Sunday, December 28, 2008

இப்போதாவது முதலடி....


அமிழ்தினிய தமிழ்
அந்நிய மோகத்தால்
ஆங்கில மொழி தாக்கத்தால்
ஆழி நோய்க்கு ஆட்பட்டது போல
அல்லல் பட்டுக்கொண்டிருக்கிறது
அடித்தளமே கொஞ்சம்
ஆடிக்கொண்டுதான் இருக்கிறது

இது தான் தருணம்
இனியும் தாமதித்தால்
இலக்கியத் தமிழ் அல்ல
இனிய பேச்சுத் தமிழும்
இனிமேல் இங்கே
இல்லாமல் போகும்

அவசரச் சிகிச்சையாய் சில
அடிப்படை மாற்றங்கள்
அதிரடியாய் செய்ய வேண்டும்
அதுவும் உடனடியாய் செய்யவேண்டும்


தமிழ் கூறும் நல்லுலகில்
அலோவும் சாரும்புகுந்து
அவதிப்படாத அவதிப்படுத்தாத
தமிழ் வாய் ஏதேனும் உண்டா?

அலோவுக்கென தனியாய்
ஆழக்குழி தோண்டி
அதிலும் அதை
அடியில் வைத்துப்
அழுந்தப் புதைக்கவேண்டும்
சார் என்ற சொல்லே தமிழ்
சரித்திரத்தில் இல்லாமல்
சரி செய்யவேண்டும்

எளியோரைச் சேரும் வகையில்
இனிய மாற்றுச் சொற்களை
இங்கே அறிமுகம் செய்வோம்
இதை மற்றவருக்கும் சொல்வோம்

முதலடியை நாமே
முன் வந்து வைப்போம் !
முன் மாதிரியாய் நம்மையே
முன் வைத்து நிற்போம் !!

Wednesday, December 24, 2008

உதவி தேவை! அதுவும் உடனே..!!


ஊருக்கு வெளியே
ஒதுக்குப் புறமாய் வீடு
நட்ட நடு சாமம்
நடுநடுவே சாமந்திப்பூ வாசம்
துணைக்கு அங்கே யாருமில்லை
தூக்கமும் அருகில் வரவில்லை

எங்கும் நிசப்த்தம்
ஓங்கி சப்த்தமிட்டுக் கொண்டிருக்கிறது
கடும் குளிரில் மரங்கள்
நடுங்க மறந்து உறைந்து நிற்கின்றன
ஏதோ ஒரு காலடி ஓசை
எங்கிருந்தோ கேட்டுக்கொண்டே இருக்கிறது

அதிர ஒலிக்கிறது
அழைப்பு மணி வாசலில்
யாராயிருக்கும் இந்த நேரத்தில்
யோசனையோடு எழுந்து வருகிறேன்

சன்னல் திறந்து பார்க்கிறேன்
முன்னால் சுற்றுச் சுவர் அருகில்
தெரு விளக்கு வெளிச்சத்தில்
தெளிவில்லாமல் தெரிவது
நடுத் தெருவில் இருந்த
நெடு நாள் நண்பன்
தலையில் காயம் பட்டிருக்கிறான்
தள்ளாடியபடி நிற்கிறான்

எங்கோ வெளி நாட்டில் இருந்தானே?
எப்போது இங்கு வந்தான்?
இப்போது எதற்கு வந்திருக்கிறான்?
இனம் புரியாத பதட்டத்தோடு
மனம் குழம்பி கதவு திறக்கிறேன்

திடீரென அலறுகிறது
தொலைபேசியின் அழைப்புமணி
திறந்த கதவை விட்டுவிட்டு
திரும்பிச் செல்கிறேன்
தொலைபேசி இருக்கும் இடம்

நடுத்தெரு நண்பன்
நேற்று இரவு விபத்தில்
அகால மரணம்
அடைந்த செய்தி
உச்சந்தலையில் இறங்கி
உள்ளங்காலில் வெளியேறியது

இங்கே பார்த்தது பொய் இல்லையே!
இப்போது கனவும் காணவில்லையே!!
கையைக் கிள்ளிப் பார்த்துக்கொள்கிறேன்
கதவு வேறு திறந்து வைத்திருக்கிறேன்

முழுவதுமாய் இதயம் வேளியேவந்து
முன்னால் நின்று துடித்துக்கொன்டிருக்கிறது
வாசல்வரைப் போகலாமா?
வந்தது யார் பார்க்கலாமா?

உங்கள்உதவி வேண்டும்! அதுவும்
உடனே வேண்டும்!!

Tuesday, December 16, 2008

வரப்போகும் வானிலை அறிவிப்பேன்..!


பளீரென சுட்டெரிக்கும் வெயிலில்
பஞ்சை விரித்து உலரவைக்கையில்
கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை
கொடூரமாய் கொட்டியது மழை
தற்செயலாய் தான் கவனித்தேன்
தாண்டிப் போய்க்கொண்டிருந்தாள் அவள்

இலைகள் கூட அசைய மறுக்கும்
இறுக்கமான சூழலில்
மாவு திரித்து பதமாய்
மாடியில் பரப்பிவைக்கையில்
சுழற்றி அடித்து ஓய்ந்தது
சூறாவளியாய் காற்று
சுற்றிலும் தேடினேன் நான்
நினைத்தது போலவே வாசலில்
நின்றுகொண்டிருந்தாள் அவள்

இருமனங்கள் இணையும்
திருமண மண்டபத்தில்
தாலி கட்டப்போகும் நேரத்தில்
தானாக வியற்கிறது மூக்கின் மேல்

என்னவோ நடக்கப்போகிறது
என் மனதுக்குள் பட்சி அலறியது
மளமளவென குடை விரித்து
மணமேடையின் மேலிருக்கும்
மணமக்களுக்குப் பிடிக்கிறேன்

ஒட்டுமொத்தமாய் எல்லோரும்
ஒரு மாதிரியாய் பார்க்கிறார்கள் என்னை
பாவம்! ஒன்றும் புரியாதவர்கள்!!
பரிதாபமாய் நனையப்போகிறார்கள்!!!

எனக்கு மட்டும்தானே தெரியும்
என்ன நடக்கப்போகிறதென்று
வாசல் தாண்டி உள்ளே
வந்து கொண்டிருக்கிறாள் அவள்

Saturday, December 13, 2008

உள்ளே, வெளியே !


"புத்திகெட்ட மனுசனுக்கு
எத்தனை சொன்னாலும் புரியாது"

வாசலில் நுழைந்தவுடன்
வந்து விழுகின்றன வசவுகள்
எதற்காகவோ என்னை
ஏசிக்கொண்டே இருந்தாள்
கவனித்துவிட்டேன் ஆனாலும்
கவனிக்காமல் உள்சென்றேன்

பேருந்தில் இடம் பிடிக்க ஓடி
படியில் இடறி தடுமாறி
இடம் கிடைக்காமல் நின்றேன்
"இதுகூட முடியலின்னா
எதுக்கு மீசைன்னு ஒன்னு"

அவளின் கேலிப்பேச்சு
ஆழமாய்க் குத்தினாலும்
சட்டை செய்யாமல்
சன்னல் வழியே
வெளியே பார்த்தேன்

திரையரங்க வாசலில்
தெருவரையுள்ள வரிசையில்
முட்டி மோதும் சிறுவர்களுக்கு
ஓரம் ஒதுங்கி இடம் கொடுத்து
கொஞ்ச நேரம் கழித்து
கசங்கிப்போய் வெளியேவந்தேன்
"சின்னப் பசங்களக்கூட
சமாளிக்க முடியல
என்னத்த சாதிப்பிங்களோ?
என்னதான் பன்னுவீங்களோ?"

எப்போதும் போலவே
இந்தக்காதில் வாங்கி
அந்தக்காதில் விட்டு
அடுத்த வேலைக்குத் தயாரானேன்

கடற்கரையில் கால் நனைக்கையில்
"கொஞ்ச நேரம் இருங்க
குழந்தையை பாத்துக்கோங்க"

பதில் எதிர்பாராமல்
பரபரவென விலகிப்போனவள்
பதட்டத்தோடு திரும்பிவருகிறாள்
"வாங்க போயிறலாம் இங்கேயிருந்து
வம்பு செய்ராங்க ஏங்கிட்ட அங்கேயிருந்து"


அவளைக் கடந்து பார்க்கிறேன்
அங்கே திருட்டுப் பார்வையோடு
திடகாத்திரமாய் நால்வர்
தொடர்ந்து வந்திருக்கிறார்கள் அவளை

அடுத்த நான்கு நிமிடங்களில்
அங்கே யாரும் எதிர்பாராமல்
ருத்திரத் தாண்டவம் ஆடி அடங்குகிறேன்
யுத்தக் காண்டமே நடத்தி முடிக்கிறேன்

அந்த நால்வரும்
அவள் முன்னால் மண்டியிட்டு
மன்றாடி வேண்டி மன்னிப்புக் கேட்டு
மறு விநாடி மறைந்து போகிறார்கள்

"எந்தப் பிரச்சினையும் இல்லை
எல்லாம் முடிஞ்சு போச்சு
எங்கே போகலாம் அடுத்து?"

