Friday, October 31, 2008

இடுக்கண் களையும் நட்பு ?


வறுமை சூழலில் நான்
வசதியாய் இருக்கிறார் நண்பர்
பிறந்தநாள் வாழ்த்துச் சொல்ல
அலைபேசியில்
அழைக்கும் போதெல்லாம்
அவரது மகள்தான்
மறுமுனையில்
"அப்பா குளித்துக்கொண்டிருக்கிறார்"

ஒரு வாரமாகவா ?
ஒன்றும் புரியவில்லை.
உண்மை ஏதேனும்
உங்களுக்குத் தெரிகிறதா ?

Tuesday, October 28, 2008

அம்மா


அம்மா
என் மனைவியை மருமகளாய்
ஏற்றுக்கொள்ளவே இல்லை
எனக்குத் தெரிந்து அவளிடம்
எதிர்மறையாகவே நடக்கிறாள்
ஏன் என்றே தெரியவில்லை

ஆனாலும் அம்மாவை
என்னால் எவரிடமும்
விட்டுக்கொடுக்க முடியவில்லை
என்னால் எப்படி முடியும்?

அம்மாவைப் பற்றி இந்த
அறியாத ஒன்றைவிட
தெரிந்தது நிறைய உண்டு
புரிந்தது இன்னும் உண்டு

முந்தா நாள் பார்த்திருந்தாலும்
இன்று புதியதாய் பார்த்ததுபோல
"மெலிஞ்சு போய்ட்டீயே அய்யா"
எனக் கேட்ப்பதில் உள்ள பாசம்
என்னுடன் இருந்து கவனிப்பவரை
கனிசமாய் காயப்படுத்தினாலும்
எனக்குப் புரியும்

சிகை கோதி
சாப்பிடவைக்கும்
சிரித்த முகத்துக்குப் பின்
குடிகார அப்பாவிடம்
அடுக்களையில்
வாங்கிய அடியும்
அடக்கிவைத்த அழுகையும்
எனக்குத் தெரியும்

தவிர்க்கமுடியாமல்
மஞ்சளை கழுத்தில் கட்டி
தாலி கழட்டி அடகு வைத்து
வட்டி மட்டும் மொத்தமாய் கட்டி
கலங்கி நொறுங்கி நின்றதும்
எனக்குத் தெரியும்

ஐம்பது ரூபாய்க்காகவும்
ஐந்து கிலோ அரிசிக்காகவும்
அறுவை சிகிச்சை செய்து
அறுபட்டுக் கிடந்ததும்
எனக்குத் தெரியும்

அந்த அரிசியில்
காய்ச்சிய கஞ்சியின் ருசி
இன்றுவரை என் தொண்டையில்
தொக்கி நிற்பதும்
எனக்கு மட்டுமே தெரியும்

பிறகு எப்படி முடியும்

Sunday, October 19, 2008

கலாம் !


மூழ்காதே உனக்குள்
முளைத்து வா வெளியே
புதிய உலகம் படைக்கலாம்

காத்திராமல் காலையில்
கிழக்கு நோக்கி நடந்து பார்
உலகின் முதல் சூரியன்
உனக்காக அங்கே காத்திருக்கலாம்

குட்டக் குட்டக் குனியாமல்
தடைப்பட்ட உரிமைகளை
தாழ்மையோடு கேட்டுப்பார்க்கலாம்

கிடைக்கவில்லையா கவலையில்லை
தலைநிமிர்த்தி தைரியமாய்
தடையுடைக்க போட்டுப்பார்க்கலாம்

அக்னிக்குஞ்சே உன் சிறகுகளை
அடக்கிவைக்காமல் விறித்து வா
முட்புதராய் மண்டிக்கிடக்கும்
மூட நம்பிக்கைகளை எரிக்கலாம்

கைபிடித்து அழைத்துச்செல்ல
நல்லவற்றை எடுத்துச்சொல்ல
தலைதட்டி நடத்திச்செல்ல
காத்திருக்கிறார் கலாம்

