Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts

Thursday, April 7, 2011

எனது கோணத்தில் திருக்குறள் :வழக்கு 2 : வான் மழையும் , வெண் சுண்ணாம்பும் ஒன்றா ?

வள்ளுவன் வாக்கினை வம்புக்(கு) இழுப்போர்முன்
வந்து தொடுப்போம் வழக்கு


அன்புப் பெரியோர்களே .......

திருக்குறளுக்கான விளக்கஉரையில், தவறான புரிதல் இருப்பதுபோலத் தோன்றும் இடங்களில் தெளிவு பெறுவதற்கான ஒரு முயற்சி இது

வழக்கு 2 :


பொருட்பால் :அங்க இயல்

அதிகாரம் : அவை அறிதல்

குறள் : 714

ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்

வான்சுதை வண்ணம் கொளல்.


திரு மு.வரதராசனார் உரை :

அறிவிற் சிறந்தவரின் முன் தானும் அறிவிற் சிறந்தவராக நடந்து கொள்ள வேண்டும், அறிவில்லாதவர் முன் தாமும் வெண் சுண்ணம் போல் அறிவில்லாதவராய் இருக்க வேண்டும்.

திரு மு.கருணாநிதி உரை :

அறிவாளிகளுக்கு முன்னால் அவர்களையொத்த பாலின் தூய்மையுடன் விளங்கும் அறிஞர்கள், அறிவில்லாதவர்கள் முன்னால் வெண்சுண்ணாம்பு போல் தம்மையும் அறிவற்றவர்களாய்க் காட்டிக் கொள்ள வேண்டும்.

திரு சாலமன் பாப்பையா உரை :

தன்னிலும் மேலான தனக்குச் சமமான அறிஞர் கூடியுள்ள அவையில் தன் நூல் அறிவும் சொல்வன்மையும் வெளிப்படப் பேசுக; தன் அறிவிலும் குறைவான மக்கள் கூடியுள்ள அவையில் அவருக்கு விளங்கும்படி இறங்கிப் பேசுக.


திரு.பரிமேலழகர் உரை :

ஒளியார்முன் ஒள்ளியர் ஆதல்- அறிவால் ஒள்ளியாரவைக்கண் தாமும் ஒள்ளியராக; வெளியார்முன் வான்சுதை வண்ணம் கொளல் - ஏனை வெள்ளைகள் அவைக்கண் தாமும் வாலிய சுதையின் நிறத்தைக் கொள்க.. அவர் மதிக்கும் வகை அவரினும் வெண்மையுடையராக என்பார், 'வான் சுதை வண்ணம் கொளல்' என்றார்.

மேலோட்டமாக ஒரு முதல் தகவல் அறிக்கை :

வெண் சுண்ணாம்பு, பால், வெள்ளை, வெண்மை என பல பெயர்கள் வந்துள்ளதே விளக்கவுரையில்....!. உவமைக்காக சுண்ணாம்பு பற்றி எல்லாமா அய்யன் சொல்லி இருப்பார்......?

வழக்கைத் தொடர்வோம் வாருங்கள் :

முக்கியமாக இடறுவது போலத் தோன்றும் இரண்டு சொற்களின் பொருளை ( ஒள்ளியர் , வான் சுதை ) முதலில் காண்போம்


ஒள்:

adj.பிரகாசமான;நல்ல; அழ குள்ள;அறிவுள்ள. In combination the ன் may change into ட் or ண் see ஒட்பம் ஒண்மை etc. , adj. bright, பிரகாசமான;


ஒள்ளி oḷḷi

, n. 1. Red gold; செம்பொன். 2. Šukra; சுக்கிரன்


சுதை cutai :

, n. < sudhā. Ambrosia; தேவாமிர்தம்.. Milk; பால்.

Whiteness; வெண்மை. (சூடா.) . Star; நட்சத்திரம். (அக. நி.) . Lightning; மின்னல். (சங். அக.), n. < sutā. Daughter; மகள். (பிங்.), n. Kicking cow; உதைகாற்பசு., n. < cyuta. Destruction; கேடு.

