Thursday, September 5, 2013

பாச மலர் எல்லாம் .....பத்தடிக்குப் பின்னால் தான் .......!


ஊர்சுற்றியின் பிதற்றல்கள் 10


ஒரு சின்ன ப்ளாஷ் பேக் : எங்க வீட்டுல நான் 5 வருசத்துக்கு அப்புறமாத்தான் பிறந்தேன்..என் தம்பி அடுத்த 5வது வருசத்துல ... நாங்க 2 பேர்தான் ........

-------------------------------------------------------------

ஒரு 10 வருசத்துக்குப் பிறகு ..கிராமத்தில் / சித்திக்குச் சொந்த ஊர் .. கோவில் கொடை ... வெள்ளை (வாடகை) அம்பாசிடர்ல போய் எறங்கினோம் .. டேப் ரெக்கார்டர் , முன் சீட்டுல / பின் சீட்டுக்கு ரெண்டு பக்கமும் ஃபேன் என்று ஹைடெக் கார் அது ... கோவிலுக்கு வந்த நண்டு சுண்டுங்க கூட்டத்தில் முக்கால்வாசி காரைச் சுத்தித்தான் J.. எல்லாம் சிறப்பாக முடிந்து ஊர் திரும்ப..காரில் ஏறி உட்கார்ந்தவுடன் தொடங்கியது புது சிக்கல் ... சித்தியின் மகள் ..செலவ லெட்சுமி.. ஒரு 1.75 வயசிருக்கும் ...போட்டிருந்த ஜட்டியோடு வண்டியின் முன்னே.. இந்தப்பக்கத்துத் தெருவுக்கும் அந்தப்பக்கத்துத் தெருவுக்கும் உருண்டு புருண்டு ஒரே அழுகை

“ நானும் போவேன் “ ..

யார் பிடித்தும் உருளல் நிற்கவில்லை. அதற்கு மேல்

என்னாலும் தாங்க முடியவில்லை ...

இறங்கி ஓடிப்போய்த் தூக்கிக் கொண்டேன் ..

“ நாங்க கொண்டுபோறோம் “

“எய்யா ..என்ன திடீர்ன்னு இப்பிடி சொல்லுத”

“பின்னே..புள்ள இப்டி கெடந்து அழுவுது ..அவ்ளோதான் .. நீங்க ஒரு வாரம் கழிச்சு வந்து தூக்கீட்டுப்போங்க “

அன்னிக்கு வந்தவதான் ..அப்பிடியே எங்க வீட்டு மகாலெட்சுமி ஆகிப்போனாள் .. இப்போ எங்க வீட்டுல நாங்க 3 பேரு

....................................................

வேலை முடிந்து வீட்டுக்குள் நுழைந்தேன் ..ஏற்கனவே உள்ளே ஒரு பெருங்கூட்டம் .. புரியவில்லை ..கொஞ்சம் குழப்பமாக சாந்தியிடம்

“என்ன?”

“பொண்ணு கேட்டு வந்திருக்காங்க “

‘யாருக்கு “

“5வது தெரு குமார் வீட்டுல இருந்து “

“அதுசரி ..அதுக்கு இங்கே என்னாக் கூட்டம்”

“அட..லெட்சுமியத்தான் கேட்டு வந்திருக்காங்க “

எனக்கு சுர்ர்ர்ர்ர்ருன்னு எங்கோ பற்றியது .. ’அவளுக்கா!!!!!! ..சின்னப்புள்ளை.. இன்னும் படிக்க வேணாமா ... என்ன சின்னப் புள்ளத்தனமா வந்து உக்காந்திருக்குக இந்தப் பெரிசுக எல்லாம் ..’

“அதெல்லாம் ஒண்ணும் இப்போ..........”

நான் பேசும் போதே எனவாய் பொத்தப்பட்ட்து ..

