Showing posts with label அம்மா. Show all posts
Showing posts with label அம்மா. Show all posts

Sunday, September 16, 2012

க(தை)விதை : நனையுதே மாராப்பு ..!

வாழ்க உறவுகள் ....
மிக நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட இடைவெளிக்குப்பின் க(தை)விதை சொல்ல வந்திருக்கிறேன்..
மரபில் / குறளில் கொஞ்சம் மூழ்கிப் போனதால் .... இதிலிருந்து விலகியே இருந்திருக்கிறேன் .....இது மீண்டும் இன்று எனக்கு நினைவுக்கு வந்தது உங்களின் கெட்ட நேரமாக இருக்கலாம் .......அனுபவியுங்கள் ...:))


பச்ச ஒடம்புக்காரீ’ன்னு
பவுசாத்தான் படுக்க முடியுமா ..?

கொளுந்தியாளப் போல நானும்
கெழுத்தியப்போலக் கெடக்க முடியுமா ..?

சாவலை எழுப்பி வெரட்டி
சாலையைக் கழுவி பொரட்டி

தூக்கத்தை மொத்தமா வெலக்கி
முத்தத்தை சத்தமில்லாம ஒதுக்கி
தூக்கை சுத்தப்பத்தமாத் தொலக்கி

நீச்சத் தண்ணிய ஊத்திக்கிட்டு
பச்சப் புள்ளயத் தூக்கிக்கிட்டு

எட்டுபோட்டு நடக்கோணும்
காட்ட மேட்டக் கடக்கோணும்
தோட்டம் போயிக் கெடக்கோணும்......

பச்சப்புள்ளய அமத்திப்போட்டு
புல்லறுக்கப் போகோணும்

கஞ்சித்தண்ணி கண்ணுலபட
நெஞ்சிமுட்ட சொமக்கோணும்

ம்ம்ம்ம்ம்...............


நட்ட நடு சாமத்துல
கெட்ட சுடும் விடிகாலப்
பொழப்பைப் பத்துன நெனப்பால
அரைக்கோழித் தூக்கத்துல
பொரண்டு நான் படுக்கையில

பச்சப்புள்ள ஏங்கியழும்
உச்ச சத்தம் கேட்டுத்தான்

அதறிப் பதறி எந்திரிச்சேன்
அவசரமாத்தான் பாத்துவச்சேன்

ஒதட்டுப்பால் குடிச்சுக்கிட்டு
எதமாத்தான் தூங்குதானே என்ராசா ...

நெலம தெரியாம எரிஞ்ச
நாதாரி வயித்த அணைக்க
குண்டு சொம்புத் தண்ணிய
மொண்டு ஊத்துப் போகையில

ஏதோ உறுத்துன்னு
என்னான்னு நான்பாக்க...

பசிச்ச என்வயிறு
கீழே வறண்டுகெடக்க
எங்கோ பசிச்ச வயிறுக்காக
இங்கே நனைஞ்சுக் கெடக்குது
என்னோட மாராப்பு..........!

Monday, March 21, 2011

சில சிங்க(X) நாய்கள்................

அன்னையின் பாதத்தில் சமர்ப்பணம் ...22/03/11....

(செய்தி :அன்னையின் அஸ்தி வங்கக்கடலில் கரைக்கப் படுகிறது)

சில நடுநிசி(X) நாய்கள் :

X-Files-01-june[1].gifxfiles.gifX-Files-01-june[1].gif

ட்ராய்(TROY)ன் போர்தர்மத்தை

நாய்களிடம் எதிர்பார்த்து

தாய்மணணில் பிடியை

தற்காலிகமாய் இழந்து

பொய்யாகிப் போனது போன்ற

மாயத் தோற்றத்தின்பின்

அரங்கேற மறைந்திருக்கிறது

பல்லாயிர ரத்த சரித்திரம்

நாளைய உலகம்

போற்றக் காத்திருக்கும்

நிகழ்கால யுத்த சரித்திரம் ....!