. சுதைக்குன்று cutai-k-kuṉṟu :, n. < சுதை¹ +. An artificial hillock plastered with chunam; சுண்ணாம்பு பூசிய செய்குன்று

கிடைத்த சான்றுகளில் இருந்து :

ஒள் = நல்ல ,அறிவுள்ள ,பிரகாசமான

ஒள்ளி = செம்பொன், தேவாமிர்தம் எனவும்

சுதை = அமுதம் , சுண்ணாம்பு

என்றிருந்தாலும்

வான்சுதை = வானமுதம்

= வானிலிருந்து வரும்அமுதம்

=மழை என்பதே பொருந்துவதால்......சுண்ணாம்பு விலக்கிக்கொள்ளப் படுகிறது

வான்சுதை வண்ணம் = மழை நீரின் வண்ணம்

=நிறமற்ற தன்மை என்பதுதான் பொருத்தமாக இருக்கும் .

வான்சுதை = வெண்சுண்ணாம்பு என்பதற்கான வாய்ப்பு இல்லை

வானமுதம் என்பது மழைதான் என்பதற்கான சான்றை அய்யனின் வான்சிறப்பு அதிகாரத்தில் இருந்தும் பெறலாம் .

அதிகாரம் 02 : வான் சிறப்பு

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்

தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று [02:01]

விளக்கக் குறள் :

மண்ணுயிரின் வாழ்வுயர வானிருந்து மண்புகும்

நல்லமுதம் என்றும் மழை

எனது தீர்வாகவும் உங்களின் ஒப்புதலுக்காகவும் உங்கள்முன் :

விளக்கவுரை :

அறிவிற் சிறந்தவரின் முன் தானும் அறிவிற் சிறந்தவராக, மின்னும் பொன்போல் / தேவாமிர்தம்போல் நடந்து கொள்ள வேண்டும், பிறர் / அறிவில்லாதவர் முன் தாமும் வானமுதம்போல் / மழைநீர்போல் வண்ணமில்லாத் தன்மையுடன் அறிவில்லாதவர் போலிருக்க வேண்டும்.

எனது விளக்கக் குறள்:

அறிஞர்முன் மின்னும்பொன் போலிரு; மற்றோர்முன்

வான்மழைநீர் வண்ணம்கொள் வாய்



தீர்ப்புக்காகக் காத்திருக்கிறேன்

Tuesday, April 5, 2011

எனது கோணத்தில் திருக்குறள் :வழக்கு 1 : வள்ளுவன் சொன்னது இதைதானா...?

அறிமுகம் :


வள்ளுவன் வாக்கினை வம்புக்(கு) இழுப்போர்முன்
வந்து தொடுப்போம் வழக்கு

அன்புப் பெரியோர்களே ......

திருக்குறளின்மேல் ஓர் இனம்புரியாத பற்று உருவாகி , எளிய தமிழில், மரபிலக்கணம் மாறாமல், குறள்வெண்பா அமைப்பிலேயே விளக்கக் குறள்கள் படைக்கும் முயற்சியின் இடையில் தொடரமுடியாமல் பல தடங்கள்கள் ,தடைக்கற்கள்.......

தெளிவுபெற வேண்டி சான்றோரின் விளக்கவுரைகளைத் தேடி எடுத்து , என்னைச் சரி செய்து கொள்ள நினைத்த பல இடங்களில் ....

இதேக் குழப்பம் அன்றும் இருந்திருக்கிறதோ ? அல்லது அதை சரிசெய்யாமல் / கவனிக்காமல் இருந்திருப்பார்களோ ?

என்ற ஐயங்கள் தோன்றும் அளவுக்கு மொத்தம் 40 இடங்களுக்கும் மேல் இடறல்கள்....விளக்கக் குளறுபடிகள்.... இருப்பதாகத் தோன்றியது..

அய்யனின் வாக்குக்கும்...சான்றோர்கள் தந்த விளக்கத்துக்கும் என்னளவில் பெரிய மாறுதல்களை உணர்ந்தேன்...,

அகராதிகளின் துணையுடனும் , நான் அறிந்து கொண்ட வரையிலும், நடைமுறை( LOGIC) பார்வையுடனும், எனது விளக்கத்தை ஒருபக்கமாகவும் , சான்றோர்களின் விளக்கத்தை மறுபக்கமும் வைத்து உங்கள்முன் படைக்கிறேன் ....

