Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

Wednesday, February 23, 2011

12.அவளது முன்கதையை முடிக்கும் நேரமிது....!

அரங்கேற்ற வேளை / அரங்கேற்றும் வேலை :

ஆம்.....

இன்றோடு....

நூறு நாட்கள் கடந்துவிட்டன - நான்

நூலிழையில் முடிவெடுத்திருக்கிறேன்

அவள்கதையின் அரங்கேற்ற வேளை என்று...

எனக்கதை அரங்கேற்றும் வேலை இன்று...

என்னவிலை கொடுத்தும் முடிப்பேன் நன்று...


எதற்கும் உண்டே எல்லை..

இன்றுடன் கதையை முடித்துவிட்டால்

இனியும் தொடராது இந்தத் தொல்லை...

பெருமைக்குக் கறையென்று ஒன்று வருமென்றால்

பொறுமையும் கரைந்து குறைவதில் தவறில்லை


வலதுகால் வைத்து விளக்கேற்றி

எனது வீட்டுக்குள் வந்துவிட்டாள்தான்...

அவள்மனக் கூட்டுக்குள் இருக்கிறேனா

எனும் கேள்விச்சூட்டில் வெந்துவிட்டேன்நான்..


ஆம் இல்லை என்பதே

அவளிடம் வேகமாய்வரும் வார்த்தைகள்

அந்த அழ்கடல் அதிர்வுகள்தான்

என்னை வேகவைக்கும் சாட்டைகள்


சைகையால் உரைப்பாள் சமயத்தில்

கண்சாடையால் உறைப்பாள் - நான்

சல்லி சில்லியாய் உடைவேன்

சுக்கல் சுக்கலாகி மடிவேன்


என்னுடன் அவள்பேசியதைத் தொடுத்தெடுத்தால்

பத்து பக்கத்தில் அடக்கிவிடலாம்

நான் அவளிடம்புலம்பியதைத் தொகுத்தெடுத்தால்

பக்கத்து மெத்தையையே அடைத்துவிடலாம்


ஒருவேளை இருக்கலாம்

ஏதாவதொரு பழைய மனச்சுமை...

அவளாக இறக்குவாளென

அமைதியாய்க் காத்திருந்ததன் பலன்

இன்று தலைக்குமேல் வெள்ளமாகி

பலமாய் அழுத்தத் தொடங்கிவிட்டது


இதோ..

வந்து நிற்கிறாள் அவள்..


திட்டமிட்டபடியே

காலணிகள் இடம்வலமாய் உதற

முன்னால் உள்ளதெல்லாம் சிதற

பாத்திரங்கள் உடைந்து நொறுங்க

பத்திரங்கள் நைந்து பறக்க.......


உருவம்தான் மாறவில்லையே தவிர

மிருகத்துக்குள் ஏறியிருந்தேன் நான்


இன்றுதான் அவளது

உலகவாழ்க்கை வரலாற்றிலேயே

முதன்முறையாய் ஒரு கோரதாண்டவத்தை

நேரடியாய் பார்த்திருப்பாள் போலும்

மிகஅதிர்ந்து மூலையில் ஒடுங்கி

வாய்திறந்து பெரும்குரலெடுத்து

‘ஓவென அழ ஆரம்பிக்கிறாள் .


ஆகா...

இதற்குத்தானே காத்திருந்தேன்....


ஓடிச்சென்று கட்டியணைத்து

முதுகை வருடி தலையைத் தடவி

மெல்ல அவள் காதருகில்

செல்லமாய் கிசுகிசுக்கிறேன்

.உனக்கு பாடவும் தெரியுமா..?

முகாரி ராகம் இது ...!


சட்டென அழுகையை நிறுத்தி

சரேலென என்னை விலக்கி

விறுவிறுவென எதையோ தேடி

குறுகுறுவென பார்க்கிறாள் என்கண்ணுக்குள்


எதோ கிடைத்திருக்க வேண்டும் அவளுக்கு..

பொங்கும் வெட்கத்துடன்

இருகரம் கொண்டு வாய்ப்பொத்தி

அறையெங்கும் எதிரொலிக்க

அருவியாகச் சிரிகிறாள்

அடடா.... இது ஆனந்த பைரவி......!

கரு : மகாபாரதம் / கண்ணன்


Wednesday, January 5, 2011

ஓவியமாய் ஒருத்(தீ)தி :

அழகுக் கவிதைகள்..

அதீதக் கற்பனைகள்..

சிறுசிறு சீண்டல்கள்..

திடீர் தீண்டல்கள்...கலந்த

அற்புதக் கலவையிலிருந்து

எனதுவிரல் தூரிகையால்

வண்ணம் எடுத்துத்

தீட்டத் துவங்குகிறேன் நான்.....