எதுவுமே நடக்காதது போல
அவள் முகம் பார்த்து கேட்டு
அப்பாவியாய் நிற்கிறேன்

அவளோ என்முகம் பார்த்து
அனைத்தும் உறைந்து நிற்கிறாள்
குழம்பிய முகத்தோடு
கலங்கிய சிந்தனையோடு
குற்ற உணர்ச்சியோடு
குறுகுறு பார்வையோடு
இதுவரைப் பார்த்துதற்கும்
இப்போது பார்ப்பதற்கும்
உள்ள வித்தியாசம்
உள்ளபடியே உணர்கிறேன்

மெதுவாய் என் கை பிடிக்கிறாள்
இதமாய் வாய் திறக்கிறாள்

"நீங்க போங்க முன்னாடி!"

மறுநாள் மாலை
மதிமயக்கும் வேளை
வரவேற்பு எதிர்பார்த்து
வீட்டுக்குள் நுழைகிறேன்
"புத்திகெட்ட மனுசனுக்கு....
..........................."

Wednesday, December 10, 2008

என் நிலை என்ன..?


சூறாவளியின் மையத்தில் நான்
சுனாமியின் சுழற்சிக்குள் நான்

என் கரு சுமப்பவள்
என்னை கருவில் சுமந்தவள்
இடையில் ஏதும் புரியாமல் நான்

தன் நிலை காக்க ஒருவள்
தன்னை நிலை நாட்ட மற்றவள்
என் நிலை தெரியாமல் நடுவில் நான்

இறுகும் சுருக்கு கயிறு கழுத்தில்
இரண்டு கத்தியின் மேல் நிற்கிறேன்
பிரச்சினையை நிறுத்த
பேசியே ஆக வேண்டும் நான்

எனக்குத் தெரிந்ததை அவர்களிடம்
எடுத்துச் சொல்லி அறிவுரித்தி
வேகமாகக் கோபத்தோடு
வெளியேறிப்போகிறேன் நான்

அந்திசாயும் நேரம்
அமைதியாய் உள் நுழைகிறேன்
ஆரவாரம் ஏதும் இல்லை
ஆள் அரவமும் இல்லை

அந்த அமைதி எனக்கு
ஆயிரம் அர்த்தங்கள் சொல்கிறது
என்னவோ நடந்திருக்கிறது
எதுவோ நடக்கவும் போகிறது

இருவரும் ஒன்றாய் சேர்ந்து
இருதுருவமும் ஒருசேர இணைந்து
எனக்கு எதிரே நிற்கிறார்கள்
எனக்கு எல்லாமே புரிந்துவிட்டது

எற்கனவே சமாதனம் ஆகிவிட்டது
ஏதோ உடன்படிக்கையும் முடிந்துவிட்டது

"எங்களுக்குள் ஆயிரம் இருக்கும்
உங்களை யார் இடையில் வரச் சொன்னது?"
முகத்துக்கு நேரே கேட்டுவிட்டு
முகம் திருப்பி உள்சென்று விட்டார்கள்

எதிர் எதிரே
எதிரியாய் நின்றவர்களுக்கு
எதிர்பாராமல் நான் இப்போது
எதிரியாய் ஆகிப்போனேன்

திருதிருவென விழித்துக்கொண்டு
தன்னந்தனியே நான்
என் நிலை என்னவென்று
எனக்கு இப்போதும் புரியவில்லை

சுய பரிசோதனை நேரம் !


அடிமட்ட மக்களுக்காகவே
அல்லும் பகலும் பாடுபடும் அரசு
பெறுமையாய் அறிவிக்கிறது
வருவாய் கூடிவிட்டதாக!
இருமடங்கைத் தாண்டிவிட்டதாக!!
....நிற்க...
மக்களின் வருமானமா கூடியிருக்கிறது ?
அது
மது விற்பனையில் வரும் பணம்!

விலைவாசி கூடிக்கொண்டே இருக்கிறது
வளமாய் மாறியிருக்கவேண்டும்
விவசாயியின் வாழ்க்கையும்
....நிற்க...
புள்ளி விபரங்கள்
புரிய வைக்கின்றன
உணர்த்துகின்றன
உண்மை நிலவரங்கள்
கூடிக்கொண்டே போகிறது
விவசாயி தற்கொலைகளும்
விபரீத இடப்பெயர்வுகளும்


சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட
மக்கள் வாழ்வை பாதுகாக்க
புதியதாய் அரசுப் பணியில்
பதினாயிரம் காவலர்கள் சேர்ப்பு
....நிற்க...
கடந்த ஆண்டைவிட
கூடியே இருக்கிறது
குற்றங்களின் எண்ணிக்கையும்

இவை சிலதான்..
இதுபோல் இன்னும் பல....

எதிர் மறையாகவே
இருந்திருக்க வேண்டிய
இந்த மாற்றங்கள் எல்லாமே
எல்லா இடத்திலும்
ஏறுமுகமாகவே இருக்கிறது

என்னதான் நடந்துகொண்டிருக்கிறது?
எங்கேநாம் சென்றுகொண்டிருக்கிறோம்?

Tuesday, December 9, 2008

உனது அச்சாணி..


அன்றொரு நாள்
அதிகாலை நேரம்
ஆழ்ந்த உறக்கம்

கடவுள் வந்து நின்றார்
கண்ணெதிரே என் கனவில்
கேள்விகள் பல கேட்டார்

பிடித்தவர்கள் பெயர் சொல் என்றார்
அம்மா அப்பா பெயர் சொன்னேன்
அமைதியாய் சிந்தித்தார்
அடுத்து சொன்னார்
"எதிர்காலம் நன்றாக இருக்கும்"

கனவுகள் பற்றிக் கேட்டார்
காதலி அவள் பெயர் சொன்னேன்
கண்மூடி தியானித்தார்
"நல்ல வாழ்க்கை அமையும்"

நெடுநாள் ஆசை கேட்டார்
நிலவு தொடும் வரம் கேட்டேன்
கொஞ்சம் தயங்கினார்
"நிச்சயம் நிறைவேறும்"

தொடரும் நட்பு பற்றிக் கேட்டார்
நண்பா உன்பெயர் சொன்னேன்
கேட்டதும் சிரித்தார்
சிறிதும் யோசிக்கவில்லை
உடனே பதில் சொன்னார்
"நீ எல்லாம் எங்கே உருப்படப் போகிறாய்''

Monday, December 1, 2008

வாரணம் ஆயிரம் இருந்தாலும் !


திடீரென அழுகுரல் கேட்டு
திடுக்கிட்டு விழிக்கிறேன் நான்
விடியவில்லை இன்னமும்
விரலில் நகம் கூடத் தெரியவில்லை

படபடத்து எழுகிறேன் பதறிக்கொண்டு
பக்கத்தில் குழந்தை கதறிக்கொண்டு
பால்க்காரன் இன்னும் வரவில்லை
பசியடக்க என்ன செய்ய தெரியவில்லை

சிரித்தபடி இருக்கிறாள் அவள்

பால்பொடி பெட்டியை திறந்து
பதட்டத்தில் போட்டு உடைத்து
மீதியை அள்ளி எடுத்து
பாத்திரத்தில் சேர்ப்பதற்குள்
பாதி உயிர் போய்விடுகிறது எனக்கு

சிரித்துக்கொண்டிருகிறாள் அவள்

எரிவாயு உருளையையும்
எரியாத அடுப்பையும் பார்த்ததும்
ஏழு உலகம் சுற்றுகிறது எனக்கு
"ஏன் இந்த பொழப்பு நமக்கு?"


சிரித்துக்கொண்டே இருக்கிறாள் அவள்

ஒருவழியாய் பாத்திரத்தில் அடைத்து
ஓடிப்போனவன் ஒடுங்கிப்போய் நிற்கிறேன்
சலனம் ஏதுமின்றி குழந்தை அங்கே
சகலமும் அடங்கிப்போகிறது எனக்கு இங்கே

எதிர்பார்த்து எதிர்பார்த்து
ஏங்கி ஏங்கிஅழுது குழந்தை
விரல் சப்பி விழி மூடி
தானாகவேத் தூங்கிப் போயிருக்கிறது

சிரித்துக்கொண்டுதான் இருக்கிறாள் அவள்

எனக்கு என் மேலேயே வந்த கோபம்
எதிர்பாராமல் திரும்புகிறது அவளிடம்

"அதற்குள் என்ன அவசரம் உனக்கு?
எதுவுமே தெரியவில்லையே எனக்கு?
என் நிலை பார்த்தபின் சிரிக்கலாமா?
என்னைத் தவிக்கவிட்டு நீ போகலாமா?

நிகழ்காலம் என் கண்ணை மறைக்கிறது
எதிர்காலம் என்னை ஏளனம் செய்கிறது
தனியே இருந்து நான் சமாளிப்பேனா?
நினைவிலாவது துணையாய் இருப்பாயா?"