(இது கொஞ்சம் அதிகப்பிரசங்கித் தனமாகத்தான் எனக்கேப் படுகிறது ...இருந்தாலும் தவறு எங்கிருந்தாலும் சரி செய்யப் படவேண்டும் என்று நக்கீரனின் சீடனாக உங்கள்முன் நிற்கிறேன். எனது வாதத்தில் தவறு இருக்கலாம்...இருக்கும் இடங்களில் உங்களின் மாணவனின் தவறாக நினைத்து மன்னித்து விடுங்கள் )

திருக்குறளிலிலிருந்து அவரவர் எண்ணங்களின் அளவுகோலுக்கு ஏற்ப புதுப்புது விளக்கங்கள் கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும் அதிலிருந்து குறளுக்கு ஒத்த அதிர்வுடைய பழுதில்லாத சிறந்த ஒன்றைத் தேர்ந்து கொள்ளலாமே என்ற எண்ணத்தில் விளைந்த தொடர்

இது ..

ஆதரவு அளியுங்கள் பெரியோர்களே ......

தங்களின் மேலான தீர்ப்புக்காகக் காத்திருக்கிறேன்..

[பி.கு : இது திருக்குறளைப் பற்றிய விவாதத் தொடர் அல்ல....

திருக்குறளைப் புரிவதில் ஏதும்பிழை இருக்குமோ? என்ற ஐயமும் ,அதற்கான விளக்கமுமே இந்தத்தொடரில் தொடரும்..]


வழக்கு 1 :

பொருட்பால் : அங்க இயல் /
அதிகாரம் : குறிப்பறிதல் :
குறள் 701:


கூறாமை நோக்கக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்

மாறாநீர் வையக் கணி.


உரை 1:

ஓருவர் சொல்லாமலே அவறுடைய முகத்தை நோக்கி அவர் கருதிய குறிப்பை அறிகின்றவன் எப்போதும் உலகத்திற்க்கு ஓர் அணிகலன் ஆவான்.


உரை 2:

ஒருவர் எதுவும் பேசாமலிருக்கும் போதே அவர் என்ன நினைக்கிறார் என்பதை முகக்குறிப்பால் உணருகிறவன்உலகத்திற்கே அணியாவான்.


உரை 3:

ஒருவன் வாயால் சொல்லாமல் இருக்க, அவனுடைய முகத்தையும் கண்ணையும் பார்த்தே அவன் மனக்கருத்தை அறிந்து கொள்பவன், எப்போதும் வற்றாத கடலால் வளைக்கப்பட்ட இவ்வுலகத்தவர்க்குஆபரணம் போன்றவன்.


உரை 4:

குறிப்பு கூறாமை நோக்கி அறிவான் - அரசனால் குறித்த கருமத்தை அவன் கூறவேண்டா வகை அவன் முகத்தானும் கண்ணானும் நோக்கி அறியும் அமைச்சன்; எஞ்ஞான்றும் மாறாநீர் வையக்கு அணி - எஞ்ஞான்றும் வற்றாத நீரால் சூழப்பட்ட வையத்துள்ளார்க்கு ஓர் ஆபரணமாம்.


பார்வை :

அய்யன் வள்ளுவன் ஒரு செய்தி சொல்லும்பொழுது விளக்கத்திற்காக ஒரு உவமையும் சொல்லிச்செல்வார்.

இங்கே..........அமைதியான முகம்பார்த்து ஆழ்மனத்தின் குறிப்பை அறிபவன் , எதற்காக சம்பந்தமில்லாமல் வற்றாத/ஆழ்கடல் சூழ்ந்த உலகத்துக்கு அணிகலனாக வேண்டும் ?

உலகின் ஆபரணம் என்று சொல்லி இருக்கலாமே ?

தொடர்பில்லாமல் இங்கே எதற்காக கடல்பற்றிய குறிப்பு வருகிறது ??

எதையும் போகிறபோக்கில் சொல்லிச் செல்ல அய்யன் எதற்கு???


’மாறாநீர் வையக் கணி’. = ’வற்றாத நீரால் சூழப்பட்ட வையத்துள்ளார்க்கு ஓர் ஆபரணமாம்.’ என்று தவறாகக் கணித்து விட்டோமோ?


