Saturday, August 20, 2011

கொள்ளை போகுதே எம் பிள்ளைகளின் எதிர்காலம் ....!


தொலைவிலிருந்தே பாருங்கள் கனவான்களே.....
அங்கே அரசாங்க ஆணையுடன்
சாரிசாரியாய்க் காத்திருக்கிறார்கள் கயவர்கள்........
DSCN3263bf.jpg


வருங்காலத்துக்குச் சேர்த்துவைப்பதாய்
குருட்டுக் கணக்கிட்டுக் கொண்டு
தம் குழந்தைகளின் எதிர்காலத்தையும்
சேர்த்தேபோய் கொள்ளையடிக்கிறார்கள்...
மொத்தமாய்ப் புதைக்க
சோர்ந்தேபோகாமல் குழியெடுக்கிறார்கள்......
DSCN3266bf.jpg
DSCN3269bf.jpg
DSCN3268bf.jpg

ஆற்றுப் படுகையிலிருந்து ஒரு மரண வாக்குமூலம் :

கல்தோன்றி, மண் தோன்றா...... என நம் மக்கள் பேசும்போதெல்லாம் , நம்மையும் ஒரு பொருளாக எடுத்துப் பேசுகிறார்களே என்று மணல் பெருமைபட்டிருக்கும் முன்பு..

ஆனால்........

தொடரும் அடுத்த 10ம் ஆண்டின் முடிவில்

கல்தோன்றி, மண் தோன்றா...... என மேடை போட்டுப் பேசுபவரிடமே கேட்டுக் கொண்டிருப்பவர் எதிர் கேள்வி கேட்பார்

‘எல்லாம் சரிதான் ..மண்ணு, மண்ணுங்கறீங்களே ..

அப்படீன்னா என்ன ?

கடந்த 20 ஆண்டுகளில் , ஆற்று மணலின் இருப்பில் பாதியை கொள்ளையடிக்கப் பட்ட அவலம் கண்டு ,பொங்கி எழுவோர் யாருமில்லை... தவறி யாரும் எழுந்தாலும் அவருக்கு துணைவருவோர் யாருமில்லை .. நம் குழந்தைகளின் வருங்காலம் நம் கண்முன்னே கொள்ளை போய்க் கொண்டிருப்பதை யாரும் உணர்ந்ததுபோலவேத் தெரியவில்லை .

உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா ?

ஆற்றுப் படுகையில் 1 அங்குலம் உயரத்திற்கு மண் சேகரமாகிப் படிய ஆகும் காலம் 5000 ஆண்டுகள் ..

நமது அரசு ஆற்றில் மணல் அள்ளுவதற்கு அளித்திருக்கும் அளவு 3 அடி ..அதாவது 36 அங்குலம் தோண்டிக்கொள்ளலாம் ...

அதாவது 1,80,000 ஆண்டுகள் சேமிப்பை அரசாணை என்ற பெயரில் அபகரிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது ...

ஆனால் ... நடப்பது என்ன ???

இயந்திரங்களின் உதவியோடு 20 அடி ஆழம் தாண்டியும் மணல் தோண்டி எடுக்கப் படுகிறது ....அனுமதிக்கப்பட்ட அளவைவிடவும் பல்லாயிரம் மடங்கு அதிகமாக......

என்னவாகும் ஆற்றுக்குப் பக்கத்திலுள்ள இடங்களில் நிலத்தடி நீரோட்ட நிலைமை ?

ஆற்றின் நீர்மட்ட அளவைப் பொறுத்தே அமையும் கிணற்றின் நீர்மட்டங்களும் ....ஏற்கனவே 20 அடியில் கிடைத்த தண்ணீர் இப்பொழுது 40 அடியைத் தாண்டியும் கிடைப்பதில்லை.

கடல் மட்டம் உயரும் பொழுது உள் நுழையும் நீர் பள்ளங்களில் தேங்கி பக்கவாட்டில் நீரோட்டங்கள் மூலமாக விளை நிலங்கள் , கிணறுகளில் கலந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் குலைக்கிறது ... குடிமக்களின் குடி நீர் ஆதாரங்களை அழிக்கிறது

இனி அணைகளில் திறந்துவிடப்படும் நீர்.... இடையிலேயே இந்தப் பள்ளங்களில் தேங்கி, கடைமடையை அடையாமலேயே போகக் கூடும்..

கேரள ஆறுகளில் மணல் எடுக்க அங்கே தடை உள்ளது.அந்த அரசுக்கு மணலின் தேவை புரிந்திருக்கிறது ...ஆனால் இங்கோ...!!

இரவு,பகல் பாராமல் பணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இங்கிருந்து நம் மணல் வளங்களை கேரளாவுக்குக் கடத்தி கொண்டிருக்கிறோம்....

ஏன் ..நமக்கந்த விழிப்புணர்ச்சி இல்லை...எங்கே போனது நம் சுயபுத்தி .... எப்போதிரிந்து இப்படி சுயநலமாகவே சிதிக்கத் தொடங்கினோம் ?

பழமொழிகளின் பெருமையே அது காலத்தைத் தாண்டியும் நிலைத்து நிற்பதுதான்...

