Sunday, November 28, 2010

உங்களுக்கும் தெரியாத ஒன்று....! உங்களின் காலடியில்......!!


தண்ணீரில்லா அந்தக்

கிணற்றிலிருந்து

மீடகப் படுகிறது

ஒரு உப்பிய உடல்.......


சுற்றிலும் சுற்றங்கள்....

கண்ணீர் தேங்கிய கண்கள் ...

கவலை தோய்ந்த கணங்கள்...


எல்லாம் முடிந்து

எங்கோ.....

அது எரியூட்டப்பட்டு

காற்றில் கரைந்தபின்பும்


இங்கே......

வெறுமையால் நிறைந்த

அந்தப் பாழும் கிணற்றின்

கைப்பிடி சுவரையும் தாண்டி


கவனிப்பாரில்லாக் கவலையுடன்

பொங்கிவழிந்து கொண்டிருக்கின்றன .........

‘அதோடு

சேர்ந்து விழுந்த

கரைசேராத சோகங்களும்..

அவிழாத முடிச்சுகளும்...


கொஞ்சம் கவனியுங்கள்...


உங்களின் காலடியிலும்

இருக்கக்கூடும்

இதுபோல

ஏதாவது ஒன்று ......!


Friday, November 26, 2010

தேவையொரு உடனடித் தீர்வு.......!


அரித்த முதுகினைச்

சொறிந்த விரல்களின்

நகக் கண்களில் சேர்ந்திருந்த

அழுக்கினைக் கண்ணுற்ற உடன்...


அகம் கலங்கியதனை

எனக்கு நேர்ந்த மிகப்பெரிய

இழுக்கெனவேக் கருதுகிறேன் நான்....


எப்படியிதுவரை கணிக்காமல் இருந்தேன்?

எதனாலிதை கவனிக்க மறந்தேன்?


குற்ற உணர்வென்னைக்

விடாமல் குதறியெடுக்க


நடந்த தவறை இனியொருமுறை

நிகழாமல் தடுக்கும்

முயற்சியில் என்னை

முழுமூச்சில் இறக்குகிறேன்......


இதோ

தேடி எடுத்துவிட்டேன்...


தொலைந்துபோன அந்த

நகவெட்டியை....


.


Wednesday, November 24, 2010

இதுவும் ஒரு தொடர்கதையாகக் கூடும்..........!


ஊரடங்கிய நடுஇரவில்

முகம்தெரியாத நள்ளிருளில்

தலையணையுள் முகம்புதைத்து

அழுகையுள் அமிழ்ந்து

கொண்டிருக்கிறேன் நான்...


எதிர்பாராத வேளையில்

என்முதுகைத் தடவிவிட்டு

தலையை வருடிவிட்டு.......


துக்கம் கரைந்தபின்


ஏன் ? என்று கேட்ப்பாள்

எனநான் எதிர்பார்த்த வேளையில்

கைகளை மடித்து

தலைக்கு வைத்து

தூங்கிப்போகிறாள் அம்மா...


ஆச்சரியமாய் அவளைப்

பார்த்துக் கொண்டிருக்கிறேன்...


கொதிக்கும் ஆவியில்

வேகும் இட்டிலியை

ஆள்க்காட்டி விரலால்

குத்தி சோதித்து

வெறும் கையால் எடுத்து

எனது தட்டில் வைக்கிறாள் அம்மா


ஆச்சரிமாய் அவளைப்

பார்த்துக் கொண்டிருக்கிறேன்...


தட்டிலதை

துண்டாக்கும் வேளையில்.....

விரல்களைத் தாக்கிய சூட்டில்

கைகளை உதறி பதறியதைத்

தவறவிட்ட அந்த நொடியில்....

உச்சியில் அடித்தார்போல ஒன்று

நச்சென்று உறைக்கிறது எனக்குள்......


அதுவரையிலும்

ஆச்சரியமாகவே தெரிந்த

அமைதியான அம்மாவை.......

இப்போது முதல்

அதிர்ச்சியோடு

பார்க்கத் துவங்குகிறேன் நான்....


"காயங்களால்

உள்ளும் புறமும் காய்த்து

எல்லாமும்

மரத்துப் போயிருக்கிறாளோ

அம்மா..........?!"


( நன்றி : கரு:- ப்ராங்ளின்குமார், நாணற்காடன்)

.

Tuesday, November 23, 2010

தேடுகிறேன் ... தேடுகிறேன் ...தேடிக்கொண்டே.........!


காடெல்லாம் தேடியும்

மேடெல்லாம் ஓடியும்

தவத்தினை நாடியும்


கோவிலைச் சுற்றியும்

ஆலயத்தைத் தட்டியும்

பள்ளியில் முட்டியும்


கடவுளைக் காணும்

வழியெதுவும் தெரியாமல்

நித்தமும் எனது

சித்தம் கலைந்து சிதறவே...