“போய் அங்கே நடுவுல உக்காருங்க ... நல்ல சம்பந்தம் ..இங்கே பக்கத்துல வேறு ..அப்பா. அம்மா எல்லாரும் சரீன்னுட்டாங்க .. நல்ல புள்ளையா அடக்கமா அங்கே சிரிச்சுக்கிட்டே தலையாட்டீட்டு வ்ந்திடுங்க “

’அட..இவ்ளோதானா நம்ம வெய்ட்டு ... எல்லாம் நீங்கதான் நீங்கதான்ன்னு சொல்லுவாங்க...ஆனா எல்லாம் முடிச்சு வச்சிட்டு... கடைசீல சிக்னலுக்குத் தலையாட்டத்தான் நாம்பளா L’ ரைட்டு .. பாத்துக்குகிடுவோம்’

கூடத்தில் கேலியும் கும்மாளமுமாக இருக்க ..வேகமாய்ப் போய் நடுவில் உட்கார்ந்தேன்..

“கடைசீல பக்கத்துலயே மாபளைய புடிச்சிட்டீரேய்யா ”

- யாரு நானா?? ஏன் சொல்ல மாட்டீங்க !

”எல்லாம் சரி.. மாப்ள வீட்டுல அவங்க மனசுக்கு மேலேயே செய்து விடுகிறேன் .. ஆனால் ...”

”என்னய்யா ஆனால்”?””’ “

”ஒரே ஒரு கண்டிசன் ”

”என்னது அது ”

”எந்தங்கச்சி இங்கே எப்டி இருந்தாளோ ...அதேப் போல அங்கேயும் வச்சிருக்கணும் ... அவ்ளோதான் ..எதாவது மாறிச்சுன்னா ..அப்புறம் பாத்த்துக்கோங்க .. என்னைபத்தி உங்களுக்கு நல்லாத் தெரியும் .... சொல்லீட்டேன் “

”இதெல்லாமா கண்டிசன் ..அதெல்லாம் அப்டித்தான் நல்லாவே பார்த்துப்பாங்க ”

”அப்போ சரி ...”

கிளம்பும் போது மாப்பிள்ளை மெதுவாக என்னிடம் வந்தார்

“ அது வந்து ..அவ இங்கே எப்டி இருந்தான்னு சொன்னீங்கன்னா...”

” அதையும் சொல்லியாத் தருவோம் ... அதெல்லாம் விசாரிச்சுத் தெரிஞ்சுக்கோங்கன்னேன் “

”போய்ட்டு வாரோம்” ந்னு சொல்லிப் பறந்தே விட்டார் .

கல்யாணம் ..

ஒருபக்க அழைப்பிதழுக்கு , 40பக்க உறவினர் பட்டியல் இலவச இணைப்பு. இதுல இனிசியல் மாறிப்போச்சு, படிப்பு போடல, பேரு கீழே வந்திருச்சு, கமா போடல , புள்ளி வைக்கலன்னு ஒரு பெரிய பஞ்சாயத்து .. வழக்கமான கல்யாணக் கலாட்டாக்கள் களேபரங்கள் ..

எல்லாம் இனிதே முடிந்து ( நான் பட்டப் பாடு எனக்கேத் தெரியும் ..அது தனியான புலம்பலாக வரும் ) .. சாயங்காலம் அவங்க வீட்டுல கொண்டு விட்டுவிட்டு (... 3 தெரு தள்ளி இருக்கும் அவங்க வீட்டு மாடியில இருந்து போன் இல்லாமலேயே “ஹலோ” ந்னு கூப்பிட்டா ., இங்கிருந்து

“ஹலோ நீங்க யாரு பேசரது ”ன்னு கேக்கும் அளவுக்குப் பக்கம் ..)

”மாப்ளே... கண்டிசன்..கண்டிசன்..பாத்துக்கோங்க” ந்னு சிரிச்சுக்கிட்டே ஒரு எச்சரிக்கை அறிக்கையையும் கொடுத்துட்டு, வீட்டுக்கு வந்து நிம்மதியா ஒரு காப்பிக் குடிச்சு முடிக்கல்ல ..கோவைல இருந்து போன்

“காலைல ஒரு அவரச மீட்டிங்க்.. நீங்க உடனே கிளம்பி வந்தீங்கன்னா நல்லா இருக்கும் “

’ஆஹா..கொஞ்சம் தூங்கலாமுன்னு பாத்தேனய்யா’

இரவோடு இரவாக கிளம்பியாகி விட்ட்து

’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’

3 நாட்கள்... வேலை பரபரப்பில் வீடு மறந்தே போனது ... வேலை முடித்து கோவையில் கிளம்பி தூத்துக்குடி வர மாலை மணி 5 ஆகிப்போனது ..