அதீத நம்பிக்கையோடு

வெற்றியை நிர்ணயித்து

தேதியை நிச்சயித்து

சேதியை அறிவித்தும்........

பெரும் கண்டங்கள் துணயோடு

வருங்கால வல்லரசுகள் இணையோடு

வான்வெளியை வளைத்துப் பிடித்தும்

கடற்பரப்பை வலைக்குள் அடைத்தும்.....


கைப்பற்ற வேண்டிய இலக்கு

காற்றில்கரைந்ததால் கலங்கி

கையிலிருந்த நகலை கசக்கி எறிந்து

அசலின் கதைமுடிந்ததாய் அறிவித்து

வெளியில் ஆட்டம் போட்டு

உள்ளுக்குள் நடுங்கிக் கொண்டிருக்கின்றன

இலக்கின் இலக்காகிப்போன

சில சிங்க(X) நாய்கள்................


விலங்கிடமிருந்து காப்பதாய்

உலகுக்குக் காட்டிவிட்டு

அப்பாவிகளைப் பிடித்து

வேலிக்குள் அடைத்து

உலகை ரட்சிக்கும்

பெரியண்னன்கள் ரசித்திருக்க

வெறிகொண்டு வேட்டையாடி

ருசித்துக் களைத்திருக்கின்றன

சிங்கமென்ற நினைப்பில்

காவல் பொறுப்பிலிருக்கும்

சில சிங்க(X) நாய்கள்............


பசித்தவர் கஞ்சிக்கும் நீருக்கும்

வரிசையில் ஏங்கி நிற்க .....

‘புளிசாதம் என்றொரு குரல்

சன்னமாய்க் கேட்டு வைக்க....

தலைமுதல் கால்வரை கவசமும்

தளும்பத் தளும்ப ஆயுதமிருந்தும்

முள்வேலியைத் தாண்டி

தலைதெறிக்க பாய்ந்தோடி

பங்கருக்குள் பதுங்குகின்றன

முன்னர் மகி(ழ்)ந்த

சில சிங்க(X) நாய்கள்.......


உறுப்பிழந்தவரையும்

உள்ளம் பேதலித்தவரையும்

முள்வேலிக்குள் நெருக்கமாய்

அடைத்து வைத்திருப்பது

தலை நிமிர்ந்த வீரத்தால் அல்ல......

தன்னுயிர் பற்றிய பயத்தால் என்பதை

உலகறியச் செய்து கொண்டிருப்பதும்

அதே முள்வேலி தான் என்பதை

இன்னும் உணராமல் இருக்கிறார்கள்

சில சிங்க(X) நாய்கள்...............


பீனிக்ஸ் பற்றிய கற்பனையில்

பற்றிய பயம் தொற்றிக் கொள்ள

சிதையைச் சிதைத்து

புழுதியில் கலப்பதாய் நினைத்து

எம்தலைக் கிழவியின் சாம்பலை

எம்மண்ணிலேயே விதைத்து

ஏங்கிப் புதைந்திருக்கும்

எம்குல வித்துக்களுக்கு

தம்மையும் அறியாமல்

உரம் இட்டுச் சென்றிருக்கிறார்கள்

சில நடு நிசி நாய்கள்

..........சிங்க(X) நாய்கள்


இப்போதைய எகிப்தும்

துனிசியாவும் லிபியாவும்

உரத்துச் சொல்லும்

நாளைய வரலாறு ஒன்றை

இன்றைய உலகுக்கு..................


பூஜ்ஜியத்துகுள் இருந்து

பொங்கி வந்தவர்கள் பொடியன்கள்........

இப்படைத் தோற்கின் எப்படை வெல்லும்.....


Wednesday, November 24, 2010

இதுவும் ஒரு தொடர்கதையாகக் கூடும்..........!


ஊரடங்கிய நடுஇரவில்

முகம்தெரியாத நள்ளிருளில்

தலையணையுள் முகம்புதைத்து

அழுகையுள் அமிழ்ந்து

கொண்டிருக்கிறேன் நான்...