இன்னும் அவள்
சிரித்துக்கொண்டுதான் இருக்கிறாள்
அந்தப்புகைப் படத்துக்குள் இருந்து.

Saturday, November 29, 2008

நாங்கள் இந்தியர்கள்.


"எங்கிருந்தோ வந்த எவனோ
என்னென்னவோ செஞ்சிட்டுப்போக
ஒன்னா மண்ணா இருந்தவங்க எல்லாம்
தாயாப் புள்ளயா பழகினவங்க எல்லாம்
தள்ளிவச்சு பாக்க ஆரமிச்சிட்டாங்களே

பத்துப் பைத்தியக்காரங்க
புத்திக்கெட்டு செஞ்சவேலைக்கு
பல லெச்சம் பேரு வாழ்க்கை இங்க
பத்திகிடுமோன்னு பயமா இருக்கே

சுட்டுக் கொன்னது எல்லாம்
சொந்த சகோதரன் தான்னு
சொல் புத்திக்குத் தெரியலின்னாலும்
சொய புத்திக்கும் புரியலியா

என்னத்த சாதிக்க இப்படி
எடுபட்டுப் போயி திரியரானுவளோ
இன்னும் யார வாழவைக்க இப்படி
இருக்கரவங்கள அழிக்கிறானுவளோ

தன்னக் கப்பாத்திக்கப் பெரிசுங்க
உன்ன உசுப்பேத்தி உடுதாங்க
உண்ம தெரியாம நீயும் இப்படி
நேந்து வுட்ட மாதிரியே திரியரியே

அமரிக்காவுல செஞ்சுப்புட்டு அந்த
ஆப்கானிஸ்தானயே அழிச்ச மாதிரி
இந்தியாவுல செஞ்சுப்புட்டு இப்போ
எந்தக் குடிய கெடுக்கப்போரியோ

இந்தியாதானேன்னு எகத்தாளமா
இங்கே வந்து மோதிட்டியே
எங்களுகுள்ளேயே அடிச்சுகிட்டாலும்
எதிரின்னு வெளியே இருந்து வந்துட்டா
எவனா இருந்தாலும் சரிதான்

ஒண்ணுபோல சேந்து நாங்க
ஒரு பயலகூட விடாம
ஏன்னு கேக்க நாதியில்லாம
ஏறி மிதிச்சிப் போட்டுட்டு
எங்கபாட்டுக்குப் போய்கிட்டேயிருப்போம்".

Friday, November 28, 2008

கள்வனா?,காதலனா?,...


குமரிப் பெண் அவள்
குடியிருக்கும் குட்டிக்
குளுகுளு குடில்

மோசமான வானிலை வெளியே
லேசாகத் திறந்திருக்கிறது சன்னல்
தனியே இருக்கிறாள் அவள்
தள்ளியே இருக்கிறது மற்ற அறைகள்

வேலி தாண்டி உள்ளே வந்து
சன்னல் வழியே மெல்ல நுழைந்து
அக்கம் அக்கம் பார்த்து
அவள் பக்கம் வந்து

யாரிடமும் பயம் இல்லாமல்
எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல்
அவளிடம் கூட அனுமதி கேட்க்காமல்
அவள் கன்னத்தில் முத்தமிட்டு
அங்கேயே அடிவாங்கி
அப்போதே சாகும்
அந்த அப்பாவி
.
.
.
கொசு

Tuesday, November 25, 2008

நண்பனுக்கு ஒரு கடிதம்...


அன்பு நண்பன் இளங்கோவனே
அன்பு செலுத்த புது நாய்க்குட்டி தேடும்
இனிய அன்பனே
இன்றும் என்றும் நீ
இளம் கோ வாகவே
இருக்க விரும்புகிறேன்
இருக்கவேண்டும் நம் நட்பும்
இளமையாகவே
இதுபோல இனிமையாகவே

கவனிக்க....!

நீடிக்கும் நட்புக்குத் தடை போட
ஆர்ப்பரிக்கும் அன்புக்கு அணை கட்ட
படை திரட்டி வந்திருக்கிறார்கள்
பல திட்டம் தீட்டி இருக்கிறார்கள்
போட்டிகள் பலவும் வைத்திருக்கிறார்கள்

அவர்கள் வென்றால்
நட்புக்கு நிரந்தரத் தடையாம்
அவர்கள் வீழ்ந்தால்
நான் வெல்வேன்
நாம் வெல்வோம்
நம் நட்பு வெல்லும்
அந்தத்த் தடைக்குத் தான்
இனிமேல் என்றும் தடை

சில எளியக் கேள்விகளை
அவர்கள் முன்
எடுத்து வைத்திருக்கிறேன்
சரம் சரமாய்த் தொடுத்திருக்கிறேன்

"தொலைவில் தெரிகிறதே
தொடு வானம்,
அதை சீக்கிரம்
தொட்டு வா பார்க்கலாம் ! "

துரத்திக் கொண்டு போய் இருக்கிறார்கள்

"தூரத்தில் இணைகிறதே
தண்டவாளம்,
அது சேரும்
புள்ளீயின் தூரம்
இங்கிருந்து அளந்து வா பார்க்கலாம் !"

அளந்து கொண்டு போய் இருக்கிறார்கள்

"பெரியது எது?
புவியின் ஈர்ப்பு விசையா?
பூவின் ஈர்ப்பு விசையா?
புவியின் ஈர்ப்பு வென்றிருந்தால்
பூவிலிருந்து காய் வீழ்ந்திருக்கும் .
காய் இல்லையெனில் கனி இல்லை,
நீ இல்லை நான் இல்லை,
இப்போது சொல்,
எது பெரியது ?
அறிந்து வா பார்க்கலாம் !"

மரத்தின் கீழ் அமர்ந்து
மேல் நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்

"பயங்கர அழகு:
கொஞ்சம் கூடுதல்:
ரொம்ப குறைச்சல்:
எதிர் எதிர்ச் சொற்கள்
ஒன்றாய் கூடி
ஒரே அர்த்தம் தரும்
வார்த்தைகள் இன்னும்
பத்து கொண்டு வா பார்க்கலாம் !"

பல திசைகளுக்கும் பறந்து போய் இருக்கிறார்கள்

எனக்குத் தெரியும்
அவர்களில் யாரும்
திரும்பவேப் போவதில்லை

உனக்குத் தெரியும்
இதோ நான்
வந்து கொண்டிருக்கிறேன்
அந்த அழகான
புது நாய்க் குட்டியாக.....

என்னவள்.....


அவள்....
மரணத்தை விடக் கொடியது
அவளின் பிரிவு
ஒவ்வொரு கணமும்
ஒவ்வொரு யுகமாய்க் கழியும்

அவள்....
சொர்க்கத்தை விட சிறந்தது
அவளின் நினைவு
ஒரு யுக நேரமும்
சிறு மணித் துளியாய் கரையும்

அவள்....
இசையை விட இனியது
அவளின் காலடி ஓசை
என்னருகே கேட்கும்போது
அந்த உலகமே என்னச் சுற்றும்

அவள்....
ஊஞ்சலையும் மிஞ்சியது
அவளின் கருவிழியின் அசைவு
நினைத்தவுடன் தூக்கம் என்னைத்
தூக்கிக்கொண்டு தாலாட்டும்

அவள்...
கடவுளையும் தாண்டியது
அவளின் கவனிப்பின் அளவு
காயம் பட்ட போதும் என்னை
கண்ணுக்குள் வைத்துக் காப்பாற்றும்

அவள்....
சுவாசத்தை விட அவசியமானது
அவளின் அளவில்லாத பாசம்
மனது உடைந்த நேரத்திலும் என்னை
மயிலிறகாய் வருடி விடும்

அவள்....
என்னவள்.....
என் அம்மா.......

Sunday, November 23, 2008

வயசுக் கோளாறு !!


அந்தி சாயும் வேளையில்
அந்தப் பெட்டிக்கடையின் மறைவில்
ஆனந்த அதிர்ச்சிக்காக
என்னவளின் பார்வைக்காக
எந்தன் தேவதையின் வருகைக்காக
நாளெல்லாம் பார்த்ததுநிற்பேன்

காற்றில் படபடத்து
கண்களுக்கு வலை வீசும்
பளபளப்புக் கூந்தல் பார்த்தவுடன் என்
பாதம் வானத்திலே மிதக்குமே

பட்டுச் சேலை பரபரக்க
பட்டுப்பூச்சியாய் மிதந்துவரும்
பாவையின் அழகு பார்க்க
பத்துநாளானாலும் பாதையிலேயே
பட்டினியாய்க் காத்து இருப்பேனே

ஓரவிழிப் பார்வையின்
ஒரு கண் அசைவிற்காக
ஒன்றல்ல,இரண்டல்ல
ஒன்பது நாளானாலும்
ஓரமாகவே காத்துக் கிடப்பேனே

ஆயிரம் பேருக்கு நடுவில்
அவள் இருந்தாலும் அந்த அறிவுள்ள
சுண்டுவிரல் அசைவினில் எனக்கு
சுத்தமாய் ஆயிரம் அர்த்தங்கள் புரிந்ததே

மணந்தால் மகாதேவி என்று வீராப்பு பேசி
மறுத்துப்பேசியோரை எல்லாம் ஏசி
சொந்தங்களின் சொல்லை மீறி
சொந்தமாக்கிக் கொண்டேனே அவளை ! !

