Wednesday, April 29, 2009

குட்டி ஆசைதான், நிறைவேறுமா....?


இரவு கடக்க ஈசலுக்கு ஆசை
இலவு பழுக்க கிளிக்கு ஆசை
நிலவு தாண்ட முகிலுக்கு ஆசை
எழுந்து நடக்க நிழலுக்கும் ஆசை

இருட்டை பார்க்க ஒளிக்கு ஆசை
வளையாமல் இறங்க மின்னலுக்கு ஆசை
உதிராமல் இருக்க மலருக்கு ஆசை
மதியம்வரை இருக்க பனித்துளிக்கும் ஆசை

காலையில் உதிக்க நிலவுக்கு ஆசை
தேய்ந்து வளர சூரியனுக்கு ஆசை
அமாவாசைப் பார்க்க சந்திரனுக்கு ஆசை
மாதமொரு விடுப்பெடுக்க கதிரவனுக்கும் ஆசை

ஒருநாள் ஓய்வெடுக்க பூமிக்கு ஆசை
ஓடாமல் இருக்க ஓடைக்கு ஆசை
நனையாமல் இருக்க குடைக்கு ஆசை
நரைக்காமல் இருக்க முடிக்கும் ஆசை

வேலைமுடிக்க உழைப்பாளர் சிலைக்கு ஆசை
சாலைதாண்ட தலைவர் சிலைக்கு ஆசை
ஓயாமல் அடிக்க ஆலயமணிக்கு ஆசை
தேயாமல் இருக்க செருப்புக்கும் ஆசை


எனக்கும்......

காலைவரை கண்மூடாமல் தூங்க ஆசை
கனவுக்குள் இறங்கி கால்நனைக்க ஆசை
கூட்டுக் குடும்பத்தில் கூடிவாழ ஆசை
காடுவரை கூடவரும் சொந்தம்பார்க்கவும் ஆசை

நல்லதோர் தலைமை பார்க்க ஆசை
நல்லதேர்தல் பார்க்க நெடுநாள் ஆசை
நல்லதமிழ் கேட்க நரம்பெல்லாம் ஆசை
நிலைத்து நிற்கும் செல்வத்துக்கும் ஆசை

நினைத்தது நடக்க நாளெல்லாம் ஆசை
இப்படியே நானிருக்க இன்னும் ஆசை

Sunday, April 26, 2009

இணைய நண்பருக்கு இனிய வேண்டுகோள்...!


தமிழ் இணைய நண்பரே,
தரணி ஆள வந்தோரே !
மனதார வாழ்துக்களை முன் தொடுத்து
மன்னிக்க வேண்டுகிறேன் உங்களிடம் அடுத்து

உண்மைகள் சிலவற்றை உங்களிடம்
உள்ளபடியே சொல்லப் போகிறேன்.
உயர்த்தவேண்டும் நாமிருக்கும் இடம்
உயரவேண்டும் உலகினில் நம்தரம்

மொக்கை என்னும் செக்கினை
சக்கையாய் சுற்றிக் கொண்டிருக்கும்
நமக்குள் நிறைந்தே இருக்கிறது
அள்ள அள்ளக் குறையாத
தேன் அமுதக் கவிதைகள்

சுயமாய்க் கவிபடைத்து
சுயரூத்தைக் காட்டிடும்
சுயம்புகள் எங்கள்
சுந்தரக் கவிகள்

வசதியும் வாய்ப்பும்
வாசலில் இருந்தும்
நேரமும் காலமும்
நெருக்கத்தில் இருந்தும்

ஏனோ மயக்கம்!?
ஏன் இந்தத் தயக்கம்!?

பள்ளம் பாயும் வெள்ளமென
படைப்புகளைத் தாருங்கள் !
எண் விளையாட்டை மறந்து
பண் படைத்திட வாருங்கள் !!

அற்புத பண் திடலில் ஒன்று
அவசர மண் திடலில் ஒன்று
இருகால் பதித்திருக்கிறீர்கள் ஆனாலும்
இருபக்கமும் பார்த்திருக்கிறீர்கள்

அழுத்தம் தருவதைப் பொருட்டே
அதன் இடம் கொண்டு சேர்க்கும்

உங்களின் தேர்வுக்காகக் காத்திருக்கிறேன் !
உள்ளம் நிறைய வாழ்த்தி நிற்கிறேன் !!