3வது தெரு நெருங்கும்போதுதான்.. அட.. ..தங்கையின் புதுவீடு .. வாசலில் ‘சர்க்’ எனக் பிரேக் அடித்து நின்றேன் ..

‘என்ன செய்யலாம் இறங்கி உள்ளே போவோமா? .. மொதமொதல்ல போவதற்கு ஏதாவது முறை இருந்தால்? ..அதனால் வீட்டுக்குப் போய்ட்டு சாந்தி, புள்ளைங்களொட வருவோமா ...??

யோசித்துக் கொண்டு நிற்கையிலேயே வீட்டின் கதவு வேகமாகத் திறக்க “அண்ணே” என்று சத்தமாக அழைத்தபடியே லெட்சுமி ஓடிவந்தாள் ... நான் திடுக்கிட .. பின்னாலேயே மாப்பிள்ளையும் ஓடி வர.. வந்தவள் என் கையைப் பிடித்துக் கொண்டு கண்கலங்கி அழ ஆரம்பிக்க ... எனக்கு மண்ண்டக்குள் ரத்தம் சூடாகப் பாய்ந்தது ..

சரட்டென வண்டிக் கதவைத் திறந்தேன் .(ஸ்லைடிங் டோர்)

“ஏறு உள்ள”

மாப்பிள்ளையைப் பார்த்தேன் ..

“என்ன செல்லி அனுப்பி வச்சேன் அவளை .. புள்ளைய அழவச்சுப் பாத்துக் கிட்டு இருக்கீங்களோ”

பின்னாலயே மாப்பிள்லையின் அப்பாவும் ஆச்சியும் வந்து சேர , எனக்கு கோபம் எல்லைக் கடந்தது

“எல்லாரும் உள்ளேதான் இருந்தீங்களா .. நல்லா இருக்குங்க “

லெட்சுமி இன்னும் தயங்கி நிற்க

“இப்போ ஏறப் போறியா ..இல்லையா”

நான் போட்ட சத்தத்தில் அக்கம்பக்கம் எல்லா வீட்டிலிருந்தும் ஆட்கள் வெளியே வர ...

“மச்சான் ..ஏன் கோவப் படுறீங்க ..இருங்க”

மாப்பிள்ளை ஏதோ சொல்ல வர ...

”எதுன்னாலும் எங்கே பேசனுமோ ..அங்கே வச்சுப் பேசிப்போம்”

சொல்லீட்டு நான் கதவை மூடி வண்டியைக் கிளப்பிய வேகத்தில் தெருவே கலங்கிப் போனது ..

வண்டி வீட்டிற்கு வருவதற்குள் , சாந்தி, அம்மா, அப்பா எல்லாம் வாசலுக்கு வந்து காத்து நிற்க ( அதுக்குள்ல்ள செய்தி வந்திடுச்சா இங்கே !)...

வேகமாக நிறுத்தி, கதவைதிறந்து “போ உள்ளே” என்றேன் ..

இறங்கியவள் “அண்ணீஈஈ” என்று அலறியபடியே ஓட ..

இன்னும் வெறியானேன்..

‘எப்படியும் அவங்க ஆளுங்க பேசுவதற்கு வரப்போறாங்க .. நாம் நம்ம ஆளுங்களுக்குச் சொல்லி விடுவோமா ..சே.சே வேண்டாம் ..எத்தனை பேரு வந்திரப்போறாங்க ..தனியாவே மோதிப் பாத்திருவோம் ’

வீட்டுக்குள் போகாமல் நான் வெளியவே காத்திருக்க ..எதிர்பாத்தது போலவே அவர்கள் ஒரு பத்து இருபதுபேர் ஆணும் பெண்ணுமாக கூட்டமாக வந்தார்கள் ..

