


இனி

தேவையிருக்காது இதற்கு ....!!

Sunday, October 24, 2010

என்னிலை அறிக்கை...!


அழுகையில் கரையும் இரவுகளோடும்

ஆளுமையில் இறுக்கும் உறவுகளோடும்..

வரப்போகும் தருணம் ஒன்றிற்காக

வரம் வேண்டித் தவமிருக்கிறேன்....


அன்பென்ற பெயர்சொல்லி

ஆக்கிரமித்து எழுவான் அவன்...

அவனைப் பின்தொடர

அயர்ச்சியோடு கை நீட்டி

ஆதரவு கேட்பேன் நான்....

அலட்சியப் பார்வையால் ஒதுக்கி

அங்கிருந்து விலகுவான் அவன்....

தன்னையவன் உலர்த்த

நினைக்கும் பொழுதெல்லாம்

ஈரமாகிக் கொண்டிருக்கிறேன் நான்....


உரிமை என்ற உத்திரவாதத்துடன்

அவனது சுற்றத்தாரின்

அழுத்தும் தாக்கத்தாலும்

கொழுத்தும் வெப்பத்தாலும்

உருகிக் கொண்டிருக்கிறேன் நான்.....


என்னில்

கை நனைத்து

கால் அலம்பி

முகம் கழுவி

முதுகு தேய்த்து

தாகமும் தணித்து

மிதப்பாய் இருக்கிறார்கள் அவர்கள்....


எதற்கும் தயாராய் இருக்கச்

சொல்லி வையுங்கள் அவர்களிடம்....


அவர்கள் எதிர்பாராத தருணத்தில....

வரக்கூடும் ஒரு

காட்டாற்று வெள்ளம்............!

Sunday, August 29, 2010

அசையாமல் இருக்கிறாள் அவள்.....!


அப்போதிருந்தே
குத்துக்காலிட்டு அசையாமல்
அமர்ந்திருக்கிறாள் அவள்

கால்களை மடக்கி
கைகளால் இறுக்கி
முகத்தினை மொத்தமாய்
இடுக்கினுள் புதைத்து
அசையால் இருப்பது
போலத்தான் தோன்றுகிறது

ஆனால்.....

இணைந்திருந்த பாதங்களில்
மெல்ல அசைந்து கொண்டிருக்கிறது
ஒரு பெருவிரல் மட்டும்

கோர்த்திருந்த கைகளின்
நடுவில் சிக்கிய காற்று
மூச்சுவிட முடியாமல்
திணறியபடியே வெளியேற
முயன்று கொண்டிருக்கிறது
அதனால் முடிந்த மட்டும்

அழுந்த மூடியிருந்த
இமைகளுக்குள் இடவலமாய்
நகர்ந்து கொண்டிருக்கின்றன
கருவிழிகள் இரண்டும்

திடீரென உருவாகி
காய்ந்துபோன தடத்தில்
உருண்டு பயணித்து
உதடுகளைத் தாண்டி
தொடைகளில் வழிந்து
தரையில் மோதி
சிதறித் தெறிக்கிறது
கண்ணீர்த் துளிகள் இரண்டு ....

என்னதான் நினைத்திருப்பாள் அவள் ?


.

Monday, April 12, 2010

மணி என்ன ஆச்சு ???


பதட்டம்....
பதட்டம் ......

இரவு செல்லப்போகும்
இடம் நினைத்துத் தொற்றுகிறது
இப்போதே பதட்டம் எனக்குள்..

குறுகுறுக்கும் உள்ளத்தோடு
அறிந்துகொள்ளும் ஆர்வத்தோடு
அவன் அழைத்தவுடன் ஒத்துக்கொண்டேன்
என்றாலும் பயமாகத்தான் இருக்கிறது ..

இதோ வழக்கம்போல்
இன்றைய நாளும் ஆரம்பம் ..
அவசரமாய்க் கிளம்பி
ஆறடி நடப்பதற்குள்
வழக்கம்போலவே
ஆளாளுக்கு கேட்டு
மிருகமாக்குகிறார்கள் என்னை

’’மணி என்ன ஆச்சு/’’

நடைபாதையை ஆக்கிரமிக்கும்
பிச்சைக்காரன்.................
பூங்காவில் பகல்முழுதும் படுத்து
பொழுதுபோக்குபவன்.................
முக்குக்கடை வாசலிலேயே
முழு நாளும் கழிப்பவன்.................