சின்னச் சிணுங்கல்கள்..

செல்ல மிரட்டல்கள்..

தள்ளி உதறுதல்..

வெட்டி விலகுதல்...என

தூரிகையின் வண்ணங்களுக்கு ஏற்ப

நொடிக்கொரு ஓவியமாய்

மாறிக்கொண்டிருக்கிறாள் அவள்........


[நன்றி :கரு: இயற்கை சிவம்]

Sunday, December 26, 2010

அறிவியல் அறியாத மழைக்கான காரணம் ...

என்னவள்

தாய்மையுடன் சென்றிருக்கிறாள்


அவளது தாய்வீட்டுக்கு நேற்று..


வெள்ளி இல்லாமல்

துடைத்து விடப்பட்ட

நேற்றைய வானம் போலவே

ஒரேநாளில் அனைத்தும்

அணைந்து போனது எனக்குள்...


அட....

இன்றும் வானில்

நேற்றைப் போலவே....

எங்கும் காணவில்லை

மின்னும் அந்த நட்சத்திரங்களை....


எதிரே..

வரண்டு போன

பளிங்குத் தரையைப் போல

வெறுமையாய் வெளிர்வானம்..


திடீரென வீசத்துவங்கியது

மண் வாசம்...

கடும் கோடையிலும்

மழையின் வாசம்...


என்வீட்டு முற்றத்தில் மட்டும்

மேகங்கள் திரண்டொரு

மழைக்கான முன்னேற்பாடு...


வாசலில் இருந்த

கோலத்தின் கோடுகளை

அழிக்கும் முயற்சியில்

மும்முரமாய் இருக்கிறது மழை...


அட

அப்போதுதான் கவனிக்கிறேன்


அதுவொன்றும் சராசரி மழையன்று...

இதுவொரு மீட்புப் போராட்டமென்று.....


இரண்டு நாட்களுக்கு முன்

என்னவள் வரைந்து......இன்னமும்

அழியாத கோலத்தின்

வளைவுகளுக்குள் சிக்கி

தரையெங்கும் இறைந்து

அடைபட்டுக் கிடக்கின்றன

அந்த நட்சத்திரங்கள்

புள்ளிகளாக ...................!

.

Wednesday, November 17, 2010

காதல் : இதில் எது வெற்றி ...????

அடர்ந்த யோசனையுடன்

தொடர்கிறதென் திட்டங்கள்....

மொத்தமாய் அவளிடம்

தோற்றுப் போகும்

முழு முயற்சியில் இருக்கிறேன் நான்......


என்னைபோலத் தானே

இருப்பாள் அவளும்........?!


தெரிந்துகொள்ளும் ஆவலில்

தேடுகிறேன் அவளுக்குள் ...


அடர்ந்த யோசனையுடன்

தொடர்கிறதவள் திட்டங்கள்.......

எப்படியும் என்னை

வென்றுவிட வேண்டும் என்ற

பெரும் முயற்சியில் அவள்.....!!!!!!!


.

Sunday, July 25, 2010

ம்ம்ம் .! அயலகத்தில்...!! அவனுக்கென்ன..!!!


ஏக்கப் பெருமூச்சுகளால்
முழுதும் நிரம்பிவழிகிறது அறை

சுற்றிலும் காற்றிருந்தும்
சுவாசிக்கத் திணறுகிறது இதயம்

துக்கம் இமை நனைக்க
தூங்க மறுக்கின்றன நினைவுகள்

எனது தனிமையோடு
ஆவேசமாகப் போட்டியிட்டு
செயித்துக் கொண்டே இருக்கிறது

அந்தக்
கடிகாரத்தின் நொடிமுள்........
.

Monday, March 29, 2010

இருக்குமோ ..??!!!!


அதிர்ந்துபோய் இருக்கிறேன்

அதிகாலையிலிருந்து நடப்பதெல்லாம்
அதிசயமாகவே இருக்கிறது

அவதியில் தொடங்கி
அசதியில் முடியும் நாள் இன்று ...
அற்புதமாய்த் தொடங்கி
அமர்களமாய் நடந்துகொண்டிருக்கிறது

ஆசீர்வதிக்கப் பட்டிருக்கிறேனா நான் ???