இன்று.........

கதிரவனின் ஒளி பரவும் நேரத்தில்
கைதியைப்போல கட்டிலின் ஒரத்தில்
அதிர்ச்சி மேல் அதிர்ச்சியோடு
என்னவள் பார்வைக்காக
எட்டு மணியிலிருந்து காத்திருக்கிறேன்

பலவண்ணம் ஏற்ற ஏதுவாய்
பதப்படுத்தப்பட்ட பரட்டைக் கூந்தலுடன்
படுக்கையிலிருந்து எழுந்து என்னிடம்
பகல் காப்பிக் கேட்பவளைப் பார்த்து
கலங்கிப் போய் இருக்கிறேன்

பகல் பொழுது முழுவதும்
இரவு ஆடையிலிருந்து வெளியேராமல்
அங்கி போட்ட சாமி போல
தூங்கித் தூங்கி விழும்போதெல்லாம்
அந்தநாள் நினைவில்
ஏங்கியபடி இருக்கிறேன்

ஓரமாகவே இருந்து பார்த்தவனுக்கு
நேராகப் பார்த்தவுடன்தானே தெரிந்தது
அவளது பார்வையே ஒருமாதிரியாய்
ஓரமாகத்தான் இருக்குமென்று
பரிதவித்துப் போய் இருக்கிறேன்

ஒன்றல்ல இரண்டல்ல
ஒன்பது முறை விளக்கினாலும்
ஒன்று கூட புரிவதில்லை
பட்டயப் படிப்பு முடிக்கவே இன்னும்
பத்துப் பாடம் பாக்கியாம்
தெரிந்ததிலிருந்து இதயம்
தடுமாறிப்போய் இருக்கிறேன்

"மணந்தால் மகாதேவி என்று வீராப்பு பேசி
மறுத்துப் பேசியோரை எல்லாம் ஏசி
சொந்த்ங்களின் சொல்லை மீறி
நானாகவேத் தான் போய் மாட்டிக்கிட்டேனா??????"

Friday, November 21, 2008

கேள்வியும் பதிலும் ..?!


கேட்க்கும் கேள்விகளுக்கெல்லாம்
கவனமாய் வந்து விழுகின்றன பதில்கள்

"கூடிக்கொண்டே போகிறதே விலைவாசி" என்றால்
கேரளாவை விட குறைச்சல் என்கிறார்கள்

"பேருந்துக்கட்டணம் அதிகம்" என்றால்
பஞ்சாபில் பாதிதான் என்கிறார்கள்

"மின்கட்டணம் கூடுதல்" என்றால்
மிசோரத்தில் முக்கால் வாசிதான் என்கிறார்கள்

"ராத்திரியெல்லாம் மின்தடை" என்றால்
ராஜஸ்தானில் மின்சாரமே இல்லை என்கிறார்கள்

எந்தக்கேள்வி கேட்டாலும்
இந்தியாவின் பெயரைச் சொல்லி தப்பிக்கிறார்கள்

ஆனாலும் இந்தக் கேள்விக்கு மட்டும்
அவர்களிடம் இருந்து பதிலே இல்லை

"ஒருவேளையாவது கஞ்சி
ஒழுங்காய் குடிக்கவேண்டும் இங்கே
ஒருவழியாவது சொல்லுங்கள்" என்றால்
விடை தெரியாமல் முழிக்கிறார்கள்
விழி பிதுங்கி நிற்க்கிறார்கள்

ஐந்தாண்டு என்று இருப்பதை
அவ்வப்போது என மாற்றிவிட்டால்
அந்தக் கேள்விக்கான விடைகள்
அவ்வப்போதே கிடத்துவிடும்!

Thursday, November 20, 2008

தனிக் குடித்தனத்தில்.....


திருமணம் முடிந்து
இருமனம் இணையும்
தேனிலவும் தாண்டியது
தவிர்க்கவே முடியாத அந்த
தனிக்குடித்தனமும் ஆரம்பமானது

எனக்கு அவளைப் பற்றி
எல்லாம் தெரிந்துவிட்டது
என்ற நினைப்பில் மண் விழுந்தது
எதிர்பாராமல் ஒருநாள்
எனக்கு அந்த உண்மை தெரிந்தது

அவளுக்கு எண்ணை பிடிக்கவில்லை!

அன்றுமுதல் எனக்கு உறக்கமில்லை
அனுதினமும் இதனால் வந்ததுதொல்லை
எவ்வளவோ சொல்லியும் புரியவில்லை
என்ன செய்யவேண்டும் தெரியவில்லை

பிரச்சினையை முடிக்க முடியாததால்
பாதிப்பின்றி முடிவெடுக்கத் தெரியாததால்
விட்டுக்கொடுக்கவும் திடமில்லாததால்
எதிர்த்துப்பேசவும் மனமில்லாததால்

எனக்கும் எண்ணை பிடிக்காமல் போனது!!

எங்களுக்கு வேறு வழியே இல்லை
இப்படியே தொடர மனமும் இல்லை
ஒன்றாய் உட்க்கார்ந்து பேசினோம்
ஒருமனதாய் முடிவு செய்தோம்
.
.
.
.
.
.
.
.
.
.
எண்ணை இல்லாமல்
தோசை சுட்டு சாப்பிட்டோம்.!!!

Wednesday, November 19, 2008

கண் கெட்டபின்...?


பாலர் பருவம்
பள்ளிப் பாடங்கள் எல்லாம்
பலாச்சுளை போல இனித்தது
ஆசிரியர் எல்லோரும்
ஆண்டவன் போலத் தெரிந்தனர்

அப்போது தோன்றியது
"அதிகம் படிக்க வேண்டும்"

கல்லூரி வாழ்க்கை
கண்முன்னே புதிய களம்
கண்காணிப்பு இல்லாத கானகம்
கட்டுப்பாடு இல்லாத பரந்த உலகம்
பேராசிரியர் எல்லோரும்
பேராபத்தானவராய்த் தெரிந்தனர்

வெளியாகிறதா புதிய திரைப்படம்
வேண்டுமே முதல் வரிசையில் இடம்
எடுத்துவைப்போம் கோரிக்கைகளை
எடுத்துக்கொள்வோம் விடுமுறையை

ஆகா அனுபவித்தோம் வாழ்க்கையை
அந்த இடத்தில் படிப்பா?
அது பற்றி தோன்றவே இல்லை!

அடுத்தக் கட்டம்
அங்கே பள்ளி இல்லை,கல்லூரி இல்லை
ஆனாலும் அனுபவப் பாடம்
அதுவாகவே கொஞ்சமாய்ப் புரிந்தது

புத்தியில் எதுவோ
புரிந்ததுபோலத் தெரிந்தது
"எதற்கும் கொஞ்சம் படித்திருக்கலாமோ?"

தற்போது கலவரமாய் நிலவரம்
தலை தப்பியே ஆக வேண்டும்
ஒரு வேலை இருந்தால் தான்
ஒருவேளை உணவுக்கு உத்திரவாதம்

கண் திறந்தார் கடவுள்
கிடைத்தது கதவு திறந்துவிடும் வேலை

முதல் நாள் வேலை
முதல் கதவு திறக்கிறேன்
முதலாளியாய் வந்தவர்
கல்லூரியில் எனக்கு
மூன்றாண்டுகளுக்குப் பிறகு சேர்ந்து
முறையாய் படித்து முடித்த
மூன்றாவது தெரு முத்து சாமி

கண்கள் குளமாகிறது
"கண்டிப்பாய் படித்திருக்கவேண்டும்"

Tuesday, November 18, 2008

திட்டம் பல தீட்டி....


குடும்பங்கள் சில கூட்டாய் சேர்ந்து
நெடுநாள் திட்டம் பல தீட்டி
இல்லாத தாத்தாவுக்கு
இதய நோய் என்று

அலுவலகத்தில் காரணம் சொல்லி
அவசர விடுப்பு எழுதிக் கொடுத்து
குதூகலமாய்க் கூடிக் கிளம்பினோம்
குடும்ப,இன்பச் சுற்றுலா

ஆரவாரமாய்க் குதித்து
அடித்துப்பிடித்து இடம் போட்டு
ஆசுவாசமாய் மூச்சு விட்டு
அமர்க்களமாய்க் கால் நீட்டி
அரைத்தூக்கம் தூங்கி எழுந்தபின்

கையில் பட்டது
பையில் உள்ள சாவி.

உள் மனதில் ஒரு சாத்தான்
உரக்கக் கத்தத் தொடங்கியது

"எதையோ மறந்துவிட்டாய்"

மறக்க வாய்ப்பே இல்லையே!
மறுமுறை சரிபார்த்து விடலாமா?