எதிர்பாராத வேளையில்

என்முதுகைத் தடவிவிட்டு

தலையை வருடிவிட்டு.......


துக்கம் கரைந்தபின்


ஏன் ? என்று கேட்ப்பாள்

எனநான் எதிர்பார்த்த வேளையில்

கைகளை மடித்து

தலைக்கு வைத்து

தூங்கிப்போகிறாள் அம்மா...


ஆச்சரியமாய் அவளைப்

பார்த்துக் கொண்டிருக்கிறேன்...


கொதிக்கும் ஆவியில்

வேகும் இட்டிலியை

ஆள்க்காட்டி விரலால்

குத்தி சோதித்து

வெறும் கையால் எடுத்து

எனது தட்டில் வைக்கிறாள் அம்மா


ஆச்சரிமாய் அவளைப்

பார்த்துக் கொண்டிருக்கிறேன்...


தட்டிலதை

துண்டாக்கும் வேளையில்.....

விரல்களைத் தாக்கிய சூட்டில்

கைகளை உதறி பதறியதைத்

தவறவிட்ட அந்த நொடியில்....

உச்சியில் அடித்தார்போல ஒன்று

நச்சென்று உறைக்கிறது எனக்குள்......


அதுவரையிலும்

ஆச்சரியமாகவே தெரிந்த

அமைதியான அம்மாவை.......

இப்போது முதல்

அதிர்ச்சியோடு

பார்க்கத் துவங்குகிறேன் நான்....


"காயங்களால்

உள்ளும் புறமும் காய்த்து

எல்லாமும்

மரத்துப் போயிருக்கிறாளோ

அம்மா..........?!"


( நன்றி : கரு:- ப்ராங்ளின்குமார், நாணற்காடன்)

.

Friday, July 9, 2010

யார் சொல்லி........!


’’பச்ச ஒடம்புக்காரீ’ன்னு
பவுசாத்தான் படுக்க முடியுமா ..?

கொளுந்தியாளப் போல நானும்
கெழுத்தியப்போலக் கெடக்க முடியுமா ..?

காலைல...
சாவலை எழுப்பி வெரட்டி
சாலையைக் கழுவி பொரட்டி

தூக்கத்தை மொத்தமா வெலக்கி
முத்தத்தை சத்தமில்லாம ஒதுக்கி
தூக்கை சுத்தமா தொலக்கி

நீச்சத் தண்ணிய ஊத்திக்கிட்டு
பச்சப் புள்ளயத் தூக்கிக்கிட்டு

எட்டுபோட்டு நடக்கணும்
காட்ட மேட்டக் கடக்கணும்
தோட்டம் போயிக் கெடக்கணும்......

புள்ளய அமத்திப் போட்டு
புல்லறுக்கப் போகணும்

அரை வயிறு கஞ்சிக்கு
நெஞ்சிமுட்ட சொமக்கணும்

ம்ம்ம்ம்ம்...............”

நட்ட நடு சாமத்துல
காதடைக்கும் பசியால
கெட்ட சுடும் நெனப்புல
அரைக்கோழித் தூக்கத்துல
பொரண்டுத்தான் படுக்கையிலெ

ஏங்காதுக்குள்ள பச்சப்புள்ள
ஏங்கியழும் சத்தம் கேட்டு நான்

ஒதறிப் பதறி குத்தவச்சேன்
அவசரமாத்தான் பாத்துவச்சேன்

ஒதட்டுப்பால் குடிச்சுக்கிட்டு
எதமாத்தான் தூங்குதான் என்ராசா

’கெழக்கால ஒருபுள்ள
பாலுக்கு அழுதிருக்கு’


பாயில சாயயிலத்தான்
பாவிமக கவனிக்கேன்....

எங்கேயோ கேட்ட
ஏங்கியக் குரலுக்காக
இங்கே நனைஞ்சிருக்குது
என்னோட மாராப்பு.............................!


.

Monday, November 9, 2009

எதனால் இந்த நடுக்கம் ....?