சரியான அளவில் எடைகாட்டிய
நியாயவிலைக்கடைத் தராசு

வரும்வரைக் காத்திருந்து
அலுவலக வாசலில் இறக்கிச்
சென்ற நகரப் பேருந்து

முகம்சுளிக்காமல் இருக்கும்
இடம்வரை வந்து
சில்லரை தந்த நடத்துனர்

தவறாய் சாலைகடந்த என்னை
புன்சிரிப்போடு கடந்துபோன
‘ஆட்டோ’ ஓட்டுனர்

வரும்வாகனம் நிறுத்தி என்னைக்
கடந்துபோகச் சொன்ன
போக்குவரத்துக் காவலர்

தாமதமத்தால் பயந்து
ஒதுங்கிய என்னை
தானே அழைத்து
வணக்கம் சொன்ன மேலாளர்

இடைவேளையில்
உணவகத்தில் பணம்கொடுத்த
பக்கமிருந்த கருமி நண்பன்

மாலையில் மேசைமேல்
காத்திருந்தது எதிரேபாராத
பதவி உயர்வு உத்தரவும்,
நெடு நாள் காத்திருந்த
கடனொப்புதல் ஆணையும்,

அதிர்ந்துபோய் இருக்கிறேன்....

என்ன ஆயிற்று எனக்கு ??
எப்படி இதெல்லாம் !!

நெற்றியை அழுத்தியபடி
உறைந்துபோய் இருக்கிறேன் ...

அப்போதுதான் கவனிக்கிறேன் ....
எனது மோதிர விரலில்
சுற்றியபடி இருந்தது
அவளின் உதிர்ந்த தலைமுடி ஒன்று ...

ஒருவேளை...............

இருக்குமோ !!!!!!!????????

Wednesday, December 23, 2009

மேனகையும் நானும் ...!


பழிக்குப் பழி :

சிங்கமாயிருந்தேன்
அசிங்கப்படுத்திவிட்டாள் என்னை !

அலட்சியம் தோய்ந்த பார்வை
ஆணவம் தடவிய செய்கை
விசம் புதைந்த வார்த்தைகள்
வீசி எறியும் பேச்சுகள்
--தாங்க முடியவில்லை

பழி வாங்கியே ஆகவேண்டும்!

அலுவலகத்திலிருந்து
அரைமணிக்கு ஒருமுறை
அலைபேசியில் அழைத்து
ஒருமணி நேரம் பேசுவேன்
--இன்று பேசவில்லை

ஆறு முழம்பூவும்
அரைக்கிலோ அல்வாவும்
அவளுக்கென வாங்குவேன்
--இன்று வாங்கவில்லை

ஆணியடித்தாற் போல்
ஆறுமணிக்கு அவளருகே
வீட்டில் இருப்பேன்
--இன்று இருக்கவில்லை

ஒன்பது மணி..
அழைப்புமணியை அடித்து
வாசலில் காத்திருக்கிறேன்
--அவள் வரவில்லை

நானே திறந்து
உள் நுழைகிறேன்
--விளக்குகள் எரியவில்லை

படுக்கையறைக் கதவை
வேகமாய்த் திறக்கிறேன்
உறங்கிக்கொண்டிருக்கிறாள் அவள்
--இன்னும் விழிக்கவில்லை

கோபம் தலைக்கேற
கதவினை அறைந்து சாத்துகிறேன்

பதறி எழுகிறாள்.....
பதட்டமாய் அடிப்பார்வையால்
எனைத் துளைக்கிறாள்.......

மெல்ல இருகைத் தூக்கி
மெதுவாய் எனக்கு முன்னால்
மேனகையாய் மாறி அவள்
சோம்பல் முறித்த அந்த
அழகிய நொடியில்
கலைந்தே போனது
இந்த விசுவாமித்திரனின் தவம்...

Thursday, December 17, 2009

வழக்கம்போல வாலாட்டுகிறது...!


காலத்தின் கோரலீலையில்
சிக்கிய சிலையாய் அவள்....

அன்று ....
உனது கரம் பிடிப்பேன் அல்லது
காலனிடம் சிரம் கொடுப்பேன்
என்ற என்னவள் அவள்

இன்று...
வந்து நிற்கிறாள்
இன்னொருவனின் கரம்பிடிக்கும்
மண நாளுக்கான அழைப்பிதழோடு

பகுத்தறிவுக்குப் புரிகிறது நிலை
பேதைமனதுக்குத்தான் புரியவில்லை

இல்லை என்றானபின்பும்
அவளைப் பார்த்தவுடன்
துள்ளிக் குதித்து
வழக்கம் போலவே
வாலாட்டுகிறது மனது

.

Monday, December 14, 2009

மண்வாசம் போல...!


