Showing posts with label உளவியல். Show all posts
Showing posts with label உளவியல். Show all posts

Friday, October 1, 2010

வழுக்கல்கள் : இரண்டு ..........!


நடைபாதை ஓரத்தில்

தடம் வழுக்கியே

தடுமாறிச் சரிகிறேன் நான்..


எதிர்பாராத தருணமதில்

எங்கிருந்தோ வருகிறாள அவள்...


அறிமுகம் இல்லாத என்னை

பதறித் தாங்குகிறாள்....


தோள்களைப் பற்றி என்னைத்

தூக்கி நிறுத்துகிறாள்.....


பிடறியை உதறிய படியே

திடுக்கென விழித்துக் கொள்கிறது

போர்த்தியிருந்த பசுத்தோலுக்குள்

உறங்கிக் கொண்டிருந்த


என் மனம்........


.

Sunday, August 29, 2010

அசையாமல் இருக்கிறாள் அவள்.....!


அப்போதிருந்தே
குத்துக்காலிட்டு அசையாமல்
அமர்ந்திருக்கிறாள் அவள்

கால்களை மடக்கி
கைகளால் இறுக்கி
முகத்தினை மொத்தமாய்
இடுக்கினுள் புதைத்து
அசையால் இருப்பது
போலத்தான் தோன்றுகிறது

ஆனால்.....

இணைந்திருந்த பாதங்களில்
மெல்ல அசைந்து கொண்டிருக்கிறது
ஒரு பெருவிரல் மட்டும்

கோர்த்திருந்த கைகளின்
நடுவில் சிக்கிய காற்று
மூச்சுவிட முடியாமல்
திணறியபடியே வெளியேற
முயன்று கொண்டிருக்கிறது
அதனால் முடிந்த மட்டும்

அழுந்த மூடியிருந்த
இமைகளுக்குள் இடவலமாய்
நகர்ந்து கொண்டிருக்கின்றன
கருவிழிகள் இரண்டும்

திடீரென உருவாகி
காய்ந்துபோன தடத்தில்
உருண்டு பயணித்து
உதடுகளைத் தாண்டி
தொடைகளில் வழிந்து
தரையில் மோதி
சிதறித் தெறிக்கிறது
கண்ணீர்த் துளிகள் இரண்டு ....

என்னதான் நினைத்திருப்பாள் அவள் ?


.

Monday, August 9, 2010

நகல்தானே நீயும் ......!


நிறைவேறாத ஆசைகளை அம்மாவும்
நெடுங்காலக் கனவுகளை அப்பாவும்
அவரவர் விருப்பங்களை ஆசிரியரும்

பிறழாமல் பிரதியெடுத்து

அவன்

முதுகில் மிதித்தேறி
மொத்தமும் சிதறாமல்
விதைத்து வைக்கின்றனர்

மூளைக்குள் குழிதோண்டி
மூலைகூட விடாமல்
புதைத்து வைக்கின்றனர்

நெருக்கமாய் சூழ்ந்திருக்கும்
நகல்களின்
இறுக்கும் நெறுக்கத்தில்
கருவிலேயே
உருவாக முடியாமல்

நொறுங்கிப் போகிறது
ஒரு சுயம்..............

.

Wednesday, August 4, 2010

நானும், எனது தட்டுகளும்.....!


தள்ளாடும் தராசின்
தட்டுகளின் பாரத்தினை
சம நிலைப்படுத்திக் கொள்ள
பலவகையான கற்களோடும்
பலவிதமான கணக்குகளோடும்
படபடப்பும் பதட்டமுமாய்
இருக்கிறார்கள் அவர்கள்……….

பரபரப்பு ஏதுமின்றி
இருக்கிறேன் நான்………….

எப்போதும்
சமமாகவே இருக்கின்றன
காலியாய் இருக்கும்
எனது தட்டுகள்........!

.

Friday, July 30, 2010

'தங்க’க் கூடு...............!



தொடுவானம் வரையிலும்
எட்டுத்திக்கும் பரந்திருக்கும்
கடல் போன்றதொரு
தோப்பு............!

சுற்றிலும் வேலியிட்டு
சுத்தமாய்க் களை பறித்து
அற்புதப் பராமரிப்பில்
ஆயிரம் ஆயிரம்
மரங்கள்……..!!

வேலிக்கு வெளியே
தன்னந்தனியாய்
நிற்கும் ஒற்றைக்
கருவேல மரத்தில்
கூட்டம் கூட்டமாய்க்
கூடுகட்டி இருக்கின்றன
பறவைகள்…………!!!

.

Wednesday, July 28, 2010

உண்மை உரை(றை)க்கும்.......!