எல்லாம் உதறி

போதுமென்ற நிலையில்

வெளியேறும் வேளையில்

எதிர் நிலையிலுள்ள

கண்ணாடியில் தெரிந்து

மறைகிறது......


எனது பிம்பம்.......

.
(பி.கு : படம் நானில்லை :)


Monday, November 22, 2010

ஏன்?..எதற்கு??....எப்படி???


அனைவரும் கிளம்பியபின்

அத்தனையும் அணைத்து

அலுவலகம் முடித்துக் கிளம்ப

எப்படியும் அரைமணி ஆகிவிடும் ....


ம்ம்ம்ம்....


பாப்பாவின் பத்தாவது

பிறந்த நாள் கொண்டாட்டம்

பரபரப்பாய் முடிந்திருக்கும் ....


இப்போதே பத்தாகப் போகிறது

அரக்கப் பரக்க விரைந்தாலும்

இன்னும் அரைமணி தாண்டிவிடும்


பதட்டமாய் இருக்கிறது எனக்கு...


ஏங்கிப் போயிருப்பள் அவள்.....

தூங்கிப் போகும்முன் முன்நின்று

சிரிக்க வைத்துவிட வேண்டும்...

நெற்றியில் முத்தமிட்டுவிட வேண்டும்


மிகவும் பதட்டமாய் இருக்கிறது எனக்கு....


வேகவேகமாய்க் கதவடைத்து

அவசர அவசரமாய் படிஇறங்கத்

தொடங்குகிறேன் நான்....


எதிர் கீழே

மெல்லிய இருளில்

மங்கிய உருவில்

கலங்கிய முகத்துடன்

ஒரு நிமிடம் நிற்க

சொல்லி கெஞ்சலாய்

சைகை செய்த படியே

கீழ்ப் படியிலிருந்து

மேலேறத் தொடங்குகிறாள் அவள்


பலநாள் பழகிய முகம்.......

மிகமிக அறிமுகமான உருவம்.......


இவர் யாராய் இருக்கும் ?

இங்கே யாரைப் பார்க்க ??

இந்த நேரத்தில் எப்படி ???


உள்ளே கேள்விகள்

வளையமிடும் வேளையில்

பாப்பாவின் நினைவுகள் தூண்டிலிட.....


குடையாய் சுருங்கிய புருவங்களுடன்

அவசரமாய் அவளைக் கடக்கிறேன்


அந்த நொடியில்

திடுக்கிட்டுப்போய் நிற்கிறேன்


வாசம் ....

அக்காவின் வாசம் ...

பத்தில் பறந்துபோன

பாசமிகு அக்காவின் வாசம்....


இந்த வயதிலிருந்தால்

இப்படித்தான் இருப்பாள் அவள்


அதிர்ந்து திரும்புகிறேன் ...


அங்கே யாரும் இல்லை

அருகில் ஒருவரும் இல்லை


ஒருவேளை மேலேறிச் சென்றிருக்கலாம் ?

அல்லது வெறும் பிரம்மையாய் இருக்கலாம் ??


ஆராய நேரமின்றி

ஒரு நொடி தாமதித்து

என்னையே தேற்றிக் கொண்டு

தாவி இறங்கி தரையைத் தொடுகிறேன் ....


ஒரு நொடியின்

நூறில் ஒருபங்கு

நேர இடைவெளியில்

என்னையும் முந்திக்கொண்டு

எனது இருசக்கர வாகனத்தின்


மேலேறி........

நகராமல் நிற்கிறது

நகரப் பேருந்து ஒன்று ......!

.

Wednesday, November 17, 2010

காதல் : இதில் எது வெற்றி ...????

அடர்ந்த யோசனையுடன்

தொடர்கிறதென் திட்டங்கள்....

மொத்தமாய் அவளிடம்

தோற்றுப் போகும்

முழு முயற்சியில் இருக்கிறேன் நான்......


என்னைபோலத் தானே

இருப்பாள் அவளும்........?!


தெரிந்துகொள்ளும் ஆவலில்

தேடுகிறேன் அவளுக்குள் ...


அடர்ந்த யோசனையுடன்

தொடர்கிறதவள் திட்டங்கள்.......

எப்படியும் என்னை

வென்றுவிட வேண்டும் என்ற

பெரும் முயற்சியில் அவள்.....!!!!!!!


.


Tuesday, November 16, 2010

எனக்குப் பயனில்லாதது தான் ......


பசையில்லா வறண்ட

கரிசல் நிலத்தைப்

பரவலாய் ஆக்கிரமித்திருக்கிறது

பசுமையாய் கருவேலங்காடு.....


அடிமுதல் கலக்கும்

மிரட்டும் தோற்றத்துடன்

கூரிய முட்களும்

பாரிய கிளைகளுமாய்

பிரமாண்டமாய் காடு

என்கண் முன்னால்...


பயனில்லாத அதனை

பங்கம் ஏதுமின்றி

எப்படி அழிக்கலாம்

என்ற சிந்தனையில் நான்

இருக்கும் வேளையில்.....