Tuesday, April 21, 2009

எப்படி இருக்கும்???.....


யாருமே எழுதாத கவிதை
எவருமே எடுக்காத புகைப்படம்

மண்ணில் வந்துவிழும்
மழையின் முதல் துளி

கடலின் கால்நனைக்கும்
கதிரவனின் முதல் ஒளி

மொட்டு மலராக
இதழ் திறக்கும் நேரம்

கானகக் கருங்குயில்
கானத்தின் ராகம்

வெள்ளை மேகம் ஒன்றுசேர்ந்து
இருட்டாகும் ரகசியம்

இருட்டிலிருந்து வெளிச்சமாய் மின்னல்
வெளியாகும் அதிசயம்

காற்றிலிருந்து காலைப் பனித்துளி
உருவாகும் தருணம்

தொட்டுத் தடவிச் செல்லும்
தென்றலின் உருவம்

என்னவளின் கருவில்
எட்டுமாத உருவிலிருக்கும்
எங்கள் இருவரின் ஓருயிர்

எப்படி இருக்கும் ?
ஏங்கிப்போய் இருக்கிறேன் !
யாருக்காவது தெரியுமா ?

Monday, April 13, 2009

இப்படியும் ஒரு.......!!!!


விடியல் தினமும்
வந்து போனபோதும்
இருள் இன்னும் நீங்காத
இருண்டுபோன தேசம்

ஏன்? எதற்கு?
என்ற கேள்விகள்
தடை செய்யப்பட்டுள்ள
தடுமாறும் தேசம்

எங்கே? எத்தனை பேர்?
என்ற விபரங்கள் மட்டும்
பெருமையாய் வெளியிடும்
போதையிலிருக்கும் தேசம்

கணக்கு காட்ட
தனது மக்களையே
கொன்று குவிக்கும்
குழப்பத்திலிருக்கும் தேசம்

பத்திரிக்கையாளன்
பரபரப்பு செய்திகளை
பத்திரிக்கையில் தெரிந்துகொள்ளும்
பரிதாபமான தேசம்

பத்திரிக்கை சுதந்திரம்
படுகுழியில் தள்ளி
அதிபர் மாளிகை
அன்றைய செய்தி வெளியிடும்
அற்புதம் நிறைந்த தேசம்

சுண்டு விரல்
சூப்பும் பிள்ளையையும்
குப்பி சப்பும் போராளியென
பயந்துபோய் செல்லடிக்கும்
பதட்டத்திலிருக்கும் தேசம்

அபயம் தேடிவரும்
அப்பாவி மக்களையும்
பாதுகாப்பு வலையத்திற்குள்
படுகொலை செய்யும் தேசம்

புள்ளி விபரங்களால்
புளங்காகிதப் பட்டு
புல்லரித்துப் போயிருக்கும்
செல்லரித்த தேசம்

உள்ள நிலவரம் புரியாமல்
உண்மை நிலைமை தெரியாமல்
தன் முதுகை தானே
தட்டிக்கொள்ளும் தேசம்

நாட்டுக்கு உழைக்கும் பிள்ளைகள்
நாளை செயிக்கும் போது
நல்லோர் முன் மண்டியிடப் போகும்
நன்றி கெட்ட தேசம்

Saturday, April 4, 2009

க(உ)ருவானநாள் நல்வாழ்த்துக்கள்...!


இன்று 'தமிழ் நண்பர்கள் குழுமம்' பிறந்தநாள்
==========================================

ஆயிரம் கரு சுமக்கும்
அற்புதக் கருவறை இது

கருவிலிருக்கும் குழந்தைகள் நாம்
காவலிருக்கும் வேலி இது

இதனுள் நுழைந்திருக்கிறோம்
இதயத்தால் இணைந்திருக்கிறோம்
இணையத்தால் பிணைந்திருக்கிறோம்

ஒருவரின் மனதில் நினைப்பது
ஒட்டிப் பிறந்த இரட்டையருக்கே
ஓரளவுக்குத்தான் புரியுமாம் !