வெட்டவெளிப் பாலையில்
சுட்டெரிக்கும் வெயிலில்
பாதை தெரியாமல்
பலநாள் பயணித்து
வரும் வழியிலேயெ
வாழ்க்கையை முழுவதுமாய்
தொலைத்து நின்ற வேளையில்.....
மழையின் வருகையை அறிவிக்க
மண்வாசம் சுமந்துவரும்
உயிர்க் காற்றை உணர்ந்தேன்
’மௌனம் உடைத்த அவளது
மெல்லிய உதட்டுச் சுழிப்பில்’

.

Monday, September 14, 2009

சுகமா?....சுகம் சுகமா??.....சுகமே சுகமா???


பெறுநர் : எம்புருசன் ,
.அயலகம்



எம் மாமாவுக்கு ..,

அயலகத்தில் நீ சுகமா ?
அருகிலேயே நானும் சுகமா ?

உனது தனிமை சுகமா ?
உடனென் இனிமை சுகமா ?

உனது மனம் சுகமா ?
உணர்ந்த எனது மணமும் சுகமா ?

உனது திமிர் சுகமா ?
அருகிலென் உயிரும் சுகமா ?

உனது தினவு சுகமா ?
உருகுமென் கனவும் சுகமா ?

உனது முன் கோபம் சுகமா ?
அதைத்தேடுமென் தாபம் சுகமா ?

உனது தெனாவட்டு சுகமா ?
மனதிலென் முகவெட்டும் சுகமா ?

உனதிரவுத் தூக்கம் சுகமா ?
விழித்திருக்குமென் ஏக்கம் சுகமா ??

நானிருக்கும் உனதுள்ளம் சுகமா ?
நீயில்லா என்மனப்பள்ளம் சுகமா ?

உயிருக்குள் ஊடுருவும் பார்வை சுகமா ?
உனைத்தேடி வாடுமென் வியர்வை சுகமா ?

எல்லாம் இங்கிருந்தும் நீயங்கு சுகமா ?
எதுவுமே இங்கில்லாத நானங்கு சுகமா ?

இப்படிக்கு
.உம் மனைவி
.வி. முத்துப் பேச்சி
.வடுகப் பட்டி


.

Sunday, September 13, 2009

இடிவந்து தாக்கியது போல...!


மந்திரிச்சுவிட்டக் கோழிபோல் நான்
எந்திரிச்சு உன்னிடம் வந்திருக்கிறேன்

கோவில்முரட்டுக் காளைபோல நான்
காதல் சொல்ல வந்துநிற்கிறேன்

’’மறுத்துவிடாதே என்கண்ணே !
மூர்ச்சையாகிவிடுவேன் உன்முன்னே !!


மற்றவன் பார்வைக்கு எப்போதும்நீ
அரைக்கிழவியாய் இருந்தாலும்

உற்றவன் எனக்கு இப்போதும்நீ
பேரழகியாகத்தான் தெரிகிறாய் !

மறுத்துவிடாதே என்கண்ணே !
மூர்ச்சையாகிவிடுவேன் உன்முன்னே !!


ஏதோ ஒருகணத்தில் மட்டும்நீ
ராட்சசியாகத் தெரிந்தாலும்

எல்லாக் கோணத்திலும் எனக்குநீ
ரட்சகியாகவே இருக்கிறாய் !

மறுத்துவிடாதே என்கண்ணே !
மூர்ச்சையாகிவிடுவேன் உன்முன்னே !!


அஞ்சுகமே உனை எந்தன்
மஞ்சத்தில் வைத்திருப்பேன் !

வஞ்சகமின்றி நானும் உந்தன்
நெஞ்சத்தில் வாழ்ந்திருப்பேன் !

மறுத்துவிடாதே என்கண்ணே !
மூர்ச்சையாகிவிடுவேன் உன்முன்னே !!


குறிவைத்து என் இதயமதை
பறித்து விட்டாயே திருடி !

பறிகொடுத்த வெற்று இடமதை
இறகால்தடவி விடுவாயா வருடி !

மறுத்துவிடாதே என்கண்ணே !
மூர்ச்சையாகிவிடுவேன் உன்முன்னே !!


சரியென்று வந்தபின்னே நீ
சொன்னதெல்லாம் ஒத்துப்போவேன் !

சரியாக வில்லையெனில் நான்
சொல்லாமலேயே செத்துப்போவேன் !

மறுத்துவிடாதே என்கண்ணே !
மூர்ச்சையாகிவிடுவேன் உன்முன்னே !! ‘’



நேருக்கு நேர் பார்க்கிறேன்.....
நெஞ்சை நிமிர்த்தி கேட்கிறேன்......

