Sunday, September 16, 2012

க(தை)விதை : நனையுதே மாராப்பு ..!

வாழ்க உறவுகள் ....
மிக நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட இடைவெளிக்குப்பின் க(தை)விதை சொல்ல வந்திருக்கிறேன்..
மரபில் / குறளில் கொஞ்சம் மூழ்கிப் போனதால் .... இதிலிருந்து விலகியே இருந்திருக்கிறேன் .....இது மீண்டும் இன்று எனக்கு நினைவுக்கு வந்தது உங்களின் கெட்ட நேரமாக இருக்கலாம் .......அனுபவியுங்கள் ...:))


பச்ச ஒடம்புக்காரீ’ன்னு
பவுசாத்தான் படுக்க முடியுமா ..?

கொளுந்தியாளப் போல நானும்
கெழுத்தியப்போலக் கெடக்க முடியுமா ..?

சாவலை எழுப்பி வெரட்டி
சாலையைக் கழுவி பொரட்டி

தூக்கத்தை மொத்தமா வெலக்கி
முத்தத்தை சத்தமில்லாம ஒதுக்கி
தூக்கை சுத்தப்பத்தமாத் தொலக்கி

நீச்சத் தண்ணிய ஊத்திக்கிட்டு
பச்சப் புள்ளயத் தூக்கிக்கிட்டு

எட்டுபோட்டு நடக்கோணும்
காட்ட மேட்டக் கடக்கோணும்
தோட்டம் போயிக் கெடக்கோணும்......

பச்சப்புள்ளய அமத்திப்போட்டு
புல்லறுக்கப் போகோணும்

கஞ்சித்தண்ணி கண்ணுலபட
நெஞ்சிமுட்ட சொமக்கோணும்

ம்ம்ம்ம்ம்...............


நட்ட நடு சாமத்துல
கெட்ட சுடும் விடிகாலப்
பொழப்பைப் பத்துன நெனப்பால
அரைக்கோழித் தூக்கத்துல
பொரண்டு நான் படுக்கையில

பச்சப்புள்ள ஏங்கியழும்
உச்ச சத்தம் கேட்டுத்தான்

அதறிப் பதறி எந்திரிச்சேன்
அவசரமாத்தான் பாத்துவச்சேன்

ஒதட்டுப்பால் குடிச்சுக்கிட்டு
எதமாத்தான் தூங்குதானே என்ராசா ...

நெலம தெரியாம எரிஞ்ச
நாதாரி வயித்த அணைக்க
குண்டு சொம்புத் தண்ணிய
மொண்டு ஊத்துப் போகையில

ஏதோ உறுத்துன்னு
என்னான்னு நான்பாக்க...

பசிச்ச என்வயிறு
கீழே வறண்டுகெடக்க
எங்கோ பசிச்ச வயிறுக்காக
இங்கே நனைஞ்சுக் கெடக்குது
என்னோட மாராப்பு..........!

Friday, January 27, 2012

உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை : ஜெயிக்கப் போவது யாரு ?

26.01.2012:
அவ்வளவாக தொலைக்காட்சி நான் பார்ப்பதில்லை ... நேற்று சிறிது உடல்வலிபோல இருக்க ..சீக்கிரமாக படுக்கப் போனேன் ..செய்திச் சானலைத் தேடும்போது மிகத்தற்செயலாக ஜெயா தொலைக்காட்சியின் 'செயிக்கப்போவது யாரு ?' நடன நிகழ்ச்சியில் கவனம் பதிந்தது....

கருப்பு கருப்பாக குழந்தைகள் ,இளைஞர்கள் மேடையில் ........ மேகராஜ் தாண்டவன் / பெங்களூரு குழுவினர் .....

'அரவான்' படப் பாடலுக்கான நடனம் ... அரண்டுபோனேன் நான் ...... என்ன ஒரு வெளிப்பாடு ...... கடவுளே ... எனக்குள் ஒருவேகத்தை உருவாக்கிவிட்டார்கள் அந்தக் குழந்தைகள் ........ (படுத்துக் கிடந்தவன் .. நடனம் முடியும் நேரம் ... என்னையும் அறியாமல் நின்று கொண்டிருந்தேன் )

அரவான் படம் இன்னும் வெளியாக வில்லை ...அதன் காட்சி அமைப்புகள் எப்படி இருக்கும் என்று தெரியாது .... ஆனால் அது கண்டிப்பாக இவர்களின் வெளிப்பாடு அளவுக்கு இருக்காது என என்னால் உறுதியாகக் கூறமுடியும் ....

