Monday, November 9, 2009

எதனால் இந்த நடுக்கம் ....?


இயலாமை !
வயோதிகத்தால் எனது உடல் நடுங்குகிறது

இருள் இன்னும் விலகாத
மார்கழி மாத அதிகாலை..
ஆற்றில் மூழ்கி தலைதுவட்டாது
அப்படியே நடந்து வருகிறேன்

தாங்கமுடியாமல்
குளிரால் எனது உடல் நடுங்குகிறது

தாங்கித்தான் ஆகவேண்டும்

காஷ்மீரக மலையில் எனது
கால்கள் நடந்தே ஆகவேண்டும்

வாழ் நாள்க் கனவு அதை
வீழுமுன் நடத்திக் காட்டவேண்டும்

தென்கரையிலிருந்து வடகோடிக்குத்
தவழ்ந்தேயானாலும் போய்ச் சேருவேன்

மலைமீது காலடி வைத்தபின்புதான்
மேலுலகம் போய்ச் சேருவேன்

பயிற்சியும் அதற்கான முயற்சியும்
எடுத்தேதான் ஆகவேண்டும்

முடியுமா ?
கவலையால் எனது உடல் நடுங்குகிறது


‘ எண்பது தாண்டியும்
.ஏன் இப்படி அலையுது ? ’
‘ கட்டைல போற கெழவிக்கு
.காஷ்மீரு போறஆசையப் பாரு’
’அதுக்குத்தான்யா ஆண்டவன்
.அளந்தே வச்சிருக்கான்’


கேலியும்,கிண்டலும் !
சுடுசொல்கேட்டு எனது உடல் நடுங்குகிறது

கடைசிவரையில்ப் போராடி
பார்க்கவேண்டியவரை பார்த்து
விழவேண்டிய காலில் விழுந்து
ஒருவழியாய் சாதித்துவிட்டேன்

இதோ ...........
மலையேறிக் கொண்டிருக்கிறேன்
எங்கு நோக்கினும் வெண்பனி
என்னைச் சுற்றிலும் வீரர்கள்

பாதுகாப்பாய் இருந்தாலும்
கடும்பனியால் எனது உடல் நடுங்குகிறது

காலடி எடுத்து வைக்கிறேன்
கார்க்கிலின் கடும் பாறையில்

நின்று நிதானித்து
இழுத்து உள்வாங்குகிறேன் மூச்சை..

இதில் எப்படியும் கலந்திருக்கும்
இங்கே உலாவிக் கொண்டிருக்கும்
எனது மகனின் இறுதிமூச்சும்........

இப்பொழுதும் எனது உடல் நடுங்குகிறது

ஆனால் இது எதனால்...????
எனக்குத் தெரியவில்லை .........


.

2 comments:

நிலாமதி said...

வயதான் முதியவரின் மனோ தைரியத்துக்கு பாராட்டு. அதை பதிந்த
உங்களுக்கும் தான்.

கோமதி அரசு said...

//இதில் எப்படியும் கலந்திருக்கும் இங்கே
உலாவிக் கொண்டிருக்கும் எனது மகனின்
இறுதி மூச்சும்.//

தனது மகனின் இறுதி மூச்சை சுவாசிக்கும் தாய்க்கு நடுக்கம் வருவது
இயல்புதான்.