மிக நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட இடைவெளிக்குப்பின் க(தை)விதை சொல்ல வந்திருக்கிறேன்..
மரபில் / குறளில் கொஞ்சம் மூழ்கிப் போனதால் .... இதிலிருந்து விலகியே இருந்திருக்கிறேன் .....இது மீண்டும் இன்று எனக்கு நினைவுக்கு வந்தது உங்களின் கெட்ட நேரமாக இருக்கலாம் .......அனுபவியுங்கள் ...:))

’பச்ச ஒடம்புக்காரீ’ன்னு
பவுசாத்தான் படுக்க முடியுமா ..?
கொளுந்தியாளப் போல நானும்
கெழுத்தியப்போலக் கெடக்க முடியுமா ..?
சாவலை எழுப்பி வெரட்டி
சாலையைக் கழுவி பொரட்டி
தூக்கத்தை மொத்தமா வெலக்கி
முத்தத்தை சத்தமில்லாம ஒதுக்கி
தூக்கை சுத்தப்பத்தமாத் தொலக்கி
நீச்சத் தண்ணிய ஊத்திக்கிட்டு
பச்சப் புள்ளயத் தூக்கிக்கிட்டு
எட்டுபோட்டு நடக்கோணும்
காட்ட மேட்டக் கடக்கோணும்
தோட்டம் போயிக் கெடக்கோணும்......
பச்சப்புள்ளய அமத்திப்போட்டு
புல்லறுக்கப் போகோணும்
கஞ்சித்தண்ணி கண்ணுலபட
நெஞ்சிமுட்ட சொமக்கோணும்
ம்ம்ம்ம்ம்...............’
நட்ட நடு சாமத்துல
கெட்ட சுடும் விடிகாலப்
பொழப்பைப் பத்துன நெனப்பால
அரைக்கோழித் தூக்கத்துல
பொரண்டு நான் படுக்கையில
பச்சப்புள்ள ஏங்கியழும்
உச்ச சத்தம் கேட்டுத்தான்
அதறிப் பதறி எந்திரிச்சேன்
அவசரமாத்தான் பாத்துவச்சேன்
ஒதட்டுப்பால் குடிச்சுக்கிட்டு
எதமாத்தான் தூங்குதானே என்ராசா ...
நெலம தெரியாம எரிஞ்ச
நாதாரி வயித்த அணைக்க
குண்டு சொம்புத் தண்ணிய
மொண்டு ஊத்துப் போகையில
ஏதோ உறுத்துன்னு
என்னான்னு நான்பாக்க...
பசிச்ச என்வயிறு
கீழே வறண்டுகெடக்க
எங்கோ பசிச்ச வயிறுக்காக
இங்கே நனைஞ்சுக் கெடக்குது
என்னோட மாராப்பு..........!