(ஒரு நொடியில் வந்துபோகும் பறவை, பாம்பு ,பல்லி, ஈசன் , எமன் போன்ற வற்றுக்கு அவர்கள் செய்யும் முத்திரை... பெரும் கலைஞர்களையும் மிஞ்சிய வேகம் அது .......

மேகராஜ் முகத்தில் தெரியும் ரெளத்திரம் .... வாய்ப்பே இல்லை ...இன்றைய பெரும் நடிகர்கள்கூட இவரிடம் படிக்க வேண்டும் ........

எனக்காக ஒரு 5 நிமிடங்கள் ஒதுக்கி ... இந்தக் குழந்தைகளை வாழ்த்துங்கள்

http://www.youtube.com/watch?v=iLwv_zK6xxI&feature=player_embedded

(#ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்திருக்கிறார்கள் ... உங்களின் வாழ்த்துகள் , அவர்களை உயர்த்தட்டும் )
(#என் வாழ் நாளிலேயே உடல் நலக் குறைவு வந்ததற்காக முதன்முதலாக மகிழ்வடைந்த தருணம் இது )
(#காலையிலிருந்து இணையத்தில் பைத்தியம் போல வலைபோட்டுத்தேடி ..இதன் சுட்டி இப்பொழுதுதான் கிடைத்தது )

குடியரசு தின வாழ்த்துகள் ! ..குடியரசு என்றால் என்ன ?
குடியரசுதின நல்வாழ்த்துகள்

குடியரசு என்றால் என்ன ?

குடியரசு நாளே முழுமையாய் நாம்நம்
விடுதலையைப் பெற்றடைந்த நாள்
(#என்குறள்)

ஒருவிளக்கம் :
( #என்போன்ற தெரியாதவர்களுக்கு மட்டும் )

1947 ஆக., 15ல் சுதந்திரம் பெற்ற போது, பிரிட்டிஷ் அரசு இந்தியாவுக்கு விடுதலை என்ற பெயரில் டொமினியன் அந்தஸ்து தான் வழங்கியது
(இது விடுதலைக்கான ஆரம்ப அறிவிப்பு வெளியான நாள் )
(#டொமினியன் =ஆங்க்கிலேய மேலாதிக்கத்துக்கு உட்பட்ட சுய ஆட்சி. இதன்படி நாட்டின் பாதுகாப்பு, வெளியுறவு கொள்கை ஆகியவற்றை அவர்கள் தான் நிர்வகிப்பர். அதன்படி, பிரிட்டிஷார் சார்பில் நியமிக்கப்பட்ட கவர்னர் ஜெனரல் தான் நாட்டின் தலைவராக இருப்பார்).

விடுதலைக்குப் பின், நம்மை நாமே ஆளும் வகையிலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சியாளர்கள் தங்கள் விருப்பத்துக்கு செயல்படும் வாய்ப்புகளைக் கட்டுப்படுத்தவும் ,83 நாடுகளின் அரசியல் சட்டங்களை அராய்ந்து , தேர்ந்து , திருத்தம் செய்து இந்திய அரசியலமைப்பு புதியதாக உருவாக்கப்பட்டது . அந்த அரசியலமைப்பு, 1949 நவ., 26ல் அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு 1950, ஜன., 26ல் நடைமுறைக்கு வந்தது. பிரிட்டிசாரின் கவர்னர் ஜெனரல் பதவி நீக்கப்பட்டு, புதிதாக மக்கள் தேர்ந்தெடுக்கும் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஜனாதிபதி பதவி(மறைமுகமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படும்) உருவாக்கப்பட்டது.
இந்தியக் குடியரசு உருவானது
(இதுதான் உண்மையான / முழுமையான விடுதலை நாள் )


வாழ்க உறவுகள்