”காதலிக்கிறேன் உன்னை !” என்கிறேன்

கைநீட்டினாலும் எட்டாத தூரத்தில்
கைகட்டித் தயாராய் (!) நிற்கிறேன்

”ஆமாம் நானும் !!” என்றாள்

உலகமே இருண்டது முன்னே !
உள்ளபடியே மூர்ச்சையானேன் அண்ணே !!




.

Sunday, August 16, 2009

ஐந்தில் வளைந்தது....


வறுத்தெடுக்கும் வெயிலில்
வசதியாய் வாழப் பழகிவிட்டதால்
வந்துவிழும் மாமழையை
வாசலில் வரவேற்கத்
தெரியவில்லை

லட்சியம் கலங்க வைக்கும்
நிச்சயம் திணற அடிக்கும்
அச்சம் கொள்ள வைக்கும்
லட்சம் வார்த்தைகள் -
அதனால் என்ன?
கவலையில்லை

பேசாமல் இருந்து
பேதைமனம் புகுந்து
அடியில் தீவைக்கும்
அவளின் மெளனம் -
அதன் ஆழம்!
தாங்கவில்லை

????!!!!!!!!!??????!!!!!!!!!!!

Thursday, August 13, 2009

இரு தண்டுப் பூமரமாய்.......


நீதி தேவதையின் கையிலிருக்கும்
நியாயத் தராசின் நிமிர்ந்தமுள்
நிலை கொள்ளால் இருபக்கமும்
தலையாட்டிக் கொண்டிருக்கிறது

அசையாமல் ஆகாயவிமானம்
அந்தரத்தில் நின்று கொண்டிருக்கிறது

தடுமாறிப் போனத் தொடர்வண்டி
தடம்மாறிச் சென்று கொண்டிருக்கிறது

இது கண்டு ஆரவாரமாய்
இரு தண்டுப் பூமரமாய் - அதோ
வந்து கொண்டிருப்பது அவளேதான்
நிகழ்ந்து கொண்டிருப்பதும் அவளால்தான்

அவளின் அழகுமுகம் அறிந்த நாள்முதல்
ஆதவனென் அறிவுமுகம் அழித்து நிற்கிறேன்
ஏந்திழை முகவரி தெரிந்த நாள்முதல்
எனதிழை முகவரியும் தொலைத்து நிற்கிறேன்

"எனைநான் நினைவிலெடுக்க முயல்கிறேன்,
உனைத்தானே நகலெடுத்து முடிக்கிறேன் !
எந்தன்கனவினில் கவிதைகள் பிறக்கின்றதே !!
அந்தக்கவிதையிலும் கனவுகள் பறக்கின்றதே !!!"


கூடவே நானும் சிறகுடன்..........!
கூடவே அவளுடன் நானும்.......!!

Sunday, August 9, 2009

காதல் யு(மு)த்த விண்ணப்பம்...


வா...... :(

காத்திருக்கிறேன் உனக்காகவே நித்தம்
காதுக்குளே உன் வளவியின் சத்தம்

கலங்கியதே இப்பிறவியில் சித்தம்
குறையுமா உனைப் பற்றிய பித்தம்

நீயாய் வா.... :(

வா என்றபின் வருவதா யுத்தம்
தா என்றபின் தருவதா முத்தம்

தானாய் வருவதல்லவா யுத்தம்
தன்னால் தருவதல்லவா முத்தம்

வந்தால் தொடருமே முத்தயுத்தம்
தந்தால் அதிருமே யுத்தமுத்தம்

தீயாய் வா..... :(

வருவாயெனில் பிழைப்பேனே செத்தும்
வந்தபின்னால் பறக்குமே பத்தும்

வருவாயா என்மன முற்றம்
வரும்வரை காக்குமென் சுற்றம்

அன்பே உன் கரம் பற்றும்
நாள்வரை என் சிரம் சுற்றும்

அதுவரை எதையும் கவனியேனே சற்றும்
அந்நாள் தான் இப்பிறப்பு முற்றும்

அதோ............. :)

Tuesday, August 4, 2009

அற்பமாகவும் அற்புதமாகவும் நான்.....



என்னவளில்லாப் பொழுதில் அவளது நினைவில்
என்னைச் சுற்றியுள்ள அனைத்தும்
எனக்கு அற்பமாகவேத் தோன்றுகிறது !
என்னை அற்புதமாக உணர்கிறேன் !!

என்னவளுள்ள பொழுதில் அவளது நிழலில்
என்னைச் சுற்றியுள்ள அனைத்தும்
எனக்கு அற்புதமாகத் தோன்றுகிறது ?
என்னை அற்பமாகவே உணர்கிறேன் ??