ஒரு பெரிசு ஆரம்பித்தது

“என்ன தம்பி”

”என்ன என்ன தம்பி”

”ஏன் இவ்ளோ கோவம் ”

”என்ன ஏன் இவ்ளோ கோவம் ”

”பொறுமையா இருங்க ”

”என்ன என்ன பொறுமையா இருங்க”

”ஏங்க !”

இது சாந்தியின் குரலாச்சே!

திரும்பிப் பார்க்க ...வீட்டு வாசலில் எல்லாரும் குசுகூவென்னு பேசியபடியும் சிரித்துக் கொண்டும் நிறக ...எனக்கு இங்கே கொந்தளிப்பு அதிகமானது ..

’மனுசன் தனியா நின்னு எத்தனை பேரை சமாளிச்சிக்கிட்டு இருக்கோம் ..அங்கே என்னா இளிப்பானி வேண்டிக் கெடக்குது ’

”என்னா இப்பொ”

”இங்க வாங்க ”

”பேசிக்கிட்டு இருக்கேன்ல்ல .. கொஞ்ச நேரம் இரு”

”அட ..ரொம்பக் குதிக்காம இங்கே வாரீங்களா இல்லையா ”

ஆஹ்ஹா ..இது டேஞ்சரான சிக்னலாச்சே... கோவத்துடன் வந்தவங்களை முறைத்தபடியே ... அதே வேகத்தில் திரும்பி வந்து சாந்தியின் முன் நின்றேன்

”இப்போ என்ன சொல்லித் தொலை ”

”ஆங் .. பன்றதையும் பண்ணிப்புட்டு பேச்சப் பாருங்க ..நல்லா பேசிக்கிட்டு இருந்த புள்ளைய தூக்கி, வண்டிக்குள்ள அடைச்சுத் தூக்கீட்டு வந்துட்டு, .. இங்கே வந்தவங்க கிட்டே ஆட்டம் போடுறீங்க ”

’தூக்கீட்டு வந்தேனா ??????????’

அப்போத்தான் லெட்சுமியப் பார்த்தேன் ..அவள் வாயைப் பொத்திக்கொண்டு சிரித்தபடி நிறக ..’என்னய்யா நடக்குது இங்கே ...’

”அவ அழுதுகிட்டே ஓடி வந்தாளே எங்கிட்ட ..”

”உங்க வண்டி வந்து நின்னதைப் பார்த்திருக்கா ..உடனே காப்பிப் போட எடுத்துவச்சிட்டு வந்து பார்த்தா.. நீங்க இன்னும் இறங்காம வண்டியிலயே இருந்திருக்கீங்க.. அட்டா! அண்ணனை வான்னு கூப்பிட யாரும் வரலயேன்னு அண்ணன் நெனைச்சிக்கிட்டு உக்காந்திருக்கோன்னு பதறிப்போயி ஓடி வந்திருக்கா ... 3 நாளு கழிச்சுப் பாத்தவுடன் கண்ணு கலங்கி இருக்கு .. நீங்க என்னடான்னா வான்னு சொல்ல வந்தவளை வந்தளை வண்டிக்குள்ள தள்ளி இங்கே கொண்டு வந்துட்டீங்க ...

’ஆஹ்ஹ்ஹ்ஹா ..அவசரத்துல நாமதான் தப்புப் பண்ணீட்டமோ ..’

மெல்லத் திரும்பிப் பார்க்க ..தெருவே என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது ....

பி.கு:

1) ஒரு வாரத்துக்கு வெளியில் தலைகாட்ட முடியவில்லை .. நண்டு சுண்டுகள் எல்லாம் என்னைப் பார்த்தவுடன் “மாமாஆஆஆ” ந்னு கண்ணைக் கசக்கிய படியே ஓடி வந்து .என்னைத் தலைதெறிக்க ஓட வைத்தன

2) குடும்ப நிகழ்வுகளில் இதுபோன்ற சூழலில் லெட்சுமி தவறாமல் சொல்வது ”எங்க அண்ணே முன்னால யாரும் அழ மட்டும் செஞ்சிறாதீக”

...