Thursday, December 31, 2009

இந்த ஆண்டே உனக்குள் வெடிக்க வாழ்த்துகள்


பெருவெடிப்பு/திருப்புமுனை:

சிறுமீன்கள் ஒற்றைக்
காலைச் சுற்றிவர,
பெரும் கெண்டைக்காக
மறுகாலைத் தூக்கித்
தவமிருக்கும் கொக்காய்....

முயல்கள் முன்னே
துள்ளி விளையாட
புள்ளி மானுக்காகப்
பதுங்கியிருக்கும் புலியாய்....

வந்ததை எல்லாம் விழுங்கி
தனக்கான எழுத்துக்காகக்
தன்னையேத் துடைத்து
எதிர்பார்த்திருக்கும் கரும்பலகையாய்....

காத்திருக்கிறேன் நான் .......
எனது வாழ்வின்
பெருவெடிப்புக்காக (பிக் பாங்க்)
.......................................................

நிகழ்வும் ,தகவும் சந்திக்கும்
அந்தப் புள்ளியே நிர்ணயிக்கும்

நான்
புத்தனாய் ஆவதையும்
சித்தார்த்தனாய்த் தொடர்வதையும்
……………


இனிய உள்ளங்களே....
இந்த வெடிப்பு உங்களுக்குள்
இந்த ஆண்டே நிகழ
இனிய வாழ்த்துகள் ,,,

Sunday, December 27, 2009

மழைக்கு ஏங்கும் நிலம்போல....


வானம் பார்த்தே
வருடமெல்லாம் வாய்ப்பிளந்து
வறண்டு தகிக்கும் பொழுதில்
வராது வந்து சேர்ந்த
கோடைமழையின் சாரலில்
குளிர்ந்து குதூகலிக்கும் வேளையில்..

கலையத் துவங்கும் மேகம் கண்டு
கலங்கி மேலும் தகிக்கத்
துவங்கும் நிலமாய்………

விடுமுறை முடிந்து
விமானத்தில் ஏறி
சன்னல்வழி வெளியே
கைகாட்டும் பொழுது
தவித்துத் துடிக்கத்
துவங்கியது மனசு ........

.

Wednesday, December 23, 2009

மேனகையும் நானும் ...!


பழிக்குப் பழி :

சிங்கமாயிருந்தேன்
அசிங்கப்படுத்திவிட்டாள் என்னை !

அலட்சியம் தோய்ந்த பார்வை
ஆணவம் தடவிய செய்கை
விசம் புதைந்த வார்த்தைகள்
வீசி எறியும் பேச்சுகள்
--தாங்க முடியவில்லை

பழி வாங்கியே ஆகவேண்டும்!

அலுவலகத்திலிருந்து
அரைமணிக்கு ஒருமுறை
அலைபேசியில் அழைத்து
ஒருமணி நேரம் பேசுவேன்
--இன்று பேசவில்லை

ஆறு முழம்பூவும்
அரைக்கிலோ அல்வாவும்
அவளுக்கென வாங்குவேன்
--இன்று வாங்கவில்லை

ஆணியடித்தாற் போல்
ஆறுமணிக்கு அவளருகே
வீட்டில் இருப்பேன்
--இன்று இருக்கவில்லை

ஒன்பது மணி..
அழைப்புமணியை அடித்து
வாசலில் காத்திருக்கிறேன்
--அவள் வரவில்லை

நானே திறந்து
உள் நுழைகிறேன்
--விளக்குகள் எரியவில்லை

படுக்கையறைக் கதவை
வேகமாய்த் திறக்கிறேன்
உறங்கிக்கொண்டிருக்கிறாள் அவள்
--இன்னும் விழிக்கவில்லை

கோபம் தலைக்கேற
கதவினை அறைந்து சாத்துகிறேன்

பதறி எழுகிறாள்.....
பதட்டமாய் அடிப்பார்வையால்
எனைத் துளைக்கிறாள்.......

மெல்ல இருகைத் தூக்கி
மெதுவாய் எனக்கு முன்னால்
மேனகையாய் மாறி அவள்
சோம்பல் முறித்த அந்த
அழகிய நொடியில்
கலைந்தே போனது
இந்த விசுவாமித்திரனின் தவம்...

Monday, December 21, 2009

விதைத்ததே விளையும்..மெல்லியப் பூக்களைப் பறித்து
சாலையில் வெயிலில் விரித்து
அதன்மேல் நடந்தாலும்
அவள்பாதம் நோகுமென்று
என்பாதத்தின் மேலேற்றித்
தொடர்ந்தேன் பயணம்.......