எல்லாம் முடிந்து சிதையில்
எரிந்து கொண்டிருக்கிறது
ஒரு உடல்

சுற்றிலும்
குளமாய் நிறைந்து
தளும்புகின்றன கண்கள்

புகையாய் மண்டும்
நினைவுகளால் சில....

மண்டிச் சூழும்
புகையால் பல.......
.

Friday, April 9, 2010

. . . . . .ஏன் . . . . . . . .?


அவனது நிறைகள் ஈர்க்க
என்மனம் அதனுள் லயிக்க
விரும்பி அவனை நோக்கி
நகர ஆரம்பித்த வேளையில்
நெருங்கி வந்திருந்தான் இவன்

இவனது அருகாமையில்
அவனது குறைகளும்
இவனது நிறைகளும்
பெரியதாய் உருவெடுக்க
இவன் இருக்கும் திசைக்கு
மாறியிருந்தேன் நான்

அருகே அமர்ந்து
அவனது குறைகளை
இவனிடம் எடுத்து
உரைக்கும் நேரத்தில்
உடைகிறது கவனம் எனக்கு

’அட....தொலைவில்
வடிவாய் யார்அது ?’


சிதறிய எண்ணம் உதறி
ஒரு நொடியில் மீண்டு
இவனிடத்தில் மீண்டும்
நெருங்கிய நான்
மறு நொடியில்
உறைந்துபோகிறேன்

மெதுவாக ......
அவனது சாயலுக்கு
மாறிக் கொண்டிருக்கிறான்
இவனும்..............!


.

Sunday, February 7, 2010

எங்கும் நிகழ்வதுதான் ..! என்றாலும்....!!


மையப்புள்ளியை
தரையில் வைத்து
வானத்தில் வட்டமிடுகிறது
கள்ளப் பருந்தொன்று

அதன்பார்வை பயணித்து
முடிவடையும் இடத்தில்

கீழே
தூரத்தில்
தாயின் அச்சுறுத்தல் மீறி
உலகமே தனதென்று எண்ணி
எதையும் சட்டைசெய்யாமல்
துள்ளி விளையாடிய படி
அன்றுதான் தரைதொட்ட
குட்டி அணிலொன்று

திடீரென....
தன்நிழல் கணித்து
இலக்கு குறித்து
கவனம் குவித்து
பாதை மாற்றி
வேகம் கூட்டி
இறகு மடக்கி
தரை நோக்கி
தலைகீழாய்
இறங்குகிறது
அந்தப் பருந்து

கடைசி நொடியில்
மயிறிழையில்
அனிச்சையாய்த்
துள்ளி விலகி
தாவிப் பொந்துதினுள்
நுழைந்துபின் எட்டிப்பார்க்கிறது
அந்தக் குட்டி அணில்

நிலைகுத்திய பார்வையோடு
உறைந்துபோன உணர்வுகளோடு
மூச்சுவிட மறந்த இதயத்தோடு

நான் ............


.

Monday, January 18, 2010

நவ( நாகரீக) கலியுகம்...!


நுனி நாக்கில்
குழைவாய் பசப்பலாய்
நளினமாய் நாசுக்காய் வலைவீசி
எதிரியையும்
சுண்டிஇழுக்கும்
வண்ணம்; வண்ணம் பூசிய
வசீகரிக்கும் வார்த்தைகள்..

பகலுக்கே கண்கூசும்படி
பகட்டு தெரிக்கும்
நவீனத்தில் மூழ்கிய
நவ நாகரீக ஆடைகள்...

எதிர்க்கண்கள்
கவனிக்காத பொழுதில்
அவசரகதியில் அத்துமீறி
கண்ட இடங்களைத்
தொட்டுத் திரும்பும்
பசிகொண்ட பார்வைகள்....

நூற்றாண்டுகள் கடந்தும்
உள்ளே ஆழ்மனம்
கற்கால மனிதன்போல
ஆடையில்லாமல்
இன்னும் அம்மணமாய்.....


.

Sunday, January 10, 2010

உருவமும் உள்ளமும்......



ஒருவாய் பழைய சோறு
இல்லையென மறுத்து
அறைந்து பூட்டியது
ஆளுயர வாசல்க் கதவு

பாதிப் பசியாற்ற
யாருக்கும் தெரியாமல்
சூடான சாதத்தின்
வாசத்தை வாசலுக்குக்
கொண்டு வந்து சேர்த்தது
கொஞ்சமே திறந்திருந்த
குட்டிச் சன்னல் ஒன்று

உருவமும் உள்ளமும்
ஒன்றாய் இருப்பதில்லை
எப்போதும்
.

Monday, September 28, 2009

வாழ்க்கைப் பாடம் வீட்டிலிருந்து.....


மூன்றுமாதக் குழந்தையில் பிரிந்து
மூன்றுவருட முடிவில் பார்க்கப்போகிறேன்
மூன்றுமாத விடுப்பு சொர்க்கமதை
மூச்சுவிடாமல் க(ழி)ளிக்கப்போகிறேன்


இன்றா நேற்றா....!