Saturday, October 18, 2008

சன நாயகம்:உள்ளே-வெளியே


வெளி நாட்டில் 10 வட்டிக்கு
100 கோடி கடன் வாங்கும்
நம்ம நாடு

அடுத்த நாட்டில் வறுமையென்றால்
80கோடி வட்டியில்லாமல்
கடனாய் கொடுக்கும்

பக்கத்து நாட்டில் பஞ்சமென்றால்
40கோடி கேள்விகேட்க்காமல்
இனாமாய் கொடுக்கும்

இங்கே சொந்த வீட்டையும்
எங்க சொத்துப் பத்தையும்
அடமானமா வச்சு
அம்பதாயிரம் கடனாக் கேட்டா

ஆயிரம் கேள்வி கேட்டு
அங்கே இங்கே அலையவிட்டு
சரியான ஆளாப் பார்த்து
சாமீனு கொடுன்னு கேட்டு
புரியாத சட்டம்சொல்லி சுத்திவிட்டு
கடைசியில் தலைய சொரிஞ்சிகிட்டு
கை நீட்டுதே நம்மகிட்டயே

Thursday, October 16, 2008

ஆன்-லைன் வர்த்தகம்?


கன்னியாக்குமாரியில்
இல்லாத பொருளுக்கு
காஷ்மீரிலிருந்து
பேரம் பேசி

விவசாயியிடம் விலைகுறைத்து
விநியோகத்தில் விலைகூட்டி
தரகர்கள் மட்டுமே தங்கள்
தரம் உயர்த்திக்கொண்டு போகும்

சீர்திருத்தம் என்ற பெயரில்
சாமானியர்களின் வாழ்க்கையை
சீரழித்துக்கொண்டிருக்கும் அது

ஆன்-லைன் வர்த்தகமா?
ஆப்-செய்யும் வர்த்தகமா! இல்லை
ஆப்பு வைக்கும் வர்த்தகமா!!

Wednesday, October 15, 2008

மாடி வீட்டு ஏழைகள்


சுழற்றியடித்த
சூறாவளி மழை
சிறுசிறு இழையாய் இன்னும்
தூறிக்கொண்டே இருக்கிறது

தாத்தாவின் காவலிலிருந்து
தப்பிவந்து தண்ணீருக்குள்
குட்டிக் கரணம் அடிக்கும்
குட்டித் தம்பிகள்

சேறும் சகதியும் காலுக்கு
செறுப்பாய் மாற கூட்டு சேர்ந்து
கும்மாளம் போடும்
குட்டிப் பாப்பாக்கள்

குதித்து வரும் தண்ணீருக்கு
குறுக்கே மணலில் அணைகட்டி
பக்கத்து வீட்டுப் பாட்டிகளோடு
பகை இழுக்கும் அக்காமார்கள்

கணக்கு நோட்டுகளை எல்லாம்
கப்பலாய் மாற்றி தெருவில் ஓடவிட்டு
அப்பாவின் அடிக்கு மாட்டாமல்
தப்பி ஒடும் அண்ணன்மார்கள்

பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள்
பால்கனியிலிருந்து ஏக்கத்தோடு
ஆரோக்கியம் சுகாதாரம் என்ற
ஆகாத பெயர் சொல்லி
அனைத்தையும் இழந்த
அந்த மாடிவீட்டுக் குழந்தைகள்

Monday, October 13, 2008

அக்கரைப் பச்சை


கொடுமையான நீண்ட தனிமை
கடுமையாய் தகித்தது
இடையில் நீ கிடைத்தாய்
இனிமை புகுந்தது
பிறகுதான் புரிந்தது
அதுவே சிறந்தது

தாமஸ் ஆல்வா எடிசனுக்கு இந்தியஅஞ்சலி


வருடத்துக்கு ஒருநாளில்
அவரின் பிறந்த நாளில்
இரண்டு நிமிடம் விளக்கு அணைத்து
இருளில் இருந்து
அஞ்சலி செலுத்துகிறார்கள்
அமெரிக்காவில்

வருடத்துக்கு இரண்டு நிமிடமல்ல
தினமும் ஆறரை மணிநேரம்
அமெரிக்கருக்கு
அஞ்சலி செலுத்துகிறோம்
இந்தியாவில்

பெறுமை கொள்வோம்.!