எனக்குள் ஏனிந்த மாயம் :( -ஆனாலும்
எனக்கு வேண்டுமே நியாயம் !
பட்டியல் அதைப் பாருங்கள் - என்
பரிதாப நிலை நீக்குங்கள்

அன்பு கோரிக்கை வைக்கும்போது
...அவள் திருக்கும் என் நுனிச்சட்டை

வாகனத்தில் விரையும்போது
...இறுக்கிப் பிடிக்கும் கழுத்துப்பட்டை


கடல் நோக்கி அமரும்போது
...விரலுள் புதைந்திருக்கும் கைக்குட்டை

கால்நனைய நடக்கும்போது
...சங்குகால் தொட்டுப்போகும் மணல்திட்டை

இன்னும் இருக்கிறது...........!!

அவளது முத்தம்பல மொத்தமாகக்
...கிடைக்கும் சுட்ட சோளத்தட்டை

அவளது முத்துப்பல் மெத்தெனக்
...கூசிக்கடிக்கும் புளிப்பு மாங்கொட்டை

அவளது எச்சில் சுவைத்துப் பித்தாகி
...உருகி வழியும் பனிக்கட்டிப்பட்டை

என்னை இன்னும் அவையெல்லாம
ஏளனமாகவேப் பார்க்கின்றன - அந்தப்
பாக்கியம் வேண்டும் எனக்கும் !
பழிவாங்க வேண்டும் நானும் !!

Tuesday, July 14, 2009

சென்னையில் தொலைத்(ந்)த......!



ஓடும் வாழ்க்கையில்
ஒருநாள் வசந்தமாய்

பாரம் இறக்கி
நேரம் ஒதுக்கி
சேரனில் துவங்கியது
சென்னைப் பயணம் - முக்கிய
நண்பன் திருமணம்

ஆளரவம் கேட்டு
கண்விழித்தேன் நடுஇரவில்!
தேவதை பார்த்து
திகைத்துப்போனேன் மறுநொடியில்!!

மின்னலாய்த் தோன்றினாள்
மனதினுள் ஊன்றினாள்
என்னெதிரே அமர்ந்தாள்
என்னுதிரம் கலந்தாள்

கண்களுள் நுழைந்தாள்
கருத்தினுள் இழைந்தாள்
தூக்கம் கலைத்தாள் - என்னுள்
ஏக்கம் விதைத்தாள்

என்கனவில் விடைத்தாள் - அவளே
என்கனவின் விடைத்தாள் - அட
நானானேன் வெறும்தாள்

அழகாய் இருக்கவில்லை - ஆனாலும்
ஆழப் பதிந்துவிட்டாள்!
நிமிர்ந்தே பார்க்கவில்லை - ஆனாலும்
நெஞ்சினுள் புதைந்துவிட்டாள்!!

கண்டவுடன் காதல்
கூடாது என்பவனைக்
கயவன் என்பேன்! - ஆம்
காதலில் விழுந்தேன்!!

இதயம் வெளியேவரத் துள்ள
இதழ்கள் வார்த்தையை மெள்ள
காதலை அவளிடம் சொல்ல - இதமாய்
கண் திறந்தேன் மெல்ல....

வேற்றுமுகம் கண்டேன் முன்னே,,
வெற்றிடம் உணர்ந்தேன் பின்னே,,,
வற்றியது உதிரம் உள்ளே - அவளை
உயிர் தேடியோடியது வெளியே

கண்ணியம் காக்கும் நோக்கத்தில்
கணநேரத் தாமதத்தின் தாக்கத்தில் - உடனே
காதலைச்சொல்ல மலைத்துவிட்டேன்
காதலியைத் தொலைத்து விட்டேன்

எப்படி எங்கே ஓடுவேன் ?
எங்கே எப்படித் தேடுவேன் ??
மிரட்டும் வாகனக் கடலில்..
மிதக்கும் வெகுசனத் திரளில்....

சுழலில் சிக்கிய துரும்பானேன்
ஆழியில் மாட்டிய எறும்பானேன்
ஆழ்கடல் மூழ்கும் இரும்பானேன்
ஆலையில் அரைபடும் கரும்பானேன்

திருமணம் இருப்பதையே மறந்து ..
தேவதையின் இருப்பையே உணர்ந்து..
திசையெல்லாம் தேடித் திரிந்து..
ஆசையெல்லாம் நொடியில் உலர்ந்து..

இரு உயிரை ஒரேநாளில்
பெருநகரில் தொலைத்து விட்டு
ஊர் வந்துசேர்ந்தேன் தோல்வியோடு
உயிர் இல்லா வெற்று உடம்போடு

நடைபிணத்தின் நிலைகாண
நண்பன் வந்தான் துணையோடு ,
இருமணம் இணைந்த - அவன்
திருமணத்தின் தொகுப்போடு .