முன்னூறு நாட்களுக்கும் மேலாய்
தினம் தினம் நடக்கும் ஒத்திகையது
கனவிலும் தொடரும் நிகழ்ச்சியது - அதை
இன்று நிகழ்த்தப் போகிறேன்

அவளுக்குப் பிடித்தது கையில் கிடைத்தது
அத்தனையும் வாங்கியிருக்கிறேன்
அதிரடியாய்க் காட்டி - ஆனந்த
அதிர்ச்சியில் ஆழ்த்தப் போகிறேன்


அயலகம் விடுத்து
வானகம் கடந்து
தாயக வாசம் உணர்ந்து
தாய்மண்ணை நுகர்ந்து

அல்லல்பட்டு வெளிவந்து
அவதிப்பட்டு சாலைகடந்து

தலை வாசல் நுழைந்து
தாயவள் பாதம் பணிந்து

தங்கையவள் விழி துடைத்து
என்னவள் உச்சி முகர்ந்து - பின்

தேவதையவளை சந்திக்கத்
திட்டமிட்டபடித் தயாராகிறேன்

மனைவி காட்டிய இடத்திலிருந்த
மகளின் ஆசைப் பையிலிருந்த
அத்தனையையும் அதிலிருந்து
அகற்றிப் பார்க்கிறேன்

குளிர்பான மூடியும் , உடைந்த வளவியும்
கிழிந்த படமும் , கசங்கிய தாளும்
குப்பையும் , கூளமும்
எச்சமும் , மிச்சமுமாய்.....

அத்தனையும் கூட்டி
மொத்தமாய் அள்ளித்
தலையைச் சுற்றி
தெருவில் வீசுகிறேன்

விலை உயர்ந்த பொருளனைத்தையும்
வகையாய் உள்ளே அடுக்கிவைத்துவிட்டு
வசதியாய் ஓளிந்து கொள்கிறேன் - அவளின்
வ்ரவுக்காகக் காத்திருக்கிறேன்

பள்ளியிலிருந்து பறந்து வந்தவள்
சிட்டாக சிறகடித்து வந்தவள்
”அப்பா வந்தாச்சா ?” என்றவள்
அந்தப் பையை ஓடி எடுக்கிறாள்

பையைத் திறக்கிறாள்
பதறிப்போய்த் துடிக்கிறாள்
இடி விழுந்த கொடிபோல
கருகிப்போய் வெடிக்கிறாள்

ஒன்றும் புரியவில்லை எனக்கு
நடந்தது பொதுவாக - பின்
மூளைக்குள் தெளிவாகிறது
உண்மையது மெதுவாக

பையில் இருந்ததெல்லாம்
பாவிமகள் சொத்தல்லவா !
தேடித்தேடி சேகரித்ததெல்லாம்
விலையில்லா வித்தல்லவா !

அவள் வயதுக்கத்தனையும்
அவளின் உயிருக்கும்மேலான
ஆசைப் புதையலல்லவா !

எப்படி மறந்தேன் இதை
உணராமல் போனேன் இதை !

பணமீட்டும் பாதையில் நான்
குணத்தைப் புதைத்து விட்டேனோ ?

பணமென்னும் போதையில் நான்
சின்னமனமதை சிதைத்து விட்டேனோ ?

வாழ்க்கைப் பாடமது
வாழ்வின் கடைசிவரை
வழியிலேயே கிடைக்கும் !

இன்று அது
எனக்குக் கிடைத்திருக்கிறது
வழியில் இல்லை; வீட்டிலேயே !
என் மகளின் மூலமாக !

.

Sunday, September 6, 2009

எல்லாம் தெரிந்தவர்கள் ...!


எல்லாம் தெரிந்தவர்கள்!
இவர்கள் எல்லாம் தெரிந்தவர்கள்!!


கைமண்ணளவே படித்து
எல்லாமும் முடித்ததாய் நினைப்பார்கள்
அதற்குள் இலக்கு நிர்ணயித்து
பல இலக்கணம் வகுப்பார்கள்

எல்லாம் தெரிந்தவர்கள்!
இவர்கள் எல்லாம் தெரிந்தவர்கள்!!


ஊர்வலம் என்றாலே அது
தே(கா)ர் ஊர்வலம் மட்டுமே என்பார்கள்
பாதசாரிகள் ஊர்வலம் பற்றி எல்லாம்
அறிந்தும் அறியாதவர் போலிருப்பார்கள்

எல்லாம் தெரிந்தவர்கள்!
இவர்கள் எல்லாம் தெரிந்தவர்கள்!!