இயலாமை !
வயோதிகத்தால் எனது உடல் நடுங்குகிறது

இருள் இன்னும் விலகாத
மார்கழி மாத அதிகாலை..
ஆற்றில் மூழ்கி தலைதுவட்டாது
அப்படியே நடந்து வருகிறேன்

தாங்கமுடியாமல்
குளிரால் எனது உடல் நடுங்குகிறது

தாங்கித்தான் ஆகவேண்டும்

காஷ்மீரக மலையில் எனது
கால்கள் நடந்தே ஆகவேண்டும்

வாழ் நாள்க் கனவு அதை
வீழுமுன் நடத்திக் காட்டவேண்டும்

தென்கரையிலிருந்து வடகோடிக்குத்
தவழ்ந்தேயானாலும் போய்ச் சேருவேன்

மலைமீது காலடி வைத்தபின்புதான்
மேலுலகம் போய்ச் சேருவேன்

பயிற்சியும் அதற்கான முயற்சியும்
எடுத்தேதான் ஆகவேண்டும்

முடியுமா ?
கவலையால் எனது உடல் நடுங்குகிறது


‘ எண்பது தாண்டியும்
.ஏன் இப்படி அலையுது ? ’
‘ கட்டைல போற கெழவிக்கு
.காஷ்மீரு போறஆசையப் பாரு’
’அதுக்குத்தான்யா ஆண்டவன்
.அளந்தே வச்சிருக்கான்’


கேலியும்,கிண்டலும் !
சுடுசொல்கேட்டு எனது உடல் நடுங்குகிறது

கடைசிவரையில்ப் போராடி
பார்க்கவேண்டியவரை பார்த்து
விழவேண்டிய காலில் விழுந்து
ஒருவழியாய் சாதித்துவிட்டேன்

இதோ ...........
மலையேறிக் கொண்டிருக்கிறேன்
எங்கு நோக்கினும் வெண்பனி
என்னைச் சுற்றிலும் வீரர்கள்

பாதுகாப்பாய் இருந்தாலும்
கடும்பனியால் எனது உடல் நடுங்குகிறது

காலடி எடுத்து வைக்கிறேன்
கார்க்கிலின் கடும் பாறையில்

நின்று நிதானித்து
இழுத்து உள்வாங்குகிறேன் மூச்சை..

இதில் எப்படியும் கலந்திருக்கும்
இங்கே உலாவிக் கொண்டிருக்கும்
எனது மகனின் இறுதிமூச்சும்........

இப்பொழுதும் எனது உடல் நடுங்குகிறது

ஆனால் இது எதனால்...????
எனக்குத் தெரியவில்லை .........


.

Tuesday, May 5, 2009

பார்த்தவுடன் வருமா காதல் ?!


"முகம் பார்த்தவுடன் காதல்"
"நகம் பட்டவுடன் காதல்"

எதிர்ப்பவனை முட்டாள்
என்பேன் நான்

முழு சாட்சியாய்
முன்னால் நான்

நானும் காதலிக்கிறேன்
நாற்பது வருடங்களாக

என்றும் காதலிப்பேன்
என் அம்மாவை




நன்றி :கரு/கு.த.ந

Tuesday, November 25, 2008

என்னவள்.....


அவள்....
மரணத்தை விடக் கொடியது
அவளின் பிரிவு
ஒவ்வொரு கணமும்
ஒவ்வொரு யுகமாய்க் கழியும்

அவள்....
சொர்க்கத்தை விட சிறந்தது
அவளின் நினைவு
ஒரு யுக நேரமும்
சிறு மணித் துளியாய் கரையும்

அவள்....
இசையை விட இனியது
அவளின் காலடி ஓசை
என்னருகே கேட்கும்போது
அந்த உலகமே என்னச் சுற்றும்

அவள்....
ஊஞ்சலையும் மிஞ்சியது
அவளின் கருவிழியின் அசைவு
நினைத்தவுடன் தூக்கம் என்னைத்
தூக்கிக்கொண்டு தாலாட்டும்

அவள்...
கடவுளையும் தாண்டியது
அவளின் கவனிப்பின் அளவு
காயம் பட்ட போதும் என்னை
கண்ணுக்குள் வைத்துக் காப்பாற்றும்

அவள்....
சுவாசத்தை விட அவசியமானது
அவளின் அளவில்லாத பாசம்
மனது உடைந்த நேரத்திலும் என்னை
மயிலிறகாய் வருடி விடும்

அவள்....
என்னவள்.....
என் அம்மா.......