வழக்குத் தொடர்வோம் வாருங்கள் :

தமிழில் ஒரு சொல்லுக்கு பல பொருட்கள் உண்டு (கடலுக்கு மட்டும் 100 வகையான பெயர்கள் இருப்பதாகக் கேள்விப் பட்டிருக்கிறேன் .....

கீழுள்ள சாட்சிகள் ...தேடலில் இருந்து கிடைக்கப் பெற்றவை

  • மாறாநீர் māṟā-nīr =. Sea, ocean; கடல்.
  • வையம் vaiyam : (page 3856) =தொழுக (புறநா. 8). 2. Chariot drawn by horses; குதிரை பூண்டிழுக்கும் இரதம் (சிலப். 6, 120.) (பிங்.) 3. Covered cart; கூடாரவண்டி. மானமர் நோக்கி யும் வைய மேறி (சிலப். 6, 120). 4. Palanquin; சிவிகை. (சூடா.) 5. Conveyance; ஊர்தி. (பிங்.) 6. Bullock; எருது. (பிங்.) 7. The 4th nakatra. See உரோகிணி. (பிங்.) 8.cf.வையம் (p. 902) [ vaiyam ] , s. the earth பூமி; 2. the 4th lunar mansion, உரோகிணி; 3. a palankeen, பல்லக்கு; 4. a car, தேர்; 5. a carriage, வண்டி; 6. a bullock-cart, மாட்டுவண்டி; 7. a conveyance in general, வாகனம்.
  • அணி³ ai = ஆபரணம் ., Array of an army; படைவகுப்பு. 2. Forepart of a vessel, stem, prow; கப்பலின் முன்பக்கம்.


இதிலிருந்து

  • மாறா நீர் = கடல்
  • வையம் = ஊர்தி /வாகனம் எனவும் கொண்டால்
  • மாறாநீர் வையம் = கடல் ஊர்தி /வாகனம் = கப்பல் / படகு எனக் கொள்ளலாம்
  • அணி = கப்பலின் முன்பக்கம் எனக் கொள்வோம் (முன்இரண்டு வார்த்தைகளுடன் [மாறாநீர் வையம்] தொடர்பு இல்லாமையால் ஆபரணமும் ,அணிவகுப்பும் இங்கே பொறுந்தாது )


மொத்தமாக

மாறாநீர் வையக் கணி = ஆழ்கடலைக் கிழித்துச் செல்லும்/ வெல்லும் படகின் முன்பாகம் .


எனது தீர்வாகவும் உங்களின் ஒப்புதலுக்காகவும் உங்கள்முன் :


விளக்கவுரை :

முகத்தைப் பார்த்தே ஆழ்மனதைக் கிழித்து உள்ளிருக்கும் குறிப்பை அறிபவன் , ஆழ்கடலைக் கிழித்து வெல்லும் படகின் முன்பகுதிக்கு ஒப்பானவன்

( இங்கு உவமை பொறுந்தி வருவதாக எனக்குப் படுகிறது )


எனது விளக்கக் குறள் :

முகக்குறிப்பால் உண்மை உணர்ந்துகொள்வோர்; ஆழ்கடல்

நீர்க்கிழித்து வெல்லும் படகு


பெரியவர்களின் தீர்ப்புக்காக காத்திருக்கிறேன் .....


Sunday, January 23, 2011

கற்போம் , கற்பிப்போம் : தமிழ் ..(1) குழப்பம் களைவோம்(ர்,ற்/ன்,ண்/ல்,ள்,ழ்)..!



அன்பின் உள்ளங்களே .,
இது எங்களைப் போன்ற ஆரம்பக்கட்ட / தமிழார்வமுள்ளவர்களுக்கு வரும் குழப்பம்தான் . எழுதிக் கொண்டே வரும்போது சந்தேகம் வரும் .

இங்கே

’ர வருமா? / ற வருமா?? ல வருமா? / ள வருமா?? / ழ வருமா???
ன வருமா? /ண வருமா??
இங்கே புள்ளி வச்ச எழுத்து வருமா ? வராதா ??’

அவ்வளவுதான் .எல்லாம் அதோடு நின்றுவிடும் . இதை சரி செய்து , குழப்பம் தீர்ப்பது எப்படி ?