Sunday, October 12, 2008

அவிழாத முடிச்சு


எதிர்பார்த்து ஏமாந்த
மருமகள்
மாமியார் ஆனவுடன்
மருமகளின்
எதிர்பார்ப்பு புரியவில்லை
இது ஏன்
என்று தெரியவில்லை

ஏன்?


நேற்று போட்ட
தார்சாலை
நாளை மழைக்குத்
தாங்காது என்றாலும்
இன்று தோரணம் கட்ட
யாரோ தோண்டும்போது
வலிக்கிறதே
மனதில்.

கோழி இறகு-சொர்க்கத்தின் சாவி


பலநாள் யோசித்து
பதுங்கி இருந்து
திட்டம் போட்டு
தேர்வு செய்து
விரட்டிப் பிடித்து
இறகு பறித்து
தேவை இல்லாத
பாகம் விடுத்து
ஓரம் அமர்ந்து
காது நுழைத்தால்
அட! அட!!
தெரியுதே சொர்க்கம்!!!

வருங்காலத் தூண்கள் ?


ஒரு ரூபாய் அரிசி வாங்க
பை தூக்கி ரேசனுக்குப் போனால்
கூடவே சேர்ந்து போகுது மானமே.

ஓப்பனிங் சோ பாக்க
முந்தா நாள் ராத்திரியிலிருந்து
வாசலில் வரிசையில் நின்றாலும்
டிக்கட் கிடைத்தால் தான் அனந்தமே.

மோரு வித்து அம்மா
சேத்து வச்ச காசில்
யாருக்கும் தெரியாமல்
கை வைக்கும் போது அது
தப்புன்னே தோணலியே

அந்த காசில் பீரு வாங்கி
எல்லோரும் சேந்து குடிக்கும்போது
கடைசியில் கொஞ்சம் குறையும்போது
கேவலமாய்த் தோணுதே

நெஞ்சுவலி அப்பாவுடன்
கொஞ்சநேரம் கூட இருந்து
மருந்துகொடுத்துப் பார்க்க
ஆறுதலாய் உக்காந்து பேச
கொஞ்சங்கூட நேரமில்லியே

வெளிநாட்டுத் தூதரக
வாசலில் நாக்கு வரள
விசாவுக்காக நாள்கணக்கில்
வரிசையில் நின்னாலும்
நேரம் போனதே தெரியலியே
காத்திருக்கும் உண்ர்வே வரலியே

என்ன ஆயிற்று நம்
வருங்காலத் தூண்களுக்கு?

Tuesday, October 7, 2008

இலவச அழைப்பு


போக்குவரத்து நெரிசலில்,
விளம்பரப் பலகையிலிருந்து
அழைத்துக்கொண்டே
இருக்கிறாள் அவள்.
தன்னை மட்டுமே
அழைப்பதாய் எண்ணி,
வாய் பிளந்து,
வைத்த கண் எடுக்காது,
தொடர்ந்து செல்லும்
வாகன ஓட்டிகள்
சீக்கிரமே ' போய்' சேருகிறார்கள்
சம்பந்தமே இல்லாதவர்களையும்
சேர்த்துக்கொண்டு.

