Showing posts with label முதுமை. Show all posts
Showing posts with label முதுமை. Show all posts

Sunday, August 23, 2009

இந்த வருட சாகித்திய அகாடமி விருது எனக்கு...


””மொரையோட அவங்கக்குடிக்கிற
அரைப்போனி பால்காப்பிக்காக
அலைபாயிதே எம்மனசு

டூரு போகும் குடும்பத்தோட
ஊரு சுத்திவர தவிச்சுபோய்
தெருவிலயே நிக்குதே எம்மனசு

ஊஞ்சலில தொத்திக்கிட்டு
உந்தித்தள்ள ஆளில்லாம
சுத்தும்முத்தும் பாக்குதே எம்மனசு

நடுத்தெருவு நண்பனோட
நாள்கணக்காப் பேசனுமுன்னு
நெஞ்சுமுட்டி ஏங்குதே எம்மனசு

பக்கவாதம் வந்து நொந்து
படுக்கையிலக் கெடக்கேனே
போத்திவிட ஆள்தேடுதே எம்மனசு

காத்திருக்கும் சேதியது
காலனுக்குப் போய்ச்சேரும்
காலத்துக்குக் காத்திருக்கே எம்மனசு

வாழ்க்கை இன்னும் நீளாம
வதைபடாமப் போய்ச் சேரும்
பாதையையும் நாடுதே எம்மனசு “”


இதோ
அன்பு உள்ளங்களே !
அருமை நெஞ்சங்களே !
உங்கள் முன் நான் ...
உறுத்தும் உண்மையோடு நான் ...

உள்ளத்தின் உள்ளே உள்ளதை
உள்ளபடி சொல்ல முடியாமல்
வெளியேயும் சொல்ல இயலாமல்
வெளியே திண்ணையில் வீழ்ந்த
வாழ்ந்து கெட்ட மனிதர்களின்
வார்த்தைகளுடன் உங்கள் முன் ..

வாழவைத்த வாலிபம் இங்கே
வீழ்ந்துகிடக்கிறது வயோதிகத்தில்..
வாழவைத்தவரை எதிர் நோக்கி ?
வாழவைப்பாரா என நோக்கி !

கோரிக்கை ஒன்றாவது
சேருமிடம் சென்றுவிட்டால்.....

ஒரேஒரு மனதாவது
ஆறுதல் பெற்றுவிட்டால்......

அதுவே எனக்கு
இந்த வருடத்துக்கான
சாகித்ய அகாடமி விருது !

வாழ்நாள் முழுதும்
விருது எனக்கேக் கிடைக்க
வேண்டி நிற்கிறேன் உங்களை !

Wednesday, June 3, 2009

ரெண்டு தடவ கரண்டு போகணும் சாமி...


கரண்டு எப்போ போவும்..........?
--------------------------------

என் வீட்டுக் கூடத்துல
என்னென்னெவோ நடக்குது
நட்ட நடுவீடு இப்போ
நாசமாகிப்போய்க் கெடக்குது

"விடிஞ்சும் விடியாதப்பவே ஒருத்தன்
விபூதித் தட்டோட வாறான்!
கடவுளே இல்லேன்னு அடுத்தவன்
கத்திக்கிட்டே போறான்!!

மாமியாரும் மருமகளும்
மோதிக்கிட்டே இருக்காங்க !
மருமகனும் மச்சினரும்
மொறச்சிக்கிட்டேத் திறியறாங்க !!

வரதட்சணயக் கேட்டு
வந்தவள உருட்டுறாங்க !
வந்த எடத்துல பெரியவங்கள
வாய்க்குவந்தபடி மெரட்டுறாங்க !!

பெருசுகள சத்தமில்லாம வெளியேத்த
பெருசா பாதபோட்டுத் தாராங்க !
சொத்த மொத்தமா சேத்துப்புடுங்க
திட்டம் போட்டுப் போறாங்க !!

அரகொறயா சுத்துறானுங்க !
அவுத்துப்போட்டு அளைறாளுங்க !!
நாலுபேரா சேந்து புகைப்பிடிக்காங்க !!!
நடுவீட்டுல வந்து தண்ணியடிக்காங்க !!!!

களவாணிபயலுவ ஒண்ணா சேந்து
கொள்ளை அடிக்க வாறான் !
கொலைகாரன் பயமே இல்லாம
கொன்னு போட்டுட்டு போறான் !!

வாய மூடியேப் பேசச் சொல்லுதான் !
வார்த்தய சாச்சி எழுதச் சொல்லுதான் !!
செங்கலவச்சு சாதகமும் சொல்லுதான் !!!
செவப்புக்கல்லு பாதகமுன்னு சொல்லுதான்!!!!"

கண்டவங்களயும் பாத்துக்கிட்டே
கஞ்சி தண்ணிக்கூட தரமாட்டாங்க
டீவிப்பொட்டி அதுவா அணஞ்சாத்தான்
பாவி என்னயக்கொஞ்சமாவது கவனிப்பாங்க

திண்ணயில இருக்கிற எனக்கு
தெனமும் இதே ரோதணைதான்
கரண்டு எப்போ போகுமுன்னு
கடவுள வேண்டிக்கிட்டே இருப்பேன்

அந்த நூத்திசொச்ச நிமிசம்
அதுதான் எனக்கிங்கே சொருக்கம் !

" 'ஏஞ்சாமி' உங்கிட்டதான்
எனக்காக அந்த வரம் கேக்கேன் !
சொருக்கம் ரெண்டுமொற வந்துபோக
சுறுக்கா ஒருவழி செய்ய மாட்டீயா ?"

Friday, October 3, 2008

முடி இழந்த மன்னர்கள்


சிறுகச் சிறுகச் சேர்த்து
சிறகு பொத்தி பாதுகாத்து

உணர்வுகளால் கட்டிக்காத்து
உருவாக்கிய உலகிலிருந்து

உபயோகமில்லாப் பொருளாக
உறவுகளால் உதறப்பட்டு

வீதியில் விதியை நொந்து
கதிமுடிந்த பின்பும் எதிர்காலம் தேடி

போகும்திசை தெரியாமல்
போகிறர்கள் அந்த
போக்கத்தப் பெரியவர்கள்