புகைப்படத் தனித் தொகுப்பில்
புகையின் அணி வகுப்பில்
மணப்பெண் தோழியாய்
மனம் கவர்ந்த அவள் !

Wednesday, July 8, 2009

இது என்னக் கொடுமை..!?


சிரபுஞ்சியில் என்னைச் சுற்றி
....கடும்வெயில் அடிக்கிறது
சஹாராவில் எனக்கு மட்டும்
....சாரல்மழை பெய்கிறது
சிம்லாவில் என்னைச் சுற்றி
....வெக்கையாய் இருக்கிறது

தலைக்கனம் பிடித்துத் திமிராய்
தன்னையே சுற்றிக் கொள்ளும்
பூமி இப்போதெல்லாம்
என்னவோ தெரியவில்லை
என்னையே சுற்றி வருகிறது

நெருப்பு பனியாய்க் குளிர்கிறது
நீரும் அனலாய்ச் சுடுகிறது
இரவு வெளிச்சமாய் இருக்கிறது
பகல் இருண்டுபோய்க் கிடக்கிறது

வெறும் காற்றில் உறைகிறேன்
கொட்டும் மழையில் உலர்கிறேன்
கடும் பனியில் உருகுகிறேன்
சுடும் வெயிலில் நனைகிறேன்

ஏனோ தெரியவில்லை
என்னவென்று புரியவில்லை
என்னைச் சுற்றிலும் எல்லாமே
எதிர்மறையாகவே நடக்கிறது

வா வா என எந்தன்
வாழ்க்கையின் வசந்தம் அவளை
வாழ்க்கைக்குள் வரவேற்க
வாய்நிறைய ஆசைதான் எனக்கும்

ஆனாலும் இப்போதைய சூழ்நிலையில்
அதற்கான வழிதான் ஏதுமில்லை
பெரியோரே புரிந்துகொள்ளுங்கள்
அறியோரே அறிந்துகொள்ளுங்கள்

அடுத்து வரும் வரவேற்புக்காக
அடியேனை மன்னித்தருளுங்கள்
அவளுக்கும் எடுத்துச் சொல்லுங்கள்
ஆனவரை சமாதானம் செய்யுங்கள்

"வராதே வசந்தமே !
நீ வரவே வராதே !!
என் வாழ்க்கைக்குள் வரவே வராதே !!!"

Monday, June 29, 2009

காதல் சா(சீ)க்காளன்...!


மெதுவாய் உயரும் மின்தூக்கியில்
மேல்தளத்துள் வெளியேறி வருகையில்
மேல்மூச்சு இறைக்கிறது எனக்கு ? - எங்கோ
மேடையில் படிஏறியிருப்பாள் அவள் !

குளுகுளுவென இருக்கும் எனது
குளிர்சாதன அறைக்குள்ளும் லேசாக
வியற்க ஆரம்பிக்கிறது எனக்கு ? - அங்கே
மின்தடையாய் இருக்கும் அவளிடத்தில் !

வாசனை மூக்கு துளைக்க
ரசனையோடு சாப்பிட அமர்ந்ததும்
பசி மறத்துப்போகிறது எனக்கு ? - முன்னமே
ருசியாய் சாப்பிட்டு முடித்திருப்பாள் அவள் !

இன்னும் வேலை மீதமிருக்க
இரவு கண் மூட நேரமிருக்க
கனவாய் வருகிறது எனக்கு ? - அப்போதே
நன்றாகத் தூங்கிப் போயிருப்பாள் அவள் !

பாதிகாலையில் முகம் கழுவாமல்
படுக்கையில் இருந்தபடியே சூடாய்
பானம் குடிக்கப்போகிறேன் ! - எப்படியும்
பல் விளக்கியிருப்பாள் அவள் !!

Friday, June 19, 2009

அருக்காணிக் காதல்...!



"நார் இல்லாமல் மலர் _ ஆரம் ஆகுமா ?
வேர் இல்லாமல் மரம் _ மலர் கொடுக்குமா ?
நீர் இல்லாமல் உரம் _மரம் சேருமா ?

நீர் இல்லாமல் வேர் _மரம் வளர்க்குமா ?
நீர் இல்லாமல் மோர் _தனியே இருக்குமா ?
நீர் இல்லாமல் பார் _தாகம் தணிக்குமா ?

நீர் தராமல் வானகம் _தூங்கி இருக்குமா ?
நீர் இல்லாமல் கானகம் _ஓங்கி வளருமா ?
நீர் இல்லாமல் என்காதல் _ .................... !!"