இப்போது மணி என்ன
ஆனால்தான் என்ன ?
தெரிந்தவுடன் இவர்களுக்கு
ஆவப்போவதும் என்ன ?

பதில் சொல்லியே எனக்கும்
பாதிநாள்ப் பாழாகிவிடும்


எதிர்பார்த்த இரவு...........

கண்சிமிட்டிச் சிரித்து
உள்ளே தள்ளிவிட்டு அவன்
வேறிடம் துணையுடன் செல்ல

உள்ளே கட்டிலில்
கைகளைப் பிசைந்தபடி
பதட்டமாய் அவளும்........

ஒருவேளை என்னைப்போலவே
இவளும் புதியவளோ ?

மெதுவாய் முன்னேறி
விளிம்பில் அமர்கிறேன்

மெல்ல நிமிர்ந்தவள்
எனது கண்களுக்குள்
எதையோ தேடியபடி
மெதுவாகக் கேட்கிறாள்

''மணி என்ன ஆச்சு ?''

எங்கோ.....
இவள்வரவுக்குக் காத்திருக்கும்
முகம் தெரியாத சீவன்களின்
தெளிவில்லாத முகங்கள் என்னுள்
தோன்றி மறைகிறது

முதன்முதலாய் அந்தக் கேள்வி
மனிதனாக்கியது என்னை .........

Wednesday, February 10, 2010

நம்பிக்கையோடு காத்திருக்கும்....


பூங்காவின் ஓரத்தில்
பாப்பா நான்மட்டும் தனியாக ...

அங்கே...
தூரத்தில் தம்பியோடு
விளையாடிக்
கொண்டிருக்கிறார்கள்
அம்மாவும், அப்பாவும்.....

இங்கே....
எனக்குத் துணையாக....
என்றோ போட்ட
ரொட்டித் துண்டுக்காக
இங்கு நான்
வரும்போதெல்லாம்
என்னை ஏதோவொரு
நம்பிக்கையில்
சுற்றிவரும்
குட்டி நாயொன்று
இன்றும் என்னருகில்
என்முகம் பார்த்து
எதிர்பார்ப்போடு....

அங்கே....
அதே நம்பிக்கையில்
தம்பியோடு ..........

இங்கே...
நான் மட்டும் தனியாக ...

Friday, July 10, 2009

'சில்லு'ன்னு ஒரு பொண்ணு ...!!


சகோதரி உமா மஹேஸ்வரிக்கு
( சில்லுக்கருப்பட்டி / RJ ., 106.4 FM )
இன்று 10-07-09 நிச்சயதார்த்தம்.
வாழ்த்துக்களுடன்......

'சில்லு'ன்னு ஒரு பொண்ணு ...!!


எங்க வீட்டுப் பொண்ணுக்கு
...இன்னிக்கு நிச்சயம் பண்ணனும்
எசப்பாட்டுக்கு மாப்புள்ள
...இனிமேதான் வந்து சேரணும்

வெரசலா வாங்க
...மாப்பிள்ள நீங்க - உங்க
வீரத்தக் காமிங்க இங்க - பாக்க
...காத்திருக்கோமே நாங்க

அடக்க ஒடுக்கமா அவளும்
...எவ்வளவு நேரமாத்தான்
அமைதியாவே இருப்பா இங்க - அட
...சீக்கிரமாத்தான் வாங்க

அதோ...