-’’அதாவது.....இலக்கணப்படி....’’ என ஆரம்பித்தால் தெரிந்துகொள்ள ஆர்வம் / ஆசை இருப்போரும் நழுவி விடுகிறார்கள்

சரி , அவர்கள் எளிதாக புரிந்துகொள்ளும்படி சொல்லிப் பார்த்தால் ...?

ஒரு முயற்சிதானே ! செய்து பார்க்கலாம் . எப்படியும் சில எளிய (தம்ப் ரூல்) விதிமுறைகள் உங்களுக்குத் தெரிந்திருக்கும் . அதை இங்கே பதியுங்கள் . பலர் பயனடைவார்கள் . பலர் தெளிவடைவார்கள் .

நான் ஆரம்பித்து வைக்கிறேன் ...

ர், ற் : [ சின்ன ‘ர’ (ர்) ,பெரிய ’ற’ (ற்) ] :
1)தரும் , பெறும் :
தருபவர்களுக்கு பெரும்பாலும் தன்னிடமுள்ளதை பிறருக்குத்தர மனம் வராது . (90% பேர் )கொஞ்சமாகவே /சிறிதாகவே கொடுக்க நினைப்பார்கள் . எனவே ‘தரும்’ க்கு சின்னர’ போடுங்க

பிறரிடமிருந்து பெற நினைப்பவர்கள் பெரிதாகவே வாங்க நினைப்பார்கள் / எதிர் பார்ப்பார்கள் . எனவே ’பெறும்’க்கு பெரிய ’ற’ போடுங்க

2) சிறிய , பெரிய ;
இதில் ஒரு ஆர்வமூட்டும் முரண் பயன்படுத்திப் பாருங்க .
சிறிய’ வுக்கு பெரிய ற போடுங்க
’பெரிய’ வுக்கு சின்ன ர போடுங்க

[1, 2 லிருப்பது எடுத்துக்காட்டு . சொன்ன விதிகள் அவைசார்ந்த வார்த்தைகளுக்கும் சரியாக வரும் ]


3) அரிய, அறிய :

அரிய: அருமையான / அபூர்வமான / வித்தியாசமான

தனித்தன்மை வாய்ந்தவைகள் உலகில் குறைவாகவே இருக்கும்

-அதனால்சின்ன ’ர’ போடுங்க

அறிய: தெரிந்துகொள்ள / புரிந்துகொள்ள வேண்டியவை உலகில் நிறையவே உண்டு

--அதனால் பெரிய ’ற’ போடுங்க


ன்,ண் :

ன் பெரிய ’ற’வுக்கு முன்னாடி சின்ன ’ன’வரும் [எகா- கன்று ,என்று, அன்றோ ]

ண் ’ட’வுக்கு முன்னாடி பெரிய ’ண’ வரும் [எகா- வண்டி,அண்டா, கண்டனம்,உண்டி]


ல்,ள்,ழ்:

ருல் என முடியும் சொல் தமிழில் கிடையாது . ( ருகரத்தைத் தொடர்ந்து லகரம் வராது .) எனவே ரு வைத் தொடர்ந்து ல் வராது ...


( நன்றி ; கல்பட்டார்,வேந்தன் அய்யா)


Monday, September 20, 2010

என்ன்ன்ன்ன்ன்ன்ன்திறன் ..........!


என்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்திறன் :

என்னையும் மதித்து தொடர்பதிவுக்கு அழைத்த நண்பர் சேட்டைக்காரன் அவர்களுக்கு நன்றி. நகைச்சுவை மன்னரின் அழைப்புக்கான பதிலை நான் அவரளவுக்கு இல்லாவிட்டாலும் ஒரளவுக்குத் தந்திருக்கிறேன் .. என நினைக்கிறேன் ...சரியில்லை எனில் மன்னிக்க வேண்டுகிறேன் ..

அனைத்து செயல்களுக்கும் ,விளைவுகளுக்கும் நல்லது ,கெட்டது என்ற இரண்டுமுகம் உண்டு . மூன்றாவது முகமாக நல்லதை மட்டுமே நமக்கு சாதகமாகக் கொள்ளும் முடிவைக் எடுப்போம் . நாளைப் பொழுது நல்லதாகவே விடியும் நமக்கு. நல்லவற்றிலிருந்து நமக்குத் தேவையானவற்றை எடுத்துக்
கொள்ளும் ஒரு தேடல் இது ....