நகைப்பெட்டியைப் பூட்டி சாவியை
அஞ்சறைப்பெட்டிக்குள் வைத்தாகிவிட்டதே!

எரிவாயு உருளையை துண்டித்து
எரிந்த விளக்குகளை அணைத்தாகிவிட்டதே!

தண்ணீர்க் குழாயை மூடி
திறந்த பின்கதவை மூடியாகிவிட்டதே!

சுற்றுலா செல்வதை
சுற்றி உள்ளவர்களுக்கெல்லாம்
பெறுமையோடு சொல்லி
வயிற்றெரிச்சலைக் கிளப்பி

வீடு வந்து மறக்காமல்
சாவி எடுத்து பையில்
பத்திரமாய்ப் போட்டு
பதட்டமே இல்லாமல் கிளம்பி வந்தோமே!

ஆகா!! வீட்டைப் பூட்டினோமா?????

சுற்றுலா தொடங்கிய
முதல் நாளே என்
தலை சுற்றத் தொடங்கி விட்டது.

அவசியம் வேணும் வாரிசு அரசியல் !


இன்று சனநாயகநாட்டில்
இந்தத் தலைவர்களின்
வாரிசாகப் பிறந்ததாலேயே
வந்து சேர்ந்துவிடும் அந்த
அடுத்தத் தலைமைப் பதவியும்
அதற்கான முதன்மைத் தகுதியும்

இன்று அரசைத் தலைவர்கள் ஆள
நாளை அவர்களின் வாரிசுகள் ஆள
அன்று அடிமை நாட்டில்
நின்று போராடிய

வீட்டிற்கு சேர்த்துவைக்க மறந்த
வாரிசுகளை உயர்த்திவிட மறுத்த
நாட்டின் விடுதலைக்கும்
நமக்கும் சேர்த்து உழைத்த
தன்னலமற்ற தலைவர்களின்

வீட்டில் பிறந்ததாலேயே
வாழ்க்கை இழந்து
வாழ வழி தேடி
பிச்சை எடுக்கும்
பரிதாப வாரிசுகளின் நிலை

எத்தனை பேர் அறிவோம்?
அவர்களின் அவல நிலை
அகற்ற ஆவன செய்வோம்!
அதற்கு ஆவனம் செய்வோம்!!

இந்த வாரிசு அரசியலைப் போற்றுவோம்!!!

கடவுளும்,கந்து வட்டியும்


கந்துவட்டி வசூலித்து
கட்டைப் பஞ்சாயத்தில் காசு சேர்த்து
கவனமாய் பங்கு பிரித்து
காணிக்கையாய் உண்டியலில் செலுத்தி

கவலை மறந்து சிரிக்கிறான் மனிதன்
"பாவம் தொலைந்தது !" என்று

கடவுளும் சேர்ந்து சிரிக்கிறான்
"பாவம் அந்த மனிதன் ?"என்று

Monday, November 17, 2008

மற்றவர்களும்,என் இதயமும்


"இதயத் துடிப்பு அடங்குகிறது
இயன்றவரை செய்துவிட்டோம்
இன்று இரவு தாங்காது
இறைவனிடம் வேண்டுங்கள்"

அவசரச் சிகிச்சை பிரிவில்
தீவிர சோதனைகளுக்குப்பின்
சூழ்ந்து நிற்கும் சொந்தங்களிடம்
சொல்லிக்கொண்டிருக்கிறார் மருத்துவர்

என் இதயத் துடிப்பா?
நிற்கப்போகிறதா?
அது எப்படி நிற்கும்?

அயல் நாட்டு சாதனங்களாலும்
அனுபவப் பாடங்களாலும் கூட
சரியாகக் கணிக்க முடியவில்லையே
அவர்களை பார்த்தால்
எனகுப் பாவமாக இருக்கிறது

இதயமற்ற இறைவனிடம் என்
இதயம் காக்க வேண்டிக்கொண்டு
இரவு முழுவது கண் விழித்து
இதமாய் கவனிப்பார்கள் பெற்றோர்கள்

நலம் விசாரித்துவிட்டுச் செல்லும்
நண்பர்கள் கவலையோடு
நடுநிசிவரைக் பார்த்திருப்பார்கள்
நிகழ்வுகளை அசை போட்டிருப்பார்கள்

என்னுள் இருக்கும் இதயம்
எனக்காக மட்டுமே துடிப்பதாக
தவறுதலாய்க் கணித்துவிட்டு
தவிப்போடு காத்திருக்கிறார்கள்

அவர்களை நினைத்தால்
எனக்குப் பாவமாக இருக்கிறது

அவர்களுக்குத் தெரியாது

அது அதனுள் இருக்கும்
என் அவளின் இதயத்துக்காகத்
துடித்துக்கொண்டிருக்கிறது

பிறகு எப்படி நிற்கும்?

Saturday, November 15, 2008

காதலனை சந்திக்க ...


முகம் பார்க்காமல்
முடிந்தே விட்டது
முழுவதுமாய் ஒரு ஆண்டு
முப்பதாண்டு வேதனை எனக்கு

தடை எத்தனை வந்தாலும்
தண்டனை ஏதும் கிடைத்தாலும்
அந்திசாயும் நேரம் அவரை
சந்திக்கத்தான் போகிறேன் தோட்டத்தில்

அடக்கி வைத்த அத்தனையும்
அவர் முன்னால் அள்ளித் தெளிக்கப்போகிறேன்
பொத்திவைத்த மொத்தத்தையும்
அவர் முன்னால் கொட்டித் தீர்க்கப்போகிறேன்

என்னை தினமும் எதிர்பார்த்து
ஏமாந்து போயிருப்பாரோ?
எதிர்பாராமல் இன்று பார்த்ததும்
எழுந்து வந்து அணைப்பாரோ?

வந்துவிட்டேன் தோட்டத்திற்கு
வரவேற்காமல் அமைதியாய் அவர்
சொந்தங்கள் சூழ்ந்திருக்க
சலனங்கள் ஏதுமின்றி அவர்
அன்று பார்த்த அதே கண்கள்
இன்றும் என்னவோ சொல்லத் துடிக்கின்றன

கண்கள் சிவக்க அவர் அப்பா வலப்பக்கம்
கொடுவாள் மீசையோடு மாமா இடப்பக்கம்
கை கட்டி பின்னால் என் அப்பா
கவலையோடு அருகே என் தம்பி

சுற்றியிருக்கும் சுற்றத்தின் முன்னால்
சொல்லவந்ததை சொல்ல முடியாமல்
கொண்டுவந்த மலர்களை மட்டும் அவர்கள்
காலடியில் வைத்து விட்டு

ஒன்றல்ல இரண்டல்ல
ஒட்டு மொத்த சொந்தத்தையும்
ஒரே நாளில் இழந்துவிட்டு
தனி மரமாய் அத்தனை
துக்கத்தையும் சுமந்துகொண்டு

வந்த வழி திரும்புகிறேன் தனியே
அந்தத் தோட்டத்திலிருந்து !

கல்லறைத் தோட்டத்திலிருந்து !!

Thursday, November 13, 2008

எங்கே அவன் ?


புத்தாண்டு 2108 ல்
புதிய உலகம் கண்டுபிடிக்க
புறப்பட்டோம் பிரபஞ்சப்பயணம்
பறக்கத் தொடங்கி ஆண்டுகள்
பல பறந்து போயின

சூரியனிலிருந்து சக்தி பெற்று
சளைக்காமல் எங்களை
சுமந்து செல்லும்
சின்னஞ்சிறிய விண்கலம்

வானில் சூழல் புரிந்து
வந்துபோகும் திசை தெரிந்து
வரப்போகும் இடர் அறிந்து
வழி நடத்த நான்

என் சைகை புரிந்து
தன் கணினியுடன் இணைந்து
கண நேரம் இமைக்காமல்
கலம் செலுத்த அவன்

இருக்கை மட்டுமே எங்கள்
இருப்பிடமும் உலகமும்
இருவரும் இதுவரை
இரு நிமிடம் பிரிந்ததில்லை
இருந்தாலும் சேர்ந்தார்ப்போல
இரு நிமிடம் பேசியதுமில்லை

பூமியிலிருந்து கிளம்பி
சூரியனிலிருந்து விலகி
நிலவு தாண்டி
செவ்வாய் கடந்து
தொடர்ந்து ஒளிவேகத்தில்
போய்க்கொண்டே......... . . . . . . . . .

திடீரென உறக்கம் கலைந்தேன்
தடுமாற்றம் கலத்திலும் உணர்ந்தேன்
எதிர்பார்க்கவே இல்லை
எதிரே புதிய விண்கோளம்

ஒன்று ஒன்பதாக
ஒன்பது எண்பதாக
வெடித்துச் சிதறி
பெருகிக்கொண்டே இருக்கிறது
நெருப்பு மழையாக

உயிர் தப்ப வேண்டுமெனில்
உடனே கலம் திருப்ப வேண்டும்
உள்ளம் துடிக்கத் திரும்பினேன்

உடன் இருந்தவன் அங்கு இல்லை.

Wednesday, November 12, 2008

என்ன தான் செய்யலாம் ?


