Sunday, December 26, 2010

அறிவியல் அறியாத மழைக்கான காரணம் ...

என்னவள்

தாய்மையுடன் சென்றிருக்கிறாள்


அவளது தாய்வீட்டுக்கு நேற்று..


வெள்ளி இல்லாமல்

துடைத்து விடப்பட்ட

நேற்றைய வானம் போலவே

ஒரேநாளில் அனைத்தும்

அணைந்து போனது எனக்குள்...


அட....

இன்றும் வானில்

நேற்றைப் போலவே....

எங்கும் காணவில்லை

மின்னும் அந்த நட்சத்திரங்களை....


எதிரே..

வரண்டு போன

பளிங்குத் தரையைப் போல

வெறுமையாய் வெளிர்வானம்..


திடீரென வீசத்துவங்கியது

மண் வாசம்...

கடும் கோடையிலும்

மழையின் வாசம்...


என்வீட்டு முற்றத்தில் மட்டும்

மேகங்கள் திரண்டொரு

மழைக்கான முன்னேற்பாடு...


வாசலில் இருந்த

கோலத்தின் கோடுகளை

அழிக்கும் முயற்சியில்

மும்முரமாய் இருக்கிறது மழை...


அட

அப்போதுதான் கவனிக்கிறேன்


அதுவொன்றும் சராசரி மழையன்று...

இதுவொரு மீட்புப் போராட்டமென்று.....


இரண்டு நாட்களுக்கு முன்

என்னவள் வரைந்து......இன்னமும்

அழியாத கோலத்தின்

வளைவுகளுக்குள் சிக்கி

தரையெங்கும் இறைந்து

அடைபட்டுக் கிடக்கின்றன

அந்த நட்சத்திரங்கள்

புள்ளிகளாக ...................!

.

Wednesday, December 22, 2010

பெண்ணியத்தைப் போற்றடா....!



பாதி(50%) கேட்டு

நீதியை நிலைநாட்ட

நாளை நடத்தப்போகும்

மாபெரும் ஆர்ப்பாட்டம்

ஒரு வருங்கால

வரலாறாகப் போகிறது.......


போராட்டமாய்த் தொடங்கி

ஒருபுரட்சியாய் முடியப்போகிறது

நாளைய பொழுது.....


பெண்ணியத்தைப் போற்றவும்

பெண்ணினத்தின் முன்னேற்றவும்

தலைவன் நானே தெருவிலிறங்கி

என்னுயிரையும் தாரைவார்த்து

தீக்குளிக்கவும் தலைமை

ஏற்பேன் அப்பொழுது.......


நாளைய எனது உரை....

ஆண்களின் சுயநல முகத்திரையை

அகற்றும்படி அமையப் போகிறது...

ஒவ்வொரு வார்த்தையிலும்

பொறி பறக்கப் போகிறது...

கூடி இருக்கும் கூட்டத்துள்

தீப் பிடிக்கப் போகிறது....


இதோ.....

33%தான் தருவோமென

வேசமிட்டிருக்கும் ஆண்முகத்தை

ஆவேசமாகக் கிழித்து வெளிப்படுத்தும்

வாசகங்களை உருவாக்கிக் கொண்டிருக்கும்

அந்திசாய்ந்த வேளையில்.........


மெல்லக் கதவுதிறந்து

உள்ளே வருகிறாள் அவள்...!


முன்னாலிருந்த அந்த

பாதி மீதியிருந்த கோப்பையை

ஓரத்திற்கு ஒதுக்கி வைக்கிறேன் நான் ...


இனி

தேவையிருக்காது இதற்கு ....!!

Saturday, December 11, 2010

பாரதியின் வளர்ப்பாகிய நான் ...!