பிறக்கும்போதே நாவில் விழுந்தது
சரசுவதியின் கையொப்பம் என்பார்கள்
வரம் வாங்கி வந்ததாய்ப் பல
சுரம் பாடிக் காட்டுவார்கள்

எல்லாம் தெரிந்தவர்கள்!
இவர்கள் எல்லாம் தெரிந்தவர்கள்!!


மழலையின் கிறுக்கலை ஒரு
விரலசைவில் மறுப்பார்கள்
தனது ஆரம்பமும் கிறுக்கலென்பதை
திட்டமிட்டே மறப்பார்கள்

எல்லாம் தெரிந்தவர்கள்!
இவர்கள் எல்லாம் தெரிந்தவர்கள்!!


எல்லாம் எமக்குத்தெரியும் என்ற
ஏகாந்தப் போர்வைக்குள் வசிப்பார்கள்
எல்லையைச் சுருக்கிக்கொண்டு
எதிரேயிருப்பதைப் பரிகசிப்பார்கள்

எல்லாம் தெரிந்தவர்கள்!
இவர்கள் எல்லாம் தெரிந்தவர்கள்!!


போர்வைக்குள் சூழ்ந்திருக்கும்
புதிரான இருட்டுக்குப் பழகியிருப்பார்கள்
பழங்கதைப் பேசி தனியேப்புழங்கி
பலகாத தூரம் விலகியிருப்பார்கள்

எல்லாம் தெரிந்தவர்கள்!
இவர்கள் எல்லாம் தெரிந்தவர்கள்!!


தன்னைத்தாண்டி எதுவுமில்லை என
தனக்குள்ளேயே மூழ்கி இருந்து
தன்னையும் அறியாமல் இதுவரை
தன்னையேத் தாண்டாதவர்கள்

எல்லாம் தெரிந்தவர்கள்!
இவர்கள் எல்லாம் தெரிந்தவர்கள்!!


தன்னைச் சுற்றி அமைத்த
தான் என்ற வேலியை
தன்னையும் தாண்டி வளரவிட்டு
தாண்டிவரத் தெரியாதவர்கள்

எல்லாம் தெரிந்தவர்கள்!
இவர்கள் எல்லாம் தெரிந்தவர்கள்!!

Wednesday, August 12, 2009

கண்ணுக்குத் தெரியாதது ...?!?!


இன்று பிறந்த நாள் எனக்கு
இனிய விழா மாலையில் இருக்கு

இதோ....

என்னை வாழ்த்திப் பரிசளிக்க
ஆளாளுக்குக் காத்திருக்கிறார்கள்
கடைக்குட்டி அவளும் அதற்காக
காலையிலிருந்தே தயாராயிருக்கிறாள்

வாழ்த்துகளில் நனைந்து
விழிகலங்கி இருக்கிறேன்
பரிசுகளில் முற்றும்மூழ்கி
பரவசமாகி இருக்கிறேன்

*பெற்றோரின் ஆசீர்வாதம்
*உற்றோரின் ஆரவாரம்

*மனைவியின் முத்தப் புன்னகை
*மகள்தந்த புத்தம்பு துநகை

*என்மகன் அணிவித்த கைக்கடிகாரம்
*நண்பரின் அணிவகுத்த வாழ்த்துகானம்

உற்சாகம்....
எங்கு நோக்கினும் உற்சாகம்......

அடடா .....

அற்புதமான வேளையில்
அபரிதமான மகிழ்ச்சியில்
கடைசியில் அவளை மறந்தே போனேனே
கடைக்குட்டியைக் கவனிக்கவேயில்லையே

அதோ .......

என்முகம் பார்த்தே அமர்ந்திருக்கிறாள்
எதிரேயே அமர்ந்திருக்கிறாள் - எதையோ
எதிர்பார்த்தே அமர்ந்திருக்கிறாள்

அருகே அழைக்கிறேன்
அவளை அணைக்கிறேன்
பரிசை வாங்குகிறேன் - மெல்லப்
பிரித்துப் பார்க்கிறேன்

அட்டைத் தாளை வைத்து
அவளது மூளை உபயோகித்து
அவளாகவே தயாரித்து முடித்த
அளவான பரிசுப் பெட்டி அது !

ஒன்றுமே இல்லைப் பெட்டிக்குள் !
வெறுமையே இருந்தது பெட்டிக்குள் !!


ஆச்சரியமாக கண்சுருக்கி
நான் அவளைப் பார்க்கிறேன் !
அதிர்ச்சியாக கண் விரித்து
அவள் என்னைப் பார்க்கிறாள் ??


’’பத்து முத்தம் உள்ளேஇருக்கு - தெரியலியா
அப்பா அது இன்னும் உனக்கு’’


உறைந்து போகிறேன் - எனக்குள்
உடைந்தும் போகிறேன்

நானென்ன பெரியவன் ?- இங்கே
அவளென்ன சிறியவள் ??