அலுவலகத்தில் அல்லல்பட்டு
அமைதி நாடிவரும்போது
எள்ளும் கொள்ளும் வெடிக்கும்
அதிரடிப் படையாய்.,

சிறுதவறு செய்துவிட்டு
செய்தி கசிந்து மாட்டிக்கொண்டு
கலவரம் எதிர்பார்த்து
கதவு திறந்து மெதுவாய்
காலடிவைத்தால்
அமைதியே உருவான
சமாதானப் புறாவாய்.,

சந்தோசச் செய்தியோடு
ஆனந்த அதிர்ச்சி தர
துள்ளிக்கொண்டு முன்னால்
திடீரென போய் நின்றால்
அதிர்ச்சி தன்னையேத்
திருப்பித் தாக்கும்படி
கொந்தளிக்கும் கலக பூமியாய்.,

என்னதான் செய்வான் அந்த
ஏதுமறியாத அப்பாவிக் கணவன்

(பி.கு :எதிர்ப்பு தெரிவிக்கும் சங்கத்தினர்
மனைவி என்று மாற்றிப் படிக்கவும்

இணைப்புப் படம்
நகைத்து ரசிக்க மட்டும்
நடைமுறைக்கு அல்ல )

Monday, November 10, 2008

அந்த ஐந்தாவது நபர் !


அம்மா மடியில் நான்
தலை வைத்திருக்க
அப்பா கால் அமுக்க
அக்கா விரல் சொடுக்க
அரைக்கண் திறந்து
அறையோர சன்னலைப் பார்க்கிறேன்
சாத்திய கதவுக்குப்பின்னால்
ஏக்கத்தோடு இரு கண்கள்
என்னையே பார்த்துக்கொண்டிருப்பது
எனக்கு மட்டும் தெரியும்

சனிக்கிழமை சாயங்காலம்
அப்பா வாங்கிவரும்
இனிப்புச் சேவுக்கும்,
அம்மா பாசத்தையும் சேர்த்து
கரைத்துவைத்த கஞ்சிக்கும்
அரைத்துவைத்த துவையலுக்கும்
அக்காவோடு சண்டைபோட்டு
வரிசையில் நிற்கும்
கடைக்குட்டி எனக்கு
பின்னாலிருந்து
நீட்டிக் கொண்டிருக்கும்
இரண்டு கைகள்
எனக்கு மட்டும் தெரியும்

அப்பாவின் கண்ணைக் கட்டிவிட்டு
அம்மா கதவுக்குப் பின் மறைய
அக்கா கட்டிலுக்கு கீழே பதுங்க
அவசரமாய் இடம் தேடி நான்
அலமாரி கதவு திறக்க
அங்கே எற்கனவே முக்காடிட்டு
ஒளிந்திருந்தது யார் என்று
எனக்கு மட்டும் தெரியும்

அப்பாவின் மிதிவண்டியில்
எங்களுக்கே இடமில்லாதபோது
விடாமல் பின்னால்
அடம் பிடித்தபடி
தொங்கிக்கொண்டே வரும் அந்த
ஐந்தாவது நபர் யார் என்று
எனக்கு மட்டும் தெரியும்

அப்பாவுக்கு நெஞ்சுவலி என
அவசர சேதி வர
புதை மணலில் நெஞ்சம்
பதைபதைக்க ஓடும்
என்னைத் தாண்டி
முன்னால் பதியும்
காலடித்தடங்கள்
யாருடையது என்பது
எனக்கு மட்டும் தெரியும்

எல்லோருக்கும் தெரியும்
என்குடும்பம் ஒரு கோவில் என்று

எனக்கு மட்டுமே தெரியும்
அந்த ஐந்தாவது நபர்
கடவுள் என்று.

Saturday, November 8, 2008

பத்தே பைசாதான் !


'அய்யா' என்ற அவலக்குரல்
அவசரமாய் வாசல் வந்தேன்

கையில் குழந்தையோடும்
கண்கள் நிறைய பசியோடும்
தட்டு நிறைய எதிபார்ப்போடும்
சுட்டெரிக்கும் வெயிலில்
எட்டுவயது சிறுமி பிச்சை கேட்டு

"போ!போ!!" என உறைத்து
புறங்கையால் இல்லையென மறுத்து
உறத்து கதவடைத்து
உள்ளே திரும்பினேன்
உள்ளம் அதிர திடுக்கிட்டேன்

மூடிய கையில் பத்துபைச்சாவுடனும்
திறந்த கண்ணில் அதிர்ச்சியோடும்
எதுசரி என்ற குழப்பத்தோடும்
என்முகத்தில் எதையோ தேடியபடி
எதிரே என் குட்டிக் குழந்தை

ஒருநொடியில் உறைந்துபோனேன்
மறுநொடியே உடைந்தும் போனேன்
நல்ல அப்பா என் உருவத்தை
நானே கலைத்துவிட்டேனா?

குற்ற உணர்வில் மூழ்கிப்போனேன்
குழந்தைமுகம் பார்க்கவே இல்லை

பலவற்றை இழந்திருக்கிறேன்
வாழ்க்கையில்
பதறியதே இல்லை

பத்தே பைசாதான்
பல நாள்
தூங்கவே இல்லை.

Wednesday, November 5, 2008

ஒய்யாரக் கொண்டை


கோடிகளைக் கொட்டி
குளிர்சாதன வசதியோடு
கோபுரமாய் எழுந்து நிற்கும்
கல்யாண மண்டபம்

லட்சங்களில் தோரணம் கட்டி
நோட்டுக்களால் கம்பளம் விரித்து
வாகனங்களால் நிரம்பி வழியும்
வரவேற்பு நுழைவாயில்

மிச்சம் வைப்பதையே அந்தஸ்த்தின்
உச்சம் எனக் கருதும்
தட்டை கையில் ஏந்திய
மேல்தட்டு மக்கள்
சாப்பாட்டு அறையில்

பட்டுச் சேலையில்
தொட்டுப் பேசாத
நாகரீக நங்கைகள்
நவீன மணமேடையில்

ஒட்டு சேலையில்
பட்டினியோடு
எல்லோருக்கும்
சமைக்கும்
சமையல்காரி
சமையலறையில் .

Tuesday, November 4, 2008

இரண்டாவது அம்மா


பெத்ததே
போதுமென
மொத்தமாய் போய்
சேர்ந்துவிட்டாள் அம்மா

அறியாத வயதில்
தெரியாத பொறுப்பை
புரியாமலேயே ஏற்று
பெரியமனுசி ஆகிப்போன அக்கா,

என் கை பிடித்துக் கூட்டிச் செல்ல
என் பை தூக்கி அழைத்துச் செல்ல
தன் படிப்பை இழந்த
தற்குறி ஆகிப்போன அக்கா,

ஆறு வயதுவரை என்னை
அரையிலிருந்து இறக்காமல்
தரையே தொடவிடாமல்
தலை தடவி பாதுகாத்த அக்கா,

கரையேற வழியில்லாமல்
காத்து நிற்கிறாள்
காரியம் கைகூடுமென
கனவோடு நிற்கிறாள்
எப்படியும் முடிப்பேன் என
எதிர்பார்த்து நிற்கிறாள்
என் முகம் பார்த்து
ஏங்கி நிற்கிறாள்.

என்னசெய்யப் போகிறேன் நான்?

ஒத்த மூக்குத்திக்கும் !
ஒருசோடி கம்மலுக்கும் !!

Sunday, November 2, 2008

மனிதன் என்ற ஒருவன்


விபத்தில் காயம் பட்டு
சாலையில் கிடப்பவரை
பாவப்பட்டுக் கொண்டே
கடந்து செல்கிறோம்

தெருவில் கல்லடிபட்ட நாய்க்காக
இரக்கப்பட்டுக் கொண்டே
இறைச்சிக் கடையில்
வரிசையில் நிற்கிறோம்

பத்தாயிரம் செலவு செய்ய மனமில்லாமல்
முப்பதாயிரம் நன்கொடை கொடுத்து
முதியோர் இல்லத்தில்
சேர்த்து வருகிறோம்

பசியோடு வருபவருக்கு
இல்லையென மறுத்து
பல கோடி காணிக்கையாய்
உண்டியலில் செலுத்தி
புண்ணியம் தேடுகிறோம்

வீடு தாண்டி வெளியே
உள்ள உறவு முறை
தெரியாமலேயே போனதை
பெறுமையாய் பேசுகிறோம்

உங்களுக்குத் தெரியுமா?

முன்பு ஒரு காலத்தில்
மனிதன் என்ற ஒருவன்
இருந்தான் என்று

Saturday, November 1, 2008

உண்மையைச் சொல்கிறேன்.