( என் திறன் / நம் திறன் பற்றி எடுத்துச்சொல்ல ’எந்திரன்’ தேவைப்படுகிறார் இங்கு )

•வெண்பா என்பது எளிதென்பதையும் இங்கே சொல்ல முயன்றிருக்கிறேன். கசப்பு மருந்து என ஒதுக்கி வைத்திருப்பதை, இனிப்போடு/எந்திரனோடு கலந்து தரும் முயற்சி இது .. மருந்தின் உண்மை தன்மையை ஒருவராவது அறிந்து கொண்டாலே வெற்றியாகும் எனக்கு அது. ’இனிப்புக்கும்’ என்றும் நன்றியுள்ளவனாய் இருப்பேன் . )

எளிதன்று என்றபிறர் எண்ணத்தை; எல்லாம்
எளிதென்றே எள்ளி எழுது [01]


சில துண்டுச் செய்திகள் :
•இரண்டு வருட திட்டமிட்ட உருவாக்கம்..
தமிழகத்தின் தொழில் நுட்ப அறிவை உலகுக்குக் காட்டப்போகும் படைப்பாக்கம் . இந்தியாவின் ‘அவதார்’ என்ற சிறப்பை பெற்ற படம் . . உலகளாவிய வியாபாரம்..... மிகப் பெரிய வெற்றியை எதிர் நோக்கி இருக்கும் படைப்பு
ஆம் .......

தந்திரத்தை எந்திரத்தால் காலத்தே செய்வார்முன்
மந்திரம்என்(று) ஒன்றும்இல் லை [02]



•’பின்நின்று’ நடத்துநராய் வாழ்க்கையைத் துவங்கியவர் அவர். இன்று ஒருதுறையினை ’முன்நின்று’ வழிநடத்திக் கொண்டு இருக்கிறார் . அயராத உழைப்பின் எடுத்துக்காட்டாக இன்று அவர் ........

விசிலடித்து வாழ்ந்தார்; உழைப்பால் உயர்ந்தார்
விசிலடித்து வாழ்த்துகிறோம் நாம் [03]



•எதற்கும் இயலாதவர் /எதுவும் இல்லாதவர் என வெளியில்/ ஒருகோடியில் ஒதுக்கிவைக்கப் பட்டவர் அவர் . இன்று அவரின் கடைக்கண் பார்வைக்காக வரும்வழியில் ஒதுங்கி நிற்பவர்கள் பலகோடி

கறுப்பைப் பழிப்போரும் வாய்பிளப்பார் தன்னால்;
சிறப்பே இதுதான் அவர்க்கு [04]


•எந்திரம்போல உழைப்பார். எல்லாமுமாய் இருப்பார்
ஆனாலும்... ’தான்’ என்ற அகம் தன்னுள் இல்லாத சிகரம் அவர் .

எந்திரன் போல இருப்பாராம்; தன்திறன்மேல்
சிந்தனை இல்லா(த) அவர் [05]



•ஒருவார்த்தை சொன்னாலும் , உலகம் ...ஓராயிரம் பொருள் கொள்ளும், புண்படுத்திக் கொல்லும் , இல்லாததை சொல்லும் . இருந்தாலும் எதையும் எளிதெனக் கொள்ளும் இனிமையாளர் அவர்...

புலியைப்போல் பாய்வார்; புழுதியையும் ஆய்வார்;
எளிதின் சிகரம் அவர் [06]


•துறைசார்ந்த உலகில் அவரது வாக்கே வேதவாக்கு. இல்லாதவரையும் இருப்பவராக்குவார். தயாரிப்பாளர் ஆக்குவார். தள்ளி நின்று ரசிப்பார் . தயாளன் அவர்

ஒருமுறை தான்சொல்வார்; நூறாக்கி வெல்வார்;
மறுபார்வை இல்லை அவர்க்கு [07]



•அவரது அபிமானிகளை ஒரு பிரிவுக்குள் அடைப்பதென்பது இயலாத ஒன்று .. ஆறிலிருந்து அறுபதுவரை அத்தனை வயது வரம்பிலும் அவரது ஆதரவாளர்கள்......இதுதான் அவரது பலம்...