காலத்தின் ஓட்டத்தில்
பாதையும் , ஓரமும்
கல்லும் முள்ளுமாய் மாற
நான் பழக்கிவிட்ட அந்தப்
பயணமுறை மட்டும்
மாறாமல் தொடர்கிறது......

குருதி தோய்ந்த எனது
காலடித் தடங்களை பார்த்து
கேலிசெய்து கொண்டிருக்கின்றன

பாதையின் ஓரத்தில்
சருகாய்க் காய்ந்து கிடந்த
அந்தப்பூக்கள் .

.

Thursday, December 17, 2009

வழக்கம்போல வாலாட்டுகிறது...!


காலத்தின் கோரலீலையில்
சிக்கிய சிலையாய் அவள்....

அன்று ....
உனது கரம் பிடிப்பேன் அல்லது
காலனிடம் சிரம் கொடுப்பேன்
என்ற என்னவள் அவள்

இன்று...
வந்து நிற்கிறாள்
இன்னொருவனின் கரம்பிடிக்கும்
மண நாளுக்கான அழைப்பிதழோடு

பகுத்தறிவுக்குப் புரிகிறது நிலை
பேதைமனதுக்குத்தான் புரியவில்லை

இல்லை என்றானபின்பும்
அவளைப் பார்த்தவுடன்
துள்ளிக் குதித்து
வழக்கம் போலவே
வாலாட்டுகிறது மனது

.

Wednesday, December 16, 2009

ஒற்றைப் புத்தக நூலகம்..!


(1=1)

நாளெல்லாம் திட்டமிடுகிறேன்
மனதுக்குள் ஒத்திகைப் பார்க்கிறேன்

வாய்த்தப் பொழுதில்...
ஆயிரம் பக்கங்களை முழுதுமாய்
நிமிடத்தில் படித்து முடிக்கிறேன்

சமயத்தில்...
ஒருவார்த்தைக்கு அர்த்தம் புரியாமல்
ஓராயிரம்முறைப் புரட்டிப் பார்க்கிறேன்

எல்லாம் படித்தத் திருப்தியில்
ஒருநொடியில் மூழ்கிப் போகிறேன்

விழித்து எழுந்தபின் எனக்குள்
அனைத்துமே அணைந்துபோய் ,
படித்ததெல்லாம் மறந்துபோய்,
எல்லாமே புதியதாய்த் தோன்ற
மீண்டும் தயாராகிறேன்.....

அடுத்தத் திட்டத்துக்கும்
அதற்கான ஒத்திகைக்கும்....

அங்கே........
சளைக்காமல் ஆர்வமாய்
சலிக்காமல் காத்திருக்கிறது
எனக்காக நூலகம்...

ஒரேஒரு புத்தகம் கொண்ட
எனக்கான நூலகம் ......

Monday, December 14, 2009

மண்வாசம் போல...!


வெட்டவெளிப் பாலையில்
சுட்டெரிக்கும் வெயிலில்
பாதை தெரியாமல்
பலநாள் பயணித்து
வரும் வழியிலேயெ
வாழ்க்கையை முழுவதுமாய்
தொலைத்து நின்ற வேளையில்.....
மழையின் வருகையை அறிவிக்க
மண்வாசம் சுமந்துவரும்
உயிர்க் காற்றை உணர்ந்தேன்
’மௌனம் உடைத்த அவளது
மெல்லிய உதட்டுச் சுழிப்பில்’

.

Friday, December 11, 2009

முயன்றால்தான் முடியும் உன்னால்


எதிரே...

கரடு முருடாய்
மேடும் பள்ளமுமாய்
கல்லும் முள்ளுமாய்
தள்ளிவிடத் தயாராய்ப் பாதை

நாற்புறமும்
கூர்மிகு முட்களுடன்
குத்திக் கிழிக்கக் காத்திருக்கிறது
அடர்ந்த காத்தாடி முள்க்காடு

காலுக்குச் செருப்பிருந்தும்
மேலுக்குப் போர்வையிருந்தும்
தொடர இயலாமல்
மேலும் முயலாமல்
திகைத்து நிற்கிறேன்
நான்

அரவமற்ற அந்தப் பொழுதில்
என்னைத் தாண்டி தன்
பழையசட்டையைக் கழட்டிவிட்டு
பளபளக்கும் புதுத்தோலுடன்
தயங்காமல் நிதானமாய்
காடுகடக்க நுழைகிறது
அரவம் ஒன்று

.

Wednesday, December 9, 2009

நிர்வாணம்


கடந்த பின்
புறமுதுகில் ஊடுறுவி
ஆடை கடந்து
அங்கம் தடவி
வளைவுகளை
கற்பனையில் ரசிக்கும்
உனது பார்வையின் சூட்டில்
நான் உணர்கிறேன்

உனது நிர்வாணம் !

.