பூவில் தேன் உண்ட பட்டாம்பூச்சி
சிறகுகள் படபடக்க
விண் நோக்கிப் பறக்கையில்
அதன் வண்ணங்கள் சிதறி
சித்திரம் போல உதிர்கிறதே

கிழக்குச் சூரியனின்
காலைக் கதிரின்
வெளிச்சத்தில் உலகம்
நிமிடத்துக்கொரு நிறத்தில்
வானவில்லாய் தெரிகிறதே

விண்ணிலிருந்து விழும்
மழைத் தூறலின்
ஒவ்வொரு துளியிலும்
வெவ்வேறு வாசம் வீசுகிறதே

சுழற்றியடிக்கும் காற்றின்
சத்தத்தில் இருந்து
இதுவரை தெரியாத
மொழிகளின் அர்த்தங்கள்
பல எளிதாய் புரிகிறதே

ஆமாம் நண்பர்களே
அன்புத் தோழர்களே

நான் காதலிக்கப்படுகிறேன்

Friday, October 31, 2008

இடுக்கண் களையும் நட்பு ?


வறுமை சூழலில் நான்
வசதியாய் இருக்கிறார் நண்பர்
பிறந்தநாள் வாழ்த்துச் சொல்ல
அலைபேசியில்
அழைக்கும் போதெல்லாம்
அவரது மகள்தான்
மறுமுனையில்
"அப்பா குளித்துக்கொண்டிருக்கிறார்"

ஒரு வாரமாகவா ?
ஒன்றும் புரியவில்லை.
உண்மை ஏதேனும்
உங்களுக்குத் தெரிகிறதா ?

Tuesday, October 28, 2008

அம்மா


அம்மா
என் மனைவியை மருமகளாய்
ஏற்றுக்கொள்ளவே இல்லை
எனக்குத் தெரிந்து அவளிடம்
எதிர்மறையாகவே நடக்கிறாள்
ஏன் என்றே தெரியவில்லை

ஆனாலும் அம்மாவை
என்னால் எவரிடமும்
விட்டுக்கொடுக்க முடியவில்லை
என்னால் எப்படி முடியும்?

அம்மாவைப் பற்றி இந்த
அறியாத ஒன்றைவிட
தெரிந்தது நிறைய உண்டு
புரிந்தது இன்னும் உண்டு

முந்தா நாள் பார்த்திருந்தாலும்
இன்று புதியதாய் பார்த்ததுபோல
"மெலிஞ்சு போய்ட்டீயே அய்யா"
எனக் கேட்ப்பதில் உள்ள பாசம்
என்னுடன் இருந்து கவனிப்பவரை
கனிசமாய் காயப்படுத்தினாலும்
எனக்குப் புரியும்

சிகை கோதி
சாப்பிடவைக்கும்
சிரித்த முகத்துக்குப் பின்
குடிகார அப்பாவிடம்
அடுக்களையில்
வாங்கிய அடியும்
அடக்கிவைத்த அழுகையும்
எனக்குத் தெரியும்

தவிர்க்கமுடியாமல்
மஞ்சளை கழுத்தில் கட்டி
தாலி கழட்டி அடகு வைத்து
வட்டி மட்டும் மொத்தமாய் கட்டி
கலங்கி நொறுங்கி நின்றதும்
எனக்குத் தெரியும்

ஐம்பது ரூபாய்க்காகவும்
ஐந்து கிலோ அரிசிக்காகவும்
அறுவை சிகிச்சை செய்து
அறுபட்டுக் கிடந்ததும்
எனக்குத் தெரியும்

அந்த அரிசியில்
காய்ச்சிய கஞ்சியின் ருசி
இன்றுவரை என் தொண்டையில்
தொக்கி நிற்பதும்
எனக்கு மட்டுமே தெரியும்

பிறகு எப்படி முடியும்

Sunday, October 19, 2008

கலாம் !


மூழ்காதே உனக்குள்
முளைத்து வா வெளியே
புதிய உலகம் படைக்கலாம்

காத்திராமல் காலையில்
கிழக்கு நோக்கி நடந்து பார்
உலகின் முதல் சூரியன்
உனக்காக அங்கே காத்திருக்கலாம்

குட்டக் குட்டக் குனியாமல்
தடைப்பட்ட உரிமைகளை
தாழ்மையோடு கேட்டுப்பார்க்கலாம்

கிடைக்கவில்லையா கவலையில்லை
தலைநிமிர்த்தி தைரியமாய்
தடையுடைக்க போட்டுப்பார்க்கலாம்

அக்னிக்குஞ்சே உன் சிறகுகளை
அடக்கிவைக்காமல் விறித்து வா
முட்புதராய் மண்டிக்கிடக்கும்
மூட நம்பிக்கைகளை எரிக்கலாம்

கைபிடித்து அழைத்துச்செல்ல
நல்லவற்றை எடுத்துச்சொல்ல
தலைதட்டி நடத்திச்செல்ல
காத்திருக்கிறார் கலாம்

Saturday, October 18, 2008

சன நாயகம்:உள்ளே-வெளியே


வெளி நாட்டில் 10 வட்டிக்கு
100 கோடி கடன் வாங்கும்
நம்ம நாடு

அடுத்த நாட்டில் வறுமையென்றால்
80கோடி வட்டியில்லாமல்
கடனாய் கொடுக்கும்

பக்கத்து நாட்டில் பஞ்சமென்றால்
40கோடி கேள்விகேட்க்காமல்
இனாமாய் கொடுக்கும்

இங்கே சொந்த வீட்டையும்
எங்க சொத்துப் பத்தையும்
அடமானமா வச்சு
அம்பதாயிரம் கடனாக் கேட்டா

ஆயிரம் கேள்வி கேட்டு
அங்கே இங்கே அலையவிட்டு
சரியான ஆளாப் பார்த்து
சாமீனு கொடுன்னு கேட்டு
புரியாத சட்டம்சொல்லி சுத்திவிட்டு
கடைசியில் தலைய சொரிஞ்சிகிட்டு
கை நீட்டுதே நம்மகிட்டயே

Thursday, October 16, 2008

ஆன்-லைன் வர்த்தகம்?


கன்னியாக்குமாரியில்
இல்லாத பொருளுக்கு
காஷ்மீரிலிருந்து
பேரம் பேசி

விவசாயியிடம் விலைகுறைத்து
விநியோகத்தில் விலைகூட்டி
தரகர்கள் மட்டுமே தங்கள்
தரம் உயர்த்திக்கொண்டு போகும்

சீர்திருத்தம் என்ற பெயரில்
சாமானியர்களின் வாழ்க்கையை
சீரழித்துக்கொண்டிருக்கும் அது

ஆன்-லைன் வர்த்தகமா?
ஆப்-செய்யும் வர்த்தகமா! இல்லை
ஆப்பு வைக்கும் வர்த்தகமா!!

Wednesday, October 15, 2008

மாடி வீட்டு ஏழைகள்


சுழற்றியடித்த
சூறாவளி மழை
சிறுசிறு இழையாய் இன்னும்
தூறிக்கொண்டே இருக்கிறது

தாத்தாவின் காவலிலிருந்து
தப்பிவந்து தண்ணீருக்குள்
குட்டிக் கரணம் அடிக்கும்
குட்டித் தம்பிகள்

சேறும் சகதியும் காலுக்கு
செறுப்பாய் மாற கூட்டு சேர்ந்து
கும்மாளம் போடும்
குட்டிப் பாப்பாக்கள்

குதித்து வரும் தண்ணீருக்கு
குறுக்கே மணலில் அணைகட்டி
பக்கத்து வீட்டுப் பாட்டிகளோடு
பகை இழுக்கும் அக்காமார்கள்

கணக்கு நோட்டுகளை எல்லாம்
கப்பலாய் மாற்றி தெருவில் ஓடவிட்டு
அப்பாவின் அடிக்கு மாட்டாமல்
தப்பி ஒடும் அண்ணன்மார்கள்

பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள்
பால்கனியிலிருந்து ஏக்கத்தோடு
ஆரோக்கியம் சுகாதாரம் என்ற
ஆகாத பெயர் சொல்லி
அனைத்தையும் இழந்த
அந்த மாடிவீட்டுக் குழந்தைகள்

Monday, October 13, 2008

அக்கரைப் பச்சை


கொடுமையான நீண்ட தனிமை
கடுமையாய் தகித்தது
இடையில் நீ கிடைத்தாய்
இனிமை புகுந்தது
பிறகுதான் புரிந்தது
அதுவே சிறந்தது

தாமஸ் ஆல்வா எடிசனுக்கு இந்தியஅஞ்சலி


வருடத்துக்கு ஒருநாளில்
அவரின் பிறந்த நாளில்
இரண்டு நிமிடம் விளக்கு அணைத்து
இருளில் இருந்து
அஞ்சலி செலுத்துகிறார்கள்
அமெரிக்காவில்

வருடத்துக்கு இரண்டு நிமிடமல்ல
தினமும் ஆறரை மணிநேரம்
அமெரிக்கருக்கு
அஞ்சலி செலுத்துகிறோம்
இந்தியாவில்

பெறுமை கொள்வோம்.!

Sunday, October 12, 2008

அவிழாத முடிச்சு


எதிர்பார்த்து ஏமாந்த
மருமகள்
மாமியார் ஆனவுடன்
மருமகளின்
எதிர்பார்ப்பு புரியவில்லை
இது ஏன்
என்று தெரியவில்லை

ஏன்?