ஆனால் நம் முன்னால் அது தோற்கப் போகிறது ... ஆம் பழமொழிகளின் பெருமையை சிதைத்த பெருமையை நாமே முதன்முதலில் அடையப் போகிறோம்

RIVERS NEVER GO REVERSE

--இந்தப் பழமொழி விரைவில் காணாமல் போகும்...ஆம் ..கடல் ஒருநாள் பொங்கும் போது .. நாம் தோண்டி வைத்திருக்கும் பள்ளங்களின் வழியே கடல்நீர் ஆறாக பின்னோக்கி ஓடத்தான் போகிறது ...

வாழ்க நமது திறமை !...வளர்க அதன் புகழ் ..!!


Monday, August 15, 2011

இன்றே / இன்றாவது பதியமிடுவோம் ......!

இன்றே / இன்றாவது பதியமிடுவோம் .....!


இருவண்ணம் சிறப்படைய
ஒரு வண்ணம் சிந்தி
மூவண்ணம் உயரச் செய்த
முகவண்ணம் தெரியாத

மூத்த உறவுகளின்
தியாகச் சுவடுகளை

இன்றைய இனிப்பையும்
ஒருநாள் விடுப்பையும்
’உலகத் தொலைக்காட்சியில்
முதல்முறையாக’வைத் தாண்டியும்

இன்று
ஒரு தளிர் இதயத்தில்
பதமாய்ப் பதியமிடுவோம்..

அங்கொன்று இங்கொன்று
என்றாலும் ஒருநாள்
ஒன்றாய் சேர்ந்தே தீரும்...
புதிய தலைமுறை
ஒன்று நம்முன் உருவாகும்....

சேர்ந்தே
உருவாக்குவோம்.....

தாய்மண்ணே வணக்கம் !

( நன்றி :படம் :இணையம் )

Friday, August 12, 2011

குழந்தையும் , கோடுகளும்...!

butterfly.gif
எனது அலுவலகக் கோப்பை விரித்து
கையில் கிடைத்த எதையோவைத்துக்
கிறுக்கிக் கொண்டிருக்கிறாள் அவள்

அதிர்ந்து நான் நிற்க
நிமிர்ந்த அவள் முகத்தில்
தொக்கி நின்ற கேள்வியுள்
கரைந்து போகிறதென் கோபம்

சிங்கமா என்கிறேன்
இடம் வலமாகத் தலையசைக்கிறாள்

புலியா என்கிறேன்
உதட்டைப் பிதுக்குகிறாள்

பூனையா என்கிறேன்
ஆமென்று துள்ளிக் குதிக்கிறாள்

இப்பொழுதுதான் கவனிக்கிறேன்
அந்தக் காகிதத்தில்
நடைபெற்றுக் கொண்டிருக்கும்
அசைவுகளை...

தாறுமாறாக
சிதறி இருந்த கோடுகள்
பதறி அவசர அவசரமாக
ஒரு பூனையாக
உருமாறிக் கொண்டிருந்தன...!

.

குழந்தையும் , குப்பையும்....!

bbaby (15).gif

1aaa.gifஉணவூட்டும் வரையில்

அங்கிங்கு அசையாமல்

பார்த்துநின்ற நிலவையும்

விளையாடும் ஆசையில்

ஓடிவந்து வாசலிலேயே

காத்திருக்கும் கடவுளையும்

நொடிப்பொழுதில்

விலக்கி விட்டு

விரல் சப்பித்

தூங்கிப்போகிறது குழந்தை....


இதுவரையிலும்

சேர்த்துவைத்தக் குப்பைகளை

கண்காணித்துக் கொண்டும்

இனிமேலும்

சேரப்போகும் சொத்தைகளை

கணக்கிட்டுக் கொண்டும்

விடியவிடிய

தூங்காமல் இருக்கிறேன் நான்......!1aaa.gif,Monday, August 1, 2011

இங்குமா/ இன்னுமா இனபேதம்???????????

ஆம்..

அதனால்தான் எனக்குப்

பிடிக்காமல் போனது அதை.....


நூற்றாண்டுகள் பலகடந்தும்..


சூழ்நிலைகள் திட்டங்கள்

சூழ்ச்சிகள் நகர்தல்களுக்கேற்ப...

தொடர்ந்து நடந்து

கொண்டிருக்கும் போராட்டம்தான் - ஆனாலும்


வெற்றி தோல்வி பின்வாங்குதல் என

பல முடிவுகளைக் கண்டும்

முடியாமல் தொடர்ந்து கொண்டிருக்கும்

போர்க் களம்தான் - ஆனாலும்


இரு பக்கமும்

சரி சமமான அளவில்

படைத்தளம் தான் ஆனாலும்


இரு பக்கமும்

சரி சமமான எண்ணிக்கையில்

படைபலம்தான் ஆனாலும்


கறுப்பு வெள்ளை எனப்பெயரளவில்

முன்மொழிந்து உயர்த்துவதுபோல

அழைக்கத்தான் செய்கிறார்கள் - ஆனாலும்


முதல் நகர்த்தலுக்கான வாய்ப்பு

இன்னும் வழங்கப்படவே இல்லை

சதுரங்கத்தில்..........


அந்தக் கருப்புக் காய்களுக்கு மட்டும்...!!!!!


(நன்றி:யாழி)