என்னையும் தாண்டி

சருகொன்றைக் கொத்தியபடி

கருவொன்றைச் சுமந்தபடி

கூடுகட்ட இடம்தேடி

அந்தக்

காட்டுக்குள் மறைகிறது

சிட்டுக் குருவி

ஒன்று ..............

.

Saturday, November 13, 2010

இறுதியில் கிடைக்கும் இரண்டில் ஒன்று !
கிடைக்கக் கூடும் விடை ...!

சிறைப் பிடிக்கப்பட்ட கோபத்தில்

சீற்றத்தோடு சுற்றிவருகிறது

கூண்டுக்குள் சிங்கம் ஒன்று....


விடுதலையின் வேகத்தை

தூரிகையால் சிறைபிடிக்க

தீரத்தோடு காத்திருக்கிறான்

தூரத்தில் ஓவியன் ஒருவன்


சிதைந்த ஓவியனோ !?

அல்லதொரு

சிறந்த ஓவியமோ !?........

இரண்டில் ஒன்று

இறுதியில் கிடைத்துவிடும்....


கேயாஸ்தியரியில் (chaos theory)

புதைந்திருக்கக் கூடும்

உங்களுக்கான உறுதியான விடை .....!


.


முளையிலேயே கிள்ளப்பட்ட........


அவர்களைப் போலவே................... :

அவர்களைப் பின் தொடர்ந்தும்

அவர்களின் முன் தொடர்ந்தும்

அவலத்தை விலக்கச் சொல்லியும்

அசிங்கத்தை விளக்கிச் சொல்லியும்

அவர்களின் முகத்தினை நோக்கி

அரற்றிக் கொண்டே இருக்கிறேன் நான்


எனது அரையின்மேல்

குவித்த பார்வையுடன்

குவிந்த புருவங்களுமாய்....

குறையெதையோக் கண்டதுபோல்

குனிந்து கிசுகிசுப்பாய்

தங்களுக்குள் பேசிக் கொள்வதிலேயே

கவனமாய் இருக்கிறார்கள் அவர்கள்......


வலிக்கும் மனதுள்

வழி என்றெதுவும்

புலப்படவில்லை எனக்கு...


புலம்பலை விடுத்து

அவர்களைப் போலவே

கோவணமின்றி

உலாவத் தொடங்குகிறேன்

நானும்.............!


.

ஆயிரத்தில் ஒன்றல்ல நான் .....!

எனது பார்வையில் .....

சிறப்புத் திறனாளிகளுக்கு

சமர்ப்பணம் )


கண்வழியே தெரிந்து

நீங்கள் அறிந்த யானை

உங்கள் அருகிருக்கும்

ஆயிரம் பேருக்கும்

அப்படியேத்தான் தெரியும்


செவிவழி அறிந்து

உணர்வினால் புரிந்து

எனக்குள் படிந்திருக்கும்

யானையின் வடிவம்

எனக்கு மட்டுமே சொந்தமென்பது

யாருக்காவது தெரியுமா !


எனக்குள் கருவாகி இருக்கும்

இந்த உலகின் உருவத்தை

எந்தவகைக் கருவியாலும்..

எந்தவித அறிவியலாலும்...

அறிந்து கொள்ள இயலாதென்பது

உங்களுக்குத் தெரியுமா !!


எனக்கான உலகை..

நான் உணரும் உலகை..

மற்றொருவர் உணருவதற்கான

வாய்ப்பெதுவும் இனிமேலும்

வாய்க்கப் போவதுமில்லை ...

இது எனக்கானது ....

எனக்கே எனக்கானது ....


கடலின் அலையைப் போல்

விரலின் ரேகையைப் போல்

நெருப்பின் சுடரைப் போல்

தனித்திறன் கொண்டவன் நான்...


உங்களைப் போல நான்

ஆயிரத்தில் ஒன்றல்ல ...


அறிந்துகொள்ளுங்கள் ...


நான்...

ஆயிரத்து ஒன்று ...!


Tuesday, November 2, 2010

பார்......இது(வும்) ஒர் உலகம்....!முற்றிலும்....

தன்னை மறந்த நிலையில்

கையில் வழியும் பணத்தோடு...

கூட்டத்தின் நடுவில் அமர்ந்து ....

தொடர்பில்லாமல் எதையோ

தொடர்ந்து உளறிக் கொண்டே

இருக்கிறான் அவன்.....


சுற்றிலும்....

தலை சுற்றிய நிலையில்

பையில் வழியும் வெறுமையோடு...

மேலும் எதையோ எதிர்பார்த்து...

தொடர்ந்து எதற்காகவோ

கைதட்டிக் கொண்டே

இருக்கிறார்கள் அவர்கள்......

அருகே.....


முற்றிலும்....

காலியாகிக் கிடக்கிறது

ஒரு கோப்பை.....


சுற்றிலும்....

பறந்து கொண்டிருக்கின்றன

பல ஈக்கள்.........

.