வந்து சேந்துட்டாரு நல்லா
...வெவரமான மவராசன்
வெடவெடப்பா இருக்காரு சும்மா
...செவசெவன்னு யுவராசன்

"நாங்க சொல்லுறோம்
...மொதல்ல பொண்ணப் பத்தி.,
நீங்களும் தெரிஞ்சுக்குவீங்க
...அப்புறமா அவளச் சுத்தி"

"கேட்டுக்கோங்க மாப்புள்ளேய்"

"மைக்கப் புடிச்சா அவ
...பேசர விதமே தனி
மாப்பு உம்மையும் சேத்து
...அசர வைப்பா இனி

தென் மாவட்டத்தையே
...கலங்கவைக்கும் அவ ராசி
தெனம் மாவாட்டவும்
...கலங்கமாட்டா மவராசி

எட்டுப்பட்டியும் அவ பேச்ச
...முட்டிப்போட்டு கேக்கும்
எங்கவீட்டுப் பொண்ணுன்னு ஊரே
...மொறபோட்டுப் பாக்கும்

வாயத் தொறந்தா பச்ச
...புள்ளப்போலவே இருப்பா
சீமத் தொரைபோல உங்களயும்
...பொத்திப்பொத்திப் பாப்பா

சொல்லிப்புட்டோம் நாங்க - இனிமே
சோதனய பண்ணிக்கோங்க நீங்க "


தனியாப் பேசனுமுன்னு சொன்னவரு - கொஞ்சம்
தலை சுத்தி வெளியே வந்தாரு

பாடச்சொன்ன பெரியமாமனாரு - நெஞ்சம்
பதறிப் போயித்தான் நின்னாரு

ஆடத் தெரியுமான்னு கேட்டவங்க - வேர்வைய
தொடச்சிக்கிட்டேதான் நின்னாங்க

சமையல சோதன செஞ்சவங்க - மையலாகி
கையக் கழுவவே மறந்தாங்க

நிச்சயமா இதுதாம் பொண்ணுன்னு
...உச்ச ஊணி நின்னாங்க
நிச்சயதார்த்தம் முடிஞ்சி நெறைவா
...ஊரப்பாத்துக் கெளம்புனாங்க

எதிர்பாராம ஒருசிக்கலு
...எம்முன்னால வந்து நிக்கிது !

எல்லாம் முடிஞ்சும் - மாப்புள்ள
...எந்திரிச்சிபோக மாட்டேங்கிறாரு !!
எப்போ கலியாணமாமுன்னு - ரகசியமா
...எங்கிட்ட கேட்டுட்டு முழிக்கிறாரு !!!

Thursday, July 9, 2009

இல்லத்தரசியாம்..?????


திடுக்கிட்டுப் பதறி எழுகிறாள்
தடுமாறி நேரம் பார்க்கிறாள்

சுவரில் கடிகாரம்
ஆறு மணி - மாலை
ஆறுமணியைத் தாண்டி விட்டது


அறக்க பறக்க எழுந்து
அடுக்களை நாடுகிறாள்
திரிந்த பால்கொதித்து
தரையெல்லாம் சிதறியபடி

அப்போதுதான் அவள்
அறைக்குள் கவனிக்கிறாள்
கண்ணயர்ந்த பொழுதில்
தாண்டிப் போயிருக்கிறான்

இறுகிய முகத்தோடு
இருக்கிறான் அவன்
பதுக்கிய கோபத்தோடு
படுக்கையில் அவன்

குழந்தையை படிக்கவைத்து
கிழவியை படுக்கவைத்து
கூடத்தைக் கூட்டிமுடித்து
கதவடைத்து வரும்பொழுது

தூங்கிப்போயிருக்கிறான் கணவன் - அவளின்
ஏங்கிப்போயிருக்கும் கனவுகளுடன்


அதிகாலை விழித்து
அரைகுறையாய்க் குளித்து
வாசல்கூட்டித் தெளித்து
வந்தகோலம் அமைத்து

சமையல் முடித்து
சட்டியில் அடைத்து
பள்ளிக்குப் பிள்ளையை
பதட்டத்தோடு அனுப்பி

உடுப்பு மடித்து
செருப்புத் துடைத்து
தண்ணீர்குடித்துக் களைப்போடு
தலை நிமிர்ந்தால்

எதிரே.......
எதிரியாய்.......
எகிரிப் பாயத்தயாராய் அவன்
எதிர் பார்க்கவில்லை அவள்

தள்ளி விடப்படும் காலித்தட்டும்
முகத்தில் அடைக்கப்படும் வாசல்கதவும்
முற்றத்தில் கலைக்கப்படும் புள்ளிக்கோலமும்
மிதிவாங்கி அலரும் இருசக்கர வாகனமும்