நேற்று போட்ட
தார்சாலை
நாளை மழைக்குத்
தாங்காது என்றாலும்
இன்று தோரணம் கட்ட
யாரோ தோண்டும்போது
வலிக்கிறதே
மனதில்.

கோழி இறகு-சொர்க்கத்தின் சாவி


பலநாள் யோசித்து
பதுங்கி இருந்து
திட்டம் போட்டு
தேர்வு செய்து
விரட்டிப் பிடித்து
இறகு பறித்து
தேவை இல்லாத
பாகம் விடுத்து
ஓரம் அமர்ந்து
காது நுழைத்தால்
அட! அட!!
தெரியுதே சொர்க்கம்!!!

வருங்காலத் தூண்கள் ?


ஒரு ரூபாய் அரிசி வாங்க
பை தூக்கி ரேசனுக்குப் போனால்
கூடவே சேர்ந்து போகுது மானமே.

ஓப்பனிங் சோ பாக்க
முந்தா நாள் ராத்திரியிலிருந்து
வாசலில் வரிசையில் நின்றாலும்
டிக்கட் கிடைத்தால் தான் அனந்தமே.

மோரு வித்து அம்மா
சேத்து வச்ச காசில்
யாருக்கும் தெரியாமல்
கை வைக்கும் போது அது
தப்புன்னே தோணலியே

அந்த காசில் பீரு வாங்கி
எல்லோரும் சேந்து குடிக்கும்போது
கடைசியில் கொஞ்சம் குறையும்போது
கேவலமாய்த் தோணுதே

நெஞ்சுவலி அப்பாவுடன்
கொஞ்சநேரம் கூட இருந்து
மருந்துகொடுத்துப் பார்க்க
ஆறுதலாய் உக்காந்து பேச
கொஞ்சங்கூட நேரமில்லியே

வெளிநாட்டுத் தூதரக
வாசலில் நாக்கு வரள
விசாவுக்காக நாள்கணக்கில்
வரிசையில் நின்னாலும்
நேரம் போனதே தெரியலியே
காத்திருக்கும் உண்ர்வே வரலியே

என்ன ஆயிற்று நம்
வருங்காலத் தூண்களுக்கு?

Tuesday, October 7, 2008

இலவச அழைப்பு


போக்குவரத்து நெரிசலில்,
விளம்பரப் பலகையிலிருந்து
அழைத்துக்கொண்டே
இருக்கிறாள் அவள்.
தன்னை மட்டுமே
அழைப்பதாய் எண்ணி,
வாய் பிளந்து,
வைத்த கண் எடுக்காது,
தொடர்ந்து செல்லும்
வாகன ஓட்டிகள்
சீக்கிரமே ' போய்' சேருகிறார்கள்
சம்பந்தமே இல்லாதவர்களையும்
சேர்த்துக்கொண்டு.

Monday, October 6, 2008

நியாயம் வேணும்-2


ஊரு பெரிசுங்க ஒண்ணா சேர்ந்து
ஆயிரமாய் செலவு செஞ்சி
வெளிஊர சுத்திட்டு வந்து
சூப்பர் டூருன்னு சொல்ராங்க

வயசு பசங்க நாங்க
ஒரு செலவும் செய்யாம
உள் ஊர சுத்திவந்தா
தண்டச் சோறுன்னு சொல்ராங்க

நீங்களே வந்து இந்த
அநியாயத்த கேளுங்க

என்ன தான் நடக்கிறது?


சாமானியர்கள் சாப்பிடும்
.பெருநகர சிற்றுண்டிச் சாலையில்

சாம்பாரில் குளித்த இட்லி,வடையை
.கரண்டி கொண்டு வெட்டி

சாதனையாக சாப்பிட்ட பின் வரும்
.தோசையை கை கொண்டு

சாப்பிடுவதை குழம்பிப்போய்
.பார்க்கிறான் படிக்காத பாமரன்.

சரிதானா இது? முதலிலேயே
.செய்து இருக்கலாமே இதை !

உங்களுக்காவது தெரியுமா?


முகம் கண்டு நேராக
ஒருமுறை பார்க்காதவள்,
நான் கடந்தவுடன்

கண் கொண்டு
எழுதிய கவிதைகள்
ஒரு ஆயிரம் என் முதுகில்.

படிக்க வழியில்லை
பரிதவிக்கிறேன்,
தெரிந்தால் சொல்லுங்களேன்
காத்திருக்கிறேன்.

Sunday, October 5, 2008

அப்பா எப்படி மாறிப்போனார்?


பணத்தைக் கொட்டி வளர்த்த அப்பா
பாசத்தைக் காட்டி ஆளாக்கிய அப்பா
பாதியிலேயே மறைந்துபோனார்

பரிதவித்து பாரினிலிருந்து
பாசத்தோடு பாவி மகன்
பறந்து வந்தான் பணத்தோடு

பரிவோடு துக்கம் விசாரிக்கும்
பங்காளிகளிடம் கலக்கத்தோடு கேட்டான்

''--'பாடி' எப்போ எடுத்தீங்க ?''

Saturday, October 4, 2008

சிக்னலில் தெரிந்த கறுப்பு நிறம்


பச்சை விளக்குக்காக சந்திப்பில்
பல நினைவோடு காத்திருக்கையில்

'அண்ணா' என்ற தங்கையின்
அவலக்குரல் கேட்டு

உலகமே நொடியில்
ஊஞ்சலில் சுற்றியதுபோல்

முன்னால் உள்ளதெல்லாம்
மஞ்சளாய்த் தெரிய

திடுக்கிட்டுத் தடுமாறி
திரும்பிப் பார்த்தால்

பிச்சைக் கேட்டு கை நீட்டி
பச்சிளங்குழந்தையோடு சிறுமி

நல்லவேளை அது தங்கையில்லை
நிம்மதியாய் மூச்சுவிட்டு

'இந்த சமூகத்தின்
இன்றைய நிலையை மாற்றி

ஒருநாள் ஏழ்மையை
ஒழித்தே தீரவேண்டும்' என்ற

சிவப்பு சிந்தனையோடு
சில்லரையைத் தேடும்போது

கையில் பட்டது
பையில் உள்ள பணமும்

பின்னால் உள்ள தர
இடமில்லாத கறுப்பு மனமும்.

Friday, October 3, 2008

முடி இழந்த மன்னர்கள்


சிறுகச் சிறுகச் சேர்த்து
சிறகு பொத்தி பாதுகாத்து

உணர்வுகளால் கட்டிக்காத்து
உருவாக்கிய உலகிலிருந்து

உபயோகமில்லாப் பொருளாக
உறவுகளால் உதறப்பட்டு

வீதியில் விதியை நொந்து
கதிமுடிந்த பின்பும் எதிர்காலம் தேடி

போகும்திசை தெரியாமல்
போகிறர்கள் அந்த
போக்கத்தப் பெரியவர்கள்

Tuesday, September 30, 2008

நியாயம் வேணும்


ஊரு பெரிசுங்க ஒண்ணா சேர்ந்து
ஆயிரமாய் செலவு செஞ்சி
வெளிஊர சுத்திட்டு வந்து
சூப்பர் டூருன்னு சொல்ராங்க

வயசு பசங்க நாங்க
ஒரு செலவும் செய்யாம
உள் ஊர சுத்திவந்தா
தண்டச் சோறுன்னு சொல்ராங்க

நீங்களே வந்து இந்த
அநியாயத்த கேளுங்க.

நானும்,எனது மகனும்,அந்த வேப்பமரமும்


முழுப்பரிட்சை முடிஞ்சு வரும்
மூணுமாச விடுமுறைக்காக - அன்று
ஏக்கத்தோடு காத்திருப்போம் நானும்
எங்க வீட்டு வேப்பமரமும்.

குரங்கு போல ஏறி
குதித்து விளையாடி
ஊஞ்சல் கட்டி ஆடி
மஞ்சள் பை முழுவதும்
வேப்பங்கொட்டை பொறுக்கி
வீறுநடை போட்டு
ஐந்து பைசாவுக்குவிற்று
ஐம்பது ரூபாய் சம்பாதித்ததுபோல
ஆனந்தமாய் சுற்றி வருவோம்
அந்த வேப்பமரத்தை.

பரிட்சை முடிந்து - இன்று
பள்ளிக்கு விடுமுறை.
அன்பு மகன்
ஆறே வயதில்
கண்ணாடி மாட்டி
கணினிக்குள்உக்கார்ந்து
புரியாத மொழியில் ஏதேதோ
புதியதாய் செய்துகொண்டே இருக்கிறான்.

வீட்டு வாசலில் அந்த
பரிதாப வேப்பமரம்
ஊஞ்சல் கட்டி ஆட
ஏறி விளையாட
கூடுதல் கிளையோடும்.,
வீதியெங்கும் வாரியிறைத்த
வேப்பங் கொட்டைகளோடும்
ஏக்கத்தோடு யாருக்காகவோ
காத்துக்கொண்டே இருக்கிறது .................