Monday, October 6, 2008

நியாயம் வேணும்-2


ஊரு பெரிசுங்க ஒண்ணா சேர்ந்து
ஆயிரமாய் செலவு செஞ்சி
வெளிஊர சுத்திட்டு வந்து
சூப்பர் டூருன்னு சொல்ராங்க

வயசு பசங்க நாங்க
ஒரு செலவும் செய்யாம
உள் ஊர சுத்திவந்தா
தண்டச் சோறுன்னு சொல்ராங்க

நீங்களே வந்து இந்த
அநியாயத்த கேளுங்க

என்ன தான் நடக்கிறது?


சாமானியர்கள் சாப்பிடும்
.பெருநகர சிற்றுண்டிச் சாலையில்

சாம்பாரில் குளித்த இட்லி,வடையை
.கரண்டி கொண்டு வெட்டி

சாதனையாக சாப்பிட்ட பின் வரும்
.தோசையை கை கொண்டு

சாப்பிடுவதை குழம்பிப்போய்
.பார்க்கிறான் படிக்காத பாமரன்.

சரிதானா இது? முதலிலேயே
.செய்து இருக்கலாமே இதை !

உங்களுக்காவது தெரியுமா?


முகம் கண்டு நேராக
ஒருமுறை பார்க்காதவள்,
நான் கடந்தவுடன்

கண் கொண்டு
எழுதிய கவிதைகள்
ஒரு ஆயிரம் என் முதுகில்.

படிக்க வழியில்லை
பரிதவிக்கிறேன்,
தெரிந்தால் சொல்லுங்களேன்
காத்திருக்கிறேன்.

Sunday, October 5, 2008

அப்பா எப்படி மாறிப்போனார்?


பணத்தைக் கொட்டி வளர்த்த அப்பா
பாசத்தைக் காட்டி ஆளாக்கிய அப்பா
பாதியிலேயே மறைந்துபோனார்

பரிதவித்து பாரினிலிருந்து
பாசத்தோடு பாவி மகன்
பறந்து வந்தான் பணத்தோடு

பரிவோடு துக்கம் விசாரிக்கும்
பங்காளிகளிடம் கலக்கத்தோடு கேட்டான்

''--'பாடி' எப்போ எடுத்தீங்க ?''

Saturday, October 4, 2008

சிக்னலில் தெரிந்த கறுப்பு நிறம்


பச்சை விளக்குக்காக சந்திப்பில்
பல நினைவோடு காத்திருக்கையில்

'அண்ணா' என்ற தங்கையின்
அவலக்குரல் கேட்டு

உலகமே நொடியில்
ஊஞ்சலில் சுற்றியதுபோல்

முன்னால் உள்ளதெல்லாம்
மஞ்சளாய்த் தெரிய

திடுக்கிட்டுத் தடுமாறி
திரும்பிப் பார்த்தால்

பிச்சைக் கேட்டு கை நீட்டி
பச்சிளங்குழந்தையோடு சிறுமி

நல்லவேளை அது தங்கையில்லை
நிம்மதியாய் மூச்சுவிட்டு

'இந்த சமூகத்தின்
இன்றைய நிலையை மாற்றி

ஒருநாள் ஏழ்மையை
ஒழித்தே தீரவேண்டும்' என்ற

சிவப்பு சிந்தனையோடு
சில்லரையைத் தேடும்போது

கையில் பட்டது
பையில் உள்ள பணமும்

பின்னால் உள்ள தர
இடமில்லாத கறுப்பு மனமும்.

Friday, October 3, 2008

முடி இழந்த மன்னர்கள்


சிறுகச் சிறுகச் சேர்த்து
சிறகு பொத்தி பாதுகாத்து

உணர்வுகளால் கட்டிக்காத்து
உருவாக்கிய உலகிலிருந்து

உபயோகமில்லாப் பொருளாக
உறவுகளால் உதறப்பட்டு

வீதியில் விதியை நொந்து
கதிமுடிந்த பின்பும் எதிர்காலம் தேடி

போகும்திசை தெரியாமல்
போகிறர்கள் அந்த
போக்கத்தப் பெரியவர்கள்