Showing posts with label க(தை)விதை. Show all posts
Showing posts with label க(தை)விதை. Show all posts

Wednesday, April 8, 2015

பிற விரல்கள் :



கற்ற வித்தையைக்
காட்டும் ஏக்கத்தில்
கரைபுரளும் ஊக்கத்தில்
அனைத்தும் அறிந்த
ஆன்றோர் அவையின்
​நடு ​வந்து நிற்கிறான்
கட்டை விரலை
இழந்த பிறகும்
​கலங்காத​
ஏகலைவன் ......

”இவனுக்கென்ன
​முடியுமாம் ​”

என்று எழுந்த
​குருக்களின்​ குரல்மூலம்
வெட்டி எறியப்படுகின்றன
அவனின்
மற்ற பிறவிரல்களும் !

Sunday, September 16, 2012

க(தை)விதை : நனையுதே மாராப்பு ..!

வாழ்க உறவுகள் ....
மிக நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட இடைவெளிக்குப்பின் க(தை)விதை சொல்ல வந்திருக்கிறேன்..
மரபில் / குறளில் கொஞ்சம் மூழ்கிப் போனதால் .... இதிலிருந்து விலகியே இருந்திருக்கிறேன் .....இது மீண்டும் இன்று எனக்கு நினைவுக்கு வந்தது உங்களின் கெட்ட நேரமாக இருக்கலாம் .......அனுபவியுங்கள் ...:))


பச்ச ஒடம்புக்காரீ’ன்னு
பவுசாத்தான் படுக்க முடியுமா ..?

கொளுந்தியாளப் போல நானும்
கெழுத்தியப்போலக் கெடக்க முடியுமா ..?

சாவலை எழுப்பி வெரட்டி
சாலையைக் கழுவி பொரட்டி

தூக்கத்தை மொத்தமா வெலக்கி
முத்தத்தை சத்தமில்லாம ஒதுக்கி
தூக்கை சுத்தப்பத்தமாத் தொலக்கி

நீச்சத் தண்ணிய ஊத்திக்கிட்டு
பச்சப் புள்ளயத் தூக்கிக்கிட்டு

எட்டுபோட்டு நடக்கோணும்
காட்ட மேட்டக் கடக்கோணும்
தோட்டம் போயிக் கெடக்கோணும்......

பச்சப்புள்ளய அமத்திப்போட்டு
புல்லறுக்கப் போகோணும்

கஞ்சித்தண்ணி கண்ணுலபட
நெஞ்சிமுட்ட சொமக்கோணும்

ம்ம்ம்ம்ம்...............


நட்ட நடு சாமத்துல
கெட்ட சுடும் விடிகாலப்
பொழப்பைப் பத்துன நெனப்பால
அரைக்கோழித் தூக்கத்துல
பொரண்டு நான் படுக்கையில

பச்சப்புள்ள ஏங்கியழும்
உச்ச சத்தம் கேட்டுத்தான்

அதறிப் பதறி எந்திரிச்சேன்
அவசரமாத்தான் பாத்துவச்சேன்

ஒதட்டுப்பால் குடிச்சுக்கிட்டு
எதமாத்தான் தூங்குதானே என்ராசா ...

நெலம தெரியாம எரிஞ்ச
நாதாரி வயித்த அணைக்க
குண்டு சொம்புத் தண்ணிய
மொண்டு ஊத்துப் போகையில

ஏதோ உறுத்துன்னு
என்னான்னு நான்பாக்க...

பசிச்ச என்வயிறு
கீழே வறண்டுகெடக்க
எங்கோ பசிச்ச வயிறுக்காக
இங்கே நனைஞ்சுக் கெடக்குது
என்னோட மாராப்பு..........!

Wednesday, April 20, 2011

16 :நம் மரபைக் காக்க..இயன்றவரை என்னாலானதை இறுதிவரைச் செய்வேன் ....!


உலக மரபு தினம்..(18.04.11)

அழிவின் நுனி விளிம்பில்
பரிதாபமாய் நின்றபடி
பழைமையின் பெருமையை
பலன் எதிர்பாராது நம்முன்
பறைசாற்றிக் கொண்டிருக்கும்

’நினைவுச் சின்னங்களை
புராதானக் கோவில்களை
வண்ண நுண்ணோவியங்களை
கலைமிகு அழகுச் சிலைகளை’

மேலும் சிதையாமல்
யாரும் சிதைக்காமல்
பாதுகாக்கும் விழிப்புணர்வை
பொதுவில் உருவாக்கும் ஒரு
தன்னலமில்லாப் பண்பாளர்களின்
தன்னார்வச் சுற்றுலா அது .......

இந்தியா முழுதும் சுற்றிவந்து
இன்றுடன் முடிவடைகிறது
மன்றம் வைத்த மதுரையின்
மீனாட்சி அம்மன் கோவிலில்..........

நம் முன்னோரின்
கலை தொழில்நுட்பத்தின்
வானளாவிய முதிர்ச்சியை
இன்றும்காட்டிக் கொண்டிருக்கும்
காலக் கண்ணாடி அது......

கலையின் வீச்சில் மிரண்டு நான்
மலைத்துப் போய் நிற்கிறேன்
மறு நிமிடமே மனம் கலைந்து
வெறுத்துப் போய் விடுகிறேன்

சுற்றிலும் குப்பைகள்
சுகாதாரச் சீரழிவுகள்
சுற்றுச்சூழல் சீர்கேடுகள்
கசங்கிய காகிதப் பொட்டலங்கள்
காலியான குளிர்பானக் குடுவைகள்

”மாற்றவேண்டும் இந்த
மனிதனின் தன்மையை...
காக்கவேண்டும் கலைச்
சின்னங்களின் மேன்மையை....

நாம் மனது வைத்தால்தான்
நாளையாவது மாற்றங்கள் வரும் - எல்லாம்
நமது உடமைகள் எனக் கொண்டால்தான்
நம்மிடையுள்ள தடுமாற்றங்கள் தீரும்”

என்றாவது ஒரு நாளிந்த
உண்மை எல்லாருக்கும் புரியும்
என்னும் அதீத நம்பிக்கையோடு
அங்கிருந்து கிளம்புகிறேன்

”அட ,
.!!!”

கலைச் சின்னங்கள் பற்றிய
கவலையில் எனது மொத்த
கவனம் சிதறிப் போனதில்
முக்கியக் கடமை ஒன்றை
செய்யாமல் விட்டிருக்கிறேன் :(

’இந்தியா முழுதும் செய்ததை எப்படி
இங்கே முழுதாய் மறந்துபோனேன் ?
இங்கேவரும் வாய்ப்பெனக்கு
இனியும் இருக்குமோ எனத் தெரியவில்லை..!’

எனவே .........

கோவிலின்
சுவரிலில்
எனது வரவையும்
என்னவளின் பெயரையும்
சுரண்டிப் பதிக்கக் கிளம்புகிறேன் நான் ..............