Monday, November 23, 2009

நான் ! மிகப்பெரியவன் நான் !!


சமூகத்தில் உயர்ந்த நிலையில் நான்

சான்றோர் நிறைந்த சபையில்
மேடையில் தலைமை தாங்கியிருக்கிறேன்
நிறைவு உரையாற்றிக் கொண்டிருக்கிறேன்

திடீரெனத் தடைபடுகிறது எனதுபேச்சு
தாமதமாக விடைபெறுகிறது எனதுமூச்சு

கீழேக் குழுமியிருக்கும் கூட்டத்தில்
தள்ளிக்கொண்டு என்னை நோக்கித்
தாவிவர முயல்கிறார் ஒருபெரியவர்

கலைந்த தலையும்
கசங்கிய உடையுமாய்,
மடித்துக்கட்டிய வேட்டியும்
மழிக்காத தாடியும் ,
மஞ்சள்ப்பை கக்கத்திலுமாய்....

எங்கோ பார்த்த முகம்? - ஆம்!
எங்கள் கிராமத்துக்காரர் அவர்
பால்ய வயதில் எங்கள்
பக்கத்து வீட்டுக்காரர் அவர்..

வரும் வேகம் பார்த்தால்
விவகாரமாகத்தான் படுகிறது

என்னவோ கேட்கப்போகிறார்
என்னிடம் என்னவோ கேட்கப்போகிறார்

பணமாகக் கேட்டால் பதுங்கிவிட வேண்டும்
உதவியாகக் கேட்டால் உதறிவிட வேண்டும்
கடனாகக் கேட்டாலும் கைகழுவி விடவேண்டும்

சிபாரிசு ஏதும்கேட்டு
சிக்கலில் மாட்டி விடுவாரா
கட்டிப்பிடித்து கூட்டத்தில்
கேவலப்படுத்தி விடுவாரோ

என்னவாக இருக்கும்
எனக்குள் ஏனிந்த இறுக்கம்

உரையைப் பாதியில் முடித்து
வேறு பாதையில் கிளம்புகிறேன்

கடவுளே !
இதோ இங்கேயும் வந்துவிட்டார்
வேறுவழி இல்லை
சந்தித்தேதான் ஆகவேண்டும்
சமாளித்துதான் ஆகவேண்டும்

”தம்பி !
நல்லா இருக்கீங்களா ?
வீட்டுல ஆத்தா , தாயீ
புள்ளக் குட்டியெல்லாம்
சொகமா இருக்குதா ?

பருவத்துல ஏஞ்சேக்காளிய
பாத்தது போலவே இருக்கீங்க !
உங்க அப்பாவை அச்சுல
வாத்தது போலவே இருக்கீங்க !!

இன்னும் பழசெல்லாம்
இந்தப் பாவிப்பயலோட

மொடங்கிப்போன நெஞ்சுக்குள்ள
முங்கிப் போயித்தான் கெடக்கு !

தம்பி .....
அதான் சொர்க்கம் ‘’


சொல்லி முடித்துவிட்டு
கண்களைத் துடைத்துக்கொண்டு
தனக்குள் ஏதோபேசிக்கொண்டே

வந்தவழியில் திரும்பி
இலக்கில்லாமல் நடக்கிறார் அவர்

ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டு
மறைந்துபோய் விட்டார் அவர்
ஒருவார்த்தைப் பேசமுடியாமல்
உறைந்துபோய் நிற்கிறேன் நான்

அவர் தான் பெரியமனிதர் !

நான் ?????

.

2 comments:

தேவன் said...

பேசியிருந்தால் பெரிய மனிதர் தான் !!

அல்லது ?

தேடிப்பெசினாலும் பெரிய மனிதர் தான் !!

aaranyanivasrramamurthy said...

'மார்க்கெட்டிங்'கில் சொல்வார்கள். யார் 'கஸ்டமர்' என்று நடை,உடை பாவனைகளை
வைத்து, சொல்ல முடியாது என்று. அது போல்
தான் சமுதாயத்தில் நல்ல மனிதர்களையும்
தெரிந்து கொள்ள முடியாது போலும்!!