Tuesday, November 4, 2008

இரண்டாவது அம்மா


பெத்ததே
போதுமென
மொத்தமாய் போய்
சேர்ந்துவிட்டாள் அம்மா

அறியாத வயதில்
தெரியாத பொறுப்பை
புரியாமலேயே ஏற்று
பெரியமனுசி ஆகிப்போன அக்கா,

என் கை பிடித்துக் கூட்டிச் செல்ல
என் பை தூக்கி அழைத்துச் செல்ல
தன் படிப்பை இழந்த
தற்குறி ஆகிப்போன அக்கா,

ஆறு வயதுவரை என்னை
அரையிலிருந்து இறக்காமல்
தரையே தொடவிடாமல்
தலை தடவி பாதுகாத்த அக்கா,

கரையேற வழியில்லாமல்
காத்து நிற்கிறாள்
காரியம் கைகூடுமென
கனவோடு நிற்கிறாள்
எப்படியும் முடிப்பேன் என
எதிர்பார்த்து நிற்கிறாள்
என் முகம் பார்த்து
ஏங்கி நிற்கிறாள்.

என்னசெய்யப் போகிறேன் நான்?

ஒத்த மூக்குத்திக்கும் !
ஒருசோடி கம்மலுக்கும் !!

Tuesday, October 28, 2008

அம்மா


அம்மா
என் மனைவியை மருமகளாய்
ஏற்றுக்கொள்ளவே இல்லை
எனக்குத் தெரிந்து அவளிடம்
எதிர்மறையாகவே நடக்கிறாள்
ஏன் என்றே தெரியவில்லை

ஆனாலும் அம்மாவை
என்னால் எவரிடமும்
விட்டுக்கொடுக்க முடியவில்லை
என்னால் எப்படி முடியும்?

அம்மாவைப் பற்றி இந்த
அறியாத ஒன்றைவிட
தெரிந்தது நிறைய உண்டு
புரிந்தது இன்னும் உண்டு

முந்தா நாள் பார்த்திருந்தாலும்
இன்று புதியதாய் பார்த்ததுபோல
"மெலிஞ்சு போய்ட்டீயே அய்யா"
எனக் கேட்ப்பதில் உள்ள பாசம்
என்னுடன் இருந்து கவனிப்பவரை
கனிசமாய் காயப்படுத்தினாலும்
எனக்குப் புரியும்

சிகை கோதி
சாப்பிடவைக்கும்
சிரித்த முகத்துக்குப் பின்
குடிகார அப்பாவிடம்
அடுக்களையில்
வாங்கிய அடியும்
அடக்கிவைத்த அழுகையும்
எனக்குத் தெரியும்

தவிர்க்கமுடியாமல்
மஞ்சளை கழுத்தில் கட்டி
தாலி கழட்டி அடகு வைத்து
வட்டி மட்டும் மொத்தமாய் கட்டி
கலங்கி நொறுங்கி நின்றதும்
எனக்குத் தெரியும்

ஐம்பது ரூபாய்க்காகவும்
ஐந்து கிலோ அரிசிக்காகவும்
அறுவை சிகிச்சை செய்து
அறுபட்டுக் கிடந்ததும்
எனக்குத் தெரியும்

அந்த அரிசியில்
காய்ச்சிய கஞ்சியின் ருசி
இன்றுவரை என் தொண்டையில்
தொக்கி நிற்பதும்
எனக்கு மட்டுமே தெரியும்

பிறகு எப்படி முடியும்