ஆகா சொல்லிப்புட்டேனே !!!!!!!!!!!!!!.............

அவசரத்தில சொல்லிபுட்டேனே !
அவருகிட்டேயே சொல்லிப்புட்டேனே !

என் காதல சொல்லிப்புட்டேனே !
எதிர்பாக்காம சொல்லிபுட்டேனே !

என் காதல் கண்டிருப்பாரோ - என்மேல்
எதிர்காதல் கொண்டிருப்பாரோ ?

ஆசையா இருக்கேன் நான் அவருமேலே !
அடக்க முடியுமா இனியும் என்னால ?

காத்திருக்கும் சேதியச் சொல்லுங்க அவுகளுக்கு
கோயில் கட்டியேக் கும்புடுதேன் உங்களுக்கு

Monday, June 8, 2009

அறுபதானாலும் ஆண்டவன் கூடவே இருப்பார்..!


பெற்றபிள்ளைகளின் ஆசையையும்
பேரப்பிள்ளைகளின் இம்சையையும்
சுற்றங்களின் யோசனையையும்
தவிர்க்க முடியவில்லை

அறுபதாம் கல்யாணம் முடிந்து
அன்று இரவு முதலிரவுபோல்
அமர்க்களமான ஏற்பாடு
எதிர்க்க முடியவில்லை

அந்தவயதிலும் வெட்கப்படும்
அவள்முகம் பார்க்க ஆசையாய்
அறைக் கதவினைத் திறந்தவன்
அப்படியே அதிர்ந்து நிற்கிறேன்
எதிரே நிலைமை சரில்லை

கலைந்து கிடக்கிறது எனது
கடந்தகால நாட்குறிப்பேடுகள்
தலை கவிழ்ந்திருக்கும் அதுபோலவே
நிலைகுலைந்து இருக்கிறேன்
எதிர்பார்க்கவே இல்லை

அவள் கைகளில் விரிந்தநிலையில்
அந்த கருப்புவெள்ளைப் புகைப்படம்

நான்காக மடிக்கப்பட்டிருந்த படம்
நன்றாக சிறகுகள் விரித்து எழுந்து
என்மனப் பறவையோடு சேர்ந்து
பின்னோக்கிப் பறக்கிறது
பல்லாண்டுகள் கடக்கிறது

பன்னிரண்டு வயதினில்
பள்ளி செல்லுகையில்
பாதையினில் கண்டெடுத்தேன்
கோதையவளின் புகைப்படம்

கலையான முகம்பார்த்து
களையானது என்மனது
மலைத்து நின்ற எனக்குள்
கலைந்துவிட்ட மனதுக்குள்

கலைத்துவிட்டவள் எளிதாய்
நுழைந்து இடம் பிடித்துவிட்டாள்
சிலையாய் தடம் பதித்துவிட்டாள்
நிலையாய் இன்றுவரை இருந்துவிட்டாள்

அன்னாளில் மனதில்அவள் நுழைந்ததநாளே
பின்னாளில் எனது மணநாளாகிப்போனது
மணநாளெல்லாம் என்மனது உடைந்து
ரணகளமாகிப் போயிருக்கும்

நிழலைக் காதலித்து வருவதும்
நிஜத்திடம் மறைத்து வாழ்வதும்
மடத்தனமென அறிவுக்குத் தெரிந்தாலும்
மறந்துவிட மனதுக்கு முடியவில்லை

தன்னிரு கைக்குள் புதைந்திருந்த
புகைப்படத்துக்குள் மூழ்கியிருந்தவள் முன்
தண்டனையை ஏற்கத் தயாராக
மண்டியிட்டு தலைகுனிந்து நான்

"எனது குழந்தைப்பருவப் படம்
எப்படி கிடைத்தது உங்களுக்கு ?!"


ஒரேயொரு கேள்வி வந்துது அவளிடமிருந்து
ஓராயிரம் விடைகள் கிடைத்தது அதிலிருந்து
ஒருநொடியில் வெடித்துவந்தேன் தெளிவாய்
மறுபடியும் பிறந்துவிட்டேன் புதியதாய்

நிழல் இங்கே நிஜமாகிப்போனது !
நிழலும் நிஜமும் ஒன்றாகிப்போனது !
உண்மைக்காதலுக்கு என்றென்றும்
ஆண்டவன் அவனின் துணை இருக்கும் !!
அந்தம் முன் அதுதான் செயிக்கும் !!!

முதன்முதலாய் வெட்கத்தோடு நான் !
முதலிரவும் இன்றுதான் எங்களுக்கு !!



நன்றி:கரு/sms நண்பர்கள்