நெற்றிப்பொட்டில் அறைந்து -அவளுக்கு
நிம்மதியைக் கலைத்து உணர்த்துகிறது
நேற்றைய கோபம் உறைந்ததையும் - இன்றும்
முற்றிப்போய்த் தொடர்வதையும்

மதிய உணவு எடுத்து
மயக்கும் வெயிலில் நடந்து
பள்ளியில் கொணடு சேர்த்து
மரத்தின் அடியில் ஓய்ந்து

மல்லி பறித்து
மாலை தொடுத்து
விளக்கேற்றி வைத்து
வீட்டுவேலை முடித்து

அளவுப்பால் வாங்கி
அடுப்பினில் வைத்து
மிஞ்சும் சோர்வோடு
ஊஞ்சலில் அமரும்போது

தன்னையும் அறியாமல்
கண்ணயர ஆரம்பிக்கிறது

சத்தமில்லாமல் நுழைந்து
பக்கம்தாண்டிச் செல்கிறான் அவன்
மெல்ல அக்கம் பார்த்து
மெதுவாய்ப் பத்தவைக்கிறாள் கிழவி

"விளக்குவைக்கவும் துங்குவா அய்யா !
இப்படியிருந்தா வெளங்குமா அய்யா ?
வேலை எதுவும் செய்யாம பொய்யா.,
வெட்டியாவே இருக்கா அய்யா !!"


மாமியார் 'அவரின்'
மகனிடம் சொல்லிய
தகவலதைக் கேட்கிறாள்
திடுக்கிட்டு எழுகிறாள்

திகைத்துப்போய் அழுகிறாள்
தனக்குத் தானே அமைகிறாள் - பின்
அடுக்களைக்குள் நுழைகிறாள்
அடுத்தவேலைக்குத் தயாராகிறாள்


சுவரில் கடிகாரம்
இன்றும் ஒடிக்கொண்டிருக்கிறது
தொடர்ந்து ஒடிக்கொண்டே..............
........................................
............................................

Sunday, January 4, 2009

பெண் கல்வி...?????


இந்திய சனத்தொகையில்
இன்றைய கணக்கு வகையில்
சரிபாதிக்கும் மேலேயே
சதம் ஒன்று கூடுதலாகவே பெண்கள்

பள்ளிப் படிப்பில் சரிக்கு சரியாய்
போட்டியிட்டு செயிக்கிறார்கள் சாரிசாரியாய்
பத்தாம் வகுப்புத் தேர்வில் முதல்
பத்து இடமும் பறிபோகிறது அவர்களிடம்
பன்னிரண்டாம் வகுப்புத் தேர்ச்சியில்
முன்னிரண்டு வரிசையில்
பையன்கள் யாரும்
பக்கத்தில் கூட வரவில்லை

" அதுக்கப்புறமா ஆத்தா நீங்க
அத்தன பேரும் எங்கதான் போனீங்க?
இங்கொன்னும் அங்கொன்னுமா
அத்தி பூத்தாப்போல தெரியரீங்க!
மத்தவங்கல்லாம் என்னதான் ஆனிங்க?

பள்ளிக் கல்வி தாண்டி
துள்ளி மேலே எழுந்துவர
யாரும் வழி தரலியா? - இல்ல
யாருக்கும் வழி தெரியலியா?

பாத்திரம் கழுவினாலே போதுமுன்னும்
பாதுகாப்பா வைக்க வேணுமுன்னும்
பெத்துப் போடதுக்கு ஆகுமுன்னும்
பொத்தி உள்ளே வச்சுட்டாங்களா? "


பொறுத்தது போதுமே இதுகாறும் !
பொங்கி எழுவோமா இனிமேலும் ?

சோதனைகளை கொன்று தின்று
சாதனைகளாக்கும் சாத்தியக்கூறுகள்
சாத்தியமாக்கிக் கொடுப்போம்!

இந்திய சாவ்லாக்கள்
இங்கேயே உருவாக
இயன்றதைச் செய்வோம்!

பெண்கள் பயில களம் அமைப்போம் !
பெண் உயர்கல்வி கொடுப்போம் !