மனதில் உருவாகும் அத்தனையும்
முகமறியா நமதாயிரம் சோதருக்கு
மறுநொடி சென்று சேர்ந்துவிடும்
அற்புதம் இங்கே நிகழ்ந்துவிடும் !!

ஏங்கோ பிறந்த நாம்
எங்கெங்கோ வளர்ந்த நாம்
இதோ மீண்டும் கருவாகி இருக்கிறோம்
இங்கிருந்து பிரமாண்ட உருவாகி வருவோம்
ஆயிரம் மூளை ஒன்றாய் சேர்த்து
அற்புதம் இங்கே சமைத்திடுவோம்

கருவிலிருந்து வெளிவந்த நாள்
நமக்கெல்லாம் பிறந்தநாள் !
கருவுக்கே எப்படிவரும் பிறந்தநாள்??
உருவாக்குவோம் நாம் அந்தநாள் !!

இணையத் தளத்தினில்
இலக்கியக் களத்தினில்
அகலக் கால் பதிப்போம்
ஆதவன் போல் உதிப்போம்
அகிலம் முழுதும் புகழ்பரப்பி
அங்கீகாரம் வாங்கிக் கொடுப்போம்

அந்தநாளே நமது T2F
அம்மாவின் இனிய பிறந்தநாள் !

இன்று என் இணைய அம்மாவுக்கு
இனிய உ(க)ருவானநாள் நல்வாழ்த்துக்கள் !!

Thursday, April 2, 2009

நெற்றிக்கண் திறப்பினும்............!


வானத்துக் கடவுள்களின் மேல்
வழக்குகள் பல தொடுத்திருக்கிறேன்


பார்வைக் குறைபாடுள்ள
பச்சிளம் குழந்தைகள்
மனவளர்ச்சிக் குன்றிய
மழலைச் செல்வங்கள்
உடல் ஊனத்தோடு
உழலும் பிள்ளைகள்

ஆக்கும் கடவுளுக்கு
அதிகப்படியான வேலைபளுவா?
அதனால் இந்தக் கவனக் குறைவா??

உருவாக்கும் கடவுளின் மேல்
வழக்கொன்று தொடுத்திருக்கிறேன்!


தீவிரவாதி ஒருவன்
தற்கொலை செய்துகொள்கிறான்
அப்பாவிப் பொதுமக்கள்
அநியாயமாகச் செத்துமடிகிறார்கள்
ஒன்றுக்கு நூறு
என்ற விகிதாச்சாரத்தில்

மறைந்திருந்து இயக்கும்
மரண வியாபாரிகள்
நலமாய் இருக்கிறார்கள்
நல்லபடி வாழ்கிறார்கள்

காக்கும் கடவுளுக்கு
கணக்கில் தடுமாற்றமா?
கணிப்பில் குளறுபடியா??

நலம் காக்கும் கடவுளின்மேல்
வழக்கொன்று தொடுத்திருக்கிறேன்!


தொடர்வண்டி விபத்துகள்
தொடரும் சாலை ஆபத்துகள்
இனப் படுகொலைகள்
இயற்கைப் பேரழிவுகள்

கொத்து கொத்தாக
மொத்தமாய்ப் போய்ச்சேரும்
எதிர்காலக் கனவிலிருக்கும்
நாதியற்றக் குடிமக்கள்

அழிக்கும் கடவுளுக்கு
அப்படி என்ன அவசரம்?
குறியீட்டு அளவின் நிறைவேற்றமா?
(TARGET ACHIEVEMENT)
குறுக்குவழியில் நடைபெறுகிறதா??

மொத்தமாய் அழிக்கும் கடவுளின் மேல்
வழக்கொன்று தொடுத்திருக்கிறேன்!


சாட்சிகளோடு காத்திருக்கிறேன்!
சத்தியமாய் செயிக்கப் போகிறேன்!!
நீங்களும் சாட்சியாய் வாருங்கள்!
நிச்சயமாய் செயித்து விடுவோம்!!