ஆறும் அறுபதும் மாற்றமெதும் இல்லாமல்
சொந்தமாம் என்றும் அவர்க்கு [08]

•தலையின் மேலிருப்பதை இழந்தாலும் , தன்னை தனது
உயிராகத் தலைக்குள் வைத்திருக்கும் கோடான கோடி ரசிகர்களைக் கொண்ட.... தலைசிறந்த கலைஞர் அவர்

மயிர்போனால் என்ன ; உயிர்தரும் தொண்டர்
உயர்சொத்தாம் என்றும் அவர்க்கு [09]


•இலக்கினை முடிவு செய்து பயணத்தைத் தொடங்கினால்
இலகுவாகும் வெற்றி என்பதை உலகுக்கு உணர்த்தியவர் அவர்.

எந்திரனின் முந்தைய வாழ்க்கை; உணர்த்தியது
என்திறன் பற்றி எனக்கு [10]



(தேவையா இதெல்லாம் ?? என்ற கேள்வி தோன்றும் உள்ளங்களுக்கு............
உழைப்பால் உயர்ந்த யாரையும் ,வழிகாட்டும் உதாரணமாகக் கொள்ளலாம் என்பதில் தவறில்லை என்றே நினைக்கிறேன்...)

தொடரைத்தொடர நண்பர் தேவாவையும் , அக்கா அஷிதாவையும் , தம்பி அச்சுவையும் , மரபுக்கவி ப்ரசாத்தையும் நகைச்சுவை மன்னரின் சார்பில் அழைக்கிறேன் .


.

Sunday, December 28, 2008

இப்போதாவது முதலடி....


அமிழ்தினிய தமிழ்
அந்நிய மோகத்தால்
ஆங்கில மொழி தாக்கத்தால்
ஆழி நோய்க்கு ஆட்பட்டது போல
அல்லல் பட்டுக்கொண்டிருக்கிறது
அடித்தளமே கொஞ்சம்
ஆடிக்கொண்டுதான் இருக்கிறது

இது தான் தருணம்
இனியும் தாமதித்தால்
இலக்கியத் தமிழ் அல்ல
இனிய பேச்சுத் தமிழும்
இனிமேல் இங்கே
இல்லாமல் போகும்

அவசரச் சிகிச்சையாய் சில
அடிப்படை மாற்றங்கள்
அதிரடியாய் செய்ய வேண்டும்
அதுவும் உடனடியாய் செய்யவேண்டும்


தமிழ் கூறும் நல்லுலகில்
அலோவும் சாரும்புகுந்து
அவதிப்படாத அவதிப்படுத்தாத
தமிழ் வாய் ஏதேனும் உண்டா?

அலோவுக்கென தனியாய்
ஆழக்குழி தோண்டி
அதிலும் அதை
அடியில் வைத்துப்
அழுந்தப் புதைக்கவேண்டும்
சார் என்ற சொல்லே தமிழ்
சரித்திரத்தில் இல்லாமல்
சரி செய்யவேண்டும்

எளியோரைச் சேரும் வகையில்
இனிய மாற்றுச் சொற்களை
இங்கே அறிமுகம் செய்வோம்
இதை மற்றவருக்கும் சொல்வோம்

முதலடியை நாமே
முன் வந்து வைப்போம் !
முன் மாதிரியாய் நம்மையே
முன் வைத்து நிற்போம் !!

Sunday, September 21, 2008

தாய்மொழி உயர்த்து.


வெளி நாட்டில் குழந்தை கூட
துளி பிசகாமல்
ஆங்கிலத்தில் பேசும்
அதிசயம் கண்டு,
உள் நாட்டில் உன் குழந்தையும்
நுனி நாக்கில்
அவசியம் பேச
ஆசை கொள்ளும்
அற்ப மனிதனே. அது
அவனுக்குத் தாய்மொழி.--நீ
அன்நிய மோகம் ஒழி.
உணர்ந்து கொள் முதலில் !
உன்னிடம் உள்ளது
உலகின் முதல் மொழி !!. அதுதான்
உலகுக்கேத் தாய்மொழி !!!