பாரதியின் பிறந்த நாளுக்கு ஒரு சமர்ப்பணம் :



வேரோடு மண்மீதில் வீழ்த்தியதாய் எண்ணியே
பாரா(து) இருக்காதீர் பாரோரே - யாருமெதிர்
பாராத நேரமதில் பாரதிரச் சூழ்வேன்;நான்
பாரதியின் அக்கினிக் குஞ்சு ..








(வெண்பா : நேரிசை)
.

Thursday, December 9, 2010

எங்கே போனது மனிதம்.......?


தாண்டிச் செல்வோரெல்லாம்

சொல்லிவைத்தார்ப் போன்று

கவனிக்காதது போல தவிர்த்துவிட...


சாலையைக் கடக்க

வழியற்ற நிலையில்

விழியற்ற ஒருவர்..........


ஒருகரம் கொடுத்தால்

மறுபுரம் சென்றிடுவாரே நொடியில்...!


ஒருமணி நேரமாகியும்

ஓராயிரம்பேர் கடந்தும் - அதில்

ஒருமனிதன் கூட வரவில்லையே...?


என்னாயிற்று மனித நேயம் ??


விடையைக்

கணிக்க இயலாமல்

நிகழ்வைக்

கவனித்து கொண்டிருக்கிறேன்


நான் எனது

சன்னலின் வழியே ........

.

Tuesday, December 7, 2010

என்னவாயிற்றாம் அவருக்கு ?


இன்னல்கள் தீர

இருக்கும் நிலை உயர

நிலைத்த செல்வம் பெற

நீண்ண்ண்ண்ட ஆயுள் அடைய

கடவுளை நோக்கி

கடும் தவமிருக்கிறேன் நான்....


அவர்

இதுவரையிலும் வரவில்லை....

என்னவாயிற்றோ தெரியவில்லை...


பொறுமை இழந்து

விசாரித்த எனக்கு

இடியாய் வந்து சேர்ந்தது

நம்பகமான தகவலொன்று......

ஊரானுக்கு உதவிட

ஓயாமல் உழைத்திடும்

உதவாக்கரை ஒருவன்...


தன்னைப் பற்றியும்

ஒரு நொடியாவது

நினைக்க வேண்டுமென்று

அவனை நோக்கி

கடும் தவத்திலிருக்கிறாராம் அவர் ..


அட..........!

என்னவாயிற்றாம் இவருக்கு ?

Sunday, December 5, 2010

இருக்குமோ.............!

கருந்துளையின் ஆழத்தில்

நிகழ்ந்த பெருவெடிப்பின் ஓரத்தில்

நகர்ந்த பதினோராம் கிரகத்தில்....


பதிமூன்றாம் மாதத்தின்

முப்பத்திரண்டாம் நாளின்

இருபத்தைந்தாம் மணியின்

அறுபத்தொன்றாம் நிமிடத்தில்....


தமது ஏழாம் அறிவால்

எதையோ உணர்ந்து

உதட்டைச் சுழித்து

மெல்ல சிரிக்கிறது...



பிறந்து சில

நொடிகளேயான

அந்தக் குழந்தை ......

Wednesday, December 1, 2010

ஒரு யானையும், ஒரு பூனையும் , நானும்.....:!



எளியவன் இவனிடம்

வலியவன் அவன் தனது

வலிமை மொத்தத்தையும்

வல்லமையாய்க் காட்ட...


இயலாமையால்

இவன் சிரம் குனிந்தே இருக்க..

வன்மத்தோடு

அவன் கரம் உயர்ந்தே இருக்க....


ஒருபக்கமாகவே

ஊசலாடிக் கொண்டிருக்கிறது தராசு


பொறுத்துப் பொறுத்துப் பார்த்து

பொறுமை அத்தனையும் இழந்து


இவனைக் களத்திலிருந்து ஒதுக்கி

அவனுக்கு எதிராய் இறங்கி

நிமிர்ந்து நிற்கிறேன் நான்.......


இவனாகிக் கொண்டிருக்கிறான்

அவன் எனக்கு முன்னால்...............


.