Wednesday, March 31, 2010

எங்கே எனது சுவடுகள்......!காலத்தோடு போட்டியிட்டக்
கடுமையான பயணத்தின் முடிவில்
களைப்படைந்த வேளையிலும்;
கடமைகளை முடித்துவிட்ட
கர்வத்துடன் தலைநிமிர்ந்தே
கடந்து வந்தபாதையில்
கண்ணுக்கெட்டும் தூரம்வரை
கண்பதித்துத் தேடுகிறேன்; எனது
கடந்தகால சாதனையின்
காலடித் தடங்களை ...

கதிகலங்கிப் போகிறேன் .......

எங்குமே பதியவில்லை
எனது பாதத்தின் சுவடுகள்கூட ........

எதையும் விடாமல்
என்னுடனேயே
எடுத்து வந்திருக்கிறேன்
எனக்கேத் தெரியாமல்
எனது காலணிக்குள் தேக்கியே ......

.

Monday, March 29, 2010

இருக்குமோ ..??!!!!


அதிர்ந்துபோய் இருக்கிறேன்

அதிகாலையிலிருந்து நடப்பதெல்லாம்
அதிசயமாகவே இருக்கிறது

அவதியில் தொடங்கி
அசதியில் முடியும் நாள் இன்று ...
அற்புதமாய்த் தொடங்கி
அமர்களமாய் நடந்துகொண்டிருக்கிறது

ஆசீர்வதிக்கப் பட்டிருக்கிறேனா நான் ???

சரியான அளவில் எடைகாட்டிய
நியாயவிலைக்கடைத் தராசு

வரும்வரைக் காத்திருந்து
அலுவலக வாசலில் இறக்கிச்
சென்ற நகரப் பேருந்து

முகம்சுளிக்காமல் இருக்கும்
இடம்வரை வந்து
சில்லரை தந்த நடத்துனர்

தவறாய் சாலைகடந்த என்னை
புன்சிரிப்போடு கடந்துபோன
‘ஆட்டோ’ ஓட்டுனர்

வரும்வாகனம் நிறுத்தி என்னைக்
கடந்துபோகச் சொன்ன
போக்குவரத்துக் காவலர்

தாமதமத்தால் பயந்து
ஒதுங்கிய என்னை
தானே அழைத்து
வணக்கம் சொன்ன மேலாளர்

இடைவேளையில்
உணவகத்தில் பணம்கொடுத்த
பக்கமிருந்த கருமி நண்பன்

மாலையில் மேசைமேல்
காத்திருந்தது எதிரேபாராத
பதவி உயர்வு உத்தரவும்,
நெடு நாள் காத்திருந்த
கடனொப்புதல் ஆணையும்,

அதிர்ந்துபோய் இருக்கிறேன்....

என்ன ஆயிற்று எனக்கு ??
எப்படி இதெல்லாம் !!

நெற்றியை அழுத்தியபடி
உறைந்துபோய் இருக்கிறேன் ...

அப்போதுதான் கவனிக்கிறேன் ....
எனது மோதிர விரலில்
சுற்றியபடி இருந்தது
அவளின் உதிர்ந்த தலைமுடி ஒன்று ...

ஒருவேளை...............

இருக்குமோ !!!!!!!????????

Saturday, March 20, 2010

என்னை சோதிக்க எனக்கு உதவுங்கள் .....அன்பு உள்ளங்களுக்கு,
உங்களின் ஆசியுடன் , கிடைத்த ஊக்கத்துடன் திருக்குறளுக்கு
விளக்கவுரையாக எளிய வெண்பாவில் 1330+ புதிய குறள்கள் அமைத்திருக்கிறேன் .
அதில் உள்ள குறைகளைக் களையவேண்டும் .
அதற்கு தங்களின் உதவி தேவை .

ஏதாவது ஒருகுறளுக்கு விளக்கம் கேளுங்கள் .
நான் தரும் விளக்கக் குறள் பொருந்திவருகிறதா எளிமையாக இருக்கிறதா என சரிபார்த்து , என்னை திருத்துங்கள் .

ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன்

முடிந்த அளவுக்கு விளக்கம்தரவும் முயல்வேன்

காத்திருக்கிறேன் உங்களின் கணைகளுக்காக :)

Wednesday, March 17, 2010

சம்பந்தமில்லாத நான்.......


கடும் கோபத்தில்
கட்டுக்கடங்கா தேனீக்கள்
கூட்டமாய் என்னை நோக்கி....

நடக்கபோகும் கொடுமை அறிந்து
கடும் நடுக்கத்தில் நான்........

நிகழ்ந்ததற்குக் காரணம்
நானில்லை....

ஆனாலும்

நிழலுக்கு ஒதுங்கிய இடத்தில்
நிகழப் போவதற்கு இலக்காகி
நிற்கப் போகிறேன் நான் .....

அமைதியான தேன்கூட்டை
ஆரவாரமாய்க் கலைத்துவிட்டு
அதிவேகமாய் வந்தென் பின்
பதுங்கிக் கொள்கிறான் ஒருவன்

வெகுண்டெழுந்த தேனீக்கள் முன்
நான் மட்டுமே நிற்கிறேன் .......

ஊட்டும் தேனைக் கொடுக்கும்
என்றாலும் அதற்கு....
கொட்டும் விசக் கொடுக்கும்
உண்டென்றுத் தெரியும் எனக்கு

தப்பிக்க வழியில்லை
அதற்கான காலமுமில்லை

கண்களை மூடியே
நிறைவேறாக் கனவுகளை
மனதுக்குள் ஓடவிட்டே
நடப்பதை ஏற்கத் தயாராகிறேன்

அதேவேளையில்....
நான் கவனிக்காத நிகழ்வாய்

எனது தலைக்கு
மேலுள்ள கிளையில்
வாசனையோடு பூக்கள்
பூக்கத் தொடங்கி இருந்தது .....


.

Monday, March 15, 2010

புயல் எச்சரிக்கைக் கொடி ....!முயலாய்த் துள்ளும்
கோலமயில் அவளின்
கயல்விழிக்குள் சுழலும்
மையலின் மய்யமாகி இருக்கிறேன்

இதோ.....
புயல் கடக்கப் போகும்
காயலாகப் போகிறேன்

உண்மையை உணர்ந்தே
என்னைப் பற்றிய
உண்மை நிலைய
எனக்கு அறிவிக்க
எண் குறியிட்ட
எச்சரிக்கைக் கொடியை
ஏற்றிவைக்கிறேன்

எனக்குள்........

.

Thursday, March 11, 2010

பின்னிரவில்...... !


முன்னிரவு வானத்தில்
கண்ணில் படுவதையெல்லாம்
கண்ணுறங்கும் முன்
பாடிவைத்தனர் புலவர்கள்...
கேட்டதைக் கண்டும்
ரசித்தனர் புரவலர்கள்.....

நிலவும் நிலவுசார்ந்த மேகமும்
உலகம்புகழ உயர்ந்துவிட்டன

உங்களுக்குத் தெரியுமா ?

பின்னிரவு வானத்தில்
நிலவினைக்காட்டிலும்
அதிசயங்கள் பல உண்டு

மின்னியபடியே நகரும்
நுண்ணிய நட்சத்திரங்கள் ....
தாக்குவதுபோல வேடிக்கையாய்ப்
பயமுறுத்தும் எரிகற்கள்.......
யாரோ வரையப்போகும்
கோலத்திற்கான புள்ளிகளாய்க்
காத்திருக்கும் விண்மீன்கள்.....
வர்ணசாலமும் காட்டும்
நிர்மலமான மேகங்கள்.......

கவிஞனும் காண்பவனும்
உறங்கிப்போவதால்
கவின்மிகு அற்புதங்களை
வெளியுலம் அறியவில்லை

ஆனாலும்.....

நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது
தினமும் அந்த அதிசயங்கள்.....
என்றாவது ஒருநாள்
எப்படியும் கிடைக்கும்
அங்கீகாரம் என்ற நம்பிக்கையில்...

